வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை
மன்னார் இளம் தாயின் மரணம்; விசாரணைகள் நடத்தி நடவடிக்கை
‘காசா சிறுவர் நிதியத்திற்கு’ கிடைத்த 590,000 டொலர்
இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்
வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை
- மன்னார் நீதிமன்றம் உத்தரவு
மன்னார், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) மன்னார் நீதவான் நீதிமன்றம் இவரை பிணையில் விடுவித்தது.
மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடமையிலிருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி, வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர். நன்றி தினகரன்
மன்னார் இளம் தாயின் மரணம்; விசாரணைகள் நடத்தி நடவடிக்கை
அமைச்சர் ரமேஷ் பத்திரன சார்ள்ஸ் MP க்கு பதில்
மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்துவதுடன், ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமென சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் முன்வைத்த விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பான விசாரணை அறிக்கையை இதுவரை காணக் கிடைக்கவில்லை. ஏதாவது தவறுகள் நடந்திருந்தால், நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேவேளை நாட்டில் நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகவே சட்டமூலமொன்றையும் முன்வைத்துள்ளோம். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார். லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
‘காசா சிறுவர் நிதியத்திற்கு’ கிடைத்த 590,000 டொலர்
- பலஸ்தீன தூதுவரிடம் ஜனாதிபதி கையளிப்பு
– ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர் வழங்கி வைப்பு
காசாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி ஸ்தாபிக்கப்பட்ட “காசா சிறுவர் நிதியத்திற்கு” மேலும் ஐந்து இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் 590,000 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.
இந்தத் தொகையை பலஸ்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைத் (Dr.Zuhair M H Dar Zaid) மற்றும், ஐக்கிய நாடுகள் சபைக்கான நிவாரணப் பணி முகவர் நிறுவனத்தின் (UNRWA) இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா (Azusa Kubota) ஆகியோரிடம் ஜனாதிபதி கையளித்தார்.
யுத்த நிலைமை காரணமாக காசாவில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களின் அத்தியாவசிய செலவுகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவது தொடர்பில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
கடந்த இப்தார் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த நிதியத்திற்கு கிடைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதற்கட்டமாக 04-01-2024 அன்று பலஸ்தீன அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
மேலும், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வர்த்தக நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிதியத்துடன் கைகோர்த்து, நிதியத்திற்கு பங்களிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டதோடு அந்தக் காலக்கெடு 2024 ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இதன்படி, 2024 ஜூலை 31 ஆம் திகதி வரை நிதியத்திற்குக் கிடைத்த ஐந்து இலட்சம் (590,000) அமெரிக்க டொலர் தொகை நேற்று பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, காசா சிறுவர் நிதியத்துடன் கைகோர்த்த அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி அலுவலகம் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி தினகரன்
இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
- காங்கேசன்துறை வரை, இன்று பரீட்சார்த்தப் பயணம்
காங்கேசன்துறை, நாகபட்டினத்துக்கிடையிலான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகபட்டினம், காங்கேசன்துறைக்கிடையே கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பான கடிதத்தையும் தம்மிக்க பெரேரா கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment