உலகின் ஒளியோன் சக்தி முதல்வன் காலையை அறிவிக்கும் கதிரவனை நோக்கி நன்றி கூறி, வாழ்த்தி, வணங்கி தைமகளை வரவேற்கும் தமிழர் பெருநாள் தைப்பொங்கல் திருநாள் நிகழ்வு பரமாற்றா பொங்கல் என்ற சிறப்புப் பெயரில் பரமாற்றா நகரில் 2013ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு பரமற்றா நகரசபை ஆதரவில் அவுத்திரேலியாவின் New South Wales மாநிலத்தின் இரண்டாவது வியாபார மையம், உலக தரத்திற்கான அபிவிருத்தி காணும் பரமாற்றா நகரில் பரமாற்றா நகரசபை மண்டப நூற்றாண்டுச் சதுக்கம் அதனுடன் இணைந்த நகரசபை மண்டபத்தில் கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8:45 முதல் பகல் 12:30 மணிவரை பிரதம அழைப்பாளராக Her Excellency Honourable Sam Mostyn AC. (Governor- General of Australia), கலந்துகொள்ள பல்லின மக்களும் விருந்தினர்களாக இணந்துகொள்ள, சிட்னியில் வாழும் பிள்ளைகளின் பல்சுவை நிகழ்வுகளுடன் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
வாழை, கரும்பு கட்டப்பட்டு, சிறப்பாக கோலம் போடப்பட்டு, நிறைகுடம் வைக்கப்பட்டிருந்த, பரமாற்றா நகரசபை மண்டப முன்புற நூற்றாண்டுச் சதுக்கப் பகுதியில் விருந்தினர்கள், மக்கள் கூடி நிற்க Community Migrant Resource Centre சார்பாக 2013 ம் ஆண்டு முதல் பரமற்றா பொங்கல் நிகழ்வினை முன்னெடுத்து வரும் கொன்சிலா ஜெறோம் அவர்கள் அறிவித்தல் வழங்க, சிட்னி அவுத்திரேலிய கம்பன் கழக நிறுவுனர் ஜெயராம் ஜெகதீசன் மற்றும் அவர் தம் பாரியார் வாசுகி ஜெயராம் ஆகியோர் மங்கல விளக்கேற்ற, தவில் நாதசுர மங்கல வாத்தியம் ஒலிக்க பொங்கல் நிகழ்வுகள் தொடங்கின.
பரமற்றா நூற்றாண்டுச் சதுக்க வெளியில், நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் முன்னிலையில், சதுக்க வெளியில் அடுப்பில் வைத்து பொங்கும் நிகழ்வு செய்ய முடியாத காரணத்தினால், ஜெயராம் – வாசுகி தம்பதியினர் பொங்கல் நிறைந்த பானையினைக் கொண்டுவந்து, அழகுற இடப்பட்ட கோலத்தின் நடுவே வைத்து, சூரியனுக்குப் படையலிட்டு, தீபம் காட்டி, சூரிய வணக்கம் செலுத்தி, வழிபாட்டினை நிறைவுசெய்து, எல்லோருக்கும் பொங்கல் வழங்கி பொங்கல் நிகழ்வினை நிறைவு செய்தனர். தொடர்ந்து பொங்கல் வாழ்த்துகள் கூறும் சில நிகழ்வுகள் பரமற்றா நூற்றாண்டுச் சதுக்க வெளியில் நடைபெற்றன.
மரபுவழி மண்ணின் உரிமையாளர்களை ஏற்றுக்கொண்டு, நன்றி கூறி,
அவுத்திரேலிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து என்பவை இசைக்கப்பட்டு நிகழ்வுகள் தொடங்கப்பெற்றன. தைப்பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்து Lord Mayor Clr Martin Zaiter அவர்களும், ஆசியுரை வழங்கி The Hindu Priest – Sivasri Dr. B. Indran குருக்கள் அவர்களும், உரையாற்றிய அதேவேளை சைவம் நடனப்பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. தொடர்ந்து Dr Andrew Charlton – Federal Member for Parramatta, Donna Davis– State Member for Parramatta, மற்றும் Parramatta City Councillor Sameer Pandey ஆகியோர் தங்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிகழ்வுக்கு வருகை தந்த விருந்தினார்களை வரவேற்று மதிப்பளிக்கும் நிகழ்வினை பாலா விக்கினேசுவரன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
உழவுக்குப் பயன்படுத்தப்படும் கலப்பை, மாடுகள் என்பவற்றைக் காட்சிப்படுத்தி அவுத்திரேலியக் கம்பன் கழகத்தினாரால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பானை வைத்து பொங்கல் கொண்டாடிய இடத்தினை தமிழ் பெண்கள் அபிவிருத்திக் குழுவினர் கோலமிட்டு மெருகுபடுத்தியிருந்தனர். இதேவேளை வருகை தந்திருந்த மக்களுக்கு பொங்கல், மற்றும் குடிபானங்களை அன்பாலயம் அமைப்பினர் செய்துகொண்டிருந்தனர். மக்கள் தொடர்பு, விளம்பரப்படுத்தல் என்பன அவுத்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மூலம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மங்கல வாத்திய இசை முழங்க விருந்தினர்கள், மற்றும் மக்கள் அனைவரும் விழா மண்டபத்துள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏனைய நிகழ்வுகள் யாவும் நகரசபை மண்டப அரங்கினில் நடைபெற்றன.
‘கானலயா” நுண்கலை நிறுவன மாணவர்கள் பொங்கல் தொடர்பான பாடல்
ஒன்றினை வழங்கி அரங்க நிகழ்வுகளைத் தொடக்கிவைத்தனர். Melisa Monteiro, (CEO Community Migrant Resource Centre) Guest of Honour – Her Excellency Honourable Sam Mostyn AC, Bishop Most Rev Vincent Long Van Nguyen OFM Conv, Ms Julia FINN MP (State Member for Granville), Dr Hugh McDermott (MP – State Member for Prospect), Mr James Jegasothy (Multicultural NSW Deputy CEO) ஆகியோரின் உரைகளும், சிட்னி இளையோரின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
கலைநிகழ்வுகள் வரிசையில் கம்பன் கழகத்தினரின் தமிழர் பொங்கல் தொடர்பான உரையாடல், சிட்னி இளையோரின் கவியரங்கம், சிட்னி கலாபவனம், அஜந்தாலயம், சைவம் நடனப்பள்ளி, பாலிவுட் நடனப்பள்ளி ஆகிய நிறுவனங்களின் நடனங்கள் என்பன அரங்கினில் நடந்தேறியது.
பரமாற்றா நகரசபை ஆதரவுடன் Community Migrant Resource Centre முன்னெடுத்திருந்த இந்த நிகழ்வினை அவுத்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அன்பாலயம் அவுத்திரேலியா, தமிழ்ப் பெண்கள் அபிவிருத்திக்குழு அவுத்திரேலியா, கம்பன் கழகம் அவுத்திரேலியா ஆகிய அமைப்புகள் இணைந்து நடாத்தியிருந்தன.
பல்லின மக்களும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில், புதிதாக
அவுத்திரேலியாவிற்கு வந்திருந்த இலங்கைத் தமிழ்மக்கள் பலரும் வருகை தந்து, தம்மையும் அவுத்திரேலிய சமூகத்துடன் இணைத்துக்கொண்டனர். இவர்களில் பலர் நீண்ட நாட்களின் பின் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பரமாற்றா பொங்கல் 2025 Mansi Bhatia அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment