தொழிலாளி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


வேட்டைக்காரன் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர் தனது தேவர் பிலிம்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்த படம் தொழிலாளி . எம் ஜி ஆர் கால்ஷீட் கிடைத்தவுடனேயே மள மளவென்று படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார் அவர். தேவர் பிலிம்சில் சரோஜாதேவிக்கு இனி இடம் இல்லை என்பதால் படத்துக்கு புதிய கதாநாயகியை தெரிவு செய்ய வேண்டியிருந்தது. முதலில் கே ஆர் விஜயாவை பார்த்த தேவர் , இவ எம் ஜி ஆருக்கு தங்கை மாதிரி தெரியுறா ஜோடிக்கு சரி வராது என்று நிராகரித்து விட்டார். அதன்

பின் புதுமுகம் ரத்னா கதாநாயகியாக ஒப்பந்தமானார். கே ஆர் விஜயாவுக்கு வில்லி வேடம் வழங்கப்பட்டது. அதே போல் எம் ஜி ஆரின் அம்மா வேடத்துக்கு முதல் தடவையாக எஸ் என் லட்சுமி நடிக்க ஒப்பந்தமானார். தேவரின் எல்லாப் படங்களுக்கும் பாடல்களை எழுதுபவர் கண்ணதாசன். எம் ஜி ஆருக்கும் அவருக்கும் இடையில் இருந்த மோதல் காரணமாக முதல் தடவையாக தேவர் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இப்படி சில பல மாற்றங்களுடன் தொழிலாளி உருவானான்.


தேவரின் எல்லா எம் ஜி ஆர் படங்களிலும் நடிகவேள் எம் ஆர் ராதா நிச்சயமாக நடிப்பார். அந்த வகையில் இதிலும் அவருக்கு வேடம் தரப் பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய போது இருந்த சுமுக நிலை படம் பூர்த்தியாகும் போது இருக்கவில்லை. தேவரின் படங்களில் படம் முழுவதும் வந்து கொண்டிருந்த ராதாவின் காட்சிகள் பின்னர் படத்துக்கு படம் குறைக்கப் பட்டுக் கொண்டே வந்தன. நீதிக்குப் பின் பாசம் படத்தில் பாதிப் படத்திலேயே இறந்து விடுவார். வேட்டைக்காரனில் சில காட்சிகளிலேயே வருவார். இப்போது தொழிலாளியிலும் கால் முடமான ஒரு பாத்திரத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்தார். அதிலும் பெரும்பாலான காட்சிகள் ஒரு சோபாவில் அமர்ந்த படி பேசும் காட்சி. இது எம் ஆர் ராதாவுக்கு அதிருப்தியை ஏற்றப்படுத்தியிருந்தது. யாருடைய விருப்பத்துக்கு ஏற்பவே இப்படி செய்கிறார்கள் என்று அவர் நினைத்தார்.


படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் பேசும் வசனத்தில் எம் ஜி ஆருக்கும் , ராதாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் பகிரங்கமாக வெடித்தது. அதன் போது பலர் முன்னிலையில் எம் ஆர் ராதா அலட்சியமாக எம் ஜி ஆரைப் பார்த்து சொன்ன சில கொச்சையான வார்த்தைகள் படப்பிடிப்புத் தளத்தையே ஸ்தம்பிக்க செய்து விட்டது. அதன் பிறகு தேவர் தலையிட்டு படப்பிடிப்பை சுமுகமாக தொடர செய்தார். ஆனால் அதன் பிறகு எம் ஆர் ராதாவை தேவர் தனது எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை! அது மட்டுமன்றி அதன் பின் எம் ஆர் ராதா மூன்று படங்களில் மட்டுமே எம் ஜி ஆருடன் நடித்தார்.

கை வண்டி ஓட்டுபவனாக தொழில் செய்து தன் தாயுடன் வாழும்

ராஜு இரவு தோறும் விழித்திருந்து படிக்கிறான். அதன் காரணமாக பஸ் கண்டக்டர் வேலை அவனுக்கு கிடைக்கிறது. தொடர்ந்து பஸ் செக்கிங் இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்கிறது. அதே சமயம் இரண்டு பெண்கள் அவனை காதலிக்கிறார்கள். பாட்டு டீச்சரான விஜயாவை ராஜு விரும்ப, பஸ் நிறுவனத்தின் முதலாளியான மீனா ராஜூவை ஒரு தலையாக காதலிக்கிறாள். ஆனால் ராஜு தனக்கு கிடைக்க மாட்டான் என்பதை அறிந்ததும் அவளின் மனதில் வன்மம் தோன்றி அது ராஜுவின் மானேஜர் பதவிக்கு உலை வைக்கிறது. ராஜு மீண்டும் கை வண்டி இழுப்பவனாக மாறுகிறான். அதே சமயம் மீனாவின் பஸ் நிறுவனமும் பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகிறது. ராஜுவோ ஏனைய தொழிலாளர்களுடன் சேர்ந்து கூட்டுறவு திட்டத்தில் பஸ் நிறுவனத்தை ஆரம்பித்து செயல் படுகிறான். நலிவடைந்த தன் பழைய முதலாளிக்கும் மறு வாழ்வு கொடுக்கிறான்.


இப்படி அமைந்த படத்தின் கதையை தேவர் எழுத , ஆரூர்தாஸ் வசனங்களை எழுதினார். மாடு மாதிரி வேலை செய்வது மாடு மாதிரி வாழ சொல்லறீங்களா மனுஷனா வாழத்தான் படிக்கிறேன், சிங்கம் தூங்கிடிச்சு ஆமை முந்திடிச்சு போன்ற வசனங்கள் சிறப்பாக அமைந்தன. படத்தை என் எஸ் வர்மா ஒளிப்பதிவு செய்தார்.

பாடல்களை மாயவனாதன், ஆலங்குடி சோமு ஆகியோர் எழுத கே வி மகாதேவன் இசையமைத்தார். ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி பாடல் டீ எம் எஸின் அமைதியான குரலில் இனிமையாக ஒலித்தது. என்ன கொடுப்பாய், வருக வருக திருமகளின் முதல் மகளே பாடல்களும் கேட்கும் படி அமைந்தன.

படத்தில் ரத்னா இயல்பாக நடித்திருந்தார். கே ஆர் விஜயாவின்

முகபாவங்களும், அங்க அசைவுகளும் சில காட்சிகளில் விரசமாகத் தெரிந்தன. வில்லனாக வரும் நம்பியார் வழக்கமான பாணியில் நடித்திருந்தார். நாகேஷ், மனோரமா காமெடி சுமார். நடுவில் காணாமல் போகும் தேவர் படத்தின் இறுதியில் வந்து எம் ஜி ஆருடன் மோதுகிறார்.

பல வித விவகாரங்களுக்கு மத்தியில் உருவான தொழிலாளியை எம் ஏ திருமுகம் டைரக்ட் செய்து படமும் வெற்றிப் படமானது.

No comments: