பங்களாதேஷ் பதற்றத்தால் 10 பில். டொலர் பாதிப்பு
இஸ்ரேலுக்கு 20 பில். டொலர் ஆயுதங்களை விற்க ஒப்புதல்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு இடையே ஹமாஸ் இன்றி போர் நிறுத்தப் பேச்சு
பிராந்திய போர் பதற்றத்திற்கு மத்தியில் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்
காசா போர் நிறுத்த பேச்சை ஆரம்பிப்பதில் ஹமாஸ் அமைப்பு கண்டிப்பான நிலைப்பாடு
மேற்குக் கரை கிராமம் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல்
விண்வெளியில் சிக்கியோரை அழைத்து வர தீவிர முயற்சி
பங்களாதேஷ் பதற்றத்தால் 10 பில். டொலர் பாதிப்பு
பங்களாதேஷ் அமைதியின்மையால் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான பொருளாதாரப் பாதிப்புக்களை சந்தித்திருப்பதாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் பாவனையாளர் பொருட்கள் கைத்தொழில் துறை நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான பின்னடைவை எதிர்கொள்ள இந்த அமைதியின்மை வழிவகுத்துள்ளது என்றும் அந்த சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அமைதியின்மையால் தகவல் தொழில்நுட்பத்துறையில் 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மென்பொருள் மற்றும் தகவல் சேவைகளுக்கான பங்களாதேஷ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கும் தைத்த ஆடைகள் ஏற்றுமதி வருமானத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
இஸ்ரேலுக்கு 20 பில். டொலர் ஆயுதங்களை விற்க ஒப்புதல்
இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலருக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை விற்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை தடை செய்வதற்கு உரிமை குழுக்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 18.82 பில்லியன் டொலர்களுக்கு இஸ்ரேலுக்கு 50 எப்-15 போர் விமானங்களை விற்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
தவிர சுமார் 33,000 டாங்கி தோட்டாக்கள், 50,000 வரை மோட்டார் தோட்டாக்கள் மற்றும் புதிய சரக்கு வாகனங்களையும் இஸ்ரேல் வாங்கவுள்ளது. நன்றி தினகரன்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு இடையே ஹமாஸ் இன்றி போர் நிறுத்தப் பேச்சு
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இன்று (15) ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தபோதும் அதில் பங்கேற்பதில்லை என்று ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையிலேயே ஹமாஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகளான அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் இன்று (15) பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப இஸ்ரேல் இணங்கியது.
எனினும் இதில் தமது பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று லெபனானில் உள்ள ஹமாஸ் உறுப்பினர் அஹமது அப்துல் ஹாதி குறிப்பிட்டுள்ளார். போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆர்வம் காட்டாதது இதற்குக் காரணம் என்று ஊடகம் ஒன்றுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘போர் நிறுத்தத்திற்கு மாறாக அவர் போரை நீடிக்க விரும்புவதோடு, மேலும் பிராந்திய மட்டத்தில் அதை விரிவுபடுத்த விரும்புகிறார். அவர் எமது மக்களுக்கு எதிராக தனது ஆக்கிரமிப்பை தொடரவும் அவர்களுக்கு எதிராக மேலும் படுகொலைகளை செய்யவும் பேச்சுவார்த்தைகளை ஒரு கவசமாக பயன்படுத்தி வருகிறார்’ என்று ஹாதி குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதம் முன்வைத்த போர் நிறுத்த திட்டத்தின் அடிப்படையில் புதிய சுற்று பேச்சுகளை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதில் இஸ்ரேல் புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதை ஹமாஸ் எதிர்த்து வருகிறது.
நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காசா போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஹமாஸ் வலியுறுத்துவதோடு தற்காலிக போர் நிறுத்தத்தை கோரும் இஸ்ரேல், ஹமாஸை முழுமையாக ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று கூறி வருகிறது.
எனினும் இன்றை பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு ஹமாஸ் அமைப்பை கட்டார் சமாதானப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் காசாவின் மத்திய மற்றும் தெற்கின் நுஸைரத், மகாசி, கான் யூனிஸ் மற்றும் ரபா பகுதிகளில் இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் கான் யூனிஸ் நகரில் மேலும் பல இடங்களில் இஸ்ரேல் புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் ரொக்கட் குண்டுகளை வீசியதை அடுத்த இந்த உத்தரவு வந்துள்ளது. கடந்த பல மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் நேற்று முன்தினம் நீண்ட தூர ரொக்கெட் குண்டுகளை வீசியுள்ளனர்.
மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான தம்முனில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமாக வபா குறிப்பிட்டது. டுபாஸ் நகரில் இஸ்ரேல் நடத்திவரும் சுற்றிவளைப்பின்போது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் பதற்றம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் காசாவில் ஓர் ஆண்டை நெருங்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 40,000ஐ நெருங்கியுள்ளது. நன்றி தினகரன்
பிராந்திய போர் பதற்றத்திற்கு மத்தியில் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்
ஐரோப்பிய நாடுகளின் அழைப்பை நிராகரித்தது ஈரான்
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கும் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை தணிப்பதற்கும் சர்வதேச முயற்சிகள் நீடித்துவரும் நிலையில் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு மேற்குக் கரையிலும் அதன் சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருகின்றன.
காசாவின் தெற்கில் உள்ள மிகப்பெரிய நகரான கான் யூனிஸில் இருந்து இஸ்ரேலின் உத்தரவை அடுத்து ஆயிரக்கணக்காக மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதோடு அங்கு இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்களும் நீடித்து வருகின்றன.
கான் யூனிஸின் கிழக்கே உள்ள வீடு ஒன்றின் மீது கடந்த திங்கட்கிழமை (12) இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அபசான் சிறு நகரில் இருக்கும் அபூ ஹய்யா குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீதே தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த காசா போரில் கடந்த 10 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 40,000ஐ நெருங்கி இருப்பதோடு 92,000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 88 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,929 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 92,240 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா போரையொட்டி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிப்பதோடு கைது செய்யப்பட்டிருக்கும் பலஸ்தீன சந்தேக நபர்களில் வீடுகளை இடித்துத் தகர்க்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட இஸ்ரேலியப் படை நேற்று மேலும் ஒரு பலஸ்தீனர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
இதன்போது துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப் புகைப்பிரயோத்தை மேற்கொண்ட இஸ்ரேலியப் படை இளைஞர் ஒருவரின் நெஞ்சில் சுட்டதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இஸ்ரேல் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் பலஸ்தீன சந்தேக நபர்களின் வீடுகளை தகர்க்கும் நடவடிக்கையை இஸ்ரேல் வழக்கமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசா போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய துருப்புகள் அல்லது குடியேறிகளின் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 619 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இதே காலப்பகுதியில் பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் படையினர் உட்பட குறைந்தது 18 இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன.
காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அங்கு போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் புதிய சுற்று பேச்சுவார்த்தையை நாளை (15) ஆரம்பிப்பதற்கு மத்தியஸ்தம் வகிக்கும் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து திட்டமிட்டபோதும் அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் இன்னும் உறுதியான முடிவு ஒன்று எட்டப்படவில்லை.
காசாவில் தொடர்ந்து 100க்கும் அதிகமான இஸ்ரேலிய பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதோடு அவர்களை விடுவிப்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்நாட்டில் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இரு வௌ;வேறு சம்பங்களில் இஸ்ரேலிய ஆண் பணயக்கைதி ஒருவர் அவரது காவலரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மேலும் இரு பெண் பணயக்கைதிகள் படுகாயத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா தெரிவித்துள்ளார். இதற்கு இஸ்ரேலே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா நகரில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து பேச ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்று கூடியது. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அல்ஜீரியா விடுத்த அழைப்பை அடுத்தே இந்த அவசரக் கூட்டம் நடந்தது.
இதேவேளை ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே டெஹ்ரான் நகரில் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு எதிராக பழிதீர்ப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. இந்நிலையில் அமைதிகாக்கும்படி பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் விடுத்த அழைப்பை நிராகரித்த ஈரான், அந்த அழைப்பு போதிய அரசியல் தர்க்கம் இல்லாததும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்கு முரணாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் இருந்து ஈரான் மற்றும் கூட்டணிகள் அமைதிகாக்க வேண்டும் என்றும் அவ்வாறான தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து காசா போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பை சீர்குலைக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
போர் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கா தனது போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பலை பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த வாரத்தில் கூடிய விரைவில் ஈரான் அல்லது அதன் ஆதரவுப் படைகளால் குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என்றும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி நேற்று முன்தினம் (12) குறிப்பிட்டிருந்தார்.
‘(தாக்குதலுக்கான) சாத்தியமான காலம் தொடர்பில் இஸ்ரேலிய சாகக்களின் அதே கவலை மற்றும் எதிர்பார்ப்பை நாம் பகிர்ந்து கொள்கிறோம். அது இந்த வாரமாக இருக்கக் கூடும். குறிப்பிடத்தக்க தாக்குதலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டது, அதனைத் தொடர்ந்து பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முன்னணி தளபதி ஒருவர் கொல்லப்பட்டு மற்றும் ஹனியேவில் படுகொலை சம்பங்களை அடுத்து இஸ்ரேல் கடந்த மாதம் தொடக்கம் பதில் தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்து உள்ளது.
‘அவர்களுக்கு (இஸ்ரேல்) என்ன வந்தாலும் தொடர்ந்தும் நாம் அவர்களுக்கு உதவுவதோடு அவர்களை பாதுகாப்போம்’ என்று கிர்பி குறிப்பிட்டார்.நன்றி தினகரன்
காசா போர் நிறுத்த பேச்சை ஆரம்பிப்பதில் ஹமாஸ் அமைப்பு கண்டிப்பான நிலைப்பாடு
இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 25 பலஸ்தீனர் பலி
அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் அழைப்பின் பேரில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நாளை மறுதினம் (15) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், புதிய போர் நிறுத்தத் திட்டத்திற்கு பதில் முந்தைய போர் நிறுத்த திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு மத்தியஸ்தர்களை கேட்டுள்ளது.
காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு அதன் உத்தியோகபூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘(அமெரிக்க ஜனாதிபதி ஜோ) பைடனினால் மே 31 ஆம் திகதி முன்மொழியப்பட்டு ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்தால் உறுதி செய்யப்பட்டு மே 6 ஆம் திகதி கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பு முன்னர் ஏற்றுக் கொண்டு இஸ்ரேலால் நிராகரிக்கப்பட்ட மே 6 இல் முன்வைக்கப்பட்ட திட்டத்தின்படி, காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் கணிசமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இஸ்ரேலிய சிறையில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.
‘ஆக்கிரமிப்பாளர்களின் (இஸ்ரேலின்) ஆக்கிரமிப்பை மூடிமறைக்கும் மற்றும் நமது மக்களுக்கு எதிரான அதன் இனப்படுகொலையைத் தொடர கூடுதல் கால அவகாசம் வழங்கும் பேச்சுவார்த்தைகள் அல்லது புதிய திட்டங்களைத் தொடருவதற்குப் பதிலாக இந்தத் திட்டத்தை (மே 6 முன்மொழிவு) மத்தியஸ்தர்கள் செயற்படுத்த வேண்டும்’ என்று ஹமாஸ் அமைப்பு விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 15 ஆம் திகதி போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தமது தரப்பு பிரதிநிதிகளை அனுப்புவதற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. எனினும் ஹமாஸ் அமைப்பு பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை.
எனினும் பைடனின் போர் நிறுத்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் புதிய நிபந்தனைகளை சேர்த்தது ஹமாஸ் தரப்பின் எதிர்ப்புக்கு காரணமானது. இதில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவதற்கு அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் எகிப்துடனான காசா எல்லை பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையே இஸ்ரேல் முன்வைத்திருப்பதாக தெரியவருகிறது.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு தெற்கு நகரான கான் யூனிஸில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்காக மக்கள் உணவு மற்றும் நீர் இன்றி வீதி ஓரங்களில் உறங்கி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்து 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி கடந்த 10 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,897 ஆக அதிகரத்துள்ளதோடு மேலும் 92,152 பேர் காயமடைந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசா மக்கள் தொகையில் 1.8 வீதமான மக்களை இஸ்ரேலிய படை கொன்றிருப்பதாக பலஸ்தீன மத்திய புள்ளிவிபர அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 75 வீதமானவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அது கூறியது. நன்றி தினகரன்
மேற்குக் கரை கிராமம் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல்
இஸ்ரேலிய குடியேறிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை கிராமம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள வீடுகள் மற்றும் கார்கள் மீது தீவைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முகமூடி அணிந்து வந்த குடியேறிகள் கடந்த வியாழக்கிழமை (15) இரவு நப்லுஸ் நகருக்கு அருகில் உள்ள ஜிட் கிராமத்தில் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதில் தனது 20 வயதுகளில் இருக்கும் உள்ளூர் கிராமவாசி ஒருவர் கொல்லப்பட்டு மற்றும் ஒருவர் நெஞ்சில் காயத்துக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
குடியேறிகளின் இந்தத் தாக்குதல் ஏற்க முடியாதது என்றும் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து கண்டனங்களை வெளியிடுகின்றபோதும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறி வருகிறது. வன்முறையில் ஈடுபடும் குடியேறிகள் மீது தடை விதிப்பது பற்றி அமெரிக்கா கூறியபோதும் இந்த வன்முறையில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேலிய குடியேறிகளால் பலஸ்தீனர்களுக்கு எதிராக 1000க்கும் அதிகமான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமது கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குடியேறிகளுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படை அனுமதி அளிப்பதாக பலஸ்தீனர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். நன்றி தினகரன்
விண்வெளியில் சிக்கியோரை அழைத்து வர தீவிர முயற்சி
விண்வெளியில் சிக்கியுள்ள இரு விண்வெளி வீரர்களை பூமிக்கு கொண்டுவருவது குறித்து இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
பர்ரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இரு விண்வெளி வீரர்களும் கடந்த ஜூன் 5 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற நிலையில் அந்த விண்கலம் கோளாறுக்கு உள்ளானதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் எட்டு நாள் பயணமாகவே விண்வெளி சென்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பை நடத்திய நாசா, நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
இந்நிலையில் இந்த இருவரும் பூமிக்கு திரும்புவதற்கு கோளாறுக்கு உள்ளாகி இருக்கும் ஸ்டார்லைன் விண்கலத்தை பயன்படுத்துவதா, இல்லை இலோன் மஸ்கிற்கு சொந்தமாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் ஒன்றை பயன்படுத்துவதா என்பது பற்றி நாசா முடிவொன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment