நவாலி என்னும் ஊரிலே வன்னியசேகர முதலியார் பரம்பரையிலே அரசகுடும்ப வழித்தோன்றலான அருமையினார் கதிர்காமர் அவர்களுக்கும் அழகும் அருங்குணமும் நிறைந்த இலக்குமிப்பிள்ளை அவர்களுக்கும் 1878 ஆண்டு வைகாசி மாதம் இருபத்தைந்தாம்நாள் சனிக்கிழமை அன்று அருந்தவப் புதல்வராகப் புலவர் பிறந்தார்.
ஈழத் திருநாட்டிலே புலவர் பரம்பரையை இலங்கச்
செய்ய பதினையாயிரம் செந்தமிழ்ப் பாக்களை இயற்றித் தமிழன்னைக்கு அணி செய்து அழகு
பார்த்தவர் தங்கத்
தாத்தா.. அவர் இயற்றிய தெய்வ
மணங்கமழும் அதிகமான செய்யுள்கள்
வழிபாட்டிற்குரியவை என்பது தமிழ்ப் புலமைச்சான்றோரின் முடிபு.
"கரும்பென்கோ ஞானக்
கனியென்கோ தேவர்
மருந்தென்கோ தென்கதிரை மன்னன் - விருந்தென்கோ
பொங்கர் கழனி பொலியு நவாலி நகர்த்
தங்கப் புலவன் தமிழ்!"
என்று இலங்கையின்
பெருங் கல்விமானாகத் திகழ்ந்த அருணந்தி விதந்துரைத்து
மகிழ்ந்தவர்.
புலவருடன் மிகவும் நெருக்கமாகக் கேண்மை பூண்டிருந்த பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம்
தமிழுலகிற்குத் தந்தருளிய அதி உயர்ந்த மூன்று இரத்தினங்களில் ஒருவராகத்
தங்கத்தாத்தாவைப் போற்றியதுடன் அவரின் ஆக்கங்களின்
உயர்வை இவ்வண்ணம் …
"நல்வழி காட்டுவோ
மென்றோர்கவி ராசமுகில்
நற்றமிழ் பொழிந்த நாட்டில்…………………
வல்லென்ற பண்டிதரும் வாய்ஊறி மதுரிக்க
வகைசெய்தோர்
புலவர் திலகம்
வாணியின் திருவருட் புகழெலாந் தமிழிலே
வருணித்த
தொருவி யப்போ?
சொல்லென்ற மலரிலே பொருளென்ற புதுமதுச்
சொட்டிச்
சுரக்கு மமிர்த
சுரபியா
யொளிர்கின்ற சோமசுந் தரநாம
சுகிர்தனைத் துதிசெய் வோமே!"
என்றும்
"ஆடிப் பிறப்பொடு
கத்தரித் தோட்டமும்
ஆக்கி யளித்த புலவர் பிரான்
தேடக் கிடையாத தென்னிலங்கை வளன்
தேன் சொரியுந் தமிழ்மாந்துதுமே!"
என்றும்
மனமுருகிப் பாடி மகிழ்ந்தார் பண்டிதமணி!
"செந்தமிழ்ச் செல்வியைத் தாமரை யாட்டியைத்
தென்பொதியச் சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந்
தனிக்குயிலைச் சிந்தையிற் பூத்துச்செந் நாவிற் பழுத்துச்
செவிப்புலத்தே வந்துகனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துவமே! "
என்ற
காப்புச்செய்யுளுடன் ஆரம்பித்து நூற்றிற்கும் அதிகமான வரிகளக் கொண்ட செந்தமிழ்ச்
செல்வி வழிபாடு என்னும் பனுவலை 1925ஆம் ஆண்டிலே
இயற்றிப் பழுத்த தமிழ்ப் புலவர்கள்
குழுமிய மாசபையிலே அரங்கேற்றி முதற் பரிசும் வித்துவச் சன்மானமும் புலவர் பட்டமும்
பெற்றுச் சரித்திரம் படைத்தவர் தங்கத் தாத்தா.
அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்து முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் மு. அருணாசலம்பிள்ளை
புலவரின்; நாமகள் புகழ்மாலை என்னும் அரும்பெரும்
நூலின் அணிந்துரையிலே "ஈழ வள நாட்டிலே தோன்றிய இளஞாயிறு போன்ற நவாலி ஊர்
முதுபெரும் புலவர் க. சோமசுந்தரப் புலவர் அவர்களாற் பாடப்பெற்ற நாமகள் புகழ்மாலை என்னும் நூல் உயிருள்ள நூல்களின்
"வரிசையிலே ஒன்றாக வைத்துப் போற்றத்தகும் உயர்வுடையது. தமிழின் மறுமலர்ச்சி என்னும் பெயரால் நாடோறும் வெளிவந்து
கொண்டிருக்கும் பிற நூல்கள் போலாது செவ்விய மதுரஞ்சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய
செழுந்தமிழ்ச் சொற்களால் யாக்கப் பெற்றிருத்தலின் நவில்தொறும் நவில்தொறும் நயம்
பயப்பதாக உள்ளது"என்று
வாழ்த்தியுள்ளார். நாமகள் புகழ்மாலை நூலில் உள்ள செய்யுள்கள் எல்லாவற்றையும்
தொகுத்து நோக்கின் இனியொரு புலவர் எவ்வாற்றானும் புனைந்துரைத்தற்குச் சிறிதும்
இடனில்லாதவாறு இப் புலவராய அந்தணாளர் பாடியுள்ளார் எனக் கூறவே முற்படுவர். அதுவே
அமைவுடையதாகும் என்பதைத் தனது அணிந்துரையிலே வலியுறுத்தியுள்ளார்.
புலவர்அருளிய
நாமகள் புகழ்மாலையில் இருந்து சில பாடல்களை நினைவு கூர்வோம்
செந்தமிழ்ச்
செல்வியை வழிபடுவதற்குப் புலவர் ஏனைய புலவர்களையும் தன்னுடன் இணைந்து வழிபட
அழைக்கிறார்
"வம்மின் புலவீர் வம்மின் புலவீர்
இம்மையும் மறுமையும் நன்மை பயந்து
தொன்மையும் புதுமையும் மென்மையுந் தெய்வத்
தன்மையும் நிரம்பி எழுமையுந் தொடர்ந்து
யாழினுங் குழலினும் பாலினுந் தேனினும்
காணினுங் கேட்பினுங் கருதினும் இனிக்கும்
அமிழ்துறழ் தலைமைத் தமிழ்மொழி யுணர்ந்த
மெய்ந்நெறிப் புலவீர் வம்மின் எல்லீரும் ."
என
அழைக்கிறார்.
மேலும்
தொடர்ந்த புலவர்
செந்தமிழ்ச் செல்வியைப் பள்ளியெழுகென
எழுப்புகிறார் தங்கத் தாத்தா!
"பன்னிய புறமொழி
விழைவெனுங் கங்குல்
பைப்பய விடிந்தது படரொளி பரப்பி
மன்னிய நின்புகழ் ஆயிரஞ் சுடர்க்கை
வானவன் நாவெனு மலைமுக டுதித்தான்
துன்னிய புறமொழித் தாரகைச் சூழல்
சுடரொளி அவிந்தன குவிந்தனர் தொண்டர்
என்னித யத்துறை முத்தமிழ்க் கடலே
இன்னமுதே பள்ளி எழுந்தரு ளாயே!"
வெண்டாமரைப் பூவிலும் புலவர்கள்
பாவிலும் நாவிலும் வீற்றிருந்து நல்லருள் பாலிக்கும்
கலையரசியாம் நாமகளை அருள்செய்யும்வண்ணம் துயிலெழுப்பிய புலவர் அவளை அத்துடன்
விட்டுவிட்டாரா?
"……
அன்புநீ ராட்டி வெண்கலை யுடுத்தி
மெய்வகைச் சாந்த விரைக்குழம் பணிந்து
செஞ்சொலில் தொடுத்த மஞ்சரி வளைமின்!
விதுப்பிறை பழித்த கதிர்ப்புறு நுதலிற்
பொங்கிய மகிழ்ச்சிக் குங்குமம் இடுமின்!
உய்வகை மும்மையின் ஆண்மை தெரித்துத்
தெய்வப் புலவன் செய்தருள் மணிமுடி
வணங்காச் சென்னி இணங்கச்; சூட்டி
மென்பணைத் தோளினும் பொன்புணர் மார்பினு
மூவர் ஆரமும் முனிவர் கோவையுந்
தேவர்மா மணியு மேவர வவைமின்!
அன்பி னைந்திணை யாழ்வார் திருமொழி
பொன்புனை மாலை வேய்ந்து மின்பொலி
குண்டலம் வளையெனும் ஒண்டமிழ் இரண்டும்
காதினும் போதுறழ் கையினும் இடுமின்
தணியாப் புலமைத் தண்டமிழ்ச் சாத்தன்
மணிமே கலையை மருங்குறச் சேர்த்திச்
சேரன் தந்த திருக்கிளர் சிலம்பு
வேரியந் தாமரை மெல்லடிப் புனைமின்
நாலடிப் பாதுகை கீழுறக் கொளுவி
நாவணி தந்த பாவணி பலவும்
பொருந்துளி திருந்துபு பூட்டி……"
தமிழன்னையை அழகுததும்ப அலங்காரஞ் செய்து
மகிழ்ந்த புலவர் அவளுக்குத் தமிழ் மந்திரத்தால் அர்ச்சனை செய்யும்படி எல்லோரையும்
அழைக்கிறார்.
"சான்றவ ராய்ந்த தமிழ்மொழி
மந்திரம்
நாவியன் மருங்கி னவிலப் பாடி
வலமுறை மும்முறை முறைமுறை வாராக்
கண்ணினீர் வார மெய்ம்மயிர் சிலிர்ப்ப
நெஞ்சுநெக் குருக அஞ்சலி செய்து
செந்திரு நாணச் சிதையா வரமருள்
சிந்தா மணியே! நந்தா விளக்கே!
ஆருயிர் மருந்தே!அடியவர் விருந்தே!
கற்றவர் களிக்க மற்றவர்க் கொளித்த
கற்பகக் கனியே! அற்புதத் தேனே!
அருட்பெருங் கடலே! இருட்பெருங் கடற்குப்
புணையே! தோன்றாத் துணையே!
பிணையே! "
என்று
அஞ்சலி செய்து அருளை வேண்டுகிறார்.
சிறிது நேரம் அவளைக் காணாது அவள் எங்குற்றாளோ வென்று ஏங்குகிறார் நரை பூத்த தங்கத் தாத்தா!
பூங்குயிலைக்கொண்டு
தமிழ்ஞானக் குலக்கொடியைக் கூவி அழைவிக்க
விழைகிறார் புலவர்!
"விழிக்கின்ற
விழிக்குள்ளே விளக்கா னாளை
மென்கரும்பைச் செழும்பாகை விளரி யாழைப்
பழிக்கின்ற மொழியாளைப் பலதே யத்துப்
பாடைமட
மங்கையர்கள் பதஞ்சே விக்க
அளிக்கின்ற வருளாளை அறிவா னாளை
ஆசுமுதல்
நாற்கவியின் பொருளை அள்ளிக்
கொழிக்கின்ற சிவக்கொழுந்தை எனையும் ஆண்ட
குலக்கொடியைப்
பூங்குயிலே
வரக்கூ வாயே!"
நாமகளைத்
தனது தியான முகத்திலே காணுதற்கு ஆசைப்படுகிறார் சோமசுந்தரனார்!
"குழல்திருத்தி
அலர்முடித்துத் திலதந் தீட்டிக்
கோவிரண்டு
மையெழுதிக் குழைகள் பூட்டி
வளையலிட்டுக் கச்சணிந்து வடங்கள் மாட்டி
மாசுதவிர்
மேகலையை மருங்கிற் கூட்டிப்
பழையதமிழ்ச் சிலம்பணிந்து பட்டு டுத்திப்
பார்வையெட்டால்
மலரயனார் பார்க்கப் பார்க்க
அழகொழுக அமுதொழுகுந் தெய்வக் கோலம்
ஆசையுற்றேன்
இனிக்காட்டி அருளு வாயே!"
சுத்த மாயையெனும் வாவியிலே தோன்றிய ஓங்கார
வடிவமாகிய தாமரையிலே விற்றிருக்கும் நாமகளை – சங்கப் புலமைத் தமிழ்க் கூடல்
தலைவியாம் கலைமகளைத் தன்மனக்
கண்ணுக்குள்ளே நீங்காதிருக்கும்படி வருந்தி வேண்டுகிறார்; தங்கத் தாத்தா!
"அன்னே வருக!
மெய்ந்நாவின்
அமுதே வருக! ஆருயிர்கட்(கு)
அறிவே வருக! அறிவிலெழும்
அன்பே வருக! அன்புதரும்
பொன்னே வருக! புந்திமலர்ப்
பூவே வருக! பூவிலமர்
பொறியே வருக! பொறிகடந்த
பொற்பே வருக! கருணைமழை
மின்னே வருக! நாதவிந்து
வெளியே வருக! வெளியிலொளிர்
விளக்கே வருக! மெய்ந்நூலின்
வித்தே வருக! வியனுலகில்
தன்னே ரில்லாத் தமிழகத்துத்
தாயே வருக! வருகவே!
சங்கப் புலமைத் தமிழ்க்கூடல்
தலைவீ வருக வருகவே!"
நாமகளின்
தெய்வீக அழகிலே தன்னைமறந்து பாடுகின்றார்…
"ஏர்கொண்ட முக்கணன்
சடைகொண்ட இளமதியின்
எழில்கொண்ட
திலதநுதலும்
ஏறுமயில்
வாகனன் கைக்கொண்ட கூர்வேல்
இரண்டுகொண்
டொளிர்விழிகளும்
நீர்கொண்ட குமுதமலர் நிறைகொண்ட திருவாயும்
நித்திலங்குடி
கொண்டநகையும்
நெடியவன்
வாய்கொண்ட வேய்கொண்ட தோளுமுகை
நேர்கொண்ட வனமுலைகளும்
கார்கொண்ட மின்னிடையு மனநடையு மொலிகொண்ட
கனகதண் டைககால்களும்
கண்கொண்டு
கண்டுளங் களிகொண்டு வாழ்ந்திடக்
கருணைகொண் டிடுவதெனந்நாள்
சீர்கொண்ட பாமாலை திறைகொண் டுளங்கொண்ட
தேவியே கருணைபுரிவாய்
தென்பொதிய
மலையிலுறை கும்பமுனி மடியில்வளர்
செந்தமிழ்க் குலதெய்வமே!"
செந்தமிழ்ச்
செல்வியின் கருணையினால் தான் உய்ந்த வகையைக் கூறித் துதிக்கின்றார் புலவர்!
"சந்தனப்பொற்
சிலம்பினிலே பிறந்திட் டாளைத்
தமிழ்முனிவன்
மடிமிசையே வளர்ந்திட் டாளைச்
சுந்தரனுக்(கு) இறைவனைத்தூ தேவி னாளைத்
தொண்டருள
மணிவிளக்காய் மேவி னாளைச்
செந்தழன்மேல் வேவாது சிறந்திட் டாளைத்
தீவினையேன்
செய்தபிழை மறந்திட் டாளைக்
கந்தனுக்குப் பாமொழிவித்(து) எனையும் ஆண்ட
கலைமகளை
நினைந்தடியேன் உய்ந்த வாறே!"
தான்
அறியாது விட்ட பிழைகளைப் பொறுத்தருளி என்றென்றும் திருவருள் செய்ய வேண்டித்
தொழுகின்றார்.
"சேயழா திருக்கப்
பானினைந் தூட்டுஞ்
சிறப்புடை
அன்னையே போலத்
தூயநூற் பொருண்மேல் அவாவுறா வெனக்குந்
தொடர்பினால்
அன்னவை அருளித்
தீயவென் உளத்து மேவிநா விடமாய்ச்
செந்தமிழ்ப்
பாவருள் செய்யும்
ஆய்கலைப் பாவாய் முத்தமிழ்ச் செல்வீ
அரும்பிழை
பொறுத்தருள் வாயே!"
புலவர் மகிழ்ச்சி ததும்பத் தொடர்ந்து பாடுகிறார்….
விந்துநாத மீதிருப்பாள் செந்தமிழ்ச் செல்வி!
வெண்கமல மேலிருப்பாள் செந்தமிழ்ச் செல்வி!
சந்திரனைப் போனிறத்தாள் செந்தமிழ்ச் செல்வி!
தத்துவங் கடந்துநிற்பாள் செந்தமிழ்ச் செல்வி!
இயற்கையொலி யாயிருப்பாள் செந்தமிழ்ச் செல்வி!
என்றுமழி யாதிருப்பாள் செந்தமிழ்ச் செல்வி!
நினைத்த வுடன்வருவாள் செந்தமிழ்ச் செல்வி!
நின்றுகவி பாடிடுவாள் செந்தமிழ்ச் செல்வி!
என்றென்றும் போற்றிசெயச் செந்தமிழ்ச் செல்வி!
இடர்நீக்கி ஆண்டனளே செந்தமிழ்ச் செல்வி!
செந்தமிழ்ச்
செல்வியைத் தாலாட்டித் தூங்கவைப்பதிலே கண்ணுங்கருத்துமாக இருந்த தங்கத் தாத்தா…..
ஆராரோ
ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ஆராரோ
ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
செந்தா
மரைமுதல்வன் செம்பொற் கரம்பிடித்த
அந்தா
மரைமேல் அமர்ந்தருளும் ஓதிமமோ? (ஆராரோ)
சிந்தா
குலமுந் திரைநரையும் மூப்பும் அழி
சந்தான
கற்ப தருவருள்சஞ் சீவினியோ? (ஆராரோ)
நீண்டதொரு
தாலாட்டைப் பாடி நிறைவுகொள்கிறார்
பதினையாயிரம் செந்தமிழ்ப்
பாக்களைத் தமிழன்னைக்கு ஆரமாய்ச் சூட்டி மகிழ்ந்த புலவர் தனது எழுபத்தைந்தாவது
அகவையில் கி. பி 1953ஆம் ஆண்டில் சிவபதம்
எய்தினார்.
புலவரின்
சிவசங்கமம் குறித்து அவரின் மூத்த புதல்வன் புலவர்மணி இளமுருகனார் எழுதிய வெண்பா
"ஐந்துபுலனும்
அருண்முருகன் தாளேறச்
சிந்தையொரு
சாந்தத் திடமேறச்; - செந்தமிழின்
மந்திரங்கள் காதேற வாழ்க்கை குறிக்கொண்டு
சுந்தரனார் உற்றார் சுகம்."
தொகுத்து எழுதியவர் -
சிவஞானச் சுடர்
பாரதி இளமுருகனார்
(வாழ்நாள் சாதனையாளர்)
No comments:
Post a Comment