இன்றுடன் வாழ்வும் முடிவுக்கு வருமோ?


 -சங்கர சுப்பிரமணியன்




இன்று என்னை நாடி வந்தாள் அவள்

இன்று என்னுடன் இருப்பேன் என்றாள்
இன்றிரவு என்னோடு தனித்திருந்தாள்
இன்றிரவு முடியுமுன் முடிந்து போனாள்

இன்றிரவு முடிந்த பின் ஏது செய்வேன்
இன்றிரவை எண்ணி நான் வாழ்வேனா
இன்றிரவைப் போல் வேறு வந்திடுமா
இன்றிரவு போல் வந்தாலும் ஈடாமோ

இன்றிரவை வாழ்நாளில் மறப்பேனோ
இன்றிரவை எப்படி இவள் மாற்றினாள்
இன்றிரவு மடிமீது தலை வைத்தே நான்
இன்று விடியும்வரை தூங்கவா என்றாள்

இன்றிரவு மடியை கண்ணீரால் நனைத்தாள்
இன்றிரவு சொல்லால் மனதை வதைத்தாள்
இன்றிரவு மூச்சால் தொடையை சூடாக்கி
இன்றிரவே மூச்சின்றி குளிரவும் வைத்தாள்

இன்றுபோல் ஒருநாள் விட்டு விலகியவள்
இன்று எதனால் என்னை நாடியும் வந்தாள்
இன்றுடன் முழுதாக விலகிடவே வந்தாளா
இன்றுடன் என் வாழ்வும் முடிவுக்கு வருமோ?


No comments: