பிரிட்டனில் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் தொடர்ந்து நீடிப்பு
பிரிட்டனில் கலவரங்களை அடுத்து நாடெங்கும் இனவாத எதிர்ப்பு பேரணி
காசாவில் சரமாரி தாக்குதலுக்கு இடையே பதில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகிறது இஸ்ரேல்
இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா
பாரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா இராஜினாமா; தப்பியோட்டம்
பங்களாதேஷ் போராட்டம் தீவிரம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக்ஹசீனா வௌிநாட்டில் தஞ்சம்
பிராந்திய பதற்றத்திற்கு மத்தியில்: காசாவில் மேலும் இரு பாடசாலைகளில் இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர் வரை பலி
லெபனான், மேற்குக் கரை மற்றும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பலரும் பலி
பிரிட்டனில் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் தொடர்ந்து நீடிப்பு
பிரிட்டனில் தொடர்ந்தும் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் நீடிப்பதோடு தஞ்சக் கோரிக்கை மையங்கள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு உதவும் சட்ட நிறுவனங்களை இலக்கு வைத்து தீவிர வலதுசாரி குழுக்கள் நாடெங்கும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர்.
வடமேற்கு பிரிட்டனில் மூன்று சிறுமிகள் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த வார ஆரம்பம் தொடக்கம் வன்முறை நீடித்து வருகிறது. தாக்குதல் நடத்தியவர் பிரிட்டனில் குடியேறிய இஸ்லாமியவாதி என்று போலியான செய்தி பரவியதை அடுத்தே வன்முறை அதிகரித்தது.
கடந்த ஜூலை ஆரம்பத்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டி பிரதமர் பதவியை ஏற்றிருக்கும் கீர் ஸ்டாமர் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், கலகக்காரர்கள் நீண்ட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
‘எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எமது முதல் பணியாகும்’ என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சில நூறு கலகக்காரர்களைக் கொண்ட குழுக்கள் சிறு நகரங்கள் மற்றும் நகரங்களில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதோடு ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் ஜன்னல்களை அடித்து உடைத்தனர். இதன்போது ‘அவர்களை வெளியேற்றுங்கள்’ என்று கோசம் எழுப்பிய கலகக்காரர்கள், படகுகளில் பிரிட்டனை நோக்கி வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை குறிக்கும் வகையில் ‘படகுகளை நிறுத்து’ என்று கோசமிட்டனர்.இவர்கள் கற்களை எறிந்து பள்ளிவாசல்களையும் தாக்கிய நிலையில் சிறுபான்மை இனத்தினர் உட்பட உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எந்த ஒரு வன்முறையையும் கையாளுவதற்கு தயாராக 6000 சிறப்பு பொலிஸாரைக் கொண்ட ‘தயார்நிலை படை’ ஒன்றை அரசு அமைத்துள்ளது.
இந்த வன்முறைகள் தொடர்பில் இதுவரை 400 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதோடு 100 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
பிரிட்டனில் கலவரங்களை அடுத்து நாடெங்கும் இனவாத எதிர்ப்பு பேரணி
பிரிட்டனில் கடந்த ஒரு வாரமாக குடியேற்ற எதிர்ப்பு கலவரங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்று வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் பேரணி நடத்தியுள்ளனர்.
வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகாசில் என பல இடங்களிலும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தியுள்ளனர். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பேரணிகளில் ‘அகதிகளை வரவேற்கிறோம்’ என்று இவர்கள் கோசம் எழுப்பியுள்ளனர்.
இதனையொட்டு மீண்டும் வன்முறை ஏற்படுவதை தடுப்பதற்கு ஆயிரக்கணக்காக பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் முஸ்லிம் தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவரே தாக்குதல் நடத்தியாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்தி பரவியதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.
பள்ளிவாசல்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள் தாக்கப்பட்டதோடு கடைகள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன. கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டு 150 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளூர் மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை கலகங்களை தடுத்திருப்பதாக லண்டன் பொலிஸ் தலைவர் மார்க் ரவ்லி குறிப்பிட்டுள்ளார்.
குடியேற்ற எதிர்ப்பு தீவிர வலதுசாரிகள் நாடு முழுவதும் ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்திருந்த நிலையில் பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளை தவிர்த்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘பொலிஸாரின் பலம் மற்றும் சமூகங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியது ஆகிவை நாம் எதிர்கொண்ட சவாலை தோற்கடித்தது என்று நான் நினைக்கிறேன்’ என ரவ்லி செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். நன்றி தினகரன்
காசாவில் சரமாரி தாக்குதலுக்கு இடையே பதில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகிறது இஸ்ரேல்
காசாவில் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய சரமாரித் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு, ஈரான் மற்றும் அதன் ஆதரவு போராளிகளின் பதில் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்ரேல் அதற்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது.
காசா போர் ஒரு வருடத்தை நெருங்கியுள்ள நிலையில் மத்திய காசாவில் உள்ள அல் புரைஜ் அகதி முகாம் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வீடு ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல் இடம்பெற்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
அதேபோன்று காசா நகரில் அல் ஷஹாபா வீதியில் உள்ள ஷல்தான் குடும்ப வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஜபலியா அகதி முகாமில் உள்ள ரியான் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டு மேலும் 77 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,699 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,722 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தப் போர் காசாவில் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தி இருப்பதோடு அங்குள்ள கழிவு நீரில் போலியோ தொற்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காசாவுக்கு 1.2 மில்லியன் போலியோ தடுப்பு மருந்துகளை அனுப்ப திட்டமிட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் காசாவில் இஸ்ரேல் தொடரும் தாக்குதல்கள் இந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் புரிந்திருக்கும் அத்துமீறல்களுக்குப் பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று ஈரான் மீண்டும் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தன்னைத் தற்காத்துகொள்ளும் உரிமையைச் செயல்படுத்துவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழி இல்லை என்று அந்நாட்டின் பதில் வெளியுறவு அமைச்சர் அலி பகரி கானி குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மையில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஈரானில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நேற்று முன்தினம் அவசரமாகக் கூடிய இஸ்லாமி ஒத்துழைப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
‘இந்த கொடூரமான தாக்குதலுக்கு சட்டவிரோத ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும், இது ஈரானின் இறையாண்மையின் தீவிரமான மீறல்’ என்று 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட முஸ்லிம் நாடுகளின் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் ஒன்று தொடர்பில் ஈரான் மற்றும் அதன் கூட்டணியான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருவது பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதோடு அதற்கு இஸ்ரேல் தீவிரமாக தயாராகி வருகிறது.
‘இஸ்ரேலிய மக்கள் உஷார் நிலையில் இருப்பது எனக்குத் தெரியும். பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள் என்ற ஒன்றே ஒன்றை மாத்திரம் தான் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதிதாக இராணுவத்தில் இணைந்தோர் முன் நேற்று முன்தினம் உரையாற்றும்போது தெரிவித்தார்.
‘நாம் தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் இரண்டுக்கும் தயாராக இருப்பதோடு நாம் எமது எதிரிகளை தாக்கும் அதேநேரம் எம்மை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்றும் தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ், ஹிஸ்புல்லா, யெமனில் ஹூத்திக்கள் என்று பல முனைகளில் பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டுள்ளது.
இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதோடு அதன் வான் தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு, குறுஞ்செய்தி எச்சரிக்கை உட்பட எச்சரிக்கை முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு இஸ்ரேலிய துறைமுக நகரான ஹைபாவில் பொதுமக்களுக்கான வெடிகுண்டு முகாம்களில் டிஜிட்டல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தாக்குதல் ஒன்றின்போது அது தானாக செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நகரின் பாதுகாப்பு மற்றும் அவசர சேவை பிரிவின் பணிப்பாளர் யயிர் சில்பர்மன் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு போதுமான இடவசதியுடன் தற்காலிக தங்குமிடங்களாக பல நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய இஸ்ரேலிய நகரான ரம்லாவில், தேசிய அம்புலன்ஸ் சேவை இரத்த தானங்களை நடத்த இரத்தத்தை சேகரித்து வருகிறது.
நன்றி தினகரன்
இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா
- சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியீடு
பங்களாதேஷில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.
இராணுவ விமானம் மூலம் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நன்றி தினகரன்
பாரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா இராஜினாமா; தப்பியோட்டம்
பிரதமர் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவு: இடைக்கால அரசு அமைப்பு
பங்களாதேஷில் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிரதமர் ஷெய்க் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நேற்று தலைநகர் டாக்காவில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் நுழைந்த நிலையில் 2009 தொடக்கம் ஆட்சியில் இருக்கும் 76 வயதான ஹசீனா ஹெலிகொப்டரில் அண்டை நாடான இந்தியாவின் திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தாலாவை சென்றிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரதமர் இராஜினாமா செய்ததை அறிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் வகார் உஸ் ஸமான், இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அரச தொழில்களில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக கடந்த மாதம் வெடித்த மாணவர் ஆர்ப்பாட்டம் பின்னர் அரச எதிர்ப்பு போராட்டமாக மாறியது. இதில் கடந்த ஜனவரியில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றியீட்டிய ஹசீனாவை பதவி விலகும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் 280க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து பிரதான கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இராணுவத் தளபதி சமான், ஜனாதிபதி முஹமது ஷஹாபுத்தீனை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கலந்துரையாடியுள்ளார்.
‘நாடு புரட்சிகர காலத்தில் இருக்கிறது’ என்று கடந்த ஜூன் 23 ஆம் திகதியே இராணுவத் தளபதியாக பதவியேற்ற 58 வயது சமான் குறிப்பிட்டார். ‘அனைத்துக் கொலைகள் மற்றும் அநீதிக்காகவும் நீதி நிலைநாட்டப்படும் என்று நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நாட்டின் இராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்கும்படி உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்துப் பொறுப்பையும் நான் ஏற்பதோடு மனம் தளர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய சமான் மேலும் தெரிவித்தார். ‘நீங்கள் அனைவரும் சற்று பொறுமையாக இருங்கள், எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தலைநகர் டாக்காவில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கோசங்களை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதன்போது ஹசீனாவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் நுழைய ஆயிரக்கணக்கானவர்கள் வெற்றி கோசங்களை எழுப்பி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த வாசஸ்தலத்தில் கூட்டம் அலைமோதியதோடு சிலர் தொலைக்காட்சிகள், கதிரைகள் மற்றும் மேசைகள் என பொருட்களை சுமந்து செல்வதையும் காண முடிந்தது. இந்த வாசஸ்தலம் நாட்டில் அதிகம் பாதுகாக்கப்பட்ட இடமாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
டாக்காவில் உள்ள ஷெய்க் ஹசீனாவின் தந்தையான நாட்டின் சுதந்திரத் தலைவர் ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் பிரமாண்ட சிலை மீது ஏறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த சிலையை கோடாரிகளால் தகர்த்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைகளில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் பிரதமர் பதவி விலகக் கோரி மாணவ செயற்பாட்டாளர்கள் நேற்று தலைநகரில் பேரணியாக வந்தனர். இதன்போது பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். நன்றி தினகரன்
பங்களாதேஷ் போராட்டம் தீவிரம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக்ஹசீனா வௌிநாட்டில் தஞ்சம்
பாராளுமன்றத்துக்கும் தீ வைப்பு
பங்களாதேஷில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை இராஜினாமா செய்து வெளிநாெடான்றுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவர் இந்தியாவுக்கு புறப்பட்டிருக்கலாமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று மாலை பாராளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த 1971ஆம் ஆண்டு பங்களாதேஷில் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பொலிஸாரை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் பங்களாதேஷில் போராட்டங்கள் வெடித்தன.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டுமென்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
கட்டடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் எறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் பொலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். நேற்று முன்தினம் போராட்டத்தில் மட்டும் 94 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இதுவரை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது. முப்படை தளபதிகள், காவல் துறை தலைவர் உட்பட பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா “அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மாணவர்கள் இல்லை. அவர்கள் தீவிரவாதிகள். நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் இந்தப் போராட்டத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர். மக்கள் இந்த நாச வேலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என தெரிவித்தார். பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த்துடன், நேற்று முன்தினம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இணைய சேவையும் முடக்கப்பட்டது. அதோடு, 03 நாள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தலைநகர் டாக்கா நோக்கிய பேரணியை மாணவர்கள் தீவிரப்படுத்தினர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் நேற்று திங்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில் இருந்தும் டாக்கா வந்தடைந்த மாணவர்கள், பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்தனர். இதனால் அங்கு நிலைமை பதற்றம் நிறைந்ததாக மாறி இருக்கிறது.
இதனிடையே, பங்களாதேஷில் இராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மேலும், பாதுகாப்பு கருதி அவர் அங்கிருந்து வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய இராணுவத் தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், “இடைக்கால அரசை இராணுவம் அமைக்கும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் தேசிய கட்சி, ஜதியா கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நன்றி தினகரன்
பிராந்திய பதற்றத்திற்கு மத்தியில்: காசாவில் மேலும் இரு பாடசாலைகளில் இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர் வரை பலி
பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சம் பெற்றிருக்கும் சூழலில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மேலும் இரு பாடசாலைகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியே ஈரான் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து போர் பதற்றம் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் லெபனானில் இருந்து உடன் வெளியேறும்படி மேலும் பல நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.
இஸ்ரேல் மீது பதிலடி கொடுப்பது குறித்து ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் மேற்குல நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
எனினும் ஈரான் புரட்சிக் காவல் படை தலைவர், ஹொஸைன் சலமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘ஈரானின் தீர்க்கமான பதிலடியை பெறும்போது இஸ்ரேல் தனது மதிப்பீட்டில் செய்த தவறை புரிந்து கொள்ளும். எப்படி, எவ்வாறு பதில் கிடைக்கும் என்பதை அவர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெலனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதோடு தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரே வர்த்தக விமானநிலையத்தில் விமான சேவைகள் ரத்துச் செய்யப்படுவது அல்லது இடைநிறுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, தென் கொரிய, சவூதி அரேபியா, ஜப்பான், துருக்கி மற்றும் ஜோர்தான் உட்பட நாடுகள் தமது பிரஜைகளை லெபனானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு அறிவுறுத்தியுள்ளன.
மறுபுறம் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் கெய்ரோவில் கடந்த சனிக்கிழமை புதிய சுற்று பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றபோதும் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காசா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஹசன் சலாமா மற்றும் அல் நாசர் பாடசாலைகள் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் கட்டளையகத்தை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.
தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை ஒன்றில் இருந்து சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியான படங்களில் தெரிகின்றன. இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்று குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைப்பு, மேலும் பலர் காணாமல்போயிருப்பதோடு அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் படை கடந்த ஒரு வாரத்தில் காசாவில் உள்ள மூன்று பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை காசா நகரில் உள்ள ஹமாமா பாடசாலை மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு மேலும் 71 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 மாதங்களை தொடும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,623 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,469 பேர் காயமடைந்துள்ளனர். நன்றி தினகரன்
லெபனான், மேற்குக் கரை மற்றும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பலரும் பலி
7 மாதங்களை தொட்ட காசா போரில் 39,653 பேர் பலி
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மேற்குக் கரை மற்றும் லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஒக்டோர் 7 ஆம் திகதி ஆரம்பமான காசா போரை அடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வருவதோடு காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே கடந்த வாரம் ஈரான் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
இந்த படுகொலைக்கு எதிராக இஸ்ரேல் மீது பதிலடி கொடுப்பதில் ஈரான் உறுதியாக உள்ளதோடு ஈரான் ஆதரவுடைய லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்தும் மோதல் நீடித்து வருகிறது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஹிஸ்புல்லா போராளிகளை இலக்கு வைத்து நகடியே பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதனை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் அது முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தல் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளன. இதனையொட்டி அமெரிக்கா உட்பட பல நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளை லெபனானில் இருந்து உடன் வெளியேற கோரியிருப்பதோடு லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கான விமான சேவைகளும் அண்மைய தினங்களில் ரத்துச் செய்யப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேற்கு ஈராக்கில் உள்ள அயின் அல் அஸாத் இராணுவத் தளத்தில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகள் மீது சரமாரி ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
காசா போர் வெடித்த ஆரம்பத்தில் இவ்வாறான ரொக்கெட் தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்றபோதும் அண்மைய மாதங்களில் அது நிறுத்தப் பட்ட நிலையிலேயே மீண்டும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய படையினரால் நேற்று நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு முன்னதாக கடந்த திங்கள் இரவு தொடக்கம் இடம்பெற்ற வன்முறைகளில் ஜோர்தான் எல்லைக்கு அருகில் மேலும் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குக் கரையில் இரு வெவ்வேறு வான் தாக்குதல்களை நடத்தி போராளிகளை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஜெனினில் இரு வாகனங்கள் மீது இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டதை பலஸ்தீன செம்பிறை சங்கம் உறுதி செய்துள்ளது.
ஜெனினில் இஸ்ரேலிய கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்கள் நுழைந்து சுற்றிவளைப்பு ஒன்றை நடத்திய நிலையிலேயே இந்த வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஈரானின் பதில் தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் இஸ்ரேல் பால முனைகளில் பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டிருப்பதோடு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலஸ்தீன ஆயுதப் போராளிகள் இருந்தபோதும் பெரும்பாலானவர்கள் கற்களை எறிந்து எதிர்ப்பை வெளியிடும் இளைஞர்கள் மற்றும் எந்தத் தொடர்புமற்ற பொதுமக்களாவர்.
இதேநேரம் அங்கு பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் குறைந்தது 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெரூசலம் புறநகரில் சோதனைச்சாவடி ஒன்றில் பஸ் ஒன்றை சோதித்துக் கொண்டிருந்தபோது பலஸ்தீனர் ஒருவர் நேற்று நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இஸ்ரேலிய பெண் எல்லை காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்து இன்றுடன் (7) பத்து மாதங்களை எட்டும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டு 66 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,653 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,535 பேர் காயமடைந்துள்ளனர்.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment