ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால அரசியல் குறித்து விசேட சந்திப்பு ; முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்பு
தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம் - அமைச்சர் சந்திரசேகர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை
எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை சார்ந்த இரு திட்டங்களும் உள்ளடக்கம்
அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை - வடக்கு மாகாண ஆளுநர்
யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி
விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட பிரதமர்!
ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால அரசியல் குறித்து விசேட சந்திப்பு ; முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்பு
14 Feb, 2025 | 03:55 PM
(எம்.மனோசித்ரா)
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 30ஆம் திகதி ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, நிமல் லன்சா, பிரேம் நாத் சி தொலவத்த, உதய கம்மன்பில மற்றும் ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன,
இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலின் தொடர்ச்சியாகும். அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத ஏனைய சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைவரம் குறித்து மதிப்பாய்வு செய்கின்றோம். அரசாங்கத்தின் அடக்குமுறைகள், அரசியல் பழிவாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்படுகிறது. இணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.
நிமல் லன்சா தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அரசாங்கமும் மக்களுக்கு பாரிய வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. நாமும் அரசாங்கத்துக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. 5 ஆண்டுகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேடிக்கை பார்க்கப் போகின்றோம் என்றார்.
உதய கம்மன்பில தெரிவிக்கையில், கலந்துரையாடல்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எதிர்க்கட்சிகளின் இரகசியமாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்து பரிமாற்றமும் இடம்பெறுகிறது. வேலை செய்ய முடியாத அரசாங்கத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் நாடு எதிர்நோக்கிய அபாயம் தொடர்பிலேயே பிரதானமாக அவதானம் செலுத்துகின்றோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கருத்து வெளியிடுகையில், அரசாங்கத்துக்கு எதிராக ஏதேனும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்திலிருப்பவர்கள் ஆரம்பத்தில் ஆயுதங்களை ஏந்தி பின்னர் ஜனநாயகத்தை பின்பற்றியவர்களாவர். பல்கலைக்கழகங்களில் கூட இவர்களது அரசியல் செயற்பாடுகள் இவ்வாறு தான் காணப்படுகின்றன.
எனவே இவர்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே எமது நோக்கமாகும். ஏனைய கட்சிகள் ஜனநாயக ரீதியாக ஆட்சியைப் பெறுவதற்கே முற்படுகின்றன. ஆனால் இந்த அரசாங்கம் 'நாம் மீளக் கையளிப்பதற்காக அதிகாரத்தைப் பெறவில்லை' என்று கூறுகின்றது. அவ்வாறெனில் பலவந்தமாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இவர்கள் முற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது என்றார். நன்றி வீரகேசரி
தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம் - அமைச்சர் சந்திரசேகர்
14 Feb, 2025 | 04:58 PM
உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தையிட்டி விகாரை விவகாரம் விரைவில் முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை அது ஏற்படுத்தும்.
உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்பவிடக் கூடாது. அதனால் அடிப்படையில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகுவதை அனுமதிக்க முடியாது.
விகாரை விவாகரத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள், அப்பிரதேச மக்கள், மத தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் முதலிய தரப்பினர்களுடன் விரைவில் பேசவுள்ளோம்.
விகாரை கட்டப்பட்டுள்ள காணியை மாத்திரம் தருமாறும், விகாரையை சுற்றியுள்ள ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்கத் தயாராக உள்ளதாகவும் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, விகாரை விவகாரத்தில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதனை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.
நன்றி வீரகேசரி
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை
14 Feb, 2025 | 03:11 PM
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (14) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபாய் சொந்த பிணையில் விடுவித்த நீதவான் வழக்கை ஜீன் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் சட்டத்தரணி மகிந்தன் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக பலாலி பொலிஸார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது குற்றஞ்சாட்டி வழக்கு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் பரப்பபட்ட நிலையில் அது போலியானது என தெரிவித்து ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியதுடன் தனது சமூக வலைத்தளத்திலும் போலிச் செய்தி என குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார். நன்றி வீரகேசரி
எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை சார்ந்த இரு திட்டங்களும் உள்ளடக்கம்
Published By: Digital Desk 7
13 Feb, 2025 | 05:40 PM
(நா.தனுஜா)
'ஸ்பேஸ் எக்ஸ்' உரிமையாளர் எலொன் மஸ்க்கின் ஆளுகைக்கு உட்பட்ட அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தினால் பயனற்றதாகக் கருதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன.
அமெரிக்காவின் அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலின் பிரகாரம், பயனற்ற செயற்திட்டங்களாகக் கருதப்பட்டு 199 திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
சுமார் 35 முகவரமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கடந்த இரு தினங்களாக பரந்துபட்ட ரீதியில் ஆராயப்பட்டு இந்த 199 திட்டங்களும் நிறுத்தப்பட்டிருப்பதாக அரசாங்க செயற்திறன் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவந்த ஆசிய பசுபிக் - இலங்கை காலநிலை மாற்ற சவால்களை இழிவளவாக்கல் செயற்திட்டம் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறைகளை நடாத்தல் ஆகிய இரண்டும் நிறுத்தப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி
அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை - வடக்கு மாகாண ஆளுநர்
Published By: Digital Desk 7
13 Feb, 2025 | 05:46 PM
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அன்னாரது பூர்வீக இல்லத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (12) ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்துமேலும் தெரிவிக்கையில்,
எனது தந்தையார் நாகலிங்கம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றார். அமிர்தலிங்கம் நேர்மையானவர். மக்களால் இன்றும் மதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம். அவரது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை. அமிர்தலிங்கம் அவரது பாரியார் மங்கையர்கரசி அம்மையாரதும் பேச்சுக்களைக் கேட்டபதற்காக சிறுவயதில் கூட்டங்களுக்கு சென்றமை இப்போதும் எனக்கு நினைவிருக்கின்றது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி அமிர்தலிங்கம் , தந்தை செல்வா ஆகியோர் தம்மை சந்திக்கும் மக்களின் குறைகளைக்கேட்டு குறித்துக்கொண்டு கொழும்புக்குச் சென்று அது தொடர்பில் நடவடிக்கை எடுத்து அதனை அந்த மக்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களின் இத்தகைய பணிகளை மறக்க முடியாது.
இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் 1983ஆம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து டில்லிக்கு, அமிர்தலிங்கத்தை அழைத்துப் பேசியிருந்தார். மிகப்பெரிய இராஜதந்திரி என்று அமிர்தலிங்கத்தை இந்திராகாந்தி அம்மையார் விழித்துக் கூறியிருந்தார். அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை என மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் தூதுவர் சாய்முரளியும் கலந்துகொண்டிருந்தார்.
நன்றி வீரகேசரி
யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி
15 Feb, 2025 | 05:51 PM
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் இணைந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று சனிக்கிழமை (15) பங்கேற்றார்.
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதமரை ஆளுநர் வரவேற்றார்.
தொடர்ந்து அங்கு ஆசிரிய மாணவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் பங்கேற்றதுடன், தேசிய கல்வியற் கல்லூரி சமூகத்தால் ஆளுநர் மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.
தேசிய கல்வியற் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வித்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் பங்கேற்றதுடன், ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலைமைகள் தொடர்பாக பிரதமருக்கு விரிவாக எடுத்துரைத்தனர். அத்துடன் பிரதமரும் சாதகமான பதில்களை வழங்கினார்.
இதன் பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவிலும், பிரதமர் அவர்களுடன் இணைந்து ஆளுநர் அவர்களும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகளில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் ஆகியோரும் பங்கேற்றனர்.
நன்றி வீரகேசரி
விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட பிரதமர்!
Published By: Digital Desk 7
16 Feb, 2025 | 10:55 AM
விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு சனிக்கிழமை (15) நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment