சன்மார்க்க வழி நடந்த சம்பந்தப் பெருமான் !

 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியாவேதநெறி வந்தார் மேலான சைவநெறி
பூதலத்தில் பொலிந்திடவே புகலியிலே பிறந்தார் 
சாதனையின் நாயகனாய் சன்மார்க்க வழிபற்றி
காதலுடன் தமிழ்பாடி கருத்துரைக்க வந்தாரே 

பக்திப் பெருவெளியில் பதினாறு ஆண்டுகளே
பரமன் புகழ்பாடி பண்ணோடு பாடல்தந்தார் 
தத்துவத்தைப் பக்குவமாய் தமிழிலே தந்திட்டார்
சித்தமெலாம் சிவனாக இத்தரையில் வாழ்ந்திட்டார் 

பிஞ்சுப் பருவத்தில் பெம்மானைக் கண்டார்
பெருமாட்டி உமையம்மை பாலூட்டி நின்றாள்
உயர்ஞானம் உமையீந்த பாலினுள் இருந்ததால்
பாலுண்ட குழந்தையும் பக்குவத்தைப் பெற்றது 

அம்மையொடு அப்பனை அவருமே கண்டார்
அதனாலே அவருள்ளம் அழுக்ககன்று போனது 
தோடுடைய செவியன் சொல்லகத்தில் எழுந்தது
ஈடில்லா இறையும் இறங்கியருள் சுரந்தது.

காணாத காட்சியைச் சம்பந்தர் கண்டார்
கற்பனைக்கு எட்டாத ஜோதியையும் கண்டார்
ஞானத்தின் திருவுருவாய் நானிலத்தில் நின்றார்
நல்லவண்ணம் வாழ்கவென்று நயந்துமே சொன்னார் 

இயற்கைக் காட்சிகளை எண்ணியெண்ணி ரசித்தார்
இயற்கையோ டிறைவனை இணைத்துமே மகிழ்ந்தார்
பார்க்கும் இடமெல்லாம் பரம்பொருளைக் கண்டார்
பாடினார் பாடினார் பக்தியோங்கப் பாடினார்

குழந்தைப் பருவத்தில் குறைவில்லா ஞானம்
கொடையாகக் கிடைத்ததனால் குறைவின்றிக் கொடுத்தார்
தத்துவத்தை பக்குவமாய் தமிழாக ஈந்தார்
இத்தரையில் சம்பந்தர் ஏற்றிட்டார் பலபணிகள் 

பெண்களைப் போற்றினார் பேறென்றே எண்ணினார்
பக்தியினை வளர்ப்பதற்கு பக்கதுணை ஆக்கினார்
சைவத்தைப் பரப்புதற்கு சன்மார்க்கச் சம்பந்தர்
சக்தியாய் பெண்ணினத்தை தானெண்ணி நின்றார்

வம்பிட்டார் வதங்கிடவே வாதங்கள் செய்தார்
கும்பிட்டார் பின்தொடரக் கோவிலெங்கும் சென்றார்
கண்பட்ட  சமணரை காணாதே போனார்
மண்தொட்டு நடைபயின்றார் மாசில்லாச் சம்பந்தர் 

நீற்றினைப் போற்றினார் நெஞ்சில் நமச்சிவாய
நிறைந்திடப் பாடினார் காதலாய் உருகினார்
கசிந்துநீர் மல்கினார் கடவுளைப் பற்றியே
எண்ணினார் எண்ணினார் இரங்கியே பாடினார் 

அப்பரை அணைத்தார் ஆறுதல் உற்றார்
உற்றதுணை என்று உள்ளத்தால் உணர்ந்தார்
காலத்தால் இணைந்தார்கள் கடமையாய் சைவநெறி
காத்திடவே உழைத்தார்கள் கைகூப்பி வணங்கிடுவோம் 

No comments: