இலங்கைச் செய்திகள்

செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

இந்தியா-இலங்கை படகு சேவையில் இதுவரை 17,000 பயணிகள் பயணம் - ஜனித ருவன் கொடித்துவக்கு

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் !

இலங்கையின் 'மூன்றாவது பெரிய' மனித புதைகுழியாக மாறியது செம்மணி!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ; மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு

தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன- கனடாவின் எதிர்கட்சி தலைவர்

மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னாரில் இருந்து மாந்தை வரை அமைதி பேரணி!

 "உள்ளக பொறிமுறைக்கு ஆதரவான ஐநா மனித உரிமை ஆணையாளரின் கருத்து ஏமாற்றமளிக்கின்றது" - சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்



செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

27 Jul, 2025 | 10:29 AM

இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில்  ஆர்பாட்டம் நடந்தது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ‛‛செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும். செம்மணி எங்கும் தமிழர் குருதி உள்ளது. சிங்களர் செய்த தமிழர் அநீதிக்கு நீதி வேண்டும். தோண்ட தோண்ட எலும்பு கூடு.. பார்க்க பார்க்க நொறுங்குது இதய கூடு.. இன்னும் எத்தனை சாட்சி வேண்டும்..

இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும்.. ஐநா உரிமை

ஆணையமே.. நீதி வழங்க மறுக்காதே.. இனியும் மவுனம் காக்காதே.. இந்திய அரசே.. மத்திய அரசே.. குரல் கொடு.. குரல் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு குரல் கொடு.. தமிழக அரசே தமிழக அரசே.. அழுத்தம் கொடு அழுத்தம் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடு.. ” என்று கோஷமிட்டனர்.  



நன்றி வீரகேசரி 




இந்தியா-இலங்கை படகு சேவையில் இதுவரை 17,000 பயணிகள் பயணம் - ஜனித ருவன் கொடித்துவக்கு

Published By: Vishnu

23 Jul, 2025 | 01:39 AM

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை - இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையில் 17000 பேர் வரையிலானோர் இருநாடுகளுக்கும் இடையே வந்து போயுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இலங்கை - இந்திய பயணிகள் படகு சேவை தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பயணிகள் படகுச் சேவையானது 2023 ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன. எனினும் இறங்குதுறை தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்தியா அதற்காக உதவ தயாராக இருக்கின்றது.

இதேவேளை படகுச் சேவை மூலம் இந்த வருடத்தில் 17 000பேர் வரையிலான பயணிகள் வந்து போயுள்ளனர். 153 சேவைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு படகுகள் மூலம் சேவைகள் இடம்பெறுகின்றன. தொடர்ச்சியாக சேவைகள் இடம்பெறுவதுடன், கடல் சீற்றம் காலத்தில் நிறுத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தவிர மற்றைய நாட்களில் சேவைகள் இடம்பெறுகின்றன என்றார்.   நன்றி வீரகேசரி 





செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் !

Published By: Vishnu

22 Jul, 2025 | 07:12 PM

யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து செவ்வாய்க்கிழமை (22) 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.



அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள்  மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன . 



குழந்தைகள்  அருந்தும் பால் போத்தல் என சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..



இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில்  65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





இலங்கையின் 'மூன்றாவது பெரிய' மனித புதைகுழியாக மாறியது செம்மணி!

Published By: Vishnu

24 Jul, 2025 | 02:06 AM

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாகும்.

2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் இதுவரை 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் அடங்கும்.

முன்னர் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், 2023 இல் அந்த புதைகுழியில் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 18ஆவது நாளான ஜூலை 23 புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து ஐந்து புதிய மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடங்களுக்குத் தெரிவித்தார்.

"புதிதாக ஐந்து மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்களும் மொத்தமாக 20 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. மொத்தமாக 67 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன."

நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் வரையில் 67 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த 17ஆம் திகதி, கொழும்பில் பொலிஸ் தடைகளுக்கு மத்தியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்களும் வெகுஜன அமைப்புகளும் நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின.   நன்றி வீரகேசரி 





யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ; மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு

Published By: Vishnu

23 Jul, 2025 | 10:08 PM



யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று புதன்கிழமை (23) மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.



இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில்  67 எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.



கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.



செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும்  "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 



இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது 



அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 



அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 



அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 













நன்றி வீரகேசரி 




தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன- கனடாவின் எதிர்கட்சி தலைவர்

Published By: Rajeeban

24 Jul, 2025 | 04:52 PM

மிழ்மக்களிற்கு  எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர்  தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ் பாரம்பரியத்தை கொண்ட கனேடியர்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருவதற்கு தயாராகும் இவ்வேளையில் நாங்கள் மீண்டுமொரு முறை இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற பாரம்பரியத்தை எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் ஆரம்பமாகி இந்த வாரத்துடன் ஒரு வாரமாகின்றது. இந்த மனித புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள் என கருதப்படும் உடல்கள் உட்பட தமிழர்களின் பெருமளவு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்மக்;களின் உயிர்கள் கௌவரத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன.

வழமையான கட்டுமானபணியாக ஆரம்பித்தது - நடுங்கவைக்கும் கண்டுபிடிப்பாக மாறியது- தொழிலாளர்கள் நிலத்திற்கடியில் மனித உடல்களை கண்டுபிடித்தனர்.

நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தற்போது ஆழமற்ற மனித புதைகுழிகள்,கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள்,சிறுவர்கள் தனிப்பட்ட ரீதியில் எதிகொண்ட பாதிப்புகள் - விளையாட்டுப்பொருட்கள் , புத்தகபைகள்,ஆடைகள் - தெரியவந்துள்ளன.

ஈவிரக்கமற்ற தன்மை ஆழம்காணமுடியாதது.

தமிழ் கனேடியர்கள் தங்கள் இதயங்களில் பல தசாப்தங்களாக அறிந்திருந்த விடயங்களை - அதாவது இலங்கையின் உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல்போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை- செம்மணி மனித புதைகுழி நிரூபித்துள்ளது.

அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் - மௌனமாக்கப்பட்டார்கள் - இரகசியமாக புதைக்கப்பட்டார்கள்.

உயிர்தப்பியவர்களிற்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டிய ,பாரிய அநீதிகள் எங்கு இடம்பெற்றாலும- ,நீதிக்கான தேடலில் உறுதியாகயிருக்கவேண்டிய தார்மீக பொறுப்பு கனடாவிற்குள்ளது.

மிக நீண்டகாலமாக இந்த சுமையை சுமக்கும் இங்குள்ள மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு ஆதரவாக இருக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது.

நான் முன்னர் வாக்குறுதியளித்தது போல எதிர்கால கென்சவேர்ட்டிவ் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்போம்.

இனப்படுகொலை ராஜபக்ச அரசாங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட - இனப்படுகொலைக்கு காரணமானவர்களை விசாரணை செய்து நீதியின் முன்நிறுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளை ஆதரிப்போம். கனடா யுத்த குற்றவாளிகளி;ற்கு ஒருபோதும் பாதுகாப்பான புகலிடமாக விளங்காத நிலையை ஏற்படுத்துவதற்காக பாடுபடுவோம்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் சுயாதீன சர்வதேச தடயவியல் பங்களிப்பிற்கு வலியுறுத்துவோம்.உண்மை பாதுகாக்கபடுவதற்காக - மீண்டும் ஒருபோதும் புதைபடாமலிருப்பதற்காக   நன்றி வீரகேசரி 





மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னாரில் இருந்து மாந்தை வரை அமைதி பேரணி!

Published By: Digital Desk 2

24 Jul, 2025 | 06:27 PM




வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை வரையிலான அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது.



இப்பேரணி, மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வியாழக்கிழமை (24) காலை 10.00 மணியளவில் அடம்பன் சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.



பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், “எங்கே எங்கள் உறவுகள்?”, “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?”, “வேண்டும் சர்வதேச விசாரணை!”, “இது நாடா இடுகாடா?”, “சர்வதேசமே மௌனத்தை கலை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.



பேரணி மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதைகுழி பகுதியில் நிறைவடைந்தபின், அங்கிருந்த அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டவர்களுக்கும் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வின் முடிவில், மக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட மகஜர், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.


















நன்றி வீரகேசரி 




 "உள்ளக பொறிமுறைக்கு ஆதரவான ஐநா மனித உரிமை ஆணையாளரின் கருத்து ஏமாற்றமளிக்கின்றது" - சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

25 Jul, 2025 | 04:59 PM

உண்மைக்கும் நீதிக்குமான  இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு  தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உள்ளகபொறிமுறை குறித்து நம்பிக்கையில்லை சர்வதேச பொறிமுறையையே நாங்கள் வேண்டிநிற்கின்றோம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக நாளை வடக்குகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்குகிழக்கின் சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கை விஜயத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்ளகப்பொறிமுறையை வலியுறுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்தமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் வடக்குகிழக்கின் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் மெய்நிகர் கலந்துரையாடலில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது

ஏன் தற்போது இந்த போராட்டம் என்ற கேள்வி எழக்கூடும்.

2009 இல் தங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அழிப்பிற்கு வன்முறை கொலை பாலியல்வன்முறை போன்றவற்றிற்கு பலவழிகளில் நீதி கோரி தமிழனம் தோற்றுப்போயுள்ளது.

இந்த அடிப்படையில் சர்வதேசநீதியை கோரிநிற்கின்றோம்.

செம்மணி மீண்டுமொருமுறை சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் மறை முயல்கின்றது என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

அப்படியாயின் நீதியான விசாரணைகள் நடப்பது சாத்தியமில்லை.

தமிழ் மக்கள் கடந்தகாலங்களில் பல விசாரணைகளில் ஆஜராகியிருந்தார்கள்ஆனால்எந்த பொறிமுறையும் நம்பகதன்மை மிக்கதாக அமையவில்லை.ஐநா மனித உரிமையாளர் இலங்கை வருகின்றார் என்றவுடன் இந்தவிடயம் உரத்துப்பேசப்பட்டது.தமிழ்மக்கள் நீதி கோரி நின்றார்கள்.

ஆனால் ஐக்கியநாடுகள் மனித உரிமையாளர்உள்நாட்டு பொறிமுறையை ஊக்குவிக்கும் விதத்தில்கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு இந்த விடயத்தில் இயன்ற பல விடயங்களை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில்பல கேள்விகளையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இந்த பொறிமுறையில் எங்களிற்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்.

26ம் திகதி வடகிழக்கு சமூக இயக்கம் ஒரு பெரும் எதிர்ப்பு போராட்டத்தை வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். தமிழ் சிவில் சமூக அமையம் அவர்களிற்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றது.

--

வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லவகுசராசா தெரிவித்துள்ளதாவது

இனப்படுகொலை  இடம்பெற்ற செம்மணியை பார்த்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்  ஊடகங்களிற்கு தெரிவித்த கருத்துக்கள் வடக்குகிழக்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட  மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கு மறுநாள் இலங்கைக்கான ஐநாவின் நிரந்தரவிதிவிடப்பிரதிநிதி தெரனவிற்கு தெரிவித்த கருத்துக்களும் பாரிய ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது.

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்இகடிதங்களை அனுப்பதிட்டமிட்டுள்ளோம்.26ம் திகதி வடக்குகிழக்கில் உள்ளகபொறிமுறைமீது நம்பிக்கையில் என்பதை தெரிவித்துஇ சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி  நாம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளோம்.

யுத்தம் நிறைவடைந்த 16 வருடங்களில் எங்கள் ஆதரவை வெளியிடாவிட்டாலும் உள்ளக பொறிமுறை ஊடாகவும் நாங்கள் நீதியை பெற முயற்சி செய்தோம்.

உள்ளக பொறிமுறை மூலம்  நீதி கிடைக்கும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.

குமாரபுரம் தீர்ப்பு உள்ளக பொறிமுறை எவ்வாறு இயங்கும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம்.2016 ஜூலைமாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட அனைவருக்கும் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில்லை. இதனை வெளிப்படுத்தவே ஆர்ப்பாட்டம்.

சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிற்கு சாதகமாக உள்ளதுஇ தங்கமுலாம் பூசப்பட்ட ரி56 துப்பாக்கியை வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து விடயங்களும் ஒரு பக்கசார்பாகவே கையாளப்படும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை வெளியில் எடுத்து பொதுச்சபையில் பாரப்படுத்தவேண்டும்.

ஆகவேமேற்கூறப்பட்ட காரணங்களால்  இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களிற்காக குரல்கொடுக்கும் சிவில் சமூகத்தினராகிய நாங்களும் சர்வதேச பொறிமுறையை வேண்டிநிற்கின்றோம்.

வெளிநாட்டு தரப்பினர் இது குறித்து எதிர்காலத்தில் ஆராய்வதே பொருத்தமாகயிருக்கும்.   நன்றி வீரகேசரி 







No comments: