மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
குழலின் ஓசை யாழின் ஓசை
உயர்வு என்று உளமே சொல்லும்
குழந்தை மழலை நிறையும் வேளை
குழலும் மறையும் யாழும் மறையும்
தித்திப் பென்பது தேனாய் தெரியும்
மற்றவை யெல்லாம் மனமே பார்க்கா
கடவாய் மழலைப் பாலின் முன்னே
தித்தித் தென்பது தேனாய் இருக்கா
நிலவும் மலரும் நிம்மதி நல்கும்
மனதில் காதல் மலரும் வேளை
காதல் களிப்பு மறையும் வேளை
அறு சுவை உணவு ஆனந்தமாகும்
அக மகிழ்வாக அமையும் வேளை
ஆனந்தம் அகன்று அல்லல் வந்தால்
அறு சுவைகூட அருவருப் பாகும்
பிறப்பு என்பது வரமாய் தெரியும்
சிறப்பும் மதிப்பும் நிறையும் வேளை
துரத்தித் துரத்தி துன்பம் வந்தால்
பிறப்பு என்பது பெருந் துயராகும்
இல்லம் என்பது இன்பம் நல்கும்
இல்லாள் நல்லாள் ஆகும் வேளை
இல்லாள் இனிமை இல்லாள் ஆனால்
இல்லம் இருளில் மூழ்கிப் போகும்
பிள்ளைச் செல்வம் பெரிய செல்வம்
உள்ளம் நிறைய வைக்கும் செல்வம்
சொல்லை மீறி எல்லை கடந்தால்
பிள்ளைச் செல்வம் பெருந் துயராகும்
உறவு என்பது பெருந் துணையாகும்
உயிரைக் காத்து உதவும் வேளை
உயிரை போக்க உளமே எண்ணின்
உறவு என்பது உயிர்ப்பை இழக்கும்
No comments:
Post a Comment