தமிழர் அரசியலின் எதிர்காலம்?

 August 18, 2024


தமிழ் தேசிய அரசியல் என்பது அடிப்படையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகள் எந்தளவுக்கு அரசியல் பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக் கொள்கின்றன என்பதில்தான் தங்கியிருக்கின்றது. 2020 பாராளு மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவு களை சந்தித்தது. வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய அரசியலை பிரதி நிதித்துவம் செய்யாத கட்சிகள் குறிப்பிடத்தக்களவு வாக்குகளை பெற்றிருந்தன.

இது தெளிவான செய்தியொன்றை வெளிப்படுத்தியது. அதாவது, வடக்கு, கிழக்கில் மக்கள் பல்வேறு நிலையில் சிந்திக்கின்றனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ராஜபக்ஷவின் மொட்டுச் சின்னத் திலும் ஒரு தமிழர் வெற்றிபெற முடிந்தது.

இது ஓர் எச்சரிக்கையை வழங்கியிருக்கின்றது. தொடர்ந்தும் தமிழ் மக்களை வடக்கு, கிழக்கு தழுவியதாக, தமிழ் தேசிய அரசியலில் தக்கவைக்க முடியுமா? வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் தொடர்ந்தும் வலுவான நிலையில் நிற்கக் கூடிய அரசியல் சூழல் படிப்படியாக பலவீனமடைந்திருக்கின்றது. இந்த சவாலை எதிர்கொள்ள முடிந்தால் மட்டுமே தமிழ் தேசிய அரசியல் நிலைக்கும். இந்தப் பின்புலத்தில் சிந்தித்தால், தமிழ் பொது வேட் பாளரை நோக்கி தமிழ் மக்களின் வாக்குகளை முடிந்தவரையில் திரட்டுவதானது, தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் அனைவரதும் வரலாற்றுக் கடமையாகும்.

தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு என்பது அடிப்படையில் தமிழ் தேசிய கட்சிகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும் அர்த்தம் பெறு கின்றது.

ஆனால், இந்தப் போக்கை இலங்கை தமிழ் அரசு கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இதுவரையில் புரிந்து கொள்ள வில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சி, இந்த அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை – முயற்சிக்க வில்லை என்பதை விடவும், தனிநபர் சண்டைகளால் அக்கட்சி, சிதைந்து கொண்டிருக் கின்றது. ஆனால், தங்களின் கட்சி, சிதைந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கூட, அந்தக் கட்சியின் உறுப்பினர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதுதான் துரதிர்ஷ்டவசமானது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸை (முன்னணி) பொறுத்த வரையில் தமிழ் தேசியத்தின் காவலர்கள் போன்று, தங்களை காண்பித்துக் கொண்டிருப்பதை தவிர, தமிழ் தேசிய அரசியலை பாதுகாக்கும் எந்தவோர் ஆக்கபூர்வமான நகர்வுகள் எதனையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.  

உண்மையிலேயே முன் னணி என்னும் பெயரில் இருப்பவர்கள், தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வது உண்மையாயின், இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, அவர்கள், தமிழ் பொது வேட்பாளர் நிலைப் பாட்டுடன், தங்களை இணைத்துக் கொள்ளலாம் – ஆகக் குறைந் தது, தங்களின் கீழ்த்தரமான கருத்துக்களையாவது தவிர்க்கலாம். ஏனெனில் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, அதனை படிப்படியாக சிதைக்கும் வேலைகளையே முன்னணி செய்துவருகின்றது. மொத்தத்தில் தமிழ் தேசிய அரசியல் குற்றுயிருடன் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அதற்கு புத்துயிரளிக்கக் கூடிய நிலையில் எந்தவொரு கட்சியும் வலுவுடன் இல்லை. இன்றைய நிலையில் தனிக்கட்சியாக எந்தவொரு கட்சியும் வலுவான நிலையில் இல்லை. ஒப்பீட்டடிப்படையில் இலங்கை தமிழ் அரசு கட்சி வலுவான தோற் றத்தோடு இருந்தது.

ஆனால் தற்போது அந்த நிலைமையும் மாறி வருகின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால், தமிழ் தேசியத்தின் எதிர்காலம் என்பது பெரிய கேள்விக்குறியாகும்.   நன்றி ஈழநாடு 

No comments: