சிறுதொண்டநாயனார் வரலாற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

 உலக சைவப்பேரவை (அவுஸ்திரேலியா) வாரந்தோறும் நடாத்தும் “சிவத்தோடு நாம்” திருமுறை பாராயணத்திபோது சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்திலன்று நடைபெற்ற சிறுத்தொண்ட நாயனார் குருபூசையை முன்னிட்டு திரு தெட்சணாமூர்த்தி சிவராமலிங்கம் அவர்கள் பகிர்ந்துகொண்ட சிறுத்தொண்டர் வரலாறும் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவையும்.

பகுதி 1 (சிறுத்தொண்டர் வரலாறு) கடந்தவாரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.


பகுதி
– 2 சிறுத்தொண்டர் வரலாற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

* சிறுதொண்டநாயனார் வரலாற்றிலிருந்து

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை*

1.   சிவப்பணி செய்யும் போது கணவன், மனைவி, பிள்ளைகள், குடும்பத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து பணிசெய்தால் சிவபெருமானின் பெரும்கருணையான பரிபூரண அருளைப் பெறலாம்.  இதன் காரணமாகத்தான் சிறுத்தொண்டநாயனாருக்கு;

a)        சிவபெருமான், அம்பாள் சரவணக்குமரனுடன் சேர்ந்த சோமஸ்கந்த வடிவுடனும், முனிவர்கள், பூதகணங்களுடன், நான்கு பேருக்கும் காட்சிகொடுத்து முத்திப்பேறு அளித்தார்.

b)        அறுபத்திமூன்று நாயன்மார்களுள்  இவ்வாறு காட்சி கொடுத்தது சிறுத்தொண்டருக்கு மட்டும்தான்.

 

2.   2.    சிவபெருமான் சிறுத்தொண்டநாயனார்  வீட்டில் உணவு உண்ணும் போது சிறுத்தொண்டரையும் சீரளாதேவரையும் அழைக்கின்றார. இதன் மூலம் தெரியவேண்டியது நாம் வீட்டில் உணவு உண்ணும் போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணவேண்டும்.

3.    சிறுத்தொண்டநாயணார் செய்த தொண்டும், தொழிலும், ஒன்றுக்கொன்று முரணானது.  

தொண்டு - அன்பும்,அறமும், பணிவும், கொண்ட உள்ளத்துடன் சிவனடியார்களுக்கு உணவு அளிக்கும் சிவப்பணி. தொழில் - வீரமும், வலிமையும், வன்மையான மனதுடன் கூடிய உயிர்களை கொலை செய்யும் போர்த்தொழில். ஆனால் அவரைப் பொறுத்தளவில் எல்லாமே சிவன்செயல் என்று எண்ணும் உயர்ந்த சிவபக்தி இருப்பதனால் மக்களை காப்பதற்காக செய்யும் போரும் அறமும், நீதியும், கொண்ட சிவப்பணி என்று கருதக்கூடியவர்.

4.    தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே* என்ற ஔவைப்பாட்டி வாக்குக்கு அமைய சிவனடியார்களை அழைத்துப் பேணி உணவளித்த பின்புதான் உண்பது என்ற சிவ வழிபாட்டை செய்து வந்தார்.

5.    பெரியபுராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களையும் அவர்கள் செய்யும் தொண்டுக்கும், ஆன்மபக்குவ நிலைக்கு ஏற்பவும் அவர்களுக்கு வெவ்வேறு சோதனை மூலம் ஆட்கொண்டு அவர்களின் சிவபக்தியை உலகறியச்செய்தார்.  அதாவது குங்கிலியக்கலைய நாயனார், இளையான்குடிமாறன் நாயனார்,கணம்புல்ல நாயனார் போன்றோர்க்கு வறுமைப்பதம் அளித்து ஆட்கொண்டது போல, இவர் உணவளிக்கும் சிவத்தொண்டுக்கும் வறுமைப்பதம் அளித்து சோதனை செய்து ஆட்கொண்டு இருக்கலாம். ஆனால் இவர் போர் மூலம் பல உயிர்களை கொன்று மன்னனுக்குபுகழ் தேடிக்கொடுத்தமையால் அதே பாணியில் பிள்ளைக்கறி சாப்பிடக் கேட்பதன் மூலம் தனது பிள்ளைப் பாசத்திலும் பார்க்க அவரின் சிவபக்தி உயர்ந்தது என உலகம் அறியச்செய்தார்.

6.    சிறுத்தொண்டநாயணார் உயிர்களைக்கொன்று போர்த் தொழிலை அறத்துக்காக செய்த போதும் அதுவும் ஒரு சிவப்பணி என எண்ணியே செய்தார். இதற்கு சான்றாக அவர் வாழ்க்கையே அமையும். சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டபோது அதுவும் ஒரு சிவப்பணி என எண்ணித் தான் பெற்றபிள்ளை என்ற பாசஉணர்வை துறந்து சிவபக்தியை, பிள்ளைக்கறி ஆக்கிக் கொடுத்தார். எனவே அவர் * போர் செய்தபோது கொன்ற உயிர்களுக்கும் சிவபெருமான் பிள்ளைக்கறி வேண்டும் எனக்கேட்டபோது கொன்ற உயிர்க்கும் எந்தப் பாரபட்ச வேறுபாடும் இல்லை *என்பது உண்மையாகும்.

 7.    சிவபெருமான் சிறுத்தொண்டர் வீடு இதுதானா எனக்கேட்டு வந்த போது முதல் பணிபெண்ணையும் பின்பு தையலாரையும் கண்டு சிவனடியார் தனது தரிசனத்தைக்  கொடுத்தார். அவர்கள் உள்ளே வரும்படி கூற அதற்கு அவர் ஆண்கள் இல்லாத வீட்டிற்குள் நாம் வரமாட்டோம் ஆலய ஆத்திமரத்தின் கீழ் இருப்போம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் இதில் மூன்று விடயத்தை நாம் பார்க்கலாம்.

  • முதல் தரிசனம் சந்தணமங்கைக்கும் இரண்டாம் தரிசனம் திருவெண்காட்டுநங்கைக்கும் காபாலிக பைரவர் சிவனடியார் வேடத்தில் *வந்து தனது தரிசனத்தைக்  கொடுத்தார்* கொடுத்தார்.  
  • பணிப்பெண், தையலார், இருவருக்கும் வீடு *தேடி வந்து* காட்சி கொடுத்தார். ஆனால் சிறுத்தொண்டநாயணாருக்கு மூன்றாவது தரிசனமும், இவர் ஆத்திமரத்தடிக்கு * போய்த்* தான் தரிசனத்தைக் பெறுகிறார்.
  • ஆனால் காரைக்கால் அம்மையார் தனிமையில் இருந்த போதுதானே சிவனடியார் வேடத்தில் வீட்டின் உள்ளே சென்று உணவு உண்டு காட்சி கொடுத்து சோதனையை ஆரம்பித்தார் ஆனால் இங்கு ஏன் ஆண்கள் இல்லாத வீட்டினுள் வரமாட்டோம் என்றாரெனில், காரைக்கால்அம்மை - சிவனடியார், உறவு, தாய் - பிள்ளை உறவு,ஆகும். இந்த தெய்வீகமான உறவுக்கு தடையேதும் இல்லை வீட்டின்னுள்ளே செல்ல. ஆனால் சிறுதொண்டர்-சிவனடியார், உறவு பக்தன் -சிவனடியார உறவு ஆகும். எனவே இங்கு ஆண்கள் இல்லாத போது வீட்டினுள்ளே செல்வது பண்பாடு இல்லை. சிவபெருமான் காட்டிய இப் பண்பாடு எங்கள் சைவத்தமிழர் பண்பாட்டிலும் இருக்கிறது. நாமும் உடன்பிறந்த அக்கா, தங்கை, வீட்டில் ஆண்கள் இல்லாதபோது போவோம். ஆனால் தூரத்து உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு ஆண்கள் இல்லாத போது போகமாட்டோம். இதேபோலத்தான் திருமருகலில் சம்பந்தப்பெருமான்  பாம்பு கடித்த வணிகனை உயிர் பெறச் செய்த நிகழ்விலும், அவ் ஆணும் பெண்ணும் முறையின்படி தாலி கட்டாத காரணத்தால் இரவுநேரம் வெவ்வேறு இடத்தில் இருவரும் படுத்து உறங்கினார்கள். அச்சமயம் வணிகனை பாம்பு தீண்டிவிட்டது. அந்தப் பெண் அழுகிறாள்.  நான் உன்னை தீண்ட முன் அரவம் உன்னைத் தீண்டிவிட்டது என அழுகிறாள். * இவ்வாறான பல உயர்ந்த வாழ்வியல் முறைகள் பல, திருமுறைகள் அனைத்திலும் கூறப்படுகிறது. *

 8.    சிவபக்தி என்பது எவளவு கடுமையான சோதனை வந்தாலும் அதில் மணம் தளராது உறுதியாக இருந்தார் என்பதனை சிறுத்தொண்டர் வரலாறு உணர்த்துகிறது.

9.    சிவபெருமான் கபாலிக பைரவர் வேடம் பூண்டு வடநாட்டு சிவனடியார் வேடத்தில் வந்ததிற்கும் இரு காரணம் உண்டு.

  •   வடநாட்டு சிவனடியர்கள் தான் மாமிசம் உண்பார்கள் எனவே அவ்வாறு வந்தால் தான் நரப்பசு மாமிசம் வேண்டும் எனக் கேட்டு நம்ப வைக்க முடியும் என்பதற்காக வடநாட்டு சிவனடியார் போல கபாலிக பைரவர் ஆக வந்தார். தென்னாட்டு சிவனடியார் சைவ உணவு தான் உன்பார்கள், எனவே இவ் வேடத்தில் வந்து மாமிச உணவு சாப்பிடுகிறனான், பிள்ளைக்கறி தா எனக் கேட்க முடியாது.
  •    சிறுத்தொண்டர் இறுதியாக வடநாடு சென்று வாதாபி நகரை கைப்பற்றி அப் போரில் அவ் மன்னனையும், போர்வீரர்களையும் கொன்று தனது மன்னனுக்கு புகழும் சிறப்பும், சேர்த்தார் இதனை உணர்த்திக் காட்டும் வகையிலும்  வடநாட்டு சிவனடியார் போல வந்திருக்கலாம்.

10.    சிறுத்தொண்டநாயனார், கண்ணப்பநாயனார், இருவரையும் சிவபெருமான் வன்மையான அருள்செயல் மூலம் ஆட்கொண்டார்.

  • சிறுத்தொண்டநாயனார் - மக்களைக் காப்பதற்காக எதிரிகளுடன் புரியும் போர்த்தொழில், *உயிர்க்கொலை* இதன் போது வன்மையான மனம். மனவலிமை உடையவர் எனினும் சிவபக்தி எனும்போது கனிந்த மனம். சிவபெருமான் உணவு உன்பதற்காக பிள்ளைக்கறி கேட்டதன் மூலம் தனது பிள்ளையின் பற்றைத் துறந்து பிள்ளையை கறியாக்கி கொடுத்தன் மூலம் இவரின் சிவப்பக்தியை உலகம் அறியச் செய்தார்
  •  கண்ணப்பநாயனார் - செய்த தொழில் மக்களை காப்பதற்காக அறத்துடன் விலங்குகளை வேட்டையாடும் *உயிர்க்கொலை* இதன் போது வன்மையான மனம். மனவலிமை உடையவர் எனினும் சிவபக்தி எனும் போது கனிந்த மனம். எனவே சிவபெருமான் தனது கண்ணில் இருந்து குருதியை வரப்பண்ணியதன் மூலம் கண்ணப்பர் தன் பற்றை துறந்து தனது கண்ணைப் பெயர்த்து அப்பியதன் மூலம் இவரின் சிவபக்தியை உலகம் அறியச் செய்தார். இருவரும் பிற உயிர்களை கொல்லும் போது, * இறக்கும் உயிர்களுக்கும், தன் பற்றுக்கும் , பிள்ளைப்பற்றுக்கும், என எவ்வித வேறுபாடும் இல்லாமலே * சிவப்பணி செய்தார்கள். எனவே இந்த வலிமையான அருள்செயல் மூலம் ஆட்கொண்டு அவர்கள் சிவபக்தியை உலகம் அறியச்செய்தார்.

11. சிறுத்தொண்டர் பிள்ளையை வெளியே வந்து அழைக்கும் போது *மைந்தா வருவா *எனவும், திருவெண்காட்டுநங்கை அழைக்கும் போது *சீராளா வாராய் *எனவும் அழைத்தார்கள். ஏனெனில் இப்போ வரப்போகும் பிள்ளை சிவன் அருளால் வரும் சிவனின் பிள்ளையாகும். ஆணுக்குரிய ஆண் பிள்ளை எனவே மைந்தா வருவா என அழைத்தார். முருகப் பெருமானின் பெயர்களில் ஒன்று *கங்கை மைந்தன்.* சிவனில் இருந்து தோன்றி கங்கையில் வளர்ந்தமையால் ஆகும்.

 12.    சிறுத்தொண்டநாயனார் சிறப்பை பல அருளாளர்கள் பாடியுள்ளனர்.

 ·         ஞானசம்பந்தப்பெருமான் - சிறுத்தொண்டர் நாயனார் பற்றி பாடியுள்ளார்.

 

ஞானசம்பந்தப்பெருமானும் சிறுத்தொண்டர்நாயனாரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். எனவே சிறுத்தொண்டநாயனார் ஞானசம்பந்தப்பெருமானை பல தடவை தனது வீட்டுக்கு அழைத்து உணவளித்துள்ளார். இவ் வேளையில் சம்பந்தப்பெருமான் சிறுத்தொண்டர் செய்யும் தொண்டினைப்பற்றியும் அவர் சிவபெருமானால் ஆட்கொள்ளப்படப் போவது பற்றியும் பாடியுள்ளார். திருச்செங்காட்டங்குடி தேவராப் பதிகத்தில் மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள *பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பபூரச் * என்ற வரியை தொடக்கப்பாடலாகக் கொண்டு அமைந்த *பத்து* பாடல்களில், *ஒன்பது* பாடல்களில் சிறுத்தொண்டர்நாயனார் பற்றியும் *ஒரு பாடலில் (8வதுபாடல்) புதல்வன் சீராளதேவர் பற்றியும் படியுள்ளார். *கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழும் தாராவே மடநாராய் தமியேற்கொன்றுரையீரே சீராளான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய பேராளன் பெருமான் தன் அருள் ஓரு நாள் பெறலாமே *           

கடைசி இரு வரியிலும் சீரளான் என்ற புதல்வரினால் தான் சிறுத்தொண்டர் அருள் பெறப்போகிறார் என இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு பல ஆண்டுக்கு முன்பே தெளிவாகக் குறிப்பிட்டு ஞானப்பால் உண்ட ஞானக்குழந்தை ஞானத்தினால் படியுள்ளார்.

  •        பட்டினத்ததடிகள் - சிறுத்தொண்டநாயனார் பற்றிப் படியுள்ளார்.

 

*வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன் மாதுசொன்ன சூழால் இளமை துறக்க வல்லேன்  அல்லன் தொண்டு செய்து நாள் ஆறில் கண் எடுத்து அப்ப வல்லேன் அல்லன் நான் இனிச் சென்று ஆள் ஆவது எப்படியோ திருக்காளத்திஅப்பருக்கே *

 

இப் பாடலில் ஏன் முற்றும் துறந்த துறவி பட்டினத்து அடிகள் அறுபத்து மூன்று நாயண்மார்களில் இந்த மூன்று நாயன்மார்களையும் குறிப்பிட்டு பாடியுள்ளார் எனில்

*சிறுத்தொண்டநாயனார்.

*திருநீலகண்டநாயனார்.

*கண்ணப்பநாயனார்.

உலகியலில் ஒரு மனிதனுக்கு (இல்லறத்தார்க்கு ) தன் உறவு சார்ந்து முதலில் மூன்று பற்றுகள் முக்கியமாக இருக்கும்.

  •        தன் பற்று-- அதாவது தன் உடல்நலம் சார்ந்து, சுயநலப்பற்று.
  •       பிள்ளைப் பற்று-- தனது உயிர்,உடலில் இருந்து பிறந்த பிள்ளையின் பற்று.
  •       மனைவியின் பற்று-- தன்னை நம்பி வந்து தனது இல்லற வாழ்வுக்கு துணை இருக்கும் மனைவிப்(கணவன் )பற்று

 இதன் பின்பு தான் பெரும்பாலோர்க்கு தாய், தந்தை.சகோதரங்கள், மற்றைய உறவுகளின் பற்றுகள் இருக்கும். இந்நிலையில்

·         தன்பற்றைத் துறந்து தனது கண்ணை பெயர்த்து சிவனுக்கு அப்பி சிவபக்தியை உணர்த்திய கண்ணப்பநாயனார்.

·         தனது பிள்ளையின் பற்றைத் துறந்து பிள்ளையை கறியாக்கி சிவனுக்கு உணவு கொடுத்து சிவபக்தியை உணர்த்திய சிறுத்தொண்டர்நாயனார்.

·         தனது மனைவியின் பற்றைத் இவர் துறக்கவில்லை. மனைவியுடன் உள்ள உடல்சார்ந்த உறவையும், பிற பெண்களை மனத்தினாலும் நினையாது இளமைக்காலத்தில் இருந்து முதுமைக்காலம் வரை  நீலகண்டம் எனும் சிவ நாமத்தை நினைத்து சிவபக்தியை உணர்த்திய திருநீலகண்டநாயனார்.

இம் மூன்று உயர்ந்த அருளாளர்களைப் போல உன்மீது சிவபக்தி செலுத்த என்னால் முடியவில்லையே, திருக்காளத்தி அப்பனே எப்படி உனது திருவடிகளை அடைவது என மனம் உருகிப் பாடுகின்றர்.

  •        அருணகிரிநாதர் பெருமான் - சிறுத்தொண்டர்நாயணார் பற்றிப்

பாடியுள்ளார்.

 அருணகிரிப்பெருமான் பாடிய திருப்புகழில் *வங்கார மார்பிலனி தாரோடு

உயர் கோடு அசைய * என்ற திருப்புகழ் பாடலின் இறுதிப் பகுதியில் உள்ள வரிகளில்  * எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகி

செங்கோடு மேவி பிரகாச மயில் மேல் அழகோடு என் காதல் மாலை முடி ஆறு முகவா அமரர் பெருமாளே. * எனப் பாடுகின்றார்.

அதாவது எட்டுத் தோள்களைக் கொண்ட சிவபெருமானுக்கு அவர் மீது கொண்டுள்ள சிவபக்தியினால் பிள்ளைக்கறி கொடுக்கவில்லை,

சிறுத்தொண்டர் காதல் கறியாக தனது சிவபக்தியை தான் கொடுத்தார் எனவே செங்காட்டங்குடியில் உள்ள தலத்தில் ஒளி வீசும் மயில் மீது அழகோடு அமர்ந்து எனது காதல் மனதை தமிழ்ப்பாட்டுகளால் மாலை ஆக்கி உனக்கு அளிக்கிறேன். உனது திருவடிகளை தந்து அருள் ஆறுமுகனே தேவர் பெருமாளே எனப் பாடுகிறார் .

 மேலும் இப் பாடலின் இடையில் உள்ள வரிகள்

 *ஸ்ரீ வள்ளி மலை சச்சிதானந்த *சுவாமிகளின் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.

 * சிங்காரா ரூப மயில் வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக

நமோ நம என சிந்தூர பார்வதி சுத ஆகர நமோ நம என - விருது ஒதை

சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான

நமோ நம என தின் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே. *

இந்த வரிகள் தான் * *ஸ்ரீ வள்ளி மலை சுவாமிகளுக்கு* முருகப்பெருமான்

மயில் மீது காட்சி கொடுத்ததும், அவர் *திருப்புகழை* உலகம் அறியச் செய்யவும் காரணமாக அமைந்த *திருப்புகழ் பாடலாகும்.*

 ·         சுந்தரமூர்த்திநாயனார்--சிறுத்தொண்டர்நாயனார் பற்றி பாடுகிறார்.

 திருத்தொண்டர்தொகையில், செங்காட்டங்குடிமேய சிறுதொண்டர்க்கு அடியேன் என வியந்து பாடுகின்றார்.

 ·         நம்பியாண்டார்நம்பி --சிறுத்தொண்டர் பற்றி பாடுகின்றார்.

 நம்பியாண்டர்நம்பி ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் பாடுகின்றார்.

* விரும்பும் புதல்வனை மெய்

        அரிந்து ஆக்கிய இன் அமிர்தம் 

   அரும்பும் புனற்சடையாய் உண்டு

           அருள் என்று அடி பணிந்த

   இரும்பின் சுடர்க் களிற்றான்

       சிறுத்தொண்டனை ஏத்துதிரேல்

   கரும்பின் மலர்த் தமிழாகரன்

        பாதத் தொடர்வெளிதே. *

அதாவது தனது உயிருக்கு உயிரான புதல்வனை கறி சமைத்து சிவபெருமானுக்கு பரிமாறிவிட்டு இதுவும் ஈசன் அருள் என்ற துணிவுடன் இருக்கும் இரும்பு மனம் கொண்ட யானைப்படை உடையவரான சிறுத்தொண்டரை வணங்குபவர்களுக்கு *சிவபெருமானின் அருள் வடிவமான * *ஞானசம்பந்தப்பெருமான்* அருள்  கிடைக்கும் எனப்பாடுகின்றார்.

 ·         வடலூர் வள்ளல் பெருமான் (இராமலிங்க சுவாமிகள்) சிறுத்தொண்டநாயனார் பற்றிப் பாடுகின்றார்.

 * ஆர் கொன்டார் சேய் கறி இட்டாரே சிறுத்தொண்டர்

  பேர் கொன்டார் ஆயிடில் எம் பெம்மானே

  ஓர் தோண்டே நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்மே

  எங்கள் முடை வாய்க்கும் இங்கு இஃ தோர் வழக்கு.*

 அதாவது பிள்ளையைக் கறி சமைத்துப்போட்ட, ஒரு பெரிய காரியத்தை செய்த ஒருவர் தன்னை சிறுத்தொண்டர் என்று சொன்னாரே, அவரோடு ஒப்பிடும் போது நாம் எல்லாம் என்ன காரியம் செய்துவிட் டோம், தொண்டர்கள் என்று சொல்வதற்கு, நாம் எல்லாம் *நாயிலும் கீழானவர்கள் * என வடலூர் வள்ளலார் மனம் உருகிப் பாடுகின்றார்.

 ·         சேக்கிழார் பெருமான் -- சிறுத்தொண்டர்நாயனார் பற்றிப் பாடுகின்றார்.

 சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர்நாயனார் வரலாறு பற்றி எண்பத்துஎட்டு (88) பாடல்களை பக்திப்பரவசத்தில் வியந்து பாடுகின்றார்.

 ·         காளமேகப் புலவர் -- சிறுத்தொண்டர் நாயணார் பற்றிப் பாடுகின்றார். காளமேகப் புலவர் பக்தியின் காரணமாக சிவபெருமானை கேலிசெய்து பல பாடல்களைப் பாடியுள்ளார், அதில் ஒரு பாடலில் பாடுகின்றார்.

சிவபெருமானுக்கு காய் கறித்தோட்டம திருவெண்காட்டுநங்கையின் வயிறு எனப் பாடுகின்றர்.

 * சிறுத்தொண்டர்நாயனாரின் * தன்னடக்கம்.

1.       இல்லத்திற்கு வரும் சிவனடியார்களை வரவேற்கும் போதும், சிவனடியார்களை காணும்போதெல்லாம் தனது உயர்ந்த, நெடிய, தோற்றத்தை கூனிக்குறுக்கி அவர்கள் முன் நின்று எளிமையாகப் பணிவோடு வரவேற்பதன் காரணமாக மக்கள் அவரை சிறுத்தொண்டர் என அழைக்கலாயினர்.

 2.       நான் என்ன பெரிய பணி எதுவும் செய்யவில்லை ஒரு சிறு பணி தானே செய்கிறேன் எனக் கூறுவார். இதன் காரணமாகவும் சிறுத்தொண்டர் என அழைக்கலாயினர்.

 3.       ஆத்திமரத்தடியில் சிவனடியாரைப் போய் வணங்கி அழைத்தபோது நீயோ பெரிய சிறுத்தொண்டன் எனக் கேட்ட போது அவர் கூனிக் குறுகி, *விபூதி இட்டுக்கொள்ளும் சிவனடியார்கள் முன்பு நிற்கத் தகுதி இல்லாத ஒரு சிறு தொண்டன் * எனப் பணிவுடன் கூறுகிறார்.

 4.       காபலிக பைரவ சிவனடியார் வீட்டில் அமர்ந்து உணவு உண்ண முன்பு, தன்னுடன் அமர்ந்து உண்ண மேலும் ஒரு சிவனடியார் வேண்டும் என்ற போது, சிறுத்தொண்டர் பணிவாகக் கூறுகிறார். மற்றைய சிவனடியார்கள் திருநீறு இடுவதைப் பார்த்து நானும் இடுவேன் (தனக்கு தகுதி, பெருமை,இருக்கா என எண்ணாது) எனப் பணிவுடன் கூறுகிறார்.

 திருவெண்காட்டு நங்கையின்  சிறப்பு சேக்கிழார் வாக்கு :

 வேதகா ரணர் அடியார்

      வேண்டியமெய்ப் பணிசெய்யத்

தீதில் குடிப் பிறந்ததிரு

     வெண்காட்டு நங்கையெனும்

காதன்மனைக் கிழத்தியார்

      கருத்தொன்ற வரும்பெருமை

நீதிமனை யறம்புரியும்

       நீர்மையினில் நிலைநிற்பர்

 அன்பும், அறம், ஒழுக்கம், சிவபக்தி,உடையவராகவும் , கணவனின் கருத்து, சிந்தனை, செய்யும் பணிகள் யாவற்றுடனும் ஒத்துப்போகும் வண்ணம் அவருக்கு துணையாகவும், ஒரு உயர்ந்த குடும்பப் பெண்ணாகவும் வாழ்ந்து வந்தார். சேக்கிழார் பெருமான் கூறுகிறார். இவர்கள் இருவரும் செய்த தவத்தின் காரணமாக கணவன் மனைவியாக அமைந்துள்ளார்கள். சாதாரண மக்களுக்கு வினையின் காரணமாக ணவன் மனைவி அமைவார்கள்.

 புதல்வன் சீராளன் சிறப்பு சேக்கிழார் வாக்கு:

 *சீராள தேவரெனும் திருமைந்தர் அவதரித்தார் * 

  • சேக்கிழார் பெருமான் அவதரிப்பதற்கு முன்பே பெயர் வைத்து விட்டார், மிக மிக சிறப்பாக உள்ளவர்களுக்கு தான் பிறப்பை சொல்லமுன்பே பெயரை சொல்வார்கள்.அதாவது  இங்கு அவதாரித்தார் என்பதற்கு முன்பே சேக்கிழார் பெருமான் சீராளதேவர் என்று பெயர் வைத்துவிட்டார். *கந்தபுரணத்தில்* கச்சியப்ப முனிவர் *அருவமும் உருவாமாகி *என்ற பதிகத்தில் *ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன் உலகம் உய்ய * என அருளுகிறார். இங்கு *உதித்தனன* க்கு முன்பே *முருகன்* எனப் பெயர் வந்துள்ளது.எனவே தான் இறுதியில் * சீராளாதேவருக்காக முருகன் சோமஸ்கந்தராக காட்சி கொடுத்தார்.*

 ·         சிவபெருமான் பிள்ளைக்கறி வேண்டும் என்பதன் மூலம் சீராளனை கேட்டுப் பெற்றுள்ளார்.

 ·         சிறுத்தொண்டரின் பெருமையே சீராளனால் தான் நிறைவு பெற்றது. இதனால் தான் செங்காட்டங்குடிப் பதிகத்தில்

*சீராளான்சிறுத்தொண்டன் செங்ககட்டங குடிமேய   பேராளான் பெருமான் தன் அருள் ஒரு நாள் பெறலாமே * ஞானக்குழந்தை ஞானசம்பந்தப் பெருமான் அருளுகிறார்.

 சந்தணமங்கையின் சிறப்பு

 1.       சிவபெருமான் சிறுத்தொண்டர் வீட்டுக்கு கபாலிக பைரவர் வேடத்தில் சிவனடியாராக வந்தபோது முதல் தரிசனம் கொடுத்தது சந்தணமங்கைக்கு தான்.

 2.       பிள்ளையின் தலையை அரிந்த பின் அதனை மறைத்து வைக்கும் படி கொடுத்தார்கள், ஆனால் ஞானம் உள்ள பணிப்பெண் என்பதால் பிள்ளைக் கறி கேட்கும் சிவனடியார் ஏன் தலைக்கறியும் சாப்பிடமாட்டார் என எண்ணிஅதனையும் கறியாக்கி வைத்தார், இது அவர்களுக்கு தெரியாது. சிவனடியார் தலைக்கறி சாப்பிடுவோம் எங்கே என சினமுற்ற போது, பணிப்பெண் சமைத்து வைத்துள்ளோம் எனக் கூறி எடுத்து வந்து கொடுத்தார். இதனால் சிறுத்தொண்டர் விரதத்தை பூர்த்தியாக்கியுள்ளார்.

 3.       சிவபெருமான் முதல் தரிசனம் கொடுத்ததன் மூலமும், தலைக்கறி கேட்டதன் மூலமும் சந்தணமங்கையின் பெருமையை உயர்வு செய்துள்ளார்.

 4.       சந்தணமங்கை சிவப்பக்தி, ஒழுக்கம் உள்ள பெண் என்பதனால் தான் சிவனடியார்களுக்கு உணவு அளித்து தொண்டு செய்யும் தனது தலைவனுக்கும்,தலைவிக்கும், பிள்ளை, வீட்டுக்கு வரும் சிவனடியார்களுக்கும் அன்புடனும், பணிவுடநும் சேவை செய்தமையால் சிவபெருமான் தரிசனம் கொடுத்து முத்திப்பேறு அளித்தார்.

 சிவபெருமானின் சோதனைகள்

எல்லாமே சிவபெருமானின் திருவிளையாடல் தான், இருப்பினும் இவ் நிகழ்ச்சியில்

 1.       சிவனடியார்கள் எவரும் கிடையாது போனது.

 2.       பிள்ளையின் தலையை மறைத்து வைக்கும்படி, கூறியபோது, அவர்களுக்கு தெரியாது அதனைக் கறியாக்கும் வகையில் பணிப்பெண்ணுக்கு உணர்த்தி அதன் மூலம் அப் பெண்ணை உயர்த்தியதுடன் கணவன் மனைவியை தவிப்புக்கும் உள்ளாக்கினர்.

 3.       புதல்வனை தான் கறியாக்கி உள்ளார்கள் எனத் தெரிந்தும் தன்னோடு உணவு உண்ண வரும்படி சொல்கிறார்.

 சிவபெருமான் சிறுத்தொண்டரை உயர்த்திய நிலை

 1.       ஆத்திமரத்தடியில் போய் அழைத்த போது நீயோ பெரிய சிறுத்தொண்டன் எனக் கேட்டார். அதாவது சோகத்திலேயே பெரியது புத்திர சோகம். எவரும் செய்யமுடியாத காரியத்தை செய்யப்போகும் நீ, சிவபக்திக்கு இணையாக நீ பெற்ற பிள்ளையை கறியாக்கி எனக்கு தரப்போகும் நீ ஒரு *பெரிய சிறுத்தொண்டன்* ஆவாய் என அருளினார்.

 2.       தன்னோடு அமர்ந்து உணவு உண்ண மேலும் ஒரு சிவனடியார் வேண்டும் என்றபோது, நீயும் என்னோடு இலை போட்டு இரு என்றார். எனவே, தான் ஒரு சிவனடியார் என்ற நினைவு இல்லாது சிவப்பணி செய்த சிறுத்தொண்டரை, சிவபெருமானுக்கு * உணவு சமைத்து கொடுப்பதற்கும் * சிவபெருமானுக்கு அருகில் இருந்து உணவு உண்பதற்கும் உரிய, உயர்ந்த சிவன் அருளை  பெறப்போகும் நீ ஒரு பெரிய சிறுத்தொண்டன் ஆவாய் என அருளினார்.

  இங்கு *பெரிய சிறுத்தொண்டன் *  என்பதில் *சிறு* என்பது அவர் தனக்கு தானே போட்ட பெயர். * பெரிய * என்பது சிவபெருமான் அவருக்கு சூட்டிய பெயர் ஆகும்.

 ஓம் நமசிவாய

               

 

 

 

No comments: