எங்க வீட்டுப் பிள்ளை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


தமிழ் திரையுலகில் வசூல் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தவர் எம் ஜி ஆர். இவர் நடிப்பில் படம் தயாரித்தால் பணத்தை அள்ளலாம் என்ற ஆர்வம் காரணமாக அன்றிருந்த எல்லா பெரிய படத் தயாரிப்பு நிறுவனங்களும் எம் ஜி ஆரின் கால்ஷீட்டுக்காக ஆதீத அக்கறை காட்டி வந்தன. அந்த வரிசையில் எம் ஜி ஆர் நடிப்பில் தங்களின் விஜயா கம்பைன்ஸ் சார்பில் படம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற ஆவல் அதன் அதிபர்களாக நாகிரெட்டி, சக்கரபாணி இருவருக்கும் தோன்றியதன் விளைவே 1965ம் ஆண்டு வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை படமாகும்.

 
தமிழிலும், தெலுங்கிலும் ஏக காலத்தில் படம் தயாரித்து வெற்றி கண்ட நிறுவனம் விஜயா கம்பைன்ஸ். இவர்கள் தயாரித்த பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயா பஜார், கடன் வாங்கி கல்யாணம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்களின் ஆஸ்தான ஹீரோவாக ஜெமினி கணேசன் திகழ்ந்தார். ஹீரோயின்னாக சாவித்திரி விளங்கினார். ஆனாலும் அறுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இவர்கள் எடுத்த மனிதன் மாறவில்லை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் மனம் மாறினார்கள். அவர்களின் கவனம் ஜெமினியிடம் இருந்து விலகி எம் ஜி ஆர் பக்கம் திரும்பியது. விஜயா வாஹினி ஸ்டுடியோ அதிபர்கள் கேட்கிறார்கள் என்றவுடன் எம் ஜி ஆரும் அவர்கள் தயாரிப்பில் நடிக்க உடன் பட்டார். ஏற்கனவே என் டீ ராமராவ் நடிப்பில் வெளிவந்த ராமுடு பீமுடு படத்தை தமிழில் எடுப்பதென்று தீர்மானமானது. அதிலும் தங்கள் நிறுவனத்தின் முதல் கலர் படமாக இதை எடுக்கவும் முடிவானது.

தமிழ் படத்தில் எம் ஜி ஆர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

என்றவுடனேயே அவருக்கு பொருந்தும் விதத்தில் ஒரிஜினல் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்கள் படத்தின் வெற்றிக்கு உதவின என்பதை மறுக்க முடியாது. முக்கிய மாற்றம் தெலுங்கு படத்தில் இல்லாத நான் ஆணையிட்டால் பாடல் காட்சியாகும். வாலியின் இந்தப் பாடலும் , டீ எம் எஸ்ஸின் குரலும் எம் ஜி ஆரின் அட்டகாடமான நடிப்பும் படத்துக்கு புது மெருகைத் தந்தன. எம் ஜி ஆர் ஒருவரால்தான் இந்தக் காட்சியில் நடிக முடியும் என்பதும் நிரூபணமானது.
 
அதே போல் வீரனாக வரும் எம் ஜி ஆரின் நடிப்பை தூக்கி சாப்பிட்டு விட்டது கோழையாக வரும் எம் ஜி ஆரின் நடிப்பு. என்ன முகபாவம், என்ன பயம், என்ன மிரட்சி அசத்தி விட்டார் எம் ஜி ஆர். அவருடன் போட்டி போடும் நம்பியாரும் குறை வைக்கவில்லை. படம் முவதும் எல்லோரையும் அதட்டி, மிரட்டி கத்தி கலங்க வைக்கிறார். எஸ் வி ரங்காராவ் ஜாலியான அப்பா, நடிப்பும் கச்சிதம். நாகேஷ், தங்கவேலு, மாதவி கொமடி சூப்பர்.
 

இரண்டு எம் ஜி ஆர் என்றவுடன் அவருக்கு இரண்டு ஜோடி. சரோஜாதேவிக்கு இந்தப் படத்தில் மேக்கப், ஆடை அலங்காரம் எல்லாம் பிரமாதம். சரோஜாதேவி ஸ்டைலிஷ் என்றால் ரத்னா பாந்தம். இருவரும் அழகாக வந்து பவிசாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ருஷ்யேந்திரமணி, வெங்கடாசலம், பேபி ஷகிலா, சீதாலஷ்மி, கே கே சௌந்தர், ஆகியோரும் நடித்தார்கள்.

வாலி, ஆலங்குடி சோமு இருவரும் எழுதிய பாடல்கள் விசுவநாதன்,

ராமமூர்த்தி இசையில் ரம்மியமாக ஒலித்தன. நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், பெண் போனால், மலருக்கு தென்றல் பகையானால், குமரிப் பெண்ணின் உள்ளத்திலே , கண்களும் காவடி சிந்தாடட்டும், பாடல்கள் எல்லாம் இன்றும் ஒலிக்கின்றன.

படத்தின் வசனங்களை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். அலட்டல் இல்லாத அளவான வசனங்கள். கண்ணுக்கு இனிமையான ஒளிப்பதிவை வின்சென்ட் , சுந்தரம் இருவரும் கையாண்டார்கள். கிருஷ்ணாராவின் செட் அருமை.


எங்க வீட்டுப் பிள்ளை தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் எம் ஜி ஆர், என் டி ராமராவ், திலீப்குமார், நடிப்பில் வெளிவந்தது. மூன்று படங்களையும் தாபி சாணக்கியா டைரக்ட் செய்தார். மூன்றிலும் எங்க வீட்டுப் பிள்ளை படமே அருமையாக அமைந்தது. படத்தில் எம் ஜி ஆர் நடித்ததும் அதற்கு காரணமானது என்றால் மிகையாகாது.
 
எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில் நடித்த முதல் சமூகப் படம் எங்க

வீட்டு பிள்ளை. இந்தப் படம் எம் ஜி ஆரை ரசிகர்கள் மனதில் எங்க வீட்டுப் பிள்ளையாக இறுத்தியது . படமும் வெள்ளி விழா கண்டது. எம் ஜி ஆர் இலங்கை வந்த போது இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து திறந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது அந்த நெடும் சாலையில் அமைந்திருந்த பிளாசா தியேட்டரில் எங்க வீட்டுப் பிள்ளை திரையிடப் பட்டு அதனை தனது வாகன ஊர்வலத்தின் போது எம் ஜி ஆர் கண்ணுறும் வாய்ப்பையும் பெற்றார். என்றும் ரசிகர்கள் மனதில் நிறைந்து அவர்களின் எங்க வீட்டுப் பிள்ளையாக இன்றும் இப் படம் திகழ்கிறது!

No comments: