தண்ணளி தரணியில் மலர்ந்திட வேண்டும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 







 














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ,,,,, அவுஸ்திரேலியா 



பாரினில் பசிப்பிணி பறந்தோட வேண்டும் 
பகையெனும் எண்ணம் மறைந்திட வேண்டும்
போரிடும் நினைப்பு பொசுங்கிட வேண்டும்
பூதலம் புனிதமாய் மலர்ந்திட வேண்டும்

மாசுடை மனத்தார் மாறிட வேண்டும்
மனமெலாம் அமைதி நிறைந்திட வேண்டும்
கூசிடும் வார்த்தைகள் பேசிடும் யாவரும்
மாறியே கனிவுடன் மொழிந்திட வேண்டும் 

கற்றவர் கண்ணியம் காத்திட வேண்டும்
கல்வியை விற்பவர் திருந்திட வேண்டும்
கனவிலும் நனவிலும் கல்வியைக் காத்திட
எண்ணிடும் உணர்வு பெருகிட வேண்டும்

மருத்துவம் என்பது மாண்புடை சேவை
மாநிலம் வேண்டிடும் மகத்தான சேவை
ஊழலில் மருத்துவம் சிக்குண்டு நின்றால்
உலகிடை மனிதம் மாண்டுமே போகும்

பாதை மாறிடும் மருத்துவத் துறையும்
காசை எண்ணிடும் கருத்தினை விட்டு
மாசு இல்லா மருத்துவம் வழங்கிடும்
பாதை வந்திடின் பாரே வாழ்த்திடும் 

இலக்கியம் நல்வழி காட்டிட வேண்டும்
இல்லறம் நல்லறம் ஆகிட வேண்டும்
தலைக்கனம் தகனம் ஆகிட வேண்டும்
தண்ணளி தரணியில் மலர்ந்திட வேண்டும் 

No comments: