தென்கொரிய ஜனாதிபதி சற்று முன்னர் கைது
அமெரிக்க இராஜாங்க செயலாளரை யுத்த குற்றவாளி என அழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
இம்ரானிற்கு 14 வருட சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை - ஒரு சில மணித்தியாலங்களில் 45க்கும் அதிகமானவர்கள் பலி
விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு
தென்கொரிய ஜனாதிபதி சற்று முன்னர் கைது
15 Jan, 2025 | 08:13 AM
அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சக்இயோல் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த விசாரணையாளர்கள் அவரை கைதுசெய்தனர்.ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பாதுகாப்பு பிரிவினருடன் ஒருமணிநேரத்திற்கு மேல் நீடித்த பதற்றமான நிலையை தொடர்ந்து விசாரணையாளர்கள் ஜனாதிபதியை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஊழல் விசாரணை அலுவலகத்தில் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏணிகளை பயன்படுத்தி சில விசாரணையாளர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களை ஆளும்கட்சியின் உறுப்பினர்களும் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரும் தடுத்து நிறுத்தினார்கள்ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.எனினும் சில விசாரணையாளர்கள் வேறு சில பகுதிகள் ஊடாக ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சக் இயோலிற்கு எதிரான பிடியாணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மார்ஷல் சட்டத்தை பிறப்பித்தமைக்கான காரணம் குறித்து விசாரணை செய்வதற்கு யூன் சக் இயோலை கைதுசெய்யவேண்டும் என உயரதிகாரிகளிற்கான ஊழல் விசாரணை அலுவலகம் விடுத்த வேண்டுகோளை சியோல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இதனை சட்டவிரோதமான நடவடிக்கை செல்லுபடியற்றது என குறிப்பிட்டுள்ளனர்.
அதிகார துஸ்பிரயோகம் கிளர்ச்சியை தூண்டியமை தொடர்பில் ஜனாதிபதியை விசாரணை செய்வதற்காக அதிகாரிகள் பிடியாணையை கோரியுள்ளனர்.தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்வதற்காக கடந்தமாதம் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அமெரிக்க இராஜாங்க செயலாளரை யுத்த குற்றவாளி என அழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
Published By: Rajeeban
16 Jan, 2025 | 11:21 AM
அமெரிக்கா செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கென் சாட்சியமளித்தவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை யுத்த குற்றவாளி என அழைத்தனர்.
செனெட் குழுவில் சாட்சியமளிப்பதற்காக பிளிங்கென் நுழைந்த வேளை சிறிய எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுந்து நின்றனர்.
அவர்கள் தங்கள் கரங்களில் சிவப்பு நிற வர்ணத்தை பூசியிருந்தனர்
40,000 பாலஸ்தீனியர்களின் குருதியும் அன்டனி பிளிங்கெனின் கரங்களில் உள்ளது எனஅவர்கள் கோசமிட்டனர்.
அதன் பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை வெளியே அழைத்து சென்றவேளை இனப்படுகொலையின் செயலாளர் ,இரத்தம் தோய்ந்த கசாப்பு கடைக்காரன் என அவர்கள் கோசம் எழுப்பினர்..
அன்டனி பிளிங்கென் அவர்களுடன் உரையாட முற்படவில்லை.
நன்றி வீரகேசரி
இம்ரானிற்கு 14 வருட சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
17 Jan, 2025 | 02:30 PM
பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
காணி ஊழல் வழக்கிலேயே நீதிமன்றம் இம்ரான்கானிற்கு 14 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள சிறைச்சாலையில் இயங்கும் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது. இம்ரான்கான் இந்த சிறையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
72 வயது இம்ரான்கான் பிரதமராக பதவிவகித்த வேளை அரசாங்கத்திடமிருந்து சட்டவிரோத சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள ஒருவர் இம்ரான்கானிற்கும் அவரது மனைவிக்கும் காணியொன்றை வழங்கினார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை குறிபிடத்தக்கது.
எனினும் இம்ரான்கானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.
அரசாங்கத்திற்கும் இம்ரான்கானின் கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் இந்த தண்டனை குறித்த அறிவிப்பு மூன்று முறை தாமதமாகியது.
நன்றி வீரகேசரி
யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை - ஒரு சில மணித்தியாலங்களில் 45க்கும் அதிகமானவர்கள் பலி
Published By: Rajeeban
16 Jan, 2025 | 03:10 PM
இஸ்ரேலும் ஹமாசும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்த ஒருசில மணித்தியாலங்களில் காசா நகரை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷேக்ரட்வானிற்கு அருகில் உள்ள குடியிருப்பு தொகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அருகில் உள்ள மற்றுமொரு குடியிருப்பு பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதையும்,உடல்கள் காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மற்றுமொரு வீடியோவில் காயமடைந்த சிறுவனை மீட்பு பணியாளர்கள் வைத்தியாசாலைக்கு கொண்டு செல்வதையும்,சிறுவர்கள் சிகிச்சை பெறுவதையும் காணமுடிந்துள்ளது.
அல்ரிமாலில் கட்டிடமொன்று இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்துவிழுந்ததால் 5 கொல்லப்பட்டு;ள்ளனர்.
காயமடைந்த பலர் காசாநகரில் உள்ள அல்அஹ்லி பப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்என மருத்துவமனையின் இயக்குநர் படெல்நைம் தெரிவித்துள்ளார்.
யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரான 70 மணித்தியாலங்களும் காசா மக்களிற்கு மிகவும் வன்முறையானதாகவும் வேதனை மிக்கதாகவும் காணப்படும் காசாமீதான தாக்குதல்கள் நிற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவது குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள போதிலும்,தாக்குதல்கள் தொடர்கின்றன,என தெரிவித்துள்ள அல்அஹ்லி பப்டிஸ்ட் மருத்துவமனையின் இயக்குநர் ஆக்கிரமிப்பாளர்கள் காசா நகரத்தின் மீது தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்,முடிந்தளவிற்கு சேதத்தை ஏற்படுத்தும் முயற்சி போல இது தோன்றுகின்றதுஎன குறிப்பிட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு
19 Jan, 2025 | 11:50 AM
ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் வரை காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வராது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார்.
காசாவில் இன்று காலை யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரவிருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து ஹமாஸ் தன்னிடமுள்ள சில பணயக்கைதிகளை விடுதலை செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இந்த நிலையிலேயே ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் வரை காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வராது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார்.
இது குறித்து பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment