யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
விஜேயதாச ராஜபக் ஷ, திலித் ஜயவீர வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்
பங்களாதேஷ் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை பயண கட்டணம் நிர்ணயம்
யாழில் Jaffna Edu Expo கண்காட்சி
மன்னாரில் இளம் தாயின் மரணத்துக்கு நீதி கோரி வைத்தியசாலை முன்பாக மக்கள் போராட்டம்
யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.
இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்திருந்தார்.
இந்நிகழ்வில் துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் குறூப் நிருபர் - நன்றி தினகரன்
விஜேயதாச ராஜபக் ஷ, திலித் ஜயவீர வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர வேட்புமனு பத்திரத்தில் நேற்று கைச்சாத்திட்டார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவும் நேற்று புதன்கிழமை (14) வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.
விஜேயதாச ராஜபக்ஷ தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவும் வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டார். நன்றி தினகரன்
பங்களாதேஷ் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
பங்களாதேஷின் புதிய பிரதமர் முஹம்மத் யூனுஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷின் புதிய பிரதமரை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். பங்களாதேஷின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பிரதமர் யூனுஸால் முடியுமென்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷிலுள்ள இலங்கை முதலீட்டாளர்களை அங்கு தொடர்ந்து தங்கி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கவுள்ளதாகவும் பங்களாதேஷின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கையால் முடிந்த சகல வழிகளிலும் உதவுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். நன்றி தினகரன்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை பயண கட்டணம் நிர்ணயம்
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது. இதில் பயணிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாணயத்தில் ரூ. 5 ஆயிரம் கட்டணம் என இது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படவுள்ள சிவகங்கை கப்பல் இந்த்ஸ்ரீ நிறுவனத்துக்கு சொந்தமானது.
அந்நிறுவனத்தின் அதிகாரிகள் நடாத்திய ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு அறிவித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாளை (16) ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவகங்கை என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும்.
தொடர்ந்து கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.
இக் கப்பல் சேவை 18ஆம் திகதியிலிருந்து நாள்தோறும் நாகப்பட்டினத்திலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் கப்பல் இயக்கப்படும்.
கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் உள்ளன. ஜிஎஸ்டி வரியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ. 5,000, பிரீமியம் இருக்கைக்கு ரூ. 7,500 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கப்பல் சேவை ஆரம்பமாகவிருப்பதால் இருநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது) - நன்றி தினகரன்
யாழில் Jaffna Edu Expo கண்காட்சி
மாபெரும் இலவச கல்விக் கண்காட்சியொன்று எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக Jaffna Edu Expo கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.அஞ்சலிகா தெரிவித்துள்ளார்.
குறித்த கண்காட்சி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாபெரும் கல்வி கண்காட்சியான Jaffna Edu Expo கண்காட்சி எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமான ஒரு கண்காட்சியாகும்.
க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தர கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் அடுத்த கட்டம் எந்த கல்வியை தெரிவுசெய்ய வேண்டும், அவர்களது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும் என தெரியாமல் தடுமாறுகின்றனர். ஆகவே பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை பெறவேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து கல்விசார் நிறுவனங்களும் இதில் பங்குபற்றவுள்ளன. எனவே குறித்த திகதிகளில் நீங்கள் வருகை தந்தால் பூரணமான ஒரு தெளிவூட்டலை பெற்றுக் கொள்ளலாம்.
முன்பொரு காலத்தில் வடபகுதியானது கல்வியில் சிறந்த நிலையில் விளங்கினாலும் தற்போது அந்த நிலை வீழ்ச்சியடைந்து செல்கின்றது. அதற்கான காரணம் மாணவர்களுடைய பார்வை வேறு திசைகளை நோக்கி திரும்பியுள்ளது. ஆகையால் அப்படியான பார்வையிலிருந்து மாணவர்களுடைய பார்வையை கல்விக்குள் கொண்டு வருவதற்காகவே நாங்கள் கல்விக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி தினகரன்
மன்னாரில் இளம் தாயின் மரணத்துக்கு நீதி கோரி வைத்தியசாலை முன்பாக மக்கள் போராட்டம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் தாய்க்கு நீதிகோரி நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த இளம் தாயின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்ற போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படியொரு கொலை இனி நடைபெறக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். (மன்னார் குறூப் நிருபர்) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment