நாம் வாழும் சமுதாயத்தில் நடைபெறும்
குறைபாடுகளை நேரடியாக எடுத்துக் கூறாமல் மறைமுகமாக நகைச்சுவையுடன் கூறுவது ஒரு வகை. இது
பார்ப்பவரை அல்லது கேட்பவரை சிரிக்க வைப்பதுடன் சிந்தனையையும் தூண்டும். இது காலம் காலமாக பல கலைஞர்களால் கையாளப்பட்டு வருகிறது.
இதையே அரச சபைகளில் விதூஷகன் செய்து வந்தான். இவ்வாறு செய்வதற்கு
புத்தி கூர்மையும் கூடிய நகைச்சுவை
உணர்வும் வேண்டும். இப்படியான கதை நாம் எல்லோரும் அறிந்த அரச சபை விதூஷகன்
தென்னாலி இராமன், இவன் அரச சபையில்
சிரிக்க சிரிக்க சிந்தனையை தூண்டியவன்.
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி பாதிரியார் எழுதியதே அவிவேக
பூரண குருவும் சீடரும் என்ற கதை தொகுதி.
விவேகம் என்றால் அறிவு.
அ- விவேகம் என்றால் அறிவு அற்ற எனப் பொருள் படும். தமிழில் அ என்ற எழுத்து முன் வரும்போது விவேகம்
இல்லாமையைக் குறிக்கும். சுத்தம் என்றால் யாவருக்கும் புரியும். ஆனால் அதன் முன்னால் அ- வை எழுதினால் அது அசுத்தம் என்றல்லவா
பொருள் படும்.
கிங்ஸ்பரி பாதிரியாரின் கதைகள் மூளை இல்லாதவனே குருவாக
இருந்தால் நிலமை என்ன ஆகும் என்பதையே
விளக்குகிறது. இவை எல்லாம் நாம் சிறுவராக
இருக்கும் போது கேட்டு மகிழ்ந்தவையே.
கழுதையை காவிய கதையும் , ஆறு தூங்குகிறதா
விழிப்பாக இருக்கிறதா என சீடர்
கொள்ளிக் கட்டையை ஆற்றில் வைத்துப் பார்த்தது, என பல இன்னும்
எம் மனதை விட்டு அகலாதவை.
இன்றுபோல் அல்லாது
பண்டைய காலங்களில் பலருக்கு
எழுதப் படிக்க தெரியாது,
இவர்கள் யாவரும் நாடகங்களை
பார்த்தே அறிவைப் பெற்றனர். இதுவே அன்று
நாடகங்கள் மக்களுக்கு செய்த தொண்டு.
இப்படியான நாடகங்களில் நையாண்டி நாடகங்களும்
உண்டு. இவை சமூக சீர்கேடுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியது. இன்று இதையே பத்திரிகைகளில் வரும் கேலிச் சித்திரங்கள் செய்து வருகிறது.
நாகரீகம் அடைந்த சமூகங்களில் நையாண்டி
நாடகங்கள் காலம் காலமாக இருந்தது. இது
சமூகத்தவரால் வரவேற்கப்பட்டது. அண்மையில் நான் பார்த்த
மேற்கத்திய குறும் படத்தை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்.
சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் சங்கம் ,
சாப்பாட்டுக்கு திண்டாடும் ஏழை எளியவர்கட்கு உணவு வழங்க திட்டம்
திட்டுகிறார்கள். பணம் வசூல் பண்ணுவதற்காக
ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறார்கள், விருந்துக்கான நுழைவு
சீட்டிற்கு மிக உயர்ந்த
கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வாறு செய்வதால்தான்
இவர்கள் குறிக்கோளுக்கு வேண்டிய
பணத்தை சேர்க்க முடியும், அங்கத்தவர்களில்
ஒருவர் ஒரு கருத்தை முன் வைக்கிறார். ஏழை எளியவரை
சரியாக புரிந்து கொள்ள வருபவர்கள் யாவருமே ஏழைகள் போல கந்தல் ஆடைகளே
உடுத்தி வரவேண்டும் என்ற இக் கருத்து
யாராலும் வரவேற்கப்பட்டது.
இவர்கள் முடிவின்படி அன்றைய
தினம் யாவரும் அழுக்கடைந்த
கந்தல் ஆடை, பரட்டை தலை, சவரம் செய்யாத, அலங்கோல தோற்றத்துடன்
மண்டபத்திற்கு வருகிறார்கள், இதை பார்த்த
நிஜ பிச்சைகாரர் இருவர் நம் போன்றவர்
அங்கு உணவருந்துவதை பார்த்து
அவர்களும் அந்த கூட்டத்தில் கலந்துவிடுகிறார்கள். பல நாட்கள்
பட்டினியால் வாடிய இவர்கள் விதம் ருரவிதமான உணவுவகைகளக்
கண்டதும் வாரி உண்ண ஆரம்பித்தார்கள். இவர்களைப் பார்த்த மற்ற விருந்தினரோ வயிறு புடைக்க
உண்ணும் இவர்களைப் பார்த்து நம்மில் இருவரே இவ்வாறு
நடிக்கிறார்கள் என
எண்ணி
ரசித்தனர். ஆனால் ஒருவருக்கோ
இவர்கள் உண்மையான பிச்சைக்காரரோ என சந்தேகம்
வர அவர்களிடம் நுழைவு
சீட்டை காட்டும்படி கேட்கிறார், அவர்கள்
"நுழைவு சீட்டா" என எதுவும் அறியாது திகைக்கிறார்கள். இவர்கள்
நடிக்கும் நம்மவர் அல்ல, நிஜ ஏழை பிச்சைக்காரர்கள் என அறிந்ததும், காவலாளிகள்
மூலம் அவர்களை உடனடியாக
அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.
இதுவே உயர் வர்க்கத்தாரின் தான தர்மம் என கூறாமல்
கூறுகிறது நாடகம்.
மாக்சிம கோர்க்கி தலைசிறந்த
றஸ்ய எழுத்தாளர். இவர் நையாண்டியாக பல விஷயங்களை எழுதுவதிலும் கைதேர்ந்தவர். இவரது ஒரு கதையில் ஒரு ஏழை விவசாயி
ஒருவன் நகரத்திற்கு வருகிறான். அன்றாடம் இவன் உழைப்பது
அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்குமே போதுமானது.
அவன் மொத்தத்தில் ஒரு அன்றாடம் காச்சி.
கிராமத்திற்கு வந்த நகரவாசி மூலம் நகரத்தின் வினோதங்கள் பலவற்றை
அறிந்தவன். நகரத்தை பார்க்கப் போகிறான் விவசாயி, நகரத்து நண்பன், அந்த
ஊரில் பெரிய பணக்காரனை இவன் பார்க்க ஆவனை செய்கிறார்.
இவனுக்கோ மறுநாள் பணக்காரரை
பார்க்கப் போகிறோம் என்ற உணர்வில் தூக்கமே
வரவில்லை. அந்த பெரிய பணக்காரர் நிறையவே பணம் உழைப்பவர், ஏழை விவசாயியோ
அன்றாடம் கிடைத்த பணத்தை அன்றே செலவு செய்து
வாழ்பவன். இவனது கற்பனையிலும் பணக்காரன் அவ்வாறே செய்வான் என தோன்றியது. அதை தான்
வாழ்வு என எண்ணுபவன். இவனது கற்பனையில் பணக்காரன் பிரமாண்டமான உருவம்
உடையவனாக இருப்பான் , அந்த உடலுக்கேற்ற
மிகப்பெரிய உடை அணிந்திருப்பான், மேலும் நிறைய சாப்பிடவேண்டுமே. இவன் பதினைந்து, இருபது பிரட்களை ஒரே நேரத்தில் உண்பானோ, இவன் மிகப்பெரிய பாத்திரத்தில் பானம் அருந்துவான் போலும்,
இதையெல்லாம் தூக்கம் இல்லாது எதை எதையோ கற்பனை பண்ணினான்.
மறுநாள் இருவருமாக
பணக்காரனின் காரியாலயம் போகிறார்கள். அங்கு அழகான வரவேற்பறையில்
அமர்ந்திருந்தார்கள். பணக்காரரின் செயலாளரான அழகிய பெண் வந்து விவசாயியை மட்டும் உள்ளே அழைத்துச்
சென்றாள்.
உள்ளே போகிறான் விவசாயி அங்கோ ஒரு ஒல்லியான மனிதர் பெரிய மேஜையின் பின் அமர்ந்திருந்து இவனைப்
பார்த்து புன்னகை புரிந்தார். விவசாயிக்கோ தூக்கிவாரிப் போட்டது. அந்த ஒல்லியான உருவத்தை உற்று நோக்கியவன்,
நீர் தான் பணக்காரரா எனக் கேட்டே விட்டான்.
அவர் மீண்டும் புன்னகைத்த வண்ணம் ஆமாம் ஆமாம் என்கிறார். நீர் காலையில் என்ன சாப்பிடுவீர் என விவசாயி கேட்க ஒரு துண்டு பிரட்டும் அரை கிண்ணம் பழரசம் என்கிறார் பணக்காரர். விவசாயியோ
தான் இவரிலும் அதிகமாக சாப்பிடுவதாக
எண்ணியவன் இது உமக்கு போதுமானதா என விவசாயி
கேட்கிறான். ஆமாம் நான் இதற்கு மேல்
சாப்பிடக்கூடாது என்றார் பணக்காரர். அப்போ மதிய உணவு என்ன
எனக் கேட்க அவர் அரைக் கோப்பை சூப் என்கிறார். விவசாயி இரவு உணவு
என வினாவும் தோரணையில் பார்க்க பணக்காரன்
இரண்டு துண்டு பழம் , அரை கிண்ணம் பால்
என்றார். விவசாயிக்கு தூக்கிவாரிப் போட்டது. அப்போ நீர் எதற்காக நிறையப்
பணம் உழைக்கிறீர் எனக் கேட்டே விட்டான்.
அவர் ஒருகணம் ஆழ்ந்த மௌனத்தின் பின் , நான் பணக்காரன் என மற்றவர்கள்
கூறவேண்டும் என்பதற்காக என்றார் பணக்காரன்.
அந்த பணக்காரனை மிக
பரிதாபமாக பார்த்துவிட்டு விவசாயி
விடைபெறுகிறான். அந்த பணக்காரனை விட
தான் நல்லாக வாழ்வதாக
விவசாயி எண்ணிக் கொண்டான்.
மனிதனுக்குப் பயன்படாது படாடோ பந்தத்தையே
வாழ்வென பணம் தேடும் வர்க்கத்தை கிண்டலாக எடுத்துக்காட்டுகிறார் கோர்க்கி.
உலகப் புகழ்பெற்ற மேதை பெர்னாட்
ஷா. ஷா உடை அலங்காரத்தில் அக்கறை செலுத்துபவர்
அல்ல. இவரோ ஒரு அலங்கார
உடை அணிந்து வரும் பிரமுகர்கள் விருந்திற்கு அழைக்கப்படுகிறார். பெர்னாட் ஷா தான் வழமையாக உபயோகிக்கும் உடையுடன் அங்கு போகிறார். வாயில் காப்போன் இவரது உடையைப் பார்த்து, இவர் அங்கே நடக்கும் விருந்துக்கு வரும் தகுதியற்றவர் என மதித்து அவரை உள்ளே போகவிடாது தடுக்கிறார். நிலைமையைப் புரிந்த ஷா வீட்டிற்க்கு போய் மற்றவர்
போல அலங்கார உடையணிந்து போகிறார். வாயில்காப்போன் உள்ளே அனுப்பி
விடுகிறான். விருந்து ஆரம்பமாகிறது. மேற்கத்தேய
முறையான விருந்தில் முதலிலே பரிமாறப்படும் சூப் வருகிறது, பெர்னாட் ஷா தனது கோட்டின் ஒரு பகுதியை சூப்பில் தோய்க்கிறார்
அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியுற்று என்ன ஏன் இப்படி செய்கிறீர்கள் என வினவ, பெர்னாட் ஷா இந்த விருந்து எனக்கல்ல
இந்த உடைக்கே என நடந்ததை கூறுகிறார். மாமேதையான பெர்னாட் ஷா
அங்கே கூடியிருந்த படாடோபத்தையும் அவர்கள்
சிந்தனையையும் கிண்டலாக எடுத்துக்காட்டும் விந்தனையைக் கண்டோம்.
சமூக சீர்கேடுகளை நேரடியாக எடுத்துக்
கூறாது அதையே நகைச்சுவையாக
கூறும் போது மற்றவர் மனதை புண்படுத்தாது சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்து விடுகிறது.
இந்த வகையில் கேலிச் சித்திரமும் ஒருவகை
அரசியல் கேலிச்சித்திரம் வரைவோர் ஆழ்ந்த
அரசியல் ஞானத்துடன் அரசியல் விஷயங்களை
நகைச்சுவையுடன் சிந்தனையை தூண்டும்
கேலிச் சித்திரமாக வரைவதில் வல்லவர்கள்.
இவ்வாறான சித்திரக்காரர் மிகமிக பிரபலமானவர்கள். இவ்வாறு பிரபலமாக இருந்தவர்
ஷங்கர். பிரித்தானிய ஆட்சியிலிருந்து
விடுபட போராட்டம் நடத்திக்
கொண்டிருந்த காலம். நாடே கொந்தளிப்பு நிலையில் இருந்தது. இந்த நிலைமையை
சமாளிக்க பிரித்தானிய அரசால்
அனுப்பப்பட்டவர்
Sir .Mountbaton. இவர் இன்றைய
பிரித்தானிய அரசி இரண்டாவது
எலிசபத் மகாராணியாரின் தாய் மாமன்.
இவர் உலக அரங்கில் மதிக்கப்பட்ட ராஜதந்திரியும் ஆவார்.
கேலிச்சித்திரக்காரர் ஷங்கர்
Sir Mountbaton இந்தியாவின் சொத்துக்களை
திருடி போகும் திருடனாக
வரைந்துள்ளார். இந்தியாவின் சொத்துக்களை
தன்வயப்படுத்திக் கொண்டிருந்தது பிரித்தானிய
அரசு. அதைச் சித்தரிப்பதே அந்த கேலிச் சித்திரம். Sir Mountbaton தன்னை வந்து பார்க்கும்படி ஷங்கருக்கு அழைப்பு விடுத்தார். ஷங்கர் மிகவும் பயந்து விட்டாராம். ஆனால் Mountbaton ஷங்கரை இன்முகத்துடன் வரவேற்று,
அவரது கேலிச்சித்திரத்தையும் புகழ்ந்து தேனீர் விருந்து கொடுத்து அனுப்பினாராம். இதே ஷங்கர் பிற்காலத்தில்
Shangar Weekly என்ற பெயரில் ஒரு கேலிச்சித்திர மாத சஞ்சிகையும் நடத்தினாராம்.
Times
of India என்ற பத்திரிகையில் R.K.லக்ஷ்மன்
நேருவை கேலிச்சித்திரமாக வரைந்துள்ளார். R.K.லக்ஷ்மனுக்கு நேருவிடம்
இருந்து அழைப்பு வந்தது. என்னமோ ஏதோ
என்று பயந்து கொண்டு லக்ஷ்மன் சென்றாராம்.
நேருவை அவரை அகமகிழ்ந்து வரவேற்று அவரது கேலிச்சித்திரங்களை புகழ்ந்து, தன்னுடன் காலை உணவையும் அருந்தச்
செய்தாராம். விடைபெறும் போது " நீர் கேலிச்சித்திரம் வரையும் போது
அடிக்கடி என்னையும் ஞாபகத்தில் வைத்திரும்" என நாசுக்காக
கேட்டுக் கொண்டாராம். பெரிய பெரிய அரசியல்வாதிகள் எல்லாம்
கேலிச் சித்திரகாரர்களின் இரசிகர்களாக இருந்துள்ளார் என்பதை இவை எமக்கு எடுத்துக்காட்டுகிறது.
No comments:
Post a Comment