அன்பைத் தேடி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 


பகலில் விழித்திருக்கும் போதே பலவித இன்னலுக்கு ஆளாகிறோம். அப்படி இருக்கையில் பகலிலேயே கனவு கொண்டிருந்தால் என்ன ஆகும். இதை கற்பனை பண்ணி ஆங்கிலத்தில் படமாக எடுத்தார்கள். அதனை தமிழில் எடுத்தால் வெற்றி பெறும் என்று கனவு கண்டு படமாக்கினார்கள் முக்தா பிலிம்ஸார். அவ்வாறு அவர்களால் தயாரான படம் அன்பைத் தேடி.


அன்றைய கால கட்டத்தில் எம் ஜி ஆரை தவிர்த்து ஏனைய எல்லா

ஹீரோ நடிகர்களையும் போட்டு படம் எடுத்த முக்தா சகோதரர்கள் சிவாஜி நடிப்பில் தொடர்ந்து படங்களை எடுத்து வந்தனர். அந்த வரிசையில் 74ம் வருடம் அவர்கள் இப்படத்தை உருவாக்கினார்கள். அது மட்டுமன்றி அவர்கள் தயாரித்த முதல் கலர் படமும் இந்த அன்பைத் தேடி தான்.

ராமு பணக்கார பிள்ளை. ஆனால் வெகுளி. பயந்த சுபாவம் கண்டவன். பகல் நேரத்திலும் கனவு கண்டு பிரச்சினைகளுக்கு உள்ளாகும் அவன் தன்னுடைய அத்தான் ராஜசேகர், அக்கா ஜானகி இருவரையும் உயிராக மதிக்கிறான். அவர்களின் குழந்தை இந்திரா மீது பாசத்தை பொழிகிறான். பழக் கடை நடத்தும் ராணிக்கு அவனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. இந்த நிலையில் கடைக்கு இந்திராவை அழைத்துச் செல்லும் ராமு பகல் கனவு கண்டு அவளை தொலைத்து விடுகிறான்.இதன் காரணமாக குடும்பத்தில் புயல் வீசுகிறது. அக்காவும், அத்தானும் அவனை சபிக்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பால் தனக்கும், ராணிக்கு பிறக்கும் குழந்தையை அவர்களுக்கே தத்து கொடுத்து விடுவதாக உறுதி எடுத்து கொள்கிறான்.


அன்பைத் தேடி படத்தின் கதையை தேடினால் இதுதான் கதை. ஆனால் படத்தில் தேடாமல் கிடைப்பது சிவாஜியின் நடிப்புதான். அவர் கனவு காணும் போதெல்லாம் அவரின் விதவிதமான நடிப்பை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. அதிலும் புத்தராக அவர் தோன்றும் காட்சி பரவசத்தை ஏற்படுத்துகிறது. ( இலங்கையில் இப் படம் திரையிடப் பட்ட போது இக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது ! ) ராணியாக வரும் ஜெயலலிதா தன்னுடைய வழமையான கிளாமரை கை விட்டு இதில் நடிப்பை காட்ட முனைந்திருந்தார். சில காட்சிகளில் உணர்ச்சிகரமாகவும் நடித்திருந்தார். போதாக் குறைக்கு சொந்தக் குரலில் பாடியும் இருந்தார்.

சோ, மனோரமா பண்ணும் ரகளை சிரிப்பை தருகிறது. சோவின்

வசனங்களில் அரசியல் நெடி தாராளம். பேபி இந்திராவை பார்த்து இந்திரா நீ நினச்சா நடக்காதது உண்டா என்று சொல்வது நல்ல அரசியல் பன்ச். (அன்று இந்திய பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி)

ஜானகியாக வரும் விஜயகுமாரி உணர்ச்சிகரமாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். சுந்தர்ராஜனும் அதற்கு ஈடு கொடுக்கிறார். பேபி இந்திராவின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது . ஸ்ரீகாந்த் வில்லனாக வந்து மனோகர், கே. கண்ணன் உதவியுடன் சதித் வேலைகளை செய்கிறார். இவர்களுடன் செந்தாமரை, சுபா, எஸ் என் பார்வதி, சி ஐ டி சகுந்தலா ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்துக்கான கதையை கலைஞானம் எழுதினார்.திரையுலகில் தன்னை தக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்த கலைஞானத்துக்கு இப் படம் ஏணியாக அமைந்தது. படத்தின் வசனங்களை தூயவன் எழுதினார். என் . பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு தரமாக இருந்தது. வெளிப்புறக் காட்சிகளை கண்ணுக்கு இதமான எடுத்திருந்தார். சீனியரான எல் பாலு படத் தொகுப்பை கையாண்டார். பாடல்களை வாலி எழுத எம் எஸ் விசுவநாதன் இசை வழங்கினார். சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள், புத்தி கேட்ட பொண்ணு ஒன்னு பாடல்கள் ரசிக்கும் படி இருந்தன.


முக்தா பிலிம்ஸ் தயாரிக்கும் எல்லாப் படங்களிலும் கதாநாயகன் ஏதாவது ஒரு நோய்க்கு உள்ளானவனாகவே காணப்படுவான். இப் படத்திலும் அவன் பகல் கனவு கண்டு எல்லோராலும் கேவலப்படுத்தப் படுகிறான். ஆனால் மருத்துவ ரீதியில் அவனை சரிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படாதது ஏனோ தெரியவில்லை!

படத்தை வி சீனிவாசன் டைரக்ட் செய்தார். ஏற்கனவே சிவாஜியின் நிறைகுடம், அருணோதயம், தவப் புதல்வன் படங்களை இயக்கிய இவர் இந்தப் படத்தையும் தனது வழக்கமான பாணியில் டைரக்ட் செய்திருந்தார்.

தாங்கள் தயாரிக்கும் படங்களை கூடுமான வரை சிக்கனமாக செலவழித்து எடுப்பதில் வல்லவர்கள் முக்தா சகோதரர்கள். கலரில் எடுத்த போதும் பஜெட் எகிறிடாத வண்ணம் அன்பைத் தேடி படத்தையும் எடுத்து பணத்தை தேடிக் கொண்டார்கள் அவர்கள்!

No comments: