கும்மிப் பா

ஒயிற்கும்மி, இயற்கும்மி, ஓரடிக்கும்மி

வீரமங்கை வேலுநாச்சியார் கும்மி

03.01.1730 - 25.12.1796

ஒயிற்கும்மி

வந்தனமே

உன்னதப் பெண்ணவள் ஒப்பில்லா மண்ணிதில்

உத்தமன் தந்ததை எண்ணிடவே

உதித்தது கதித்தது

திதித்தது விதித்தது

உந்திட எந்தனின் வந்தனமே


இயற்கும்மி

கும்மி அடிபெண்ணே குஞ்சங்கள் கூத்தாடக்

குஞ்சரம்;; பூத்தாடக் கும்மியடி

விம்மிதம் பொங்கிட வீரவேலு நாச்சியார்

விண்கூவித் துங்கத்தைச் சொல்லியடி


03.01.1730

பெண்ணெனப் பூமியில் பேறாய்த் தமிழிச்சி

பெற்றவர் பேர்சொல்லிக் கும்மியடி

மண்ணதன் மானமே மானெனக் கொண்டவர்

மங்காப்பு கழ்பொங்க விண்ணிலடி


மன்னராம் செல்லமுத் தாம்முத்தாத் தாள்வம்ச

மாசறு பெண்ணினை எண்ணிடடி

தொன்றூ றுதிருவ னந்தபு ரம்தந்த

தொல்;வேலு நாச்சியார் கும்மியடி


வஞ்சியின் வீரத்தை வாட்போரின் தீரத்தை

வங்கிச வார்ப்பது தந்ததடி

விஞ்சிடும் ஆற்றலை வித்தையின் கூர்ப்பதை 

விம்மியே சாற்றிடக் கும்மியடி


1746

சுந்தர நாச்சியார் முத்துவடு கர்நாதர்

சூடினர் வாசிகை கும்மியடி

சொந்திரம் ஓச்சுசி வன்கங்கைச் சீமையில்

சோபிக்க இல்லறச் சொந்தமடி


நல்லறம் ஆன்மீகம் நம்மக்கள் நல்லாட்சி

நன்குற்ற நாட்டிற்காய்க் கும்மியடி

சொல்லிட வாரிசாம் சொந்திரச் சீருமாம்

சொக்கிடப் பாட்டிலே செம்மையடி


பஞ்சமில் லாப்பசும் பாளையம் பார்த்திட்ட

பாவிவெள் ளையரால் பங்கமடி

கெஞ்சிட அண்டியோர் கேள்வரிக் கப்பத்தைக்

கெட்டியாய்க் கிள்ளினார் கும்மியடி


சித்தம்தெ றிக்கவே சிந்தையு றைக்கவே

சீற்றப்பெண் ணின்கனல் எம்பலடி

தித்தக்கொ டுப்பினில் துட்டம டக்கியே 

தீர்த்திட வந்ததைக் கும்மியடி


அண்டிப்பி ழைத்திட வந்தவன் பாளைய

ஆட்சியை அப்பவோ கும்மியடி

விண்டுது ளைத்திட வித்தகப் பன்மொழி

வீணர்தி கைத்திட நெஞ்சிலடி


என்னுடை நாடிதில் எம்முடை பூமியில்

ஏனுனக் கேவரி கும்மியடி

தன்னுடை ஊக்கினில் தம்மிடை ஊடிடின்

தாங்காதுன் நாவென்று பொங்கியடி


ஆறாகப் பாய்ந்திட்ட ஆற்றல்க ணைகளில்

அங்குச வீச்சதன் வித்தையடி

வீறாகச் சாய்த்திட்ட வீரிவி வேகத்தின்

விந்தைவி ளம்பலைக் கும்மியடி


தௌ;ளாய்த்தெ ரிந்தது தென்னவள் வீரமாம்

தெம்முனை அச்சமோ துச்சமடி

எள்ளிந குத்தங்கு எத்திய சாரத்தில் 

ஏமாந்து போனாரே கும்மியடி


செம்மைநி றைந்திடும் எங்களின் தேசத்தில்

செய்சமர் தோற்றதைக் கும்மியடி

எம்மைச்சி றைகொள்ள எண்ணிய கூட்டத்தில்

எட்டப்பர் சேர்க்கையின் குட்டையடி


வெஞ்சமர் முன்னரே வென்ற களரியின்

வெற்றிகக் ளி;ப்பினைக் கும்மியடி

நஞ்சுந வாப்பவன் நத்திட அந்நியன் 

நட்டமே பின்னரே வந்ததடி


வஞ்சந வாப்பாம்நி ராயுதர் வாகுசன்

வண்ணம னையாளை எட்டவடி

நெஞ்சகத் தூணொடு நேருக்கு நேரிட்ட

நேர்த்தியில் அஞ்சாமைக் கும்மியடி


துட்டத்து ரோகியர் துண்டாடிச் சாய்த்திடத்

துங்கத்தாள் கண்டது துண்டமடி 

வெட்டுவேன் மன்சூரை வெல்லுவேன் மண்ணென

வேரறு சங்காரக் கும்மியடி


ஓரடிக் கும்மியடி

நெஞ்சம் பதற நெருப்பதில் இட்டவர்

  வஞ்சச் சபதத்தைக் கும்மியடி


நஞ்சுப் படலப் பழியதில் வெட்டிட

  வஞ்சிக் கொதிப்பினைக் கும்மியடி


கொந்தளி வேங்கை மருதர்கள் வேண்டிட

  சிந்தித்த பாங்கினைக் கும்மியடி


இந்தப் பதுக்கமே நாளைய பாய்விற்கு

  உந்திடும் வாய்ப்பென்ற யுக்தியடி


ஓயிற் கும்மி

ஐம்மை நடை - தகதிகிட

வீரதீர மருதவர் விதத்திடே

விண்புடை வீரமாம் வித்தக யூகமாம்

விஞ்சுடை தீரமாம் தோள்கொட

விடிவழுகை பிடியெழுகை

நொடியொழுகை முடியெழுகை

விளைவில் மருதர் விதப்பாய்


ஓரடிக் கும்மி

சூரத்த னம்விட்டுத் தப்பிடும் நோக்கில்

  சுதந்திர வேட்கையின் கும்மியடி


வீரமங் கையொப்பி டப்புரவிப் பாய்ச்சல்

  வீறாக மேலூரே சென்றதடி


ஓற்றைக் குதிரையை ஓராயி ரம்படை

  ஓட்டாத் துரத்துகையைக் கும்மியடி


சற்றும் பதறாச்சா மர்த்தி யஉடையாள்

  சாகாவ ரச்சங்கை பெற்றதடி


ஓயிற் கும்மி;

தற்கொடை மங்கை

மும்மை நடை - தொம்கிட

வெட்டுடையாள் வேள்வி

கடுகு படைகள் கறுவ உடையாள்

கனலாய் மறுக்கத் திசையது

கண்டது தொண்டது

கொண்டது துண்டது

காக்காதன் னைக்காத்தாள் மண்ணைத்தான்


ஓரடிக் கும்மி

பட்டத்துப் பெண்ணவர் பஞ்சாய்ப் பறந்தது

  எட்டஇ லக்கெனக் கும்மியடி


கொட்டுமி டர்நிறை திட்ட உறைவிடம்

  இட்ட பயிற்சியில் சித்தியடி


தீரமாய் அன்னார் உழைப்புத் திடமுறத்

  தீர்க்க அணியது கும்மியடி


ஓரமாய் வில்லர் இழப்பு ஒதுக்கிட

  ஓக்கப் பணியது செம்மையடி


கோட்டையை விட்டிடக் கோபால நாயக்கர்

  காட்டிய காப்பதைக் கும்மியடி


கூட்டிடப் பல்வகைப் பெண்படை உட்படக்

  நாட்டினைக் காத்திட இட்டதடி 


ஆயுத ஆக்கமும் தேக்கமும் சேர்ப்பெல்லாம்

  ஆக்கிய பாசறைக் கும்மியடி


தாயுடன் சேயவர் தாண்டிய கானெல்லாம் 

  தாக்கிட நீசரின் கன்னமடி


எட்டு வருடமாய் எண்ணம் பலித்திடப்

  பட்ட கதையதைக் கும்மியடி


முட்டி முறுகிடத் திண்ணம் அமைப்புறக்

  கட்டுப டைவகை உச்சமடி


கைப்பற்ற மன்னர்கை தர்அலி முன்வந்து

  கைகொடு நன்றியைக் கும்மியடி


வைப்பிட்ட ஆயுதம்த லைவிவீரர் கோட்டையுள்ளே

  வைதீக நாளதில் சென்றதடி


சித்தக் கொழுந்து எரியப் புகுந்துள்ளே

  சீராகச் சென்றதைக் கும்மியடி


முத்திரை இட்ட முதற்தற் கொடையாள்

  முதன்மைக் குயிலிலை எண்ணிடடி


ஓயிற்கும்மி

ஐம்மை நடை -  தகதத்திமி

அருமைக் குயிலி அளிதற் கொடையின்

அளியாப் பெருமை குறித்திடடி

அமிழச்சிகை உமிழப்பகை

தமிழச்சிகை துமியச்சிதை

அமைத்த விடியல் பொறித்திடடி



ஓரடிக் கும்மி

வித்தையாய்க் கொண்டு விளாசிய ஆயுத

  வீச்சது அர்ப்பணக் கும்மியடி


தத்தமே வெல்லத் தறிகெட்ட ஆங்கிலம்

  தாக்குப் பிடித்திடா விட்டதடி


பூத்த புரட்சியில் பூண்ட விடியலாம்

  புத்தம் புதுவெற்றிக் கும்மியடி


காத்த சிவகங்கைக் கம்பக் கொடியிலாம்

  கம்பீ ரஅனுமன் பட்டமடி


எற்றையும் எம்மவர் தென்னக ஊரதில்

  ஏற்றி மறத்தினைக் கும்மியடி


அற்றையில் அங்கவர் ஆட்சி முடியினில்

  ஆற்று சிறப்பினைச் செப்பியடி


காலச் சுழற்சியில் கங்கை வளர்ச்சியில்

  கான முழக்கமே கும்மியடி


25.12.1796

ஆலக் கிளர்ச்சி அழித்த எழுச்சியில்

  ஆறா இழப்பதே வந்ததடி


ஆண்டு கழியஅம ரத்துவத்த ரிப்பினில்

  ஆற்றிடு ஆதியெனக் கும்மியடி


தோண்டி வரலாறு மாற்றல் திரித்தலைத்

  தோற்றிடச் சொல்லிலே சொல்லியடி


பெண்ணினப் பேதமை போக்கிய வீச்சினைப்

  பெற்றென்றும் பேழுறக் கும்மியடி


எண்ணிடு வீரமே ஓங்கிட நாச்சியார்

  என்றென்றும் ஏணுறக் கும்மியடி



ஒயிற் கும்மி

எழுமை நடை - தகிடதாம்தக

முத்தமிழ் நாட்டில் முதல்முகக் காட்டலை

முற்றுகை ஓட்டலை முப்பொழுதும்

முடிவதால்வினை விடிவதால்நினை 

கொடியதால்வனை கடியதால்;இனை

மும்முர சாயெழக் கும்மியடி

 

- மனோ ஜெகேந்திரன்

No comments: