தமிழ்வளர்த்த சான்றோர் விழா - 2025 வருணனையின் இறுதிப் பகுதி.
இடைவேளையைத் தெடர்ந்து சான்றோர் விழா ஆரம்பித்ததும் தமிழ் ஆர்வலர் சிவத்திரு நரேந்திரநாதன் அவர்கள் செந்தமிழ்ப் பூக்கள் நூல்களைப் படித்ததும் தனது மனதிலே மலர்ந்த அனுபவங்களைச் சொற்ப நேரத்திற்குள் மிக அற்புதமாக வெளிப்படுத்திய சிற்றுரை எல்லோரையும் மிகவும் கவர்ந்திருந்தது. அவையினருக்கு வணக்கம் கூறியதைத் தெடர்ந்து
அவர் பேசுகையில்
"நாங்கள் இந்த மண்ணிலே புலம்பெயர்ந்தாலும் எங்கள் பண்பாட்டின் பெயராலும் எங்கள் பாரம்பரியத்தின் பெயராலும் நாங்கள்
எங்கள் குழந்தைகளுக்குத் தமிழைச் சொல்லிக்கொடுப்பதில் இணைந்திருக்கின்றோம். அந்த
வகையிலே எங்கள் சான்றோர் - வைத்தியர் பாரதி ஐயா அவர்கள் இன்று எங்களுக்கு இரண்டு
செந்தமிழ்ப் பூக்கள் என்ற நூல்களை யாத்துத் தந்திருக்கின்றார்கள். இதிலே அழகிய 80 கவிதைகள் - பாடல்கள்
இடம்பெற்றிருக்கின்றன.
இந்தக் குழந்தை இலக்கியத்தை இப்பொழுது இயற்றுபவர்கள் மிகப்; பெரிய சவாலைச் சந்திக்கின்றார்கள்.
ஏனென்றால் இந்தக் குழந்தை இலக்கியத்துக்குரிய பொருள்கள் - அரும்பொருள்கள்
பாடல்களுக்கான பொருள்கள் ஏற்கனவே
பாடப்பட்டு விட்டன. புதிய பொருள்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்தக் கவிதை நூலைப் பாத்தாற் கூட ஏற்கனவே
பாடப்பட்ட பல கருப்பொருள்களை வைத்துக்கொண்டுதான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்தக் குழந்தைகள் அந்த
வட்டத்துக்குள்ளே தான் நிற்கிறார்கள். இதைவிட இந்த நவீன உலகத்திலே சில புதிய
விடயங்களை நாம் புதிதாக வெளியே கொண்டு செல்லலாம். அந்த வகையிலே இது ஒரு மிகவும் கடினமான பணி. அந்தப் பணியைப் பாரதி
ஐயா மிகவும்; சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு கவிதையையும் பார்த்தீர்களானால் அவர் தன்னுடைய
தனித்துவமான முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. நான் அவருடன் இருபது ஆண்டு காலமாகத்
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளிலும் பின்பு தமிழ்ப் பாடசாலைகளிலும் அவரோடு
கைகோத்துப் பணி செய்திருக்கின்றேன். அதனூடாக அவரிடமிருந்து நான் பலவற்றைக்
கற்றிருக்கிறேன்.
அவர் இந்தப் புலம்பெயர்ந்த தேசத்திலே குழந்தைகள் தமிழ் படிக்க
வேண்டும் அதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து
முயற்சி செய்யவேண்டும் என்று இரவு பகலாக உழைத்தவர்கள.; இரவில் நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தைக் கொடுத்தால் காலை ஏழு மணிக்குத்
தொலைபேசியில் அழைத்து அதற்கான திருத்தத்தைத் தருவார். அவ்வாறு அவர் தொடர்ந்து வேலை
செய்துகொண்டுதான் இருக்கிறார். எண்பது வயதைத் தாண்டினாலும் இந்தத் தமிழ்ப் பணியைச்
செய்துகொண்டிருக்கும் அவரை ஒரு தமிழ் வள்ளல் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த வகையில் இந்த நூல்களை அவர் இயற்றிய பொழுது மிகவும்; கவனமாக எவ்வாறு வெளியிடுவது என்பதில்
மிகவும் சிரத்தையாக இருந்தார். இதைப் பெரிய நூலாக வெளியிடுவதை விடுத்து இரண்டு
நூால்களாக வெளியிடுகின்ற பொழுது மாணவர்கள் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். அதே
வேளையிலே மாணவர்களைக் கவருகின்ற வகையிலே அழகான படங்களை அதற்குள்ளே எடுத்து நாங்கள் செல்லவேண்;டும் அவை மாணவர் மனதிலே பதியவேண்டும்.
நாங்கள் இலங்கையிலே படிக்கின்ற பொழுது படம் பார் பாடம் படி என்று
படித்திருக்கின்றோம். இந்தக் குழந்தைகள் தமிழைப் படிக்;கின்ற பொழுது அவர்கள் அந்தச் சொற்களை
எல்லாம் எழுதுவதோ வாசிப்பதோ மனதுக்குள் எடுப்பதோ ஓரளவுக்குத்தான்!.
அவர்கள் இந்தப் படங்களின் ஊடாகத்தான் மீண்டும் மீண்டும் அந்தச்
சொற்களை சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்கள். ஆகவே இந்த நூலிலே அவர் அழகான படங்ளை
அமைத்து - கருத்தோட்டத்துக்கு அமைவாகப்
படங்களை அமைத்து இருக்கிறார்கள்.
30ஆண்டுகளுக்குப் பின்பு அம்பி ஐயா
தந்தவிட்டுச் சென்ற தமிழ்ப் பாடசாலை நூல்களை நாங்கள் மீழ் ஆய்வுச் செய்து படிப்பித்திருக்கின்றோம். அப்படிப்
படிப்பிக்கின்ற பொழுது எங்களுக்கு மிகச் சிரமமாக இருந்தது பல அருமையான பாடல்களை எடுப்பதற்கு!. வித்துவான் வேந்தனார் ஐயா அவர்களுடைய
பாடல்களை எல்லாம் பயன்படுத்தினோம். அதைவிடப் புதிய பாடல்களைத் தேடிச் சென்றபொழுது
எங்களுக்கு இந்தக் குழந்தைகளுக்குரிய பாடல்களை எடுப்பது கடினமாக இருந்தது. அந்தக்
குறையை இன்று எங்கள் பாரதி ஐயா அவர்கள் நிறைவு செய்திருக்கின்றார்கள். அந்த வகையிலே அவருக்கு நாங்கள்
நன்றியைச் சொல்லிக்;கொண்டு நான் விரைவாக
இந்த நூலிலே இருக்கின்ற சில பகுதிகளை - இந்த நூல் எவ்வாறு அமைந்திருக்கின்றது
என்பதையும் அங்கே பாரதி ஐயா தனது தனித்துவத்தை எங்கெல்லாம் பதித்திருக்கிறார்
என்பதையும் கூறி எனது சிற்றுரையை முடிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
இந்த நூலினைப் பல பகுதிகளாக இதை நான் ஆராயப்போகிறேன். முதலாவதாக
மனிதர்களைப் பற்றிப் பாடியிருக்கின்றார்.
அவர் அம்மா - பாட்டி - ஈழத்துக்
கவிஞர்கள் மூவர் - தங்கத் தாத்தா, இளமுருகனார், வேந்தனார் - அவர்களோடு ’ஒளவைப்
பாட்டி என்பவரைப்பற்றயும்
பாடியிருக்கின்றார். இந்தப் பாடல்களை -
அம்மாப் பாடல்களைப் பலர் பாடி இருக்கின்றார்கள். ஆனால், அவர் பாடுகின்ற போது
பாலும் சோறும் ஊட்டிடுவாள்
பாடம் சொல்லித் தந்திடுவாள்
காலம் எல்லாம் கண்போலக்
காத்து என்னை வளர்த்திடுவாள்!
மெல்லப் பாலைக் குடிக்கும் போது
மிகவும் இனிக்கும் தமிழை
அள்ளி அள்ளிக் கலந்து என்றும்
அன்பாய்ப் பருக்கும் அம்மா!
அவருடைய தமிழ்ப் பற்றை - இந்தச் சின்னக் குழந்தைக்கு தாய்
பாலைக் கொடுக்கும்போது இந்த தமிழ்ப் பாலைக் கெடுக்கின்ற அந்தப் பண்பை அவர் இங்கே
பதிவுசெய்திருக்கின்றார்.
அடுத்ததாக, அவர் விலங்குகள் பறவைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கின்றார். நாங்கள்
ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன என்று
சொல்கின்ற எல்லாவற்றையும் பற்றியே அதிகமாக அவற்றின் சூழலிலே அவர்
பாடியிருக்கிறார். நாய், பூனை, கோழி, அணில், கிளி, மயில், குயில், வண்ணத்துப் பூச்சி, மான், யானை, புலி -எங்களுடைய அவுஸ்திரேரலிய
மிருகங்களான கங்காரு, குவாலா, பென்குயின், மைப்பை போன்றவற்றை எல்லாம்
பாடியிருக்கின்றார். அங்கே, அவர் கங்காருவை அறிமுகப்படுத்தும் பொழுது தனது பாடலூடாக மிகவும் சொந்தமாகத்; தெளிவாக அறிமுகப்படுத்துகிறார்;
கட்டை முன்னங் காலை மடக்கி
நெட்டைப் பின்னங் காலாற் கெ ந்தும்
எட்ட டிக்குத் துள்ளிப் பாயும்
இது ‘கங் காரு‘ தெரிந்திடு வாயே !
மிகவும் அழகாக அந்த உருவத்தை, அவற்றின் செயலைக் கொண்டு இந்தக்
குழந்தைகள் மனதிலே கங்காருவை அவர் அறிமுகப்படுத்துகிறார்.
சுறுசுறுப்பான அணில் என்ற அந்தத் தலைப்பிலே அவர்
'அச்சம் வேண்டாம் ஆசைகேடு
அன்பை நாடு” என்றவர்
இச்சை யோடு சொன்ன வார்த்தை
என்றும் காக்க வெற்றியே!"
குழந்தைகளுக்கு அணிலைச் பாடுகின்ற பொழுது அறிவுரையைச் சொல்லிச்
செல்கிறார். எங்கே பார்த்தாலும் இந்தக் கவிதைகளிலே அவரின் தனித்துவத்தை நாஙகள்; காணக் கூடியதாக இருக்கும்.
இன்னொரு வகையான கவிதைகளைப் பார்க்கின்றோம். செயற்பாடுகள் - விளையாட்டுகள் ஊடாக அந்தக்; கவிதைகளை நகர்த்திச் செல்கிறார்.
சாய்ந்தாடம்மா, ஊஞ்சல், பந்து, காகிதத் தோணி, பந்தடித்தல், பட்டம், பலூன், பொம்மை, கோழி, பந்தடித்தல்
போன்ற பல்வேறு பொருள்கள் ஊடாக இந்தக் கவிதைகளை நகர்த்திச் செல்கிறார்.
முரசு என்ற பாடலை அவர் பாடுகின்ற பொழுது அவர் தன்னுடைய தமிழப் பற்றை இங்கு மீண்டும்
தொட்டிருக்கிறார்.
கொட்டு முரசே! கொட்டு முரசே!
எட்டுத் திக்கும் தமிழ் ஒலிக்கக்
கொட்டு முரசே!
இட்ட முடனே நாமும் கூடி
இன்பத் தமிழைத்
திட்ட மிட்டுத் தினம் வளர்ப்போம்
கொட்டு முரசே!
அதே போலப் பொம்மைப் பாட்டிலே அவர் இன்றைய பொருளாதாரத்தை இந்தச்
சின்னக் குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லிக் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.
சீனா நாட்டில் செய்த
சின்ன நல்ல பொம்மை
தேனாய் இனிக்கப் பாடும்
சிறந்த நல்ல பொம்மை
எங்கே உற்பத்தி நடைபெறுகின்றது என்று அவர் சிறுவர்களுடைய மனதிலே
அவர் மிகவும் அழகாகப் பதியவைக்கிறார்.
அதே போலச் சாய்ந்தாடம்மா
சாய்ந்தாடு என்ற பாடல் எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிலேயும் அவர் தமிழை
அங்கு வைக்கத் தவறவில்லை. சங்கத் தமிழே சாய்ந்தாடு என்று கூறுகிறார்.
அவ்வாறு பாரதி ஜயா அவர்கள் கவிதைகளிலே தன்னுடைய தனித்துவத்தை பதித்துச் செல்வதே இந்தக் குழந்தை
இலக்கியத்தின் சிறப்பு என நான் கருதுகிறேன்.
அடுத்ததாக அவர்
இயற்கையையும், இடங்களையும்
பற்றிப் பாடும்பொழுது விண்மீன், நிலா, முழுநிலா, கரிய முகில், கடல் அலை, காலைக் கதிரவன், இயற்கை, மாம்பழம், மரங்கள்,
அவுஸ்திரேலியா போன்றவற்றைப் பாடுகிறார்.
அதிலே, நிலாவைப் பற்றிப் பாடுகின்றபொழுது அங்கே விஞ்ஞானத்தைப் அவர்
புகுத்தியிருக்கிறார்.
காலம் காலம் ஆகவே
கதிரவன் உனக்கு ஒளிதரக்
கோ ல வானில் நின்றுநீ
குளிரும் நிலவைப் பொ ழிகிறாய்!
இங்கே, நிலா
எவ்வாறு ஒளியைப் பெறுகிறது என்பதைக்
குழந்தைகளுக்கு இந்தப் பாடல் மூலமாக மனதிலே பதியவைக்கிறார். அதே போல, நாம் மரங்கள், சூழல் பற்றியெல்லாம் நாங்கள்
கற்றுக்கொண்டிருக்கிறோம்.
மரங்களைப் பற்றி அவர் பாடுகின்ற பொழுது,;
மரங்கள் இயற்கையின் செல்வ மன்றோ ?
மரங்களை அழித்தல் பெரும்பாவம்
மரங்களை நாமும் வளர்த தென்றும்
மாபெரும் நன்மைகள் பெற்றி டுவோம்.
என்று கூறுகிறார்.
இறுதியாக, அவருடைய அந்தத் தொகுதியிலே அவுஸ்திரேலியாவைப் பற்றிப் பாடும்பொழுது -
அவுஸ்திரேலியாவைப் பற்றி நிறையப் பாடலாம். மலை வளம், இயற்கை வளம், நில வளம், நீர்வளம் நிறைந்த அவுஸ்திரேலியா - அவை எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது அவர்
அவுஸ்திரேலியாவின் பண்பைப் பாடுகிறார். இந்தக் குழந்தைகளுக்கு!
தன்மா னத்துடன் சகலரும் வாழச்
சட்டம் இயற்றிய பொன்நாடு!
சன்மா னம்பல தந்து முதியரைத்
தாய்போற் காத்திடும் நாடிதுவே!
பாடல்களில் குழந்தைகளுக்கு ஏற்ற பல சொற்களைப் பாவித்த இந்தக் குழந்தை
இலக்கியத்தின் தனித்துவத்தை நான் காண்கிறேன்.
அடுத்துப் பண்டிகைகள் போன்ற நிகழ்ச்சிகளை அவர் அறிமுகம்
செய்கின்றார்.
தைப்பொங்கல் என்ற பாடலிலே அவர் தைப்பொங்கலுக்கான தத்துவத்தையும், காரணத்தையும் கூறுகின்றார்.
உழவருக்(கு) உதவும் எருதுக்கும்
உயிர்களைக் காக்கும் சூரியர்க்கும்
பழமொடு பொங்கல் படைத்து நன்றி
பகிர்ந்திடும் நாளே தைப்பொங்கல்!
தீபாவளி யைப் பாடும்பொழுது தீபாவளி வந்த காரணத்தை இந்தக்
கவிதையிலே பதித்திருக்கிறார்
நானெனும் ஆணவம் நீக்கி டுவோம்
நாளும் அன்பை வளர்த்தி டுவோம்
தீயன வெல்லாம் அகற்றி டுவோம்
செய்வன திருந்தச் செய்தி டுவோம்!
அடுத்த பகுதியாக அறிவுரைகள் நிறையவே சொல்லியிருக்கிறார்.
எல்லாக் கவிதைகளிலும் அவை இருந்தாலும் அறிவுரைகளுக்காகவே அவர்
சில பாடல்களை எழுதியிருக்கிறார்.
தமிழ் படிப்போம், பாப்பாப் பாட்டு, எங்கள் கடமை, ஒற்றுமையே வெல்லும், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நல்ல குணம், இளமைப்பருவம், மனிதம் காப்போம்
எங்கள் கடமை என்ற கவிதையிலே,
என்னைப் போல எல்லோரும் - தினம்
ஏன்தமிழ் பேசக் கூடாது
பொன்னைப் போன்றது தமிழன்றோ - அதைப்
போற்றி வளர்ப்பதெம் கடனன்றோ?
அங்கே தமிழ்ப் பற்றை அங்கே பிள்ளைகளுக்கு ஊட்டுகிறார்.
அவரின் முதற் பாடலே தமிழ் படிப்போம் என்ற பாடல்.
"அன்புச் சிறுவரே வாருங்கள்!
அமுதம் போ ன்ற தமிழ்படிப்போம்!
இன்பத் தமிழ்எம் தாயின் மொழி" என்று குழந்தைகளை அழைக்கின்றார்.
மற்றுமொருபாடல் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு." இதிலே
எங்கள் வீடுகளிலே அதிகமாகச் சொல்லித்தந்த
பழமொழிகள், இலக்கியங்கள் எல்லாம் மிகவும் இலகுவான தமிழிலே
இந்தக் குழந்தைகளுக்குச் சொல்கின்றார்.
"தந்தையின் சொல்லெலாம் மந்திரம் அன்றோ ?
தாயைப்போல் தெய்வமும் வேறுதான் உண்டோ?
சிந்தித்து யாதுமெம் ஊரெனத் தமிழன் -
அன்று
சிறப்பாக யாவரும் சசோதரர் என்றான்!"
புறநாநூறில் உள்ள வரிகளைக் கூட இந்தப் பாடலிலே அவர்
புகுத்துகின்றார்.
அடுத்ததாக அவருடைய முக்கியமான பாடல் . இதில்; முக்கியம் என்ன என்றால்; பள்ளிச் சிறுவர் முதல் பல்கலைக் கழக
மாணவர் வரை படிக்கக் வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவருடைய கதைப் பாடல்கள் இருக்கின்றன.
எட்டுக் கதைப் பாடல்களைத் தந்திருக்கிறார். அந்தக் கதைப் பாடல்கள் சில நீண்டதாக இருக்கின்றன. அவற்றைப் பெரிய மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம். அதில் உள்ள
சொற்களை எல்லாம் கற்றுக்கொள்ளலாம். நல்ல சந்தத்திலே அவர் தந்திருக்கிறார்.
பூனையும் எலியும், ஏமாந்த முதலை, ஏமாந்த சிங்கம், ஆமையும் முயலும், சிங்கமும் சுண்டெலியும்,
காகத்தின் விடாமுயற்சி, ஒற்றுமையே வெல்லும், காகமும் நரியும் என்று எட்டுக் கதைப்
பாடல்களாகத் தந்தி ருக்கின்றார்.
"காகத்தின் விடா முயற்சி என்ற பாடலில்
வல்ல வர்க்குத் தேவைப் பட்டா ல்
புல்லும் ஆயுதம்
நல்ல முயற்சி வாழ்வில் தருமே
நாளும் வெற்றியே!"
ஒவ்வொரு பாடலும் முடிகின்ற பொழுது அந்தக் கதையின் சாராம்சத்தை, தத்துவத்தை மாணவர்களுக்குச் சொல்லிக்கொண்டே போகிறார்.
அதே போல ஆமையும் முயலும் என்ற கதையில்,
கருமம் அதிலே கண்ணாய் இருந்தால்
வெற்றி என்றும் கிட்டுமே !
பெருமை கொள்ளல் கூடா தென்று
இன்று கற்றோம் பாடமே !
என்று சொல்லிக் முடிக்கின்றார்.
நேரத்தின் அருமை கருதி நான் இந்தச் சிற்றுரையை உங்களுக்கு
இயலுமான அளவில் இந்த நூலிற்குள்ளே என்ன இருக்கின்ற தென்பதையும் பாரதி ஜயா
அவர்களுடைய தனித்துவத்தையும்
சொல்லியிருக்கின்றேன் என்று நம்புகின்றேன்.
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
- அதை
தொழுது படித்திடடி பாப்பா "
என்ற பாரதியின் கனவை இன்று பாரதி ஐயா நிறைவு செய்திருக்கின்றார்.
இந்த உரையை இங்கு நடத்துவதற்கு அருமையான சந்தர்ப்பத்தை வழங்கிய
விழா அமைப்பாளருக்கு நன்றி கூறி அமைகிறேன். நன்றி" என்று கூறித் தனது சிற்றுரையை நிறைவு
செய்தார்
அவருக்குக் கொடுக்கப்பட்ட பத்து நிமிடத்திற்குள்ளே மிகவும்
அழகாக இரு பாகங்கள் அடங்கிய செந்தமிழ்ப் பூக்கள்
என்ற நூலின் சிறப்புகளையும், பாரதி ஐயா அவர்களின் தனித்துவத்தையும் சிறப்பாக எடுத்துக் கூறிய அவரின்
பேச்சாற்றலைப் பலரும் பாராட்டியதையும் அறிவேன். விழா நாயகனான நவநீத கிருஷ்ண
பாரதியாரின் பேரனான பிரபல சட்டத்தரணி சிவத்திரு ஞானாகரன் ஐயா அவர்கள் நன்றிரை
வழங்கியபோது விழாவின் வெற்றிக்கு உதவியவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
சிவத்திரு திருவரங்கன் பாரதி அவர்கள் பண்ணுடன் தேவார புராணம் பாடியதுடன் சான்றோர் விழா இனிதே
நிறைவுற்றது. வழமைபோல இந்த ஆண்டும் தமிழ் வளர்த்த சான்றோர் விழா மிகவும் சிறந்த
விதத்திலே நடைபெற்றதைப் பலரும் பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment