முதல் சந்திப்பு: சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் பத்மா இளங்கோவன் ! ஆறுவயதில் யோகர்சுவாமியின் ஆசிபெற்றவர் ! ! முருகபூபதி


உடல் நலம் குன்றியிருந்தமையால், இந்த முதல் சந்திப்பு தொடர், கடந்த சில மாதங்களாக வெளிவரவில்லை.  எனினும் மீண்டும் எழுதப்படுவதால் உடல் நலம் சீராகிவிட்டது என்பது அர்த்தமும் அல்ல.

ஏதோ, மீண்டும் எழுத முயற்சிக்கின்றேன்.

சமகாலத்தில் எனது  பெரும்பாலான பொழுதுகள் எனது பேரக்குழந்தைகளுடன் கடந்து செல்கின்றன.  அவர்கள் தினசரி தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும், சுட்டிக்கண்ணம்மா முதலான காணொளி பதிவுகளை நானும் பார்த்து ரசிக்கின்றேன்.

குழந்தைகளை கவரும் வகையில்  அத்தகைய தொலைக்காட்சி காணொளிகளை தயாரித்து இயக்குவது எத்தகைய கடின முயற்சியோ, அதுபோன்றே, குழந்தைகளுக்காக  இலக்கியம் படைப்பதும் கடினமானதுதான்.

பிரான்ஸில் வதியும் திருமதி பத்மா இளங்கோவன் இதுவரையில்


சில குழந்தை இலக்கிய நூல்களை படைத்திருக்கிறார்.  குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டவர்களினால்தான், அத்தகைய முயற்சிகளில் ஆக்கபூர்வமாக  ஈடுபட முடியும்.

பத்மாவை முதல் முதலில் 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையில் அவர்களது பெற்றோருடன் சந்தித்தேன். பத்மாவின் தந்தையார் ஆசிரிய பணியிலிருந்தவர் என்பது எனது அவதானம்.

அக்காலப்பகுதியில்  எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டு பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.  நாம் கொழும்பில் பாரதி நூல்களின் கண்காட்சியையும், ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் ஒளிப்படக்  கண்காட்சியையும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, சங்கத்தின் செயலாளர் ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரன், என்னை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.

அங்கே இலக்கிய நண்பர் வி. ரி. இளங்கோவனின் அழைப்பின்பேரில் கொழும்புத்துறைக்குச்சென்றேன்.  இளங்கோவன், கலை, இலக்கிய, அரசியல்  செயற்பாடுகளின் பின்னணியில் வாழ்ந்தவர். வளர்ந்தவர்.

மூத்த எழுத்தாளர்கள் நாவேந்தன், துரைசிங்கம், மற்றும்  கொழும்பு பல்கலைக்கழக  சட்ட பீடத்தின் தகைமைசார் பேராசிரியர்  தமிழ்மாறன் ஆகியோரின் சகோதரர்.

ஈழத்து முற்போக்கு இலக்கிய முகாம் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியில் பிளவுபட்டிருந்தது.

நண்பர் இளங்கோவன் ஊடாக யாழ். மாவட்டத்தில் அவர் அங்கம் வகித்த   இலக்கிய அமைப்பினைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஒளிப்படங்களை சேகரித்தேன்.


அவர் கொழும்புத்துறையில்,  தனது எதிர்கால மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தினார்.  பத்மாவின் இல்லத்தில் அன்று மதியம் எனக்கு விருந்து தரப்பட்டது.

அதன் பின்னர் சுமார் 36 ஆண்டுகளின் பின்னர் 2019 ஆம் ஆண்டிலும், கடந்த 2023 ஆம் ஆண்டிலும்  பத்மா – இளங்கோவன் தம்பதியரை பாரிஸ் மாநகரில் சந்தித்தேன்.  இச்சந்தர்ப்பங்களிலும் இவர்களின் மதிய விருந்துபசாரத்தில் திழைத்தேன்.  2023  சந்திப்புக்கு தோழர் ராயப்பு அழகிரி அழைத்துச் சென்றார்.

பத்மா, குழந்தைகள் இலக்கியப் படைப்பாளியாக வளர்ந்திருந்தார். அத்துடன் குழந்தைகளின் தாயாகவும் இயங்கிக்கொண்டு,  கணவரின் எழுத்துப்பணிகளுக்கும் உதவிக்கொண்டிருக்கும் இல்லத்தரசியாகியிருந்தார்.

 “ உலகில் நல்லவைகள் யாவும் குழந்தைகளுக்கே   என்றார் லெனின். குழந்தைகள்தான் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள். தீர்மானிப்பவர்கள். அவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்களுக்கு கலை, இலக்கியம் மிகவும் முக்கியம்.

பாரதியார், அழ. வள்ளியப்பா உட்பட, ஈழத்து  மூத்த கவிஞர்கள்


அம்பி, வேந்தனார்,  வானொலி மாமா மகேசன் உட்பட பலர்  குழந்தை இலக்கியம் படைத்திருக்கிறார்கள் என்பதை அறிவோம்.  சமகாலத்தில் புகலிடத்தில் வாழும் எமது புதிய தலைமுறையினர் சிலர்  தமிழிலும் ஆங்கிலத்திலும் டேனிஷ் மொழியிலும் குழந்தை இலக்கியம் படைப்பதை, கனடாவிலும், இங்கிலாந்திலும்,  டென்மார்க்கிலும் அவதானிக்க முடிகிறது.

குழந்தையாக -  குமரியாக – தாயாக – பாட்டியாக உருமாறும் பெண்கள், தங்கள் கடந்த காலத்தை நினைத்துக்கொள்வார்கள். அந்த நினைப்பினை எழுத்தில் பதிவுசெய்ய முடிந்தவர்கள் எழுதிவிடுவார்கள். அது இலக்கியமாகிவிடுகிறது.  பத்மா இளங்கோவன் எழுதியிருக்கும் தாலாட்டு தொடர்பான பாடலை இங்கே பாருங்கள்:

அன்று நீ பாடினாய்
ஆராரோ.. ஆரிவரோ... ..
அழகான தாலாட்டு
ஆனந்தத் தூக்கமது..!

அம்மா...
நீ சென்றபின்..
இன்று வரையில்லை
அத்தூக்கம்... ..

அன்னையர் தினம்..


அன்னையர் தினமென்று
உலகெங்கும்
பாட்டுக்கள்.. பாராட்டுக்கள்
அம்மாக்களுக்காக... ..!

அம்மா..
உன்னை நினைத்துப் பார்த்தேன்..
பாடினேன் ஒரு பாட்டு..
அது
என் தாலாட்டு...
தூங்குவாயா அம்மா...
என் தாலாட்டுக் கேட்டு... ..
முடியுமா உன்னால்... ..?

ஏனெனில்..
இன்று நானும்
ஓர் அன்னையாகிவிட்டேன்...
இப்போது..
என்னால் தூங்கமுடிவதில்லை..!

அம்மா..
நீ தான் வேண்டும்..
என்னைத் தாலாட்ட...
உன்னால் தான் முடியும்
என்னைத் தூங்கவைக்க... ..

மீண்டும்
உன் மடியில்..
நான் வளர வேண்டும்...
கண் வளர வேண்டும்... ..!

உனக்கென
எதையும் வேண்டாத


தியாக தீபமே... ..
உனக்காக ஒரு நாள்...
ஓ... .. அம்மா... ..!

ஒவ்வொரு விடியலும்
உனக்கு
நன்றி சொல்வதற்காகவல்லவா... ..
விடிய வேண்டும்..!

அம்மா... ..
என் நன்றிக்கடன் தீர்க்க
மீண்டும்...
உன் மடியில் நான்... ...
என்னைத்
தாலாட்ட வருவாயா... ..?


பத்மாவின் இந்த பாடலை படித்தபோது,  1966 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் சித்தி திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசு கண்ணதாசனின் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடல்தான் நினைவுக்கு வந்தது.

பத்மா இளங்கோவன்,  குற்றவாளிக் கூண்டில் கவிஞர் கண்ணதாசன் ( தொகுப்பாசிரியர் )  செந்தமிழ் சிறுவர் பாடல், செந்தமிழ் மழலைப்பாடல், பிள்ளைப்பாடல்கள், சிறுவர் இலக்கிய நுட்பங்கள், முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர்.

தனது பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் ஈடுபடத் தொடங்கியவர். தாயகம்விட்டு பிரான்ஸுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தொடர்ந்து எழுதுகின்றார்.

பரிசு என்ற சிறுவர்க்கான சிற்றிதழையும் வெளியிட்டவர். ஐரோப்பிய


இலக்கிய இதழ்களிலும் எழுதிவந்திருப்பவர். இங்கிருந்து இயங்கும் வானொலிகள், தொலைக்காட்சிகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பேற்றுள்ளன.

தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியத்திற்கான விருதினையும் 2012 ஆம் ஆண்டு பத்மா இளங்கோவன் பெற்றுள்ளார்.

இலங்கையில் எம். டீ. குணசேனா நிறுவனம் பல தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களை முன்னர் வெளியிட்டது.  தினபதி, சிந்தாமணி, ராதா, தந்தி, சுந்தரி முதலான இதழ்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது என்பதைச்  சொன்னால், தற்கால தமிழ் வாசகர்கள் நம்பமாட்டார்கள்.

இவற்றில் தினபதி நாளிதழ், சிந்தாமணி வார இதழ்களின் பிரதம ஆசிரியராக விளங்கிய ( அமரர்) எஸ். டி . சிவநாயகம் அவர்கள் ஏராளமான புதிய தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.

அவர்களில் ஒருவர்தான் பத்மா.  1980 களில் யாழ்ப்பாணத்தில்  சில பேச்சாற்றல் மிக்க எழுத்தாளர்கள் குற்றவாளிக்கூண்டில் கண்ணதாசன் என்ற தலைப்பில் ஒரு வழக்காடு மன்றத்தை நடத்தினர்.  இந்தச்செய்தியை கண்ணதாசன் அறிவாரோ தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலத்திலேயே  இது இலங்கையில் நடந்திருக்கிறது. அதன்பின்னர் 1981 இல்தான் கவியரசர் மறைந்தார். 
 

அந்த வழக்காடு மன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளைத் தொகுத்து எழுதியவர் பத்மா.  எனினும், தன்னை ராணி மகேசு என்றே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
 
  ஏற்கனவே தனது கவிதை, பாலர் பாடல், கட்டுரை சிலவற்றைப் பிரசுரித்து தனக்கு ஊக்கம் அளித்த பத்திரிகைகளில் ஒன்றான தினபதி மகிழ்ச்சி அளிக்கத்தக்க வகையில் ( 24 - 10 – 1980 ) அதனைப் பிரசுரித்திருந்தது.  “ என்று நன்றியோடு அந்தத் தொகுப்பு நூலின் முகவுரையில் பத்மா குறிப்பிட்டுள்ளார். 
 
பத்மா இளங்கேவனின் சிறுவர் இலக்கிய நுட்பங்கள் என்ற நூலை கொழும்பில் ஞானம் பதிப்பகம் ( 2023 ) வெளியிட்டுள்ளது. 
 
பத்மாவின் சில ஆக்கங்களும், பத்மாவின் படைப்புகள் குறித்து ஏனையோர் எழுதிய மதிப்பீடுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 
 
குருநாதர் யோகர் சுவாமிகள் என்ற கட்டுரையிலிருந்து, பத்மாவும் அவரது  நல்லாசிகளை பெற்றவர் என்பது தெரிகிறது. 
 
கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் பத்மாவின் பூர்வீக இல்லத்திற்கு அருகாமையில்தான் யோகர் சுவாமியும் குடியிருந்தவர். ஒரு நாள் தனது ஆறுவயதுப்பருவத்தில், தமது மாமியாருடன் யோகர் சுவாமியை தரிசிக்கச்சென்றிருந்த பத்மா, அங்கே தொடர்ந்தும் இருமியிருக்கிறார்.
 
குழந்தையின் இருமல் ஒலியைக்கேட்ட யோகர் சுவாமி, குழந்தையை அருகே அழைத்து, குழந்தையின் தலையிலும் முதுகிலும் மெதுவாகத்தட்டியிருக்கிறார். அத்தோடு இருமல் நின்றுவிட்டது.
 
இதுபோன்ற யோகர் சுவாமிகள் பற்றிய புதினங்களை வேறு இடங்களிலும் கேட்டிருக்கின்றேன்.   
 
  உங்கள் குழந்தையை இனி காப்பாற்ற முடியாது. மருத்துவமனையிலிருந்து எடுத்துச்செல்லுங்கள். “ என்று சொல்லி,  ஒரு பெண் குழந்தைகான  சிகிச்சையை யாழ். ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் கைவிட்டபோது, அக்குழந்தையின் பெற்றோர்கள், கண்ணீரோடு ஓடிச்சென்றது இந்த யோகர் சுவாமியிடம்தான்.  அவர் அக்குழந்தையை ஆசிர்வதித்ததுடன் மட்டும் நின்றுவிடாமல்,  அன்றைய  யாழ். அரசாங்க அதிபர் ஊடாக அக்குழந்தையின் பெயரில் ஒரு காணியையும் பெற்றுக்கொடுத்தார் என்ற செய்தியையும் அறிவேன்.  அக்குழந்தை குமரியாகி, படித்து முன்னேறி,  திருமணம் முடித்து, புகலிட நாடொன்றில் சிறந்த தொழில் வாய்ப்பும் பெற்று,  மக்கள் செல்வங்களையும்  பேரக்குழந்தைகளையும் கண்டுவிட்டார். 

 
யோகர் சுவாமிகள் போன்ற சித்தர்களை புரிந்துகொள்ள முடியாது.  அதனால்தானே ரிஷி மூலம் -  நதி மூலம் அறியமுடியாது என்கின்றனர்.
 
பத்மா இளங்கோவனின்  குறிப்பிட்ட குருநாதர் யோகர் சுவாமிகள் என்ற சிறிய ஆக்கம், இதுபோன்ற  மேலும் சில கதைகளுக்கு கதவு  திறந்துவிடும்.
 
பத்மா இளங்கோவன் எழுதியிருக்கும் குழந்தைகளுக்கான பாடல்களில் கருத்தும், ஓசைநயமும் இழையோடுகிறது.  எளிய சொற்களை கோர்த்திருப்பதனால், குழந்தைகளுக்கு நெருக்கமாகிவிடும். 
 
 “ குழந்தை இலக்கியப் படைப்பாளிகள், மொத்தத்தில் ஓர் உளவியல் வல்லுநராகக் குழந்தைகள் மனநல நிபுணராகவிருந்து செயற்பட்டால், சமுதாய உயர்ச்சிக்கு வேண்டிய ஆக்கங்களைப் படைத்து அதில் வெற்றிபெற்று உலகையே உய்விக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்  “ என்று சொல்கிறார் பத்மா இளங்கோவன்.
 
இவரது படைப்பு முயற்சிகள் குறித்து பாரிஸில் இலக்கிய நண்பர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்துரையாடியிருந்தனர். 
 
பத்மா இளங்கோவன் தொடர்ந்தும் குழந்தை இலக்கியம் படைத்தவாறு,  தன்னால் முடிந்த இதர இலக்கியத்துறைகளிலும் சாதனை படைக்கவேண்டும் என வாழ்த்துகின்றோம்.
 
 --------------0000-------------------
letchumananm@gmail.com 
 

 

No comments: