இலங்கைச் செய்திகள்

இலங்கை மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் சீட்

யாழ்.நண்பர்களின் 10ஆவது வருட நிறைவு

கவிஞர் இக்பால் அலியின் இரு நூல்கள் வெளியீடு

வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் வைகாசி விசாக பொங்கல் உற்சவம்

பன்முகத்தன்மையில் ஐக்கியம் ஏற்படுத்துதல்; ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பலதரப்பினருடனும் சந்திப்பு


இலங்கை மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் சீட்

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உதவி

May 24, 2024 11:12 am 

புதுக்கோட்டை மாவட்டத்தின் தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பை தொடர்வதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

அத்துடன் இம்மாணவிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய திருக்குறள் உரைநூல் மற்றும் பேனாவையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பரிசாக வழங்கி, வாழ்த்தியுள்ளார்.

தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் சுசந்த அஜித்குமார் மற்றும் திருமதி மரியகிறிஸ்டின் தம்பதியினரின் புதல்விகளான ஷரினாகிறிஸ்ட், மெனிஷாகிறிஸ்ட் ஆகியோர் கையடக்கத் தொலைபேசி கொள்வனவுக்காக தாம் சேமித்து வைத்த பணத்தை தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இந்நிலையில் அவர்களின் இந்த நற்செயலை பாராட்டி அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கையடக்க கணினிகளை (TAB) வழங்கி வாழ்த்தினர்.

இந்நிலையில் மாணவி சு.ஷரினாகிறிஸ்ட் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 468 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறையுடன் தொடர்புடைய Para Medical பிரிவில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பை தொடர உதவுமாறு கோரி அம்மாணவியின் தாய் மரியகிறிஸ்டின், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.    திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது   நன்றி தினகரன் 
யாழ்.நண்பர்களின் 10ஆவது வருட நிறைவு

ஆளுநர் பங்கேற்பு

May 21, 2024 7:33 am 

யாழ்.நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார்.

சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்ட இந்நிகழ்வில் ‘வட்டூர் இராமநாதன் புதல்வர்களின் நாதசங்கமம்’ எனும் நாதஸ்வர தவில் கச்சேரி நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்,

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. ஒரு சமூகம் மீண்டெழுவதற்கான பல தேவைகள் காணப்படுகின்றன.

இன்றைய தினம் மதப்பெரியார்கள், கல்வியியலாளர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பான நல்லிணக்க செயற்பாடாகும். எமது செயற்பாடுகளுக்கு அயல் நாடாகிய இந்தியா பல வழிகளிலும் தன்னுடைய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. அதேபோல எதிர்வரும் 24ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை வடக்கில் பல திட்டங்களை மேன்மை தங்கிய ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

காணி உரிமங்கள் கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறாக வடக்கு மாகாண அபிவிருத்திக்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 
கவிஞர் இக்பால் அலியின் இரு நூல்கள் வெளியீடு

May 22, 2024 1:39 pm 

அக்குறணை ஐடெக் கல்வி நிலையம், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இணைந்து நடத்தும் எழுத்தாளர், சிரே~;ட ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலி எழுதிய காலத்தின் கால்கள் (திறன்நோக்கு கட்டுரைத்தொகுதி) குரங்குத் தம்பி (சிறுவர் பாடல்கள் ) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 😉 23-05-2024 (போயா தினம்) காலை 9.30 அக்குறணை ஐடெக் கல்வி நிலைய மண்டபம் (தெலும்புகஹவத்த வீதி, பாலிகா பாடசாலைக்கு அருகில்) ஐடெக் கல்வி நிலையகத்தின் இயக்குனர் ஐ. ஐனுடீன் தலைமையில் இடம்பெறும.;

முதன்மை விருந்தினர்களாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், . ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம். அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர், கண்டி மாவட்ட அமைப்பாளர், ஐக்கிய மக்கள் சக்தி யின் அமைப்பாளர் எம். எச். ஏ. ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக தினகரன் வாரமஞ்சரி, தினகரக் நாளிதழ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தி. செந்தில் வேலவர், இலங்கை ஒலிபரப்புக் சுட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினர், பாக்கிஸ்தான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார் அவர்களும், .ஜம்;மிய்யதுல் அன்னசாரிஸ் சுன்னத்துல் முஹம்மதிய்யா பொதுச் செயலாளர், ஏ. எல் கலிலுர்ரஹ்மான் எம். ஏ. அவர்களும் அக்குறணை பிரதேச செயலாளர் ருவன்திகா குமாரி ஹென்நாயக அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் முதல் சிறப்புப் பிரதிகளைப் பெற்று எழுத்துலகிற்கு பங்களிப்புச் செய்யும் பெருந்தகைகள் தொழிலதிபர் அல்ஹாஜ் டி. எம். எஸ். நிஸைஹிர் ஹாஜியார், தொழிலதிபர் தேசமான்ய எஸ். முத்தையா, அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் அ~;n~ய்க் எம். ஏ. எம். சியாம்., மலையக கலை கலாசார (இரத்தின தீப) சங்கத்தின் தலைவர் தேசமான்ய எஸ். பரமேஸ்வரன் ஆகியோர் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன் வரவேற்புரையினையும், மத்திய மாகாணம்; முன்னாள் முதல் அமைச்சர், வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி மனித அபிவிருத்தி தாபனம், இயக்குனர், சர்வதேச விவசாய நிறுவனத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் , சமய, சமூகப் பேச்சாளர். நெலும் ஆடைக் காட்சியகத்தின் உரிமையாளர் தேசமானிய முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் ஆகியோர் வாழ்த்துரையாற்றவுள்ளனர்.
பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ், நூல்கள் பற்றிய அறிமுகத்தையும், பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை முன்னாள் விரிவுரையாளர் கவிஞர் ரா. நித்தியானந்தன் மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி சிரே~;ட ஆசிரியை திருமதி சர்மிளாதேவி துரைசிங்கம் ஆகிய இருவரும் நூல் நயவுரையினையும், நூலாசிரியர் இக்பால் அலி ஏற்புரையினையும், அக்குறணை பிரதேச செயலகத்தின் மொழிபெயர்ப்பாளர் பீ. தாரீக் நன்றியுரையினையும் நிகழ்த்தவுள்ளனர்   நன்றி தினகரன் 


வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் வைகாசி விசாக பொங்கல் உற்சவம்

May 22, 2024 5:20 am

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலின் வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் அதிகாலையில் முள்ளியவளை காட்டு விநாயகர் கோயிலிலிருந்து முல்லைத்தீவின் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலுக்கு மடப்பண்டம் கொண்டு செல்லப்பட்டு பொங்கல் உற்சவம் இனிதே ஆரம்பமாகியது.

இதன்போது தூக்குக்காவடி மற்றும் காவடி எடுத்தும், பால் செம்பு மற்றும் கற்பூரச் சட்டி ஏந்தியும் அம்மனுக்கு பொங்கல் பொங்கி படையல் படைத்தும் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

மாங்குளம் குறூப், ஓமந்தை விசேட நிருபர்கள் - நன்றி தினகரன் 


பன்முகத்தன்மையில் ஐக்கியம் ஏற்படுத்துதல்; ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பலதரப்பினருடனும் சந்திப்பு

May 23, 2024 6:42 am

மனிதநேயம் மிக்க ஆன்மிகத் தலைவரும், உலக சமாதானத் தூதுவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (ஸ்ரீ குருதேவ்) பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பையேற்று இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டிருந்தார். தொண்டு சேவையை பேரலையாக உருவாக்கி, அதனூடாக உலகின் மிகப்பெரிய தொண்டு சேவை இயக்கமாக ‘வாழும் கலை’ அமைப்பை பரிணமிக்கச் செய்தவர் குருதேவ்.

இதன்மூலம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களை நேரில் கண்டறிந்தார். அத்துடன் நாடு முழுவதும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடங்கலாக 12 அமைப்புக்களைத் தொடக்கி வைத்தார். இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கிலும் இருந்து வந்த ஆயிரமாயிரம் அடியார்கள் அவருடன் இணைந்திருந்தார்கள்.

ஆறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவரை கௌரவிக்கும் விதத்தில் முதல் நாள் கடித உறையொன்றும் வெளியிடப்பட்டது. சந்தோஷம் பரப்பி, பிரத்தியேகமான சுதர்ஷன கிரியைகள், தியானம், தர்க்கரீதியான ஞானம் ஊடாக மக்களை ஐக்கியப்படுத்தி, தனிநபர்களை வலுவூட்டி, சமூகங்களை நிலைமாற்றுவதற்காக அவர் பாடுபடுபவர்.

இலாப நோக்கமின்றி இயங்கும் அவரது ஸ்தாபனங்கள் பால்நிலை, இனம், தேசியம், மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக மனித அடையாளத்தைக் கருதுகின்றன.

‘வாழும் கலை’ அமைப்பில் உலகெங்கிலும் 30,000 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும், 180 நாடுகளைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தொண்டர்களும் உள்ளனர். அடியார்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தொடுகிறது.

திருகோணமலைக்கு விஜயம் செய்த குருதேவ், போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, வாழும் கலை நிறுவனம் நடத்தும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுடன் உளப்பூர்வமாக அளவளாவினார். அவர் திருக்கோணேச்சரம் சென்று இறைவனைத் தரிசித்தார். குருதேவ் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகக் கிரியைகளிலும் பங்கேற்றார். தமது ஸ்தாபனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சமூக சேவைத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி நம்பிக்கைப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், பெருமனவு முக்கியஸ்தர்களும், உலகெங்கிலும் இருந்து வந்த அடியார்களும் பங்கேற்ற -‘எக்கமுத்துவ’- என்ற விசேட நிகழ்ச்சியையும் அவர் நடத்தினார்.

பிரதமருடனான சந்திப்பில், பன்முகத்தன்மையில் ஐக்கியத்தை ஏற்படுத்துதல் பற்றியும், வாழ்வின் சூத்திரத்தில் மகிழ்ச்சியை உள்வாங்குவதன் மூலம் இலங்கையை ஐக்கியப்படுத்தல் பற்றியும் குருதேவ் கலந்துரையாடினார். இது தவிர, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னணி வர்த்தகப் பிரமுகர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் ஆகியோருடனும் அவர் கலந்துரையாடல் நடத்தினார்.

நன்றி தினகரன் No comments: