அரனின் நண்பர் ஆலாலசுந்தரர் !














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



சிற்றின்ப மெரித்த சிவனாரின் தொண்டன்
சிற்றின்ப வலைக்குள் சிக்குண்டு போனான்
அற்பமாம் சுகத்தை அகங் கொண்டதாலே
அவனியில் பிறவென அரனுமே பணித்தார் 

பயமுடன் கேட்டு பணிந்துமே நின்று
கழலினைத் தொழுது கைகூப்பி  நின்றான்
புவனியில் பிறவென புகன்றது கேட்டு 
அலமந்து நின்று அரனடி பற்றினான்

காத்திட வேண்டும் கருணைக் கடவுளே
கைபிடித் தென்னைக் கடைத் தேற்றுவாயே
மாநிலம் பிறக்கா வண்ணமாய் எனக்கு
வழிகாட்டு என்று மனதார வேண்டினான்

ஆலால சுந்தரா அடைக்கலம் அளிப்பேன்
அவனி பிறந்து அனைத்தையும் அனுபவி
உரிய நேரம் உனைவந்து காப்பேன்
என்றே வுரைத்தான் எலும்பணி மார்பன்

ஆலால சுந்தரர் அவனியில் பிறந்தார்
அவரகம் புகுந்த அனந்திகை கமலினி
சுந்தரர் கரத்தைப் பற்றியே பிடித்திட
வந்துமே பிறந்தார் வாழ்வைச் சுவைக்க

திரு முனைப்பாடி செய்தவப் பயனாய்
தவநிறை சுந்தரர் காலடி பதித்தார்
சடங்கவி இசைஞானி தந்தை தாயானர்
சன்மார்க்கம் நாயகன் பிள்ளையாய் அமைந்தார்

அழகுடை பிள்ளையை அள்ளியே அணைத்தனர்
ஆண்டவன் அருளென அகமதில் எண்ணினர்
வளர்ந்தது குழந்தை வண்ணமாய் வண்ணமாய்
மன்னவன் வருவழி குழந்தையைக் கண்டனன்

அரசனின் மனத்தில் ஆசை எழுந்தது
அழகுடை குழந்தையை அவன்வச மாக்கிட
பெற்றவ ரிடத்து விருப்பினை உரைத்தான்
கொற்றவன் விருப்பை பெற்றோர் மதித்தார்

அழகுடைப் பிள்ளை அண்மனை அமர்ந்தது
அணிகலன் ஆடைகள் சுகபோகம் கண்டது
அரச குமாரனாய் வளர்ந்துமே வந்தது
அனைவரும் விரும்பிடும் இளைஞனாய் நின்றது

கொற்றவன் மகிழ்ந்தான் பெற்றவர் மகிழ்ந்தார்
நற்றவப் பிள்ளையின் வளர்ச்சியைக் கண்டு
உற்றவர் மதிக்க ஊரார் வியக்க
உவப்புடன் திருமணம் செய்திட விளைந்தார்

மங்கல நாளினில் யாவரும் கூடினார்
மணமகன் வந்தான் மணமகள் வந்தாள்
இடியென கிழப் பிராமணர் தோன்றினார்
அடிமை இவனென அனைவர்க்கும் முழங்கினார்

மணமகன் வெகுண்டு மறுத்துமே உரைத்தான்
கிழவரோ உரிய சான்றினைக் காட்டினார்
அடிமை என்பதை அனைவரும் ஏற்றிட
அத்தாட்சி அங்கே உறுதியாய் அமைந்தது

கொதிப்புடன் மணமகன் பித்தனே என்றான்
கிழவரோ எதற்கும் அஞ்சா நின்றார்
வழக்கினை நடத்திட வாவென் றழைத்து
மணமகன் தொடர நடந்தார்  வயோதிபர்

மணமகன் பின்னே யாவரும் நடந்தனர்
வயோதிபர் விரைவாய் கோவிலுள் நுழைந்தார்
நுழைந்தவர் காணா மலைத்தனர் அனைவரும்
மாதொரு பாகன் பேருரு காட்டினான்

பித்தனே என்றவன் பிரமித்து நின்றான்
பெம்மான் அவனைப் பாடுக என்றார்
எப்படிப் பாடுவேன் ஏங்கியே கேட்டான்
திட்டிய வார்த்தையைத் தேர்ந்திடு என்றார்

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளாய்
முத்தாகத் தமிழாக பக்தியாய் மலர்ந்தது
விழித்தான் பக்தன் மெய்யுணர் வெய்தினான்
தத்துவம் பக்தி தமிழில் நிறைந்தது 

சுந்தரர் பக்தி தோழமைப் பக்தி
செந்தமிழ் அடியார் போற்றிடும் பக்தி
அந்தமில் அன்பில் விளைந்த நல்பக்தி
ஆண்டவன் அருகினில் அணைந்திடும் பக்தி

பூதலம் பிறந்த காதல் பெண்களை
கைத்தலம் பற்றிட வைத்த நல்பக்தி
காதல் தூதாய் கறைக்கண்டன் சென்றிட
கட்டளை இட்ட கனிவுடைப் பக்தி

பக்திச் சுவையினைப் பருகப் பருக
சேக்கிழார் காப்பியம் ஆக்கியே அளித்தார்
காப்பியப் பொருளைக் கொடுத்தவர் சுந்தரர்
காலம் முழுதும் நினைக்கிறார் யாவரும்  

சுந்தரர் பாடல்கள் சுவையுடைப் பாடல்கள்
செந்துருப் பண்ணில் சிறந்திடும் பாடல்கள்
சம்பந்தர் அப்பர் தொட்டிடாப் பண்ணே
தமிழுக்கு வாய்த்திட்ட வரமான பண்ணே

ஏழாந் திருமுறை ஆகியே நின்று
எங்கள் சைவம் காத்திட வந்தது
ஆழமாங் கருத்தை அடக்கியே வைத்து
ஆலால சுந்தரர் அருந்தமிழ் ஈந்தது

வன்தொண்டர் பெயரினைப் பெற்றிட்ட போதும்
வன்மமே இல்லா மென் தொண்டராகினார்
கயிலை நாதனே கயிலை அழைத்தார்
காமம் கலைந்தது கலந்தார் சுந்தரர்

அரச வாழ்வில் வாழ்ந்தார் சுந்தரர்
ஆனால் அகத்தில் அரனே நிறைந்தார்
மண்ணக வாழ்வினைப் புண்ணிய மாக்கினார்
மாசிலா மனத்துடன் வையகம் இருந்தார்

பக்தியில் நட்பினை புகுத்திய அடியார்
பரமனைப் பற்றியே வாழ்ந்த நல்லடியார்
முத்தியைக் கூட நட்புக்கும் பகிர 
சுத்தமாம் மனத்துடன் கேட்ட நல்லடியார் 




























No comments: