உலகச் செய்திகள்

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும் மொங்கோலியாவும் அக்கறை

காசாவின் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு இஸ்ரேலிய படை, டாங்கிகள் முன்னேற்றம்

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: மேற்குக் கரையின் ஜெனினில் சுற்றிவளைப்பு

ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவமனைகள் முக்கிய இலக்கு

பப்புவாவில் பாரிய நிலச்சரிவு 6 கிராமங்கள் புதைந்தன; பலர் உயிரிழந்திருப்பதாக அச்சம்

ஜூலையில் பிரிட்டனில் திடீர் பொதுத் தேர்தல்


பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும் மொங்கோலியாவும் அக்கறை 

May 24, 2024 2:59 pm 

இருபக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மொங்கோலியாவும் இந்தியாவும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளன. இது தொடர்பிலான கூட்டு செயற்குழுக்கூட்டம் மொங்கோலியாவின் உலன்பாடரில் நடைபெற்றுள்ளன.

இந்திய, மொங்கோலியப் பாதுகாப்பு அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகளும் அடையாளம் காணப்பட்டதோடு தற்போது இடம்பெற்றுவரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, தங்கள் திருப்தியை இரு தரப்பினரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு) அமிதாப் பிரசாத், மொங்கோலிய பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் கன்குயாக் தவாக்டோர் ஆகியோரின் இணைத்தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரசாத், இந்தியப் பாதுகாப்புத் துறையின் திறன்களது சாத்தியக்கூறுகளை எடுத்துக்கூறியதோடு மங்கோலிய பாதுகாப்பு படையினருடன் பயனுள்ள கூட்டாண்மையை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அச்சமயம் மங்கோலிய தரப்பினர் இந்திய கைத்தொழில்துறையின் திறன்கள் மீது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் அமிதாப் பிரசாத்தும், மங்கோலியாவுக்கான இந்திய தூதர் அதுல் மல்ஹாரி கோட்சர்வேயும் மொங்கோலியாவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பி. பயர்மக்னை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.   நன்றி தினகரன் 

 




காசாவின் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு இஸ்ரேலிய படை, டாங்கிகள் முன்னேற்றம் 

பேச்சுவார்த்தைக்கு தயாரென நெதன்யாகு அலுவலகம் அறிவிப்பு

May 24, 2024 12:28 pm 

காசாவின் ரபா மற்றும் ஜபலியா நகரங்களில் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேலிய இராணுவம் அங்கு மக்கள் செறிந்து வழும் பகுதிகளை நோக்கி முன்னேறி வருவது பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு நகரான ரபாவில் கடந்த இரண்டு வாரங்களாக படையெடுப்பை முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய படைகளுடன் பலஸ்தீன போராளிகள் கடுமையாக சண்டையிட்டு வருவதோடு அங்கு வீதிகளிலும் மோதல்கள் இடம்பெறுவதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத பகுதியாக இருக்கும் ரபா, காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்ற பகுதியாகவும் உள்ளது. எனினும் இஸ்ரேலியப் படையின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து அங்கிருந்து இதுவரை 800,000க்கும் அதிகமான மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரபாவில் இராணுவம் தனது படை நடவடிக்கையை விரிவுபடுத்தி எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் பிலடெல்பி தாழ்வாரத்திற்கு முன்னேறி இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரபாவில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. எனினும் அங்கு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையையே முன்னெடுப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் காசாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் 10 படைப்பிரிவுகளில் ஐந்து பிரிவுகள் தற்போது ரபாவில் செயற்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய தரைப்படைகள் ரபாவின் மத்திய பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் போர் கண்காணிப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய போர் கள நிலை குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட போர் கற்கைகளுக்கான நிறுவனம் மற்றும் சி.டீ.பீ. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரபாவில் இயங்கும் இஸ்ரேலியப் படைகள் எகிப்துக்கும் காசாவுக்கும் இடையே 14 கிலோ மீற்றர் (8.5-மைல்) நிலப்பகுதியான பிலடெல்பி தாழ்வாரத்தில் முன்னேறி வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தரைவழி நடவடிக்கைக்கு நிலப்பகுதியை வடிவமைக்கும் வகையில் கிழக்கு ரபாவில் இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அந்த போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

மறுபுறம் காசா போர் வெடித்த ஆரம்பத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்த வடக்கு காசாவில், குறிப்பாக ஜபலியாவில் இஸ்ரேலிய துருப்புகள் மீண்டும் ஒருமுறை முன்னேறி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் அங்கு மோதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாக குத்ஸ் நெயூஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. அவர் தலையில் சுடப்பட்டுள்ளார்.

ஜபலியாவில் அண்மைய நாட்களாக முற்றுகையை கடைப்பிடித்து வரும் இஸ்ரேலிய இராணுவம் கடந்த புதன்கிழமை அந்த நகரில் பலூஜா பகுதியில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் கடந்த எட்டு மாதங்களாக தொடரும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,700ஐ தாண்டியுள்ளதோடு காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்தம்பித்திருக்கும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மூன்று ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன நாட்டை அங்கீகரித்து காசா போர் இஸ்ரேல் அரசு மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹமாஸ் தலைவர்களுடன் நெதன்யாகு மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மறுபுறம் காசாவில் சிக்கி இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு ஒன்றுக்கு செல்வதற்கு இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இஸ்ரேலியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழுவை போர்க்கால அமைச்சரவை கேட்டுக்கொண்டதாக நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் ரபா மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து, எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற முந்தைய சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன.

எனினும் புதிய சுற்று பேச்சுவார்த்தையை எந்தத் திசையில் முன்னெடுப்பது அல்லது பேச்சுவார்த்தை குழுவினர் பேச்சுவார்த்தையை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பில் எந்த விபரத்தையும் அந்த அலுவலகம் குறிப்பிடவில்லை. காசா போரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் அங்குள்ள ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேல் நடத்திய சுற்றுவளைப்பு நேற்று (23) முடிவுக்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையில் குறைந்தது நான்கு சிறுவர்கள், மருத்துவர் ஒருவர் மற்றும் ஆசியர் ஒருவர் உட்பட 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அந்த நகரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியபோதும், இஸ்ரேலிய துருப்புகள் வீதிகளில் கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கல்கில்யா நருக்கு அருகில் ஜயூஸ் சிறு நகரில் வைத்து இரு சிறுவர்கள் மீது சூடு நடத்தப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. இந்த சிறுவர்கள் மேற்குக் கரையை பிரிக்கும் சுவரை அணுகியபோதே அவர்கள் இஸ்ரேலிய படையினரால் சுடப்பட்டுள்ளனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களில் குறைந்தது 518 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு சுமார் 5,000 பேர் வரை காயமடைந்துள்ளனர்.   நன்றி தினகரன் 





ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 

ஈரானில் ஐந்து நாட்கள் துக்கதினமாக பிரகடனம்

May 21, 2024 6:08 am 

இலங்கையிலும் இன்று துக்கதினம் பிரகடனம்;

உலக தலைவர்கள் அனுதாபம்

ரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிநாட்டமைச்சர் அமீர்அப்துல்லாஹியன் உள்ளிட்ட முக்கிஸ்தர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், சகலரும் உயிரிழந்ததாக ஈரான் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக கடந்த 2021 இல், இப்ராஹிம் ரைசி பதவியேற்றிருந்தார்.நாட்டின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுபவர் இப்ராசிம் ரைசி. இவரது பதவிக் காலத்தில் அயல்நாடுகளுடனான ராஜதந்திர உறவுகள் பலப்படுமளவுக்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த (19) ஞாயிற்றுக்கிழமை ஈரானின் வடமேற்கு மாகாணமான அஸர்பைஜானுக்குச் சென்ற வேளை அவர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது.சீரற்றகாலநிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டங்களால் ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்கிய வேளையிலே, விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

இருட்டு,கடும் குளிர் மற்றும் மழையால்  மீட்பு பணிகளில் பெரும் தடங்கல்கள் ஏற்படும் அளவுக்கு காலநிலை மிக மோசமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை 40 மீட்புக் குழுக்கள் ,காடு மற்றும் மலைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.வான்வழி அணுகுமுறைகள் சாத்தியமற்றதாக இருந்ததால், தரைவழியிலான குழுக்களால் மட்டுமே இப்பகுதியை அணுக முடிந்தது. மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் இயற்கை தடைகளும் ஜனாதிபதியுடனான குழுவினருடன் தொடர்புகொள்வதை சாத்தியமற்றதாக்கியதாக ஈரான் அரச தொலைக்காட்சி அறிவித்தது.

ராய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி, விபத்தில் ஹெலிகாப்டர் ‘முற்றிலும் எரிந்துள்ளதாக குறிபிட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் உயிரிழந்தது குறித்து இஸ்லாமிய புரட்சிப்படையின் தலைவர் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து ஈரானில் ஐந்து நாட்கள் துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த இழப்புக்கள் குறித்து இந்தியா, சவூதிஅரேபியா கட்டார், குவைத், லெபனான், துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அனுதாபம் தெரிவித்துள்ளன. இலங்கையிலும் இன்று துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  எனினும், ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்புக் குறித்து அமெரிக்கா இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தமை குறித்து தெரிவிக்கப்பட் டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னணியில், மத்திய கிழக்கு  பிராந்தியத்தின் அமைதியை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச  ஊடகங்கள்  மேலும் தெரிவித்துள்ளன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (21) தலைநகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க உலகின் பல நாடுகளிலிருந்தும் தலைவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில்,ஈரான் பதில் ஜனாதிபதியாக மொஹமட் மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இன்னும் ஐம்பது நாட்களுக்குள் நடைபெறும் வரையில்,இவர் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார்.

மத்திய கிழக்கில்,நிலைப்படும் ஈரானின் முயற்சிகளை அயல்நாடுகள் சில கடுமையாக எதிர்த்துள்ள நிலையிலும்,அரபு நாடுகள் பல, இப்ராஹிம் ரைசியின் இழப்புக்கு அனுதாபம் தெரிவித்துள்ளன. சிரியா உள்ளிட்ட ஈரானின் நேச நாடுகள் துக்க தினங்களையும் பிரகடனப்படுத்தியுள்ளன.ஈரானியர்கள் பெரும் கவலையுடனும் வீதிகளில் அழுதவாறும் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.பல பள்ளிவாசல்களில் அன்னாருக்காக விசேட துஆப்பிரார்த்தனை களும் ஏற்பாடு செய்யப்பட்டன.   நன்றி தினகரன் 





காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: மேற்குக் கரையின் ஜெனினில் சுற்றிவளைப்பு

பிடியாணையை நிராகரித்தார் நெதன்யாகு

May 22, 2024 7:56 am 

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகள் நேற்று ஆழ ஊடுருவியதோடு அந்தக் குடியிருப்பு பகுதியை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் துவம்சம் செய்து வருகின்றன.

தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேலின் உக்கிர தாக்குதல் தொடரும் நிலையில் அங்கு மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் வழக்கு மற்றும் தெற்கு முனையில் சம காலத்தில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பது அங்கு புதிதாக ஆயிரக்கணக்கான மக்களின் வெளியேற்றத்திற்கு காரணமாகியுள்ளது. மறுபுறும் எல்லைக் கடவைகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் உதவிகள் வருவதும் நிறுத்தப்பட்டு பஞ்சம் தீவிரம் அடையும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.

75 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது வெளியேறிய பலஸ்தீனர்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் புல்டோசர்களை பயன்படுத்தி குடியிருப்புகள் மற்றும் அருகில் இருக்கும் சந்தைப் பகுதியின் கடைகளை தரைமட்டமாக்கி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கு இஸ்ரேல் இரண்டு வாரங்களுக்கு முன்னரே தமது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

இங்குள்ள ஹமாஸ் அமைப்பை ஒழித்ததாக சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் கூறியிருந்த நிலையிலேயே படைகளை அங்கு மீண்டும் அனுப்பியுள்ளது.

ஜபலியா வீதிகள் மற்றும் இடிபாடுகளில் பல டஜன் உடல்கள் சிதறிக்கிடப்பதாக குறிப்பிட்டிருக்கும் காசா சுகாதார நிர்வாகம் மற்றும் சிவில் அவசர சேவை பிரிவு, மீட்புக் குழுக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியது.

‘இஸ்ரேல் மக்களுக்கு மேலால் முகாமை அழித்து வருதோடு குண்டு வீசுவது நிறுத்தப்படவில்லை. காசாவுக்கு மேலும் உணவுகள் நுழைய உலகம் அழைப்பு விடுக்கிறது. கூடுதல் உணவை அல்ல, உயிர்களையே காப்பற்ற வேண்டும்’ என்று காசா நகருக்கு அருகில் இடம்பெயர்ந்து வந்த ஜபலியா குடியிருப்பாளரான அபூ எல் நாசர், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஜபலியாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனையை இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக முற்றுகையில் வைத்திருப்பதாகவும் அருகில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது சூடு நடத்தி வருவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் உள்ள மருத்துவமனையில் 170 நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிக்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

ஜபலியா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கான் யூனிஸில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘எல்லா இடங்களிலும் குண்டு வீசுகிறார்கள். மக்கள் அச்சத்தில் வெளியேறி வருகின்றனர்’ என்று கான் யூனிஸைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் தொலைபேசி ஊடாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரிலும் இஸ்ரேலிய படை சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. தெற்கு காசாவின் ரபாவில் உள்ள யிப்னா அகதி முகாமில் உள்ள மக்கள் குழுவொன்றை இலக்கு வைத்து நேற்று இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படம் ஒன்றை அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டது. அதில் சிறுவர்களின் உடல்கள் சிதறி இருப்பது தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் கொல்லப்பட்டு மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த எட்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தொடர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,647 ஆக அதிகரித்திருப்பதோடு 79,852 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இனப் படுகொலை குற்றச்சாட்டு தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு சர்வதேச குற்றவில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருக்கும் நிலையில் அதனை இரு தரப்பினரும் நிராகரித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஹமாஸுக்கு எதிரான போரை அந்த நீதிமன்றத்தால் தடுத்துவிட முடியாது என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலிய இராணுவம் இன அழிப்பில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியத் தலைவர்களுக்கு எதிரான சர்வதேச நீதிமன்ற நடவடிக்கையை ஆதரிப்பதாகக் கூறிய ஹமாஸ், தனது தலைவர்களுக்கு எதிரான வழக்குத்தொடுநர் கானின் குற்றச்சாட்டை நிராகரித்தது. தாக்குதல் நடத்துபவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சர்வதேச நீதிமன்றம் சமமாய் நடத்த முயல்வதாக ஹமாஸ் சாடியது.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகர் மீது இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின்போது மருத்துவர் ஒருவர், ஆசிரியர் ஒருவர் மற்றும் மாணவர் ஒருவர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் குறைந்தது 512 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 






ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல்

May 22, 2024 8:16 am 

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட நிலையில் ஈரானில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் இறுதித் தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்ற உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமனெய், ஜனாதிபதியின் மரணத்திற்கு ஐந்து நாள் துக்க தினத்தை அறிவித்திருப்பதோடு, துணை ஜனாதிபதியான 68 வயது மொஹமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் நீதித் துறை, அரசு மற்றும் பாராளுமன்ற தலைவர்களின் கூட்டத்தில் தேர்தல் திகதிக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாதுகாவல் சபையினால் எடுக்கப்பட்ட ஆரம்ப உடன்பாட்டுக்கு அமைய 14ஆவது ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் உட்பட அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் பனிமூட்டம் கொண்ட மலைப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் ஈரானின் தப்ரிஸ் நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு காலஞ்சென்ற ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை செலுத்திவருகின்றனர். ரைஸி பிறந்த மாஷாட் நகரில் நாளை (23) அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையே விபத்தில் மாண்டோர் குறித்து அவதூறான கருத்துகளை இணையத்தில் வெளியிடுவோரைக் கைதுசெய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவமனைகள் முக்கிய இலக்கு

எரிபொருள் இன்றி மற்றொரு மருத்துவமனை செயலிழப்பு

May 25, 2024 9:27 am 

காசாவில் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்கு மேலும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மருத்துவமனைகளும் இலக்கு வைக்கப்படும் நிலையில் மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மின்பிறப்பாக்கிகள் எரிபொருள் இல்லாததால் செயலிழந்திருக்கும் சூழலில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிர் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் தெற்கில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் இஸ்ரேலிய படைகள் மக்கள் செறிந்து வாழும் பகுதியை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருவதோடு வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் கிழக்கு ரபாவில் இருந்து மையப் பகுதியின் ஊடாக ஷபூரா அகதி முகாமின் புறநகர் பகுதியை அடைந்திருப்பதோடு அங்கு கடுமையான பிராங்கி தாக்குதல் சத்தங்கள் கேட்டு வருவதாக பலஸ்தீன உத்தியோகபூர் செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

ராபவுக்கு வெளியில், தெற்கு காசாவில் தற்போது இயங்கும் மிகப்பெரிய மருத்துவமனையான ஐரோப்பிய காசா மருத்துவமனைக்கு மேலால் இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் வட்டமிடுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.ரபாவின் மேற்கில் உள்ள சனநெரிசல் மிக்க யிப்னா மாவட்டத்தை நோக்கி இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் முன்னேறுவதாக முன்னதாக செய்தி வெளியாகி இருந்தது.

ரபா போன்று வடக்கு காசாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை மோசமடைந்து வருகின்றன. கமால் அத்வான் மருத்துவமனை கடந்த வியாழக்கிழமை இரவு இரு முறை இஸ்ரேலிய பீரங்கி தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதோடு அல் அவ்தா மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை கதவுகள் உட்பட மருத்துவனைகளின் அனைத்தையும் இஸ்ரேலிய படையினர் அழித்து வருவதாக அல் அவ்தா மருத்துவமனையின் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். படையினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவதற்கு அம்புலன்ஸ் வசதியை தரும் வரை அங்கிருந்து வெளியேற சில மருத்துவ பணியாளர்கள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதே நேரம் மத்திய காசாவின் அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மின் பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன. அளவுக்கு அதிகமானோர் நிரம்பி வழியும் இந்த மருத்துவமனையில் பெரும்பாலான உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நோயாளிகளுக்கு வெறுங்கைகளால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனையின் பேச்சாளரான கலீல் அல் டெக்ரான், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

‘இது அதிகமான நோயுற்ற மற்றும் காயமடைந்தவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாகக் கூடும்’ என்று கூறி அல் டெக்ரான், சில நோயாளர்கள் தரையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனை இயங்குவதற்கு நாளொன்றுக்கு 5,000 லீற்றர் எரிபொருள் தேவைப்படும் நிலையில் கடந்த புதன்கிழமை 3,000 லீற்றர் மாத்திரமே கிடைத்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அல் அக்ஸ் தியாகிகள் மருத்துவமனை செயலிழந்த நிலையில் மத்திய காசாவின் டெயிர் அல் பலாவில் இன்னும் இரண்டு மருத்துவமனைகளே தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா. அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

காசாவுக்கு உதவிகள் வரும் பிரதான வாயிலாக இருந்த எகிப்துடனான ரபா எல்லையை இஸ்ரேலியப் படை கடந்த மே 6 ஆம் திகதி கைப்பற்றியது. குறிப்பாக இந்த வழி ஊடாகவே காசாவுக்கு எரிபொருள் சென்றது.

காசாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஐ.நாவுக்கு நாளொன்று 200,000 லீற்றர் தேவைப்படுகிறது. எனினும் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் எரிபொருள் கிடைப்பது சீரற்ற வகையில் இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி தெரிவித்துள்ளார். ஐ.நாவுக்கு கடந்த ஞாயிறன்று 70,000 லீற்றரும், செவ்வாயன்று மேலும் 100,000 லீற்றருமே எரிபொருள் கிடைத்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு காசாவின் ஜபலியா நகரில் இரு வெவ்வேறு பதில் தாக்குதல்களில் இஸ்ரேலிய மெகாவா 4 டாங்கிகள் மூன்றை போராளிகள் இலக்கு வைத்ததாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படை குறிப்பிட்டது. ஜபலியா அகதி முகாமில் உள்ள அஜர்மா வீதியில் வைத்து இரு டாங்கிகளை அல் யாஸின் 105 ரொக்கெட்டுகள் மூலம் தாக்கியதாக டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முகாமின் அல் சாசீப் பகுதியில் வைத்து மற்றொரு டாங்கியை வெடிக்கச் செய்ததாகவும் அது கூறியது.

3 பணயக்கைதிகளின் உடல்கள் மீட்பு

ஜபலியாவில் நகர்புற போர் நீடிப்பதோடு அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் மூன்று பணயக்கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் சானன் யப்லொங்கா, பிரேசிலிய இஸ்ரேலியரான மைக்கல் நிசன்பவும் மற்றும் பிரான்ஸ்-மெக்சிகோவைச் சேர்ந்த ஒரியோன் ஹர்னன்டஸ் ரடொக்ஸ் ஆகியோரின் உடல்களை மீட்டதாகவும் அது தொடர்பில் அவர்களின் குடும்பத்தினர் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த இராணுவம் குறிப்பிட்டது.

இவர்கள் அனைவரும் காசா போரைத் தூண்டிய ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்கள் என்று இஸ்ரேல் இராணுவம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஒக்டோபர் 7 தாக்குதலின்போதும் 250க்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளால் பிடிக்கப்பட்ட நிலையில் காசாவில் தொடர்ந்தும் 130 பேர் வரை பணயக்கைதிகளால் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.

காசாவில் தொடர்ந்து 231 ஆவது நாளாகவும் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல் அயூபி குடும்பத்துக்கு சொந்தமான குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

வடக்கு காசாவில் பல வீடுகளையும் இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் வடக்கில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு அடைக்கலம் பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். ஜபலியா அகதி முகாமுக்கு அருகில் அல் பக்ஹுரா பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மத்திய காசாவில் அஸ் ஸாவியா நகரில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். காசா மீது இஸ்ரேல் கடந்த எட்டு மாதங்களாக நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 35,800ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை புதுப்பிக்கும் வகையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் இஸ்ரேலிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாரிஸ் பயணமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக ஸ்தம்பித்திருக்கும் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் விருப்பத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




பப்புவாவில் பாரிய நிலச்சரிவு 6 கிராமங்கள் புதைந்தன; பலர் உயிரிழந்திருப்பதாக அச்சம்

May 25, 2024 10:26 am 

பப்புவா நியூ கினியில் மலைப் பிரதேசத்தில் ஆறு கிராமங்களை தாக்கிய நிலச்சரிவு ஒன்றில் பல வீடுகள் புதையுண்ட நிலையில் கிராம மக்கள் பலரும் உயிரிழந்திருக்காலம் என்று அஞ்சப்படுகிறது.

தொலைதூர என்கா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணி அளவில் கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

‘பாரிய நிலச்சரிவில் பெரும் பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளது’ என்று மாகாண ஆளுநர் பீட்டர் இபாடஸ் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் புதையுண்டிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் இது முன்னெப்போதும் நிகழாத ஓர் அனர்த்தம் என்றும் அவர் பின்னர் குறிப்பிட்டார். இதனால் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவசர மருத்துவக் குழுக்கள், இராணுவம், பொலிஸ் மற்றும் ஐ.நா நிறுவனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிப்பின் அளவை மதிப்பிட்டு வருவதோடு காயமடைந்தவர்களுக்கு உதவி வருகின்றனர்.

அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருக்கும் முங்காலோ மலையில் பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்திருக்கும் படங்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியாகியுள்ளன. உள்ளூரைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உயிர் தப்பியோரை தேடி அந்த மண் மேட்டை தோண்டுவதும், அவநம்பிக்கையில் அழுதபடி இருப்பதையும் காண முடிகிறது.

‘நிலச்சரிவு கடந்த இரவு மூன்று மணி அளவில் இடம்பெற்றதோடு 100க்கும் அதிகமான வீடுகள் புதையுண்டன’ என்று உள்ளூர் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் வின்சன்ட் பியாட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ‘அந்த வீடுகளில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தெரியாதுள்ளது’ என்றும் அவர் கூறினார்.

அனர்த்தம் இடம்பெறும்போது கிராமத்தில் 300 பேர் வரை இருந்திருக்கலாம் என்று அருகில் உள்ள பொர்கேரா பகுதியின் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க தலைவர் நிக்சன் பகேயா குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த எண்ணிக்கை உடன் உறுதி செய்யப்படவில்லை.

இதில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் நிர்வாகம் இதனை இன்னும் உறுதி செய்யவில்லை.

உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 100 மற்றும் 500 இற்கு இடையே இருக்கும் என்று செஞ்சிலுவை சங்கம் கணித்துள்ளது. எனினும் சரியான நிலை குறித்து கண்டறிய முயன்று வருவதாக செஞ்சிலுவை சங்க பப்புவ இடைக்கால பொதுச் செயலாளர் ஜனட் பிலமன் தெரிவித்துள்ளார்.

‘நிலச்சரிவை தூண்டுவதற்கான பூகம்பம் அல்லது எந்த ஒரு சம்பவமும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இங்கே தங்க சுரங்கம் ஒன்று இருப்பதோடு அந்த மலையில் மக்கள் தங்க சுரங்கம் தோண்டியுள்ளனர்’ என்று பிலமன் குறிப்பிட்டுள்ளார்.

இல்லாவிட்டால் கடும் மழை நிலச்சரிவை ஏற்படுத்தி இருக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்கடி மழை பெய்யும் இந்தப் பகுதியில் இந்த ஆண்டில் கடும் மழை, வெள்ளம் பதிவாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் அருகாமை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர்.   நன்றி தினகரன்





ஜூலையில் பிரிட்டனில் திடீர் பொதுத் தேர்தல்

May 24, 2024 4:24 pm

பிரிட்டனில் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி திடீர் பொதுத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.

தனது டோனிங் வீதி அலுவலகத்திற்கு முன்னாள் நேற்று முன்தினம் பேசிய 44 வயதான சுனக், ‘பிரிட்டன் நாட்டவர்கள் தமது எதிர்காலத்தை தேர்வு செய்வதற்கு தற்போது நேரம் வந்துள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்ற அவர், எதிர்கொள்ளும் முதல் தேர்தலாக இது அமையவுள்ளது.

மறுபுறம் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களே தேர்தல் பிரசாரத்தில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி தினகரன்




No comments: