ஒரே சாட்சி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 


தமிழ் சினிமாவில் நடிகனாக அறிமுகமாகி , பின்னர் டைரக்டராக மாறி பிரபலமானவர்கள் குறைவு. ஆனால் அவ்வாறு பிரபலமான ஒருவர் தான் கே. விஜயன். 1961ம் ஆண்டு பாதை தெரியுது பார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் பின்னர் ஒன்றிரண்டு படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து விட்டு சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு பிரபல இயக்குனர் மல்லியம் ராஜகோபாலிடம் இணை இயக்குனராக வேலை செய்யும் வாய்ப்பு விஜயனுக்கு வாய்த்தது. அதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக பட இயக்குனராகும் வாய்ப்பு காவல் தெய்வம் படத்தின் மூலம் இவருக்கு கிட்டியது. படம் ஓரளவு வெற்றி பெற்ற போதும் ஐந்து ஆண்டுகள் கழித்தே மீண்டும் இயக்குனராகும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. அப்படி 1974ம் வருடம் அவர் இயக்கிய படம் தான் ஒரே சாட்சி.


தன்னுடைய தாய், தம்பியுடன் வாழ்ந்து வரும் மாதவன் கார் திருத்தும்

தொழிலாளியாக பணியாற்றுகிறான். நேர்மையும், பிறருக்கு உதவும் மனமும் கொண்ட அவனை பள்ளிக்கூட டீச்சரான காஞ்சனா காதலிக்கிறாள். சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் செல்வந்தன் செல்வம் அவளைக் கண்டு மோகித்து அவளுக்கு வலை வீசுகிறான். ஆனால் மாதவன் தக்க சமயத்தில் குறுக்கிட்டு அவளை காப்பாற்றி செல்வத்தையும் எச்சரிக்கிறான். இதனைத் தொடர்ந்து காஞ்சனா, மாதவன் இருவரும் திருமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஓர் இரவு கார் விபத்தொன்றில் இருந்து செல்வத்தை மாதவன் காப்பாற்றி அவனது வீட்டிற்கு கொண்டு சென்று சேர்கிறான். தான் காஞ்சனாவை கல்யாணம் செய்யப் போவதையும் தெரிவிக்கிறான்.

இதை கேட்கும் செல்வம் , காஞ்சனாவை திருமணம் செய், ஆனால் அதற்கு முன் ஓர் இரவு மட்டும் அவள் என்னுடன் இருக்கட்டும் பத்தாயிரம் ருபாய் தருகிறேன் என்று தன்னுடைய காம இச்சையை வெளியிடுகிறான். இதை கேட்டு ஆத்திரமடையும் மாதவன் , செல்வத்தை அடித்து அவனின் கழுத்தையும் நெரித்து விட்டு தப்பி ஓடி விடுகிறான். இதனை அவனின் தம்பி சிறுவன் ராமு பார்த்து விடுகிறான். பார்த்தவற்றை உடனடியாக படமாக வரைந்தது விடும் அவன் செல்வம் கழுத்து நெறிப்படுவதையும் படமாக வரைந்து விடுகிறான். செல்வம் இறந்து விட இந்த படமே வழக்கிற்கு ஒரே சாட்சி ஆகிறது !


இப்படி அமைந்த படத்தின் கதை வசனத்தை பிலஹரி எழுதியிருந்தார். கதைக்கு பொருத்தமாக மாதவன் வேடத்தில் ஏவி எம் ராஜன் ஏற்று நடித்திருந்தார். அடக்கம், எல்லோரையும் சமாளித்து போகும் பாங்கு, காதலியிடம் குறும்பு , வில்லனிடம் ஆவேசம் என்று எல்லாம் கலந்த நடிப்பை அவர் வழங்கியிருந்தார். காஞ்சனாவாக வரும் பி ஆர் வரலஷ்மி டீச்சர் பத்திரத்துடன் ஒன்றுகிறார். பழைய புஷ்பலதாவை நினைவு படுத்துவது போலும் இருந்தது. சோ, மனோரமா, நீலு மூவரின் காமடி கொஞ்சம் சிரிப்பை வரச் செய்கிறது. சுந்தரராஜன், எம் என் ராஜம் இருவரும் நிறைவாக செய்திருந்தனர். ஆர் எஸ் மனோகர் வழக்கம் போல வில்லனாக வந்து ஆடி , பாடி. சண்டை போட்டு இறந்தும் விடுகிறார். வி கோபாலகிருஷ்ணன் , காந்திமதி, வீரராகவன் ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தில் டூயட் கிடையாது , ஆனால் சி ஐ டி சகுந்தலா, எம் பானுமதி இருவரின் கவர்ச்சி நடனம் உண்டு. சண்டை காட்சியில் ராஜன், மனோகர் இருவரும் சோடை போகவில்லை . சிறுவனாக நடிக்கும் மாஸ்டர் ஸ்ரீ குமார் கிரேட்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குலதெய்வம் ராஜகோபாலை இப் படத்தில்

காண கிடைத்தது. ப்ரோக்கர் வேடத்தில் அவர் நடிப்பு பிரமாதம்.

படத்தில் பாடல்களை வாலி எழுத, சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். டி எம் சௌந்தரராஜன் பாடிய சாட்சி ஒரே சாட்சி அது கோட்டுக்கு வராதது, எந்த கூண்டிலும் ஏறாதது உன் காட்சிக்கும் வாராமல் சாட்சி சொல்லும் கடவுள் தானது என்ற பாடல் காட்சியுடன் பொருந்தி அருமையாக ஒலித்தது.


படத்தை ஆர் சம்பத் ஒளிப்பதிவு செய்ய , ஆர் தேவராஜன் எடிட்டிங்கை கையாண்டார். ஒரே சாட்சி படம் சுமாரான வரவேற்பையே வெளியான போது பெற்றது. ஆனால் இப்படத்தை இயக்கிய நேரமோ என்னவோ கே. விஜயனுக்கு தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு வரத் தொடங்கியது. அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் அவர் தீபம், தியாகம், அண்ணன் ஒரு கோயில், ஆகிய வெற்றிப் படங்களை டைரக்ட் செய்து சிவாஜியின் ஆஸ்தான டைரக்டர்களில் ஒருவராகி விட்டார்.

No comments: