வாழ்வெனும் பாடம் மயக்கமாய் விரியுது !




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 



இளமையில் வறுமை பெற்றவர் பிரிவு
உற்றவர் ஒதுக்கல் உறவுகள் விலகல்
ஆனால் அவனே ஒதுங்கிடா இருந்தான் 
கிடைத்ததைக் கொண்டு எழுந்திட முயன்றான்

இரக்கம் உந்திட இணைந்த நல்லுறவால்
எடுத்தடி வைத்துமே ஏறிட முனைந்தான்
கற்பதை மட்டும் கைவிட வில்லை
கல்வியைக் கருத்தில் இருத்திட முனைந்தான்

சேர்ந்த உறவால் சோர்ந்தவன் நிமிர்ந்தான்
இடையில் வருத்தம் இணைந்தே இருந்தது
திட்டும் வாங்கினான் தெருவுக்கும் இறங்கினான்
இறந்திடும் வகைக்கும் எடுத்தான் முடிவை 

அவனின் நல்வினை முடிவினை மாற்றிட
ஆண்டவன் துணையே கதியென எண்ணினான்
படித்தான் படித்தான் பலதும் படித்தான்
பற்பல வேலைகள் பார்த்திட முயற்றான் 

அன்புடைக் குடும்பம் இவனைக் கண்டது
அணைத்திட ஆர்வம் கொண்டதக் குடும்பம்
அன்பைத் தேடியே அலைந்தவன் அவனும்
அணைத்திடும் குடும்பத்தில் அணைந்திட விரும்பினான்

அணைந்த குடும்பம் அன்பைச் சொரிந்தது
அழகுடை மகளை அவன் சொத்தாக்கினார்
சொத்தாய் வந்தவள் சொக்கத் தங்கம்
சொர்க்கம் கிடைத்ததாய் அவனும் உணர்ந்தான்

சேர்ந்த இடத்தால் சோர்வுகள் அகன்றான்
சேர்ந்தவள் அவனை செலுத்தினாள் நல்வழி
ஊக்கம் கொண்டான் உயர்கல்வி கற்றான்
உயரிய பதவியில் அமர்ந்தான் அவனும் 

முத்தாய் வைரமாய் பிள்ளைகள் பிறந்தார்
அனைவரும் வாழ்த்திட அவர்கள் வளர்ந்தார்
கலைகள் படித்தார் கணிதமும் படித்தார்
விஞ்ஞானம் படித்தார் விருப்புடன் படித்தார்

வேலையும் கிடைத்தது மணமும் வாய்த்தது
நாலுபேர் மதிக்க நயமுடன் வாழ்ந்தனர் 
அவனும் மகிழ்ந்தான் மனைவியும் மகிழ்ந்தாள்
ஆண்டவன் கிருபையால் அனைவரும் மகிழ்ந்தனர்

காலம் கடந்தது கண்ணியம் குறைந்தது
கஷ்டப் பட்டவன் கஷ்டம் கண்டான்
வேதனை வாட்டிட அவனும் மனைவியும்
விரக்தியாய் வாழ்வினைக் கண்டுமே நின்றனர்

பாசம் என்பது பஞ்சாய்ப் பறந்தது
பரிவு என்பது சரிவினைக் கண்டது
இரக்கம் உருக்கம் எங்கோ ஒழிந்தது
அவனும் அவளும் அலமந்து நின்றனர்

கட்டிய கூடு கலைந்தே போனது
கற்பனை யாவுமே நொருங்கியே போனது
முத்தும் வைரமும் ஒதுங்கியே நின்றன
பெற்றவர் மனமே பித்தாய் துடித்தது

மூலையில் முடங்கினார் முணுகியே நின்றார்
காலையும் மாலையும் வந்துமே சென்றது
வசந்தத்தை எண்ணியே வாழ்கிறார் இன்னமும்
வாழ்வெனும் பாடம் மயக்கமாய் விரியுது 

No comments: