மிகுபுகழுடன் வாழ்ந்திடு --- அன்பு ஜெயா, சிட்னி (எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய மண்டிலம்)

 

நாளுமே ஒழுக்கமே முதன்மையாய்க் கொண்டு

    நானிலம் மீதினில் வாழ்ந்திடு சிறப்பாய்!

நாளுமே வளர்ச்சியை நோக்கிநீ முயன்றால்

   நலமுடன் இலக்கினை விரைவிலே அடைவாய்!

ஆளுமை யோடுநீ அனைவரின் வாழ்த்தை

    அன்புடன் பெற்றுமே அமைதியில் வாழ்வாய்;

தாளுமே பணிந்துநீ இறைவனைப் போற்றித்

    தளர்விலா அன்புடன் வணங்கியே வாழ்வாய்!  (1)

 

என்றுமே உண்மையும் நேர்மையும் கொண்டே

    ஏற்றமும் பெற்றிட முயன்றுநீ உழைப்பாய்;

அன்றுதான் சீர்த்தியில் வாழ்ந்திட வழியும்

    அருகினில் தோன்றிடும், அவ்வழிச் செல்வாய்!

இன்றுநீ இளமையாய் இருப்பினும் என்றும்

    இனியநல் பண்பினைப் போற்றியே வாழ்வாய்;

வென்றுநீ வாழ்வினில் உயர்ந்திடப் படியாய்

    விளங்குமே பண்புமே என்பதை அறிவாய்.  (2)

-------------------------------

 

No comments: