‘ சிவஞானச் சுடர்’ பாரதி இளமுருகனார்
இளைப்பாறிய பல்மருத்துவர்
( வாழ்நாட் சாதனையாளர்)
எமது தாய் நாட்டிலும் தமிழ் நாட்டிலும் இருவகைத் தமிழ்நடை எழுதப்பட்டு வருவதைக் காணலாம். ஒன்று செந்தமிழ் நடை. மற்றையது கொடுந்தமிழ் நடை. இலக்கண நெறிக்கு உட்பட்டு அதற்கு அமைந்து நடப்பது செந்தமிழ் நடையாகும். தமிழை முறையாகக் கற்றுப் புலமையெய்திய தமிழ்ச் சான்றோர் வளர்த்தும் ஓம்பியும் வந்த செந்தமிழ் நடையாவது சொன்மரபும் சொற்றொடர் மரபும் புணர்ச்சி முதலிய தமிழின் இனிய ஒலிமரபும் ஆகிய மொழி அமைப்புத் திறங்களைக் கொண்டது. இதற்கு எதிர்மாறாகக் கல்லாதவரும் தமிழறிவு குறைந்தவர்களும் ஆங்கிலம் மட்டுமே கதைத்துவரும் தமிழர்களும் செந்தமிழ் நடைபற்றித் தெரியாதவர்களும் எழுதிவரும் தமிழே கொடுந்தமிழாகிறது. தமிழர்கள் வாழும் இடத்துக்கு இடம் பேச்சுத் தமிழ் மாறுபட்டு வந்துள்ளது. சில இடங்களிலே பேச்சுத் தமிழ் கொடுந்தமிழாகப் பேசப்படுகின்றது. இன்று கொடுந்தமிழ் நடையிலே எழுதப்படும் கதைகளும் வெளியீடுகளும் பெருகிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்தும் தாய்நாட்டிலிருந்தும் கொடுந்தமிழ் நடையிலே எழுதப்படும் வெளியீடுகளும் கதைகளும் பெருகுவதைக் காணுகிறோம். தமிழ் நன்றாகக் கற்றோர்கூடப் பிற மொழிக் கலப்பை எதுவித தயக்கமோ வெட்கமோ இன்றி வரவேற்பதுபோலத் தமது ஆக்கங்களிலே கையாளுகிறார்கள். தமிழ் தெரிந்திருக்கும் சிலரும் தரமான ஆக்கங்களைப் படைக்க முடியாத ஆற்றாமையினாலும் கொடுந்தமிழுக்கு வளஞ்சேர்க்கிறார்கள். தரமான கதைகளையோ ஆக்கங்களையோ எழுத முடியாத புதுமை எழுத்தாளர்கள் சிலர் இழிந்தோர் வழக்கையும் பிறமொழிக் கலப்பையும் தரமற்ற நகைச்சுவையையும் கலந்து புதுமை இலக்கியம் படைத்து வருகிறார்கள். இந்த நிலை தொடருமென்றால் நாளடைவிலே தமிழ் மொழிக்குத் தனித்துவமான இனிமையும் எளிமையும் இலக்கண வரம்பும் செந்தமிழ் வழக்கும் அழிந்தொழியும் என்பதிலே மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது. தாங்களும் கதை எழுதவேண்டும் என்ற உந்துதலினால் கொடுந்தமிழ்க் கதைகளைத் தழுவியோ அல்லது அவற்றைத் திருடியோ பலர் கொடுந்தமிழ் வளர்த்து வருகிறார்கள். விற்பனையால் பெறப்படும் இலாபநோக்குடன் கொடுந்தமிழ் ஆக்கங்களை எழுதுவோரும் அவற்றை வெளியிடும் பத்திரிகைகளும் பெருகிவிட்டன. திரைப்பட உலகத்தாராலும் கீழ்த்தர ஊடகங்களாலும் தமிழ்மொழிச் சிதைவு வேகமாகத் தொடர்கிறது. தமிழ்மொழி இன்னும் நூறு ஆண்டுகளிலே மறைந்துவிடும் என்று சில தாபனங்கள் வெளியிட்ட செய்தி உண்மையாகிவிடுமோ என்னும் சந்தேகம் பலரின் மனதிலே எழுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும் என்ற தொல்காப்பியனாரின் வாக்குப் பலித்திடுமோ என்று எண்ணத் தோன்றுகிறதா?.
தமிழை நன்கு கற்ற சான்றோரின் பேச்சிலே பொருள்களின் தெளிவையும் சொற்களின் ஒழுங்கையும் காணலாம். இனிமையும் அழகும் கலந்து இருப்பதால் அவர்களின் பேச்சானது கேட்போரை ஈர்க்கும். பிறப்பினாலன்றிக் கல்வியும் ஒழுக்கமும் உடையவர்களே உயர்குலத்தோர் என்றும் அவர்கள் பேச்சு வழக்கே உயர்ந்தோர் வழக்கென்றும் தொன்று தொட்டுப் பேணப்பட்டு வந்ததொன்றாகும். . இத்தகைய பேச்சுவழக்கு எப்பொழுதும் இலக்கண விதிமுறைகளுக்கு அமையவே இருக்கும். கல்வியும் ஒழுக்கமும் இல்லாதேரின் பேச்ச வழக்கானது இழிந்தோர் வழக்கெனக் கணிக்கப்பெற்றுவந்துள்ளது. இவர்களின் பேச்சிலே மேற்கூறிய பொருள்களின் தெளிவோ சொற்களின் ஒழுங்கோ அல்லது இனிமையோ இருக்காது. இதுவே கொடுந்தமிழ் - கொச்சைத் தமிழ் - இழிவுத்தமிழ் என்றும் தமிழ்ச் சான்றோராலே கணிக்கப்பெற்று வந்துள்ளது.
உயர்ந்தோர் கல்வி அறிவு இல்லாருடன் பேசும்பொழுதும் நாடகத் தமிழ் எழுதும்பொழுதும் சிலசில கொச்சைச் சொற்களை அவர்கள் விளங்குவதற்காகப் குறைந்த அளவிலே பாவிப்பதையும் நாம் காண்கிறோம். அதிலே ஒருவித பிழையும் இல்லை. ஆனால் அவர்கள் எழுதும்பொழுது இலக்கண நெறி தவறாது தூய தமிழிலேதான் எழுதுவார்கள்.
செந்தமிழ் நடையை அழியவிடாது தமிழ் மொழி பேசும் நாடுகளிலே பாதுகாப்பது அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்களின் தனிப்பெரும் கடமையாகும். நல்ல விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். செந்தமிழ் வழக்கு மறுமலர்ச்சி அடைய வேண்டும்.
தமிழர்கள் வீட்டிலே பேசப்படும் மொழியாக நல்ல தாய்மொழியாம் தமிழையே பேசிவந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இலகுவாக அடிப்படையான தமிழைப் பேசும் ஆற்றலைத் தாமாகவே பெற்றுவிடுவார்கள். தமிழிலே அவர்களுக்கு ஆர்வமும் பற்றும் இயல்பாகவே ஏற்படும். புலம்பெயர்ந்து வாழும் அநேகமான பெற்றோர் தமது வீடுகளிலே ஆங்கிலம் கலந்த தமிழையோ அல்லது ஆங்கிலத்தை மட்டுமோ நாள்முழுவதும் வீட்டுப் பேசும் மொழியாகப் பேசிவருகிறார்கள். தமிழர்கள் என்று வெளியிலே தங்களை இனங்காட்டும் இவர்கள் வீட்டிலே தமது பிள்ளைகளுக்கு முன்பாக முழுநேரமும் தமிழையே பேசுபவர்களாக மாறவேண்டும். இவ்வாறு செயற்பட்டால் இப்பொழுதெல்லாம் தமிழ்படிப்பது கடினமாக இருக்கிறதே என்று சலிப்படைகிற நிலைமை பிள்ளைகளுக்கு ஏற்படாது.
மேலே குறிப்பிட்ட கொடுந்தமிழ்ப் படைப்புகளைத் தமிழ் பயிலும் மாணவர்கள் வாசிப்பதால் அவர்களுக்கு எது நல்ல தமிழ் எதைக் கற்பது பயன்தரும் என்ற தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றைப் படிப்பதால் எந்தவொரு பயனும் இல்லை என்பதைத் தமிழ் படிக்கும் மாணவர்கள் உணரவேண்டும். தமிழ் ஆசிரியர்களும் தமிழறிந்த பெற்றோரும் ஆங்கிலமொழிக் கலப்புடன் எழுதப்படும் கொடுந்தமிழ்ப் படைப்புகளைச் சிறுவர்கள் படிக்காதவாறு பார்க்கவேண்டும். இதுவும் அவர்களின் கடமைகளில் ஒன்றாகக் கடைப்பிடிக்க வேண்டியதே!.
பிற மொழிக் கலப்பின்றிச் செந்தமிழ் நடையைப் பின்பற்ற விரும்புவோர் தலைசிறந்த தமிழறிஞர்களின் செந்தமிழ் நூல்களை வாசிக்க வேண்டும். ,
இந்த வகையிலே பரம்பரை பரம்பரையாகச் செந்தமிழுக்கு இலக்கணத்தையும் செந்தமிழில் இலக்கியங்களையும் திறம்படச் செய்து வளர்த்து வந்தவர்களிலே தொல்காப்பியனார், நக்கீரர், பரணர், திருவள்ளுவர் போன்ற கடைச்சங்ககாலப் புலவர்களும் கம்பர்,கச்சியப்பர், சேக்கிழார் போன்ற இடைக்காலப்; புலவர்களும் இளம்பூரணர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்,சிவஞான முனிவர் போன்ற உரையாசிரியர்களும் தமிழைத்தங்களின் கண்போற் பாதுகாத்தும் வளர்த்தும் வந்தனர். இவர்களைத் தொடர்ந்து நல்லைநகர் நாவலர்,சுன்னைக் குமாரசுவாமிப் புலவர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர்,கதிரவேற்பிள்ளை, மறைமலை அடிகளார், கதிரேசச் செட்டியார், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புலவர்மணி இளமுருகனார், சுவாமி ஞானப்பிரகாசர், புலவர்மணி மயில்வாகனனார், வேந்தனார் போன்ற தமிழ்ச் சான்றோர்களும் தமிழுக்குப் பல அணிகளைச் சேர்த்துப் பெருமை செய்தனர். காலத்துக்குக் காலமாக உறுமாப் புலவர்,சவ்வாதுப் புலவர், ஊசெயின் புலவர், நயினாமுகமதுப் புலவர் போன்ற சோனகப் புலவர்களும் செந்தமிழ் வளர்த்தனர். இவர்களுடன் மேலைநாட்டிலிருந்து வருகைதந்து தமிழைப் பயின்றதுடன் செந்தமிழ் வழக்கை நிலைநாட்டிவந்தவர்களில் வீரமாமுனிவர், போப்பையர்,எல்லீசர், உவிஞ்சிலோ அடிகள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வழிவழி தொடர்ந்த செந்தமிழ் வழக்கைச் சிதைய விடலாமா?. இன்று செந்தமிழ் பலவழிகளாலும் சிதைவுற்று வருவதை நிறுத்திச் சீர்செய்யத் தமிழ் அமைப்புகள் ஒன்றுதிரண்டு பணியாற்றவேண்டும். அன்றேல் இன்றைய கொடுந்தமிழப்; படைப்புகள் மழைக்குத் தோன்றிச் சிலமணி நேரத்திலே இறந்துமடியும். ஈசல்கள் போல அழிந்தொழிவதொடு அவற்றை வாசிப்பவர்கள் மூலம் செந்தமிழ் வழக்கும் சிதைவடையத் தொடங்கிவிடும்.
புலம்பெயர் நாடுகளிலே இன்று (நடைமுறையிலே) செந்தமிழ் வழக்கு மொழி என்றும் கொடுந்தமிழ் வழக்கு மொழி என்றும் இரண்டு வகையான தமிழ் வழக்கு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அநேகமான தமிழரின் வீடுகளில் பிள்ளைகளும் பெற்றோரும் இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்துடன் கலந்தே தமிழைப் (கொடுந்தமிழைப்) பேசிவருகிறார்கள். இந்தநிலை தொடருமானால் செந்தமிழ் வழக்கு இறந்துபட வாய்ப்பு உண்டு. ஆனால் வாழும் மொழியாக இன்று பெருமளவிலே பாவனையில் உள்ள கொடுந்தமிழானது விதிப்படி எழுதுவதற்கோ அன்றிப் பேசுவதற்கோ ஒருவித அமைதிப்பாடும் இலக்கண வரம்பும் இன்றி இருத்தலோடு தமிழ்மொழியின் ஒலியமைப்புக்கு இணக்கமுடையதாகவும் இல்லை. அதிலே தமிழுக்குரிய இலக்கணவரம்பு இனிமை எளிமை தூய்மை போன்ற தனித்துவமான பண்புகள் கிடையாது. அது நாளடைவிலே காலத்தாலும் இடத்தாலும் மேலும் மேலும் திரிபடைந்து அழிந்தொழியக் கூடியது. கீழே தரப்பெற்ற உதாரணங்களை கவனத்துடன் சிந்தித்தால் எது தூய்மையானது என்றும் எது கீழ்த்தரமானதும் அருவருப்பானதுமென்றும் எளிதிலே ஒருவரால் தெளிவுற விளங்கமுடியும்.
உதாரணங்கள்-
செந்தமிழ் நடை--
மகள் :- அப்பா இன்றைக்கு வெள்ளிக் கிழமை அல்லவா? நீங்கள் நேரத்துக்கு வாருங்கள். நாங்கள் இன்று கோயிலுக்குப் போக வேண்டும். என்ன வருவீர்களா? நானும் தம்பியும் அம்மாவும் வெளிக்கிட்டுத் தயாராக இருப்போம். அண்ணாவையும் கூட்டிக்கொண்டு போகலாம். என்ன? நான் சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா?.
அப்பா : - எனக்கு நன்றாகக் கேட்கிறது பிள்ளை. நான் வீட்டுக்கு வரும்பொழுது ஏதாவது வாங்கிக்கொண்டு வரவேண்டுமா? அம்மாவைக் கேட்டுச் சொல்லடா செல்லம்.
மகள் :- அப்பா நீங்கள் வரும்பொழுது தலைக்குவைக்க எனக்கு மல்லிகைப் பூ வாங்கிவர முடியுமா?
அப்பா:- சரி சரி வாங்கிவருவேன். கோயிலுக்குப் போகும் போது அர்ச்சனைக்குப் பாலும் பழமும் வாங்கலாம் என்று அம்மாவுக்குச் சொல் பிள்ளை.
மகள்: - சரி அப்பா,.
-===============================================
கொடுந்தமிழ் நடை --
(சுதன் தனது நண்பனுக்கு அவசர சிகிச்சை வேண்டுமென்று குடும்ப மருத்துவருக்குத் தொலைபேசியிலே அழைப்பு)
சுதன் :- ஹலோ டொக்டரா பேசுறது? ஒரு சீறியஸ் கேஸ் டொக்டர். என்ரை ரூமிலை பிரன்ட் மயங்கிவிட்டான். உடனை ஸ்ராட்பண்ணி வாங்கோ. ..என்ன பேசிறியள்ஃ கேக்கயில்லை. கொஞ்சம் லவுட்டாகப் பேசுங்கள். என்ன வர்றீங்களா,
டாக்டர் :- நல்லது. வருகிறேன்.
அவன் மயங்கி எவ்வளவு நேரமாகிறது?
சுதன்:- இப்ப ஒரு ரென் - ருவெல்வ் மினிற்ஸ்தான் டொக்டர்.
டொக்டர் :- நீங்கள் இருப்பது எங்கே?
சுதன் :- என்ரை விலாசத்தை சொல்றன். உங்கடை டிஸ்பென்சறிக்குப் பக்கத்தில் உள்ள மாக்டொனால்ஸ்சுக்கு எதிராய் உள்ள அப்ஸ்ரெயர்ஸ் வீடு டொக்டர். வெள்ளைக் கலர் பெயின்ற் அடிச்ச வீடு. நம்பர் 20 பாரி றோட். உடனை வாங்கோ டொக்டர். அப்ப நான் றிசீவரை வைக்கட்டா?
ஓ கே. டொக்டர்.
--------------------------------------------------------------------------------- மேலே தப்பெற்றது அதிகமான பிள்ளைகளும் பெற்றோர்களும் புலம்பெயர் நாடுகளிலே கூடுதலாகப் பாவித்துவரும் கொடுந் தமிழ்நடை. இந்த நிலைப்பாடு மாறவேண்டும்.
இனிமையான செந்தமிழ் நடையையும் கொடுந்தமிழ் நடையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
• இன்றைய நவீன படைப்பாளர்கள் தமது அருமையான படைப்புகளென்று ஆரவாரம் செய்து கூத்தாடும் கொடுந்தமிழ் ஆக்கங்களிலே கூடுதலாகப் பாவித்துவரும் ஆங்கிலக் கலப்புச் சொற்களிற் சிலவற்றைப் பார்ப்போம். ஆச்சரியப்படுவீர்கள்!
றோஸ்ரர். - அஜஸ்ட். -- சேர். ---- என்கேச்மென்ற .- ஒஃபிசு - ரேண். - கார்ட்ஸ்
ஒஃபிஸ் றூம் - லாச்சி - ஃபைலை - கேர்ள் ஃபிரண்ட்!"
கரியரில் - சைக்கிளை - சூட்கேஸ் - கலரிங் - பென்சில்’ - பைனான்ஸ் கொம்பனி - போக்கர் மெசினில் -
பங்கர்களுக்குள் - அபார்ட்மண்ட்டை - லீவில் பப்புக்கு லீவ் - கசினோவுக்கு மார்க்கோடு- டொமஸ்டிக் வயலன்ஸ் - பர்ஸபோர்ட்டுகளை - ஸ்டாம்ப். ஃப்லை. - ரைய்ட்டர்
ஃப்பைல்ட் - டார்லிங் றெடியா - ஏயர் கொஸ்ர்ஸ்கள்
ரொலியில் - எக்ஸ்லேட்டரில் -- ஏயர் லைன்ஸ் -- பொலீஸ்
யூனிட் - முன் சீட்டில் - லீவ் - அங்கு கோர்ட்டின் போட்டோ
கேசை எடுத்து நடத்துபவன் -” மொபைலுக்கு - மம்
குகனை ரோய்லட்டுக்கு - சைரன் - அட்வைஸ் - வைவின்டை கெல்த் - லெற்றர் - யூற்றிப் பாளர்; - வைபிறேஷன் - மிஷின்கள். - டிராக்டர்கள். - சிற்றுவேசன் .- செக்கியூரிட்டி. - டியூசன் - டோசர்.- பக் லோடர் . - ஹெவி றக். - றோஸ்ரர். - அஷிஸ்டென்ற் -.எங்கட மகனின்ட - அவளின்ட கட்டப்போற - புதுசா வாற மாப்பிள்ளையின்ட அவருக்கு லீவு ஒருக்கா என்ட……….மகளின்ட - போறது - சேர்ட் பொக்கட்டிலிருந்த - லேனில் இருந்த - அங்கில்! அன்டி! சொக்கலட்டை ஆன்டிக்கு குடுக்கிறியா - வந்தனாங்கள் - ஆன்டியைப் பிடித்திருக்கா? - ஒபரேசனின் - நடந்திட வேணுமெண்ட - என்ட மனுசனுக்கு - டிக்கட்டில் – போட்டோ - பதிநாலு - ”தாங்க் கோர்ட் - டொக்டர் -
இப்பொழுது நேயர்களுக்குப் புரிந்திருக்கும். புதுமை எழுத்தாளர் சிலர் தமிழை அழித்து வருவதை தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளேன். இவர்கள் நல்ல தமிழ் எழுதும் ஆற்றல் இல்லாவிட்டால் எழுதவே தேவை இல்லை. எதுவிதத்திலும் பிரயோசனமற்ற இவர்களின் கொடுந் தமிழ் ஆக்கங்களை வாசிக்கும் தமிழ் மாணவர்களுக்குத் தேவையற்ற தடுமாற்றம் ஏற்படும். எந்த நடையைப் பின்பற்றலாம் எந்த மயக்கம் தேவையற்றதே. இது கொடுந்தமிழ் இது நல்ல தமிழ் என்ற வித்தியாசத்தை தமிழ் கற்றுவரும் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தெரியவைப்பது அவர்களுக்குத் தூய தமிழைக் கற்பித்துவரும் ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் தலையாய கடனாகும். தமிழை அழியவிடாது பாதுகாப்பது தமிழரின் கையிலேயே இருக்கிறது. தமிழ் ஆர்வலர்களே செந்தமிழ் வளர்க்கத் திரண்டிடுவீர்!
============================================================
No comments:
Post a Comment