பலனிற் பற்றுவைக்காது நற்செயல் செய்வோம் - கலாநிதி பாரதி



சிவஞானச் சுடர் பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் (வாழ்நாள் சாதனையாளர்)


 மானிடனே!

பிறக்கும்போ(து) எதனைநீ கொண்டுவந் தாய்உயிர்

   பிரியும்போ(து)  எதனையெலாம் தேவை யென்று

மறக்காது இறைவனிடம் வரங்கேட் பதழகோ?

    மண்ணிலொரு அணுவளவை மட்டும் உன்னால்

இறக்கும்போ(து) எங்கெடுத்துச் செல்ல முடியும்?

    இறைபணியில் சிவநெறியில் வாழ்ந்தே ஆசை

துறந்தெல்லாப் பற்றறுத்து அரன்வழி நின்றால்

    தோன்றிடுமே சிவனார்செஞ் சரண மன்றோ?



துயருன்னை வருத்திடினும் துவன்றிடா மனமும்

    துளிகூடப் பிறர்மனதை வருத்திடா மனமும்

அயராது முயன்றிடு;மோர் உயரிய மனமும்

   அன்புக்கு அடைக்குந்தாள் அளித்திடா மனமும்

இயலாமை என்றென்னும் இருக்கா மனமும்

   இன்சொல்லால் வாழ்த்துகின்ற இனியதோர் மனமும்

பயமென்று காலனைக்கண் டஞ்சிடா மனமும்

   பஞ்சமுகன் தந்தருள வேண்டு வாயே!

 

கதிர்வீச்சைப் பரப்பத்தினம் கிழக்கா லுதித்கும்

    கதிரவனும் பலனெதுவும் எதிர்பா ராமல்  

விதிமுறையாய் அனுதினமும் உயிர்கள் வாழ

    விண்ணில்வலம் வந்தருளல் போல வேறு

எதிர்பார்ப்பும் சுயநலமும்  இலாது ஒருவர்

    இதயசுத்தி யொடுசேவை தியானம்  இயற்ற

மதிசூடி அந்திவண்ணன் வினைகள் நீக்கி

   மலர்ப்பாதப் பரநாதம் துய்க்க வைப்பார்!.







          கைநிறைய நீபெற்ற செல்வந் தன்னைக்

    காலமெலாம் நீமட்டும் சுவைத்தல் முறையோ?

வையகத்தில் வறுமைதனில் வாடு வோர்க்கு

   வழங்கியதைப் பகிர்ந்திட்டால் பணந்தரா இன்பம்

மெய்யாகப் பெற்றிடுவாய்! மேலும் உன்னை

    விச்சையின்றி  நல்வினையேழ் பிறப்பும் தொடரும்!

பெய்வளையாள் உமைபங்கன் பிறங்கு சிவன்

    பிறவாப்பே ரின்பநிலை அருள்வா னன்றோ?











பற்றுவைத்த மண்ணாசை பெண்ணா சைமற்றும்

       பாரதனில் அசத்தான பொன்னாசை யோடு

   சிற்றின்பப் போகந்தராப் பேரின் பத்தைத்

       தேடிப்பெற நல்லதொரு ;வழியும் உண்டே!

   பற்றுவைக்க அலைமனதை அடக்கி எதிலும்

       பற்றுவிட்டுச் சிகரமருந்தி வாளா விருக்கப்

   பற்;றெதிலும் பற்றுவைக்கா பரம தயாளன்

       பற்றறுத்துப் பரமுத்தி ஈவா னன்றோ?

 

 

சொற்பதவிளக்கம்:-

செஞ் சரணம் -  சிவனின் செம்மலர்ப் பாதம்

பஞ்சமுகன் - ஈசானம் தற்புருடம் அகோரம் வாமதேவம் சற்யோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களைக் கொண்ட சிவபெருமான் 

 பரநாதம்  - தில்லைக் கூத்தனின் தூக்கிய திருவடியை அலங்கரிக்கும் சிலம்பானது பரநாத மயமானது. திருவருளால் பிறப்பறுத்துச் சிவனின் திருவடியைப் பற்றிடச்செல்லும் பக்குவபமடைந்த ஆன்மாக்களுக்கு அவனின் தூக்கிய திருவடியிலிருக்கும் சிலம்பின் அசைவால் அவ்வான்மாக்களின் பிறவித்துன்பத்தை நீக்குவதுடன்; பரநாதமாகப் பலவிதமான இனிய ஓசைகளை ஒலிக்கச்செய்து அந்த முத்தி பெறும் ஆன்மாக்களைப் பேரின்பத்திலே ஆழ்த்துவதும் சிவனின் அருளிலொன்று.

விச்சையின்றி மாயாவித்தை இல்லாது பெய்வளையாள் - பெண் (இங்கே உமாதேவியாரைக் குறிப்பது)

பற்றுவிட்டுச் சிகரமருந் தித்தியா னஞ்செய - துறக்க முடியாது இதுகாலும் ஆசையுடன் பற்று வைத்திருந்த அனைத்துப் பற்றுகளையும் அறவே நீக்கி  மூவகை மௌனங்களையும் (மனோ மௌனம், காய மௌனம், வாக்கு மௌனம்)

 

திருவருளாலே வாய்க்கப்பெற்றுச்  சும்மா  இருந்து   முத்தித் திருவைந்தெழுத்தை  சிந்தித்தவண்ணம் இருத்தலே ;சிகரம் அருந்தி இருத்தலாகும் 

அசத்தான பொன்னாசை - உயிரற்ற அழியக் கூடிய பொருளாகிய பொன்னின்மேல் வைக்கும் ஆசை

பற்று விட்டு - தேகப் பற்று இந்திரியப் பற்று பொருட்பத்து போகப்பற்று ஆகியவற்றிலுள்ள நீங்கா ஆசைதனை அறவே நீக்குதல்

பரமுத்தி - பிறப்;பும் இறப்பும் இன்றி மாறாததும் குறையாததும் நிரந்தரமானதும் பூரணமானதும் பக்குவமடைந்த உயிர்களுக்குப் பேரின்பம் தருவதுமான வீடுபேறு - உயிரானது எவ்வகையான உடம்போடும் கூடிநில்லாது தான் தனித்தே இறைவனுடன் அத்துவதமாய் இரண்டறக் கலக்கும் பேரின்பநிலை.   









No comments: