வாழ்க்கைப் படகு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 இந்தியத் திரையுலகில் வெற்றி சின்னமாக விளங்கிய பட நிறுவனம் ஜெமினி


பிலிம்ஸ் . இதன் அதிபர் எஸ் எஸ் வாசன் தமிழ், ஹிந்தி , தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் படம் எடுத்து சாதனை புரிந்தவர். 1961ம் ஆண்டு இரும்புத் திரை படம் எடுத்து நான்காண்டுகள் கழிந்த நிலையில் 1965ம் வருடம் மீண்டும் அவர் தயாரித்த படம் வாழ்க்கைப் படகு.

 
முதலில் ஹிந்தி மொழியில் இந்தப் படம் உருவானது. ஜிந்தகி என்ற பேரில் உருவான படத்தில் ராஜேந்திரகுமார், வைஜெயந்திமாலா, ராஜ்குமார் ஆகியோர் நடித்தனர். படத்தின் கதாநாயகி நடனப் பெண் என்பதால் அப் பாத்திரம் வைஜெயந்திமாலாவுக்கு மிக பொருந்தியது. ஆனால் தமிழில் அவர் நடிக்காததால் தேவிகா அப் பாத்திரத்தை செய்திருந்தார். 1965ல் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படம் தயாரானது. ஜெமினியில் தயாராகி ஜெமினி கணேசன் ஆனவர் ஜெமினி. இப் படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க, தெலுங்கில் என் டி ராமராவ் ஹீரோவானார். இரண்டிலும் ஹிரோயின் தேவிகா!

ஏழைப் பெண்ணான சீதா கோபாலின் நடன மன்றத்தில் நாட்டியக்காரியாக

பணியாற்றுகிறாள். அவளுடைய அழகு , குணம் என்பன கோபாலை கவர ஒரு தலையாக அவளை காதலிக்கிறான். அதே சமயம் தியேட்டர் முதலாளி கண்ணபிரானும் சீதாவை தன் இச்சைக்கு பயன் படுத்த முயற்சிக்கிறான். அவளை கடத்தி வர அவன் எடுக்கும் முயற்சி ஜமீன்தார் சொக்கநாதனின் மகன் ராஜன் மூலம் முறியடிக்கப் படுகிறது. சீதா ஒரு நடனப் பெண் என்று அறிந்தும் ராஜன் சீதாவை விரும்புகிறான். அந்தஸ்து வித்தியாசம் இன்றி இருவரிடையே காதல் மலர்கிறது. ஜமீன்தார் இவர்களின் காதலை எதிர்க்கிறார். ஆனால் ராஜனின் பிடிவாதத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திருமணத்துக்கு சம்மதிக்கிறார். ஆனாலும் கோபாலுடன் எந்த தொடர்பும் சீதாவுக்கு இருக்கக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கிறார். சீதாவும் அதனை ஏற்கிறாள் .

கல்யாணத்துக்கு பிறகு கடைத்தெருவுக்கு செல்லும் சீதா திடிரென்று பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக ஓர் இரவை கோபாலின் இல்லத்தில் கழிக்கிறாள். அதே இரவு கண்ணபிரான் கொல்லப்பட அப் பழி கோபால் மீது விழுகிறது. அவனை காப்பாற்ற சீதா தான் அன்றிரவு அவன் இல்லத்தில் தங்கி இருந்ததை கோர்ட்டில் சொல்கிறாள் . கோபாலுக்கு விடுதலை கிட்டுகிறது. ஆனால் சீதா மீது களங்கம் சுமத்தப் படுகிறது. ராஜன் அவளை ஜமீனை விட்டே விரட்டி விடுகிறான். ஆனாலும் பிரிவின் வேதனை தாங்காது தவிக்கிறான். மீண்டும் ராஜன், சீதா இணைந்தார்களா என்பதே மீதி கதை.


படத்தில் ஜெமினி, தேவிகா இருவரும் இணையாக நடித்திருந்தனர். படத்தின் கதை தேவிகாவை முதன்மைப்படுத்தி அமைக்கப்பட்டதால் சீதாவாக நடித்த தேவிகாவின் நடிப்பு நிறைவாக இருந்தது. எந்த இடத்திலும் மிகையின்றி தன் நடிப்பை வழங்கியிருந்தார். ஜெமினி மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளை விட சோகமாக இருக்கும் காட்சிகளே அதிகம். அது ஒன்றும் அவருக்கு கஷ்டமில்லையே! எஸ் வி ரங்காராவ் ஜமீன்தார் , வித விதமாக ஆடை அணிந்து கட்சி தருகிறார், ஆனால் நடிப்பு வழக்கமானது தான். முத்துராமன் மேக்கப் அவரின் பாத்திரத்தின் தன்மையை உணர்த்தி விடுகிறது. டீ எஸ் பாலையா, எம் வி ராஜம்மா, எஸ் ராமராவ், எஸ் என் லஷ்மி, ஆகியோரும் நடித்திருந்தனர். ஆர் எஸ் மனோகர், பாலாஜி இருவரும் வில்லன்கள். அவர்கள் இன்றி படம் எப்படி நகரும்.
 
படத்தின் விறுவிறுப்பு நாகேஷ், பி. டி சம்பந்தம்,கீதாங்சலி மூவரின் நகைச்சுவையால் காப்பாற்றப்படுகிறது. இவர்களும் இல்லாவிட்டால் கஷ்டம்தான்.
வாழ்க்கைப் படகு படத்தின் மூலம் தான் கண்ணதாசன், விஸ்வநாதன் , ராமமூர்த்தி மூவரும் இரும்புத் திரையை அகற்றி ஜெமினி கோட்டைக்குள்

நுழைந்தார்கள். அவர்களுடன் அருமையான பாடல்களும் நுழைந்தன. வாசனின் கண்டிஷனுக்கு எல்லாம் ஏற்றாற் போல் செயல்பட்டு பாடல்களை உருவாக்கினார்கள். நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, சின்ன சின்ன கண்ணனுக்கு, உன்னைத்தான் நான் அறிவேன், ஆயிரம் பெண்மை மலரட்டுமே, பாடல்கள் கருத்துடன் இனிமையாக ஒலித்தன.
 
படத்துக்கு கதை வசனம் வேப்பத்தூர் கிட்டு. பிரெஞ்சு நாவல் ஒன்றை அடிபடையாக கொண்டு கதையை கிட்டு எழுதியிருந்தார். தன் திறமையை காட்ட கிடைத்த வாய்ப்பை அவர் நழுவ விடவில்லை. ஒளிப்பதிவு எல்லப்பா . படத்தை முதலில் வாசனின் மகன் எஸ் .எஸ் .பாலன் டைரக்ட் செய்வதாக இருந்தது. பின்னர் படத்தை சி . சீனிவாசன் (எஸ் .எஸ். வாசன் அல்ல) இயக்கினார். முவர் பணியும் ஓகே.
 

ஹிந்தியில் 1962ல் வந்த ஜின்தகி பெற்ற வெற்றியை வாழ்க்கைப் படகு எனோ பெறவில்லை. படத்தின் உச்ச காட்சி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றாற்ற போல் அமையாதது காரணமாகி இருக்கலாம். ஆனாலும் வாழ்க்கைப் படகில் சவாரி செய்வது சுக அனுபவம் தானே!





No comments: