பட்டிக்காட்டு ராஜா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


1965 ம் வருடம் காக்கும் கரங்கள் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சிவகுமார் அடுத்து வந்த பத்தாண்டுகளில் பல படங்களில் சிறு வேடங்களிலேயே நடித்து வந்தார். அதிலும் பெரும் பாலான பாத்திரங்கள் அவரை மென்மையானவராக, அப்பாவியாக, வெகுளியாக காட்டும் பாத்திரங்களாகவே சித்தரித்தன. இந்த நிலையில் தான் 1975ம் வருடம் ஒரு அதிரடி , ஆக்க்ஷன் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது மட்டுமன்றி அந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சந்தர்ப்பமும் கூடி வந்தது. இது சிவகுமார் ஒரு முழு நேர ஹீரோ அகி விட்டார் என்பதையும் கட்டியம் கூறியது. அப்படி அவர் நடித்து வெளி வந்த படம் தான் பட்டிக்காட்டு ராஜா . 



ஈஸ்ட்மென் கலரில் வெளிவந்த இந்தப் படம் அடிதடி, காதல், குடும்ப

செண்டிமெண்ட், வில்லன்களின் சதித் திட்டம், என்று எல்லாம் கலந்த ஒரு கலவையாகவும் இருந்தது. அது மட்டுமன்றி கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லா வகையில் காட்சிகளும் அமைக்கப்பட்டன. 


கிராமத்து அண்ணாசாமி பட்டணத்தில் கல்வி பயிலும் தன் முறைப் பெண் சரசுவை தேடி பட்டணத்துக்கு வருகிறான். வழியில் பணக்கார பெண்ணான உஷாவின் அறிமுகமும் அவனுக்கு கிடைக்கிறது . ஆனால் தான் தேடி வந்த சரசு ஒருவனை காதலித்து பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு நிர்கதியாக இருப்பதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைகிறான். அவளையும் காதலனையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் அவனுக்கு அடுத்தடுத்து பல சவால்கள் வருகின்றன. அன்னை மரியாளின் கிரீடத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் டைகர், மன்சூர், இருவரின் சதிகள், தன்னைப் போல் இருக்கும் டைகரின் கையாள் ராஜாவின் தந்திரங்கள், ஜாலக்காரி நீலுவின் சாகசங்கள் , என்று அவனை சுற்றி பல வலைகள் பின்னப்படுகின்றன. அவற்றில் இருந்து எவ்வாறு அவன் மீள்கிறான் என்பதே படத்தின் மீதி கதை. 

  அது வரை காலமும் சிவகுமார் ஏற்று நடிக்காத வேடம் என்பதால்

படத்தில் சிகரெட் புகைக்கிறார், நீச்சல் குளத்தில் இளம் பெண்களுடன் ஆடிப் படுகிறார். சண்டைக்கு காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார், இதனிடையே தாய்ப் பாசத்தையும் விட்டு வைக்கவில்லை அவர். பட்டிக்காட்டு அண்ணாசாமி, பட்டணத்து ராஜா இரண்டு வேடமும் பொருந்துகிறது அவருக்கு.

 படத்தில் அவருக்கு ஜோடி ஜெயசுதா. வரும் காட்சிகளில் எல்லாம் கவர்ச்சியை காட்டுவதில் குறை வைக்கவில்லை அவர். அவருக்கு போட்டியாக ஸ்ரீப்ரியாவும் கவர்ச்சியாக வருகிறார். இவர்கள் இருவரிடையே படாபட் ஜெயலஷ்மி தான் அப்பாவி, பரிதாபத்தியத்துக்குரிய பாத்திரம். ஆனாலும் மனதில் நிற்கிறார். படத்தில் காமெடிக்கு மனோரமா , தேங்காய் சீனிவாசன் இருந்தும் சிரிப்பு தான் வர மறுக்கிறது. இவர்களுடன் டி . கே. பகவதி, எஸ் .என். லஷ்மி, பண்டரிபாய், குணாளன், ராஜவேலு, ஏ. கே. வீராசாமி, ஆகியோரும் நடித்திருந்தனர். 



படத்தில் வில்லனாக வரும் அசோகன் மேக்கப் அகோரம், நடிப்பு

கஷ்டம் ஆனாலும் சில இடங்களில் ரசிக்கும் படி செய்து விடுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ராஜபாண்டியன் நடிப்பு ஓகே. இவர்கள் எல்லோருடனும் கமல்ஹாசனும் வருகிறார் என்பதை மறக்காமல் சொல்லியாக வேண்டும்! கமலுக்கு மேலும் சில காட்சிகளை கொடுத்து அவரை பயன் படுத்தியிருக்கலாம் . 


சங்கர் கணேஷ் இசையில் வாலி இயற்றிய உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் பாடல் கமலின் ஆட்டத்துடன் கிறங்க வைக்கிறது. ஏனைய பாடல்கள் எடுபடவில்லை. ஒளிப்பதிவாளர் பி. என். சுந்தரம் கவர்ச்சி காட்சிகளில் குறைவைக்கவில்லை. 



டைரக்டர் ராமண்ணாவிடம் நீண்ட காலம் உதவி டைரக்டராக பணி புரிந்த கனக சண்முகம் ராமண்ணா பாணியிலேயே படத்தை பல திடீர் திருப்பங்களுடன் படமாக்கியிருந்தார். பட்டிக்காட்டு ராஜா சுமாராக ஓடிய போதும் , இந்த படத்தை தொடர்ந்து சிவகுமார் முழு நேர ஹீரோவாவதற்கு இந்தப் படம் உதவியது எனலாம். இந்தப் படம் வெளிவந்த அதே ஆண்டு வெளியான எம் ஜி ஆரின் நினைத்ததை முடிப்பவன், சில ஆண்டுகள் கழித்து வெளிவந்த ரஜினியின் பில்லா, எல்லாம் ஒரே அச்சில் வார்த்தெடுத்த சித்திரங்கள் என்றால் அதில் தப்பில்லை!



No comments: