கவிமணி எங்கள் தமிழ் மணி
கனிவாய் தமிழில் கவி தந்தார்
புவியினை புனிதமாய் அவர் கண்டார்
புத்தரை இத்தரை போற்றிட வைத்தார்
எளிமையாய் கவிதை ஈந்தார் கவிமணி
இயல்பாய் சொற்கள் இணைந்தன அவரிடம்
புவினை எண்ணியே புகன்றார் கவிதையை
அறிவுரை ஆகியே அனைத்துமே அமைந்தது
செந்தமிழ் ஆங்கிலம் சிறப்புடன் கற்றார்
சிறந்திடு படைப்புகள் செப்பமாய் அளித்தார்
நந்தமிழ் போற்றிடும் நற்றமிழ் கவியாய்
ஆசிய ஜோதியாய் ஆக்கினார் புத்தரை
அவரின் பாதையை அருமையாய்க் காட்டினார்
அவலம் காட்டினார் அறிவுரை பகர்ந்தார்
சிகரம் ஆகவே தீட்டினார் கவிமணி
பக்தியைப் பாடினார் பரமனைப் பாடினார்
சத்தியம் நேர்மையைச் சமத்துவம் பாடினார்
இத்தரை குழந்தைக்கு ஏற்பன பாடினார்
எளிமையாய் இனிமையாய் கவிமணி பாடினார்
கவிமணி கவிதைகள் கரும்பாய் இனித்தன
இரும்பாம் இதயத்தை இளகிடச் செய்தன
உருக்கமும் இருந்தது இரக்கமும் இருந்தது
உயிர்ப்புடன் தமிழும் ஓங்கியே எழுந்தது
மலரும் மாலையும் கவிமணி சூட்டினார்
மாநிலம் பயனுற கவிதைகள் யாத்தனர்
ஓடும் உதிரத்தில் ஒழுகிடும் கண்ணீரில்
உயர்ஞான தத்துவத்தை உரைத்தனர் கவிமணி
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசுவென்று
சுவையுடன் கவிமணி சொல்லிய பாடலை
கேட்டவர் மகிழ்வர் கிளுகிளுப் படைவர்
குழந்தைகள் யாவரும் துள்ளியே குதிப்பார்
அன்பினைப் பாடுவார் அன்புடன் பாடுவார்
ஆரையும் நொந்திட பாடிடார் கவிமணி
ஆறுதல் தருவதாய் அவருமே பாடுவார்
ஆதாலால் கவிமணி வாழ்கிறார் கவிகளில்
வசையினைப் பாடா வளமினைப் பாடினார்
வாழ்த்தியே பாடினார் வரம்பினைக் காட்டினார்
எளிமையாய் பாடினார் ஏற்றதைப் பாடினார்
என்றுமே கவிமணி வாழ்கிறார் கவிகளில்
No comments:
Post a Comment