உலகச் செய்திகள்

 இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல்: 3 பலஸ்தீனர் பலி 

ஈரான் தாக்குதலையடுத்து காசாவில் ‘போரைத் தொடர’ இஸ்ரேல் உறுதி

காசா போர் நிறுத்தப் பேச்சில் பலவீனம்: மத்தியஸ்த பணியை கட்டார் மீளாய்வு

தொடரும் மழையால் டுபாய் விமானநிலையம் தொடர்ந்தும் ஸ்தம்பிதம்

மழை, வெள்ளத்தால்: பாக்., ஆப்கானில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஐ.நாவில் பலஸ்தீனத்தை நிராகரித்தது அமெரிக்கா

பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு


இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல்: 3 பலஸ்தீனர் பலி 

April 17, 2024 4:48 pm 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் நப்லுஸ் மாகாணத்தில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் வந்த சுமார் 50 குடியேற்றவாசிகள் கடந்த திங்கட்கிழமை (15) கிழக்கு அக்ரபா பகுதியில் கிர்பாத் அல் டாவில் கிராமத்தின் குடியிருப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அக்ரபா மேயர் சலா பானி ஜாபர் தெரிவித்துள்ளார்.

‘அங்கே இஸ்ரேலிய படையினர் குடியேற்றவாசிகளின் செயலை பார்த்தபடி சும்மா இருந்தனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் வன்முறைகள் அதிகரித்திருப்பதோடு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா போரை அடுத்து இந்த வன்முறைகள் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





ஈரான் தாக்குதலையடுத்து காசாவில் ‘போரைத் தொடர’ இஸ்ரேல் உறுதி

- உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிராந்தியத்தில் பதற்றம் உச்சம்

April 16, 2024 6:48 am 

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதோடு ஈரானின் தாக்குதல் காசா போரில் இருந்து தம்மை திசைதிருப்பாது என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (13) 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு ஈரான் நடத்தி தாக்குதலை அடுத்து அமைதி காக்கும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலான தாக்குதல்களை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியது.

இந்த மாத ஆரம்பத்தில் டமஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் அமைந்திருந்ததோடு இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் முதல் நேரடித் தாக்குதலாகவும் இது இருந்தது. எனினும் காசா போர் ​ெவடித்தது தொடக்கம் ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘ஈரானின் தாக்குதலுக்கு இலக்கானபோதும் கூட, ஈரான் ஆதாரவு ஹமாஸின் கைகளில் இருந்து எமது பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக காசாவில் எமது தீர்க்கமான நடவடிக்கையில் இருந்து எமது பார்வையை ஒரு கணம் கூட நாம் இழக்கமாட்டோம்’ என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சியில் மத்தியஸ்தர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்தபோதும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு நகரான ரபா மீது இஸ்ரேல் படையெடுப்பு ஒன்றுக்கு திட்டமிட்டிருப்பது நிலைமையை மோசமடையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.

‘காசாவில் ஹமாஸ் இன்னும் எமது பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர்’ என்று ஹகரி குறிப்பிட்டார். காசாவில் தொடர்ந்து 130 பணயக்கைதிகள் இருப்பதாகவும் அதில் 34 பேர் மரணித்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

‘ரபாவிலும் எமது பணயக்கைதிகள் இருப்பதோடு அவர்களை மீட்பதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’ என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காசா முன்னரங்குகளின் போர் நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் இரு மேலதிக படைப் பிரிவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. காசாவில் இருந்து பெரும்பான்மை தரைப்படைகளை இஸ்ரேல் கடந்த வாரம் வாபஸ் பெற்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் வான் தாக்குதல்களை நடத்தியதாக காசா அரச ஊடக அலுவலகம் நேற்று குறிப்பிட்டது.

முற்றுகையில் உள்ள காசாவின் தெற்கில் இருந்து வடக்கில் காசா நகருக்கு செல்லும் கடற்கரை வீதி சோதனைச்சாவடியை இஸ்ரேல் திறந்ததாக வதந்தி பரவியது அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். எனினும் அதனை இஸ்ரேல் மறுத்தது.

இவ்வாறு சென்றவர்கள் மீது இஸ்ரேல் சூடு நடத்தியதில் தனது மகளின் முகத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக பலஸ்தீன தாய் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை பலஸ்தீன புகைப்படப்பிடிப்பாளர் அட்டியா தார்விஷ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் கொல்லப்பட்ட மகளை கட்டித்தழுவியபடி அழுது கொண்டிருக்கும் அந்தத் தாயின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

எனினும் தெற்கு நகரான கான் யூனிஸில் இருக்கும் தனது மனைவியுடன் ஒன்றிணைவதற்கு எதிர்பார்த்திருக்கும் மஹ்மூத் அவ்தாஹ் என்ற பலஸ்தீனர் கூறியதாவது, ‘மக்கள் வெளியேறி இருப்பதாக அவர் தொலைபேசியில் என்னிடத்தில் குறிப்பிட்டார்.

வடக்கை நோக்கி வெளியேறுவதை இராணுவம் அனுமதிக்கும் வரை அவர் சோதனைச் சாவடியில் காத்திருக்கிறார்’ என்றார்.

என்றாலும் இந்தப் பாதை திறக்கப்படுவதான செய்தி உண்மையில்லை என்று இஸ்ரேல் இராணுவம் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திடம் குறிப்பிட்டுள்ளது.

பதில் தாக்குதலுக்கான அச்சம்

ஈரான் தாக்குதலை அடுத்து கடந்த ஞாயிறன்று ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசர கூட்டத்தை நடத்தியபோது, ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்க இஸ்ரேல் வலியுறுத்தியதோடு, பிராந்தியமே போரின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்தார்.

‘பிராந்தியத்தினாலோ அல்லது உலகத்தினாலோ மேலும் போர்களை தாங்க முடியாது’ என்று வலியுறுத்திய குட்டரஸ், தற்போது பதற்றத்தை தணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வலியுறுத்தினார்.

ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் ஆமிர் செயித் இரவானி, டமஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரக தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக ‘தாற்காப்புக்கான இயல்பான உரிமையையே’ ஈரான் செயற்படுத்தியதாக வலியுறுத்தினார்.

‘ஈரான் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது போரையோ நாடவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இஸ்ரேல் தொடர்ந்து உஷார் நிலையில் இருப்பதாகவும் நிலைமையை மதிப்பீடு செய்து வருவதாகவும் இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஹகரி தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதலை கண்டித்த ஜி7 தலைவர்கள் அனைத்து தரப்புகளையும் அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்தனர்.

‘அவசர போர் நிறுத்தம் ஒன்றின் மூலம் முடியுமான விரைவில் காசா பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது, மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமையும்’ என்று ஐரோப்பிய கௌன்சில் தலைவர் சார்ல்ஸ் மைக்கல் ‘எக்ஸ்’ சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அமைதி காக்கவும் வலியுறுத்தியுள்ளது. ‘இந்த நிலைமை தீவிரமடைவதை நாம் விரும்பவில்லை’ என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தாக்குதலை அடுத்து இஸ்ரேலை ‘இரும்புக் கவசம் கொண்டு பாதுகாப்பதாக’ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஒருமுறை கூறியபோதும், ஈரான் மீதான எந்த ஒரு பதில் தாக்குதலுக்கும் அமெரிக்கா உதவாது என்று அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலின் ‘பொறுப்பற்ற’ பதிலடி தொடர்பில் கடந்த ஞாயிறன்று எச்சரித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அது தீர்க்கமான மற்றும் சக்திவாய்ந்த பதிலடிக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார்.

ஈரான் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் பாடசாலைகள் மூடப்பட்டு, கூட்டங்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அவை பெரும்பகுதிகளில் தளர்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று குறிப்பிட்டது.

தொடரும் பேச்சு

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் பிராந்தியத்தில் பதற்றம் தீவிரம் அடைந்து காணப்படுகிறது. காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

மத்திய காசாவில் உள்ள நுஸைரத் அகதி முகாமின் வடமேற்கில் இருக்கும் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் ஞாயிறு இரவு நடத்திய வான் தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. போர் விமானங்கள் அர்பி குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை தாக்கி இருப்பதோடு அங்கிருக்கும் பள்ளிவாசல் ஒன்றை தரைமட்டமாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 68 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 94 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி கடந்த ஏழு மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 33,797 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 76,465 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்காக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி தொடக்கம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த திட்டம் ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை பதில் அளித்திருந்தது.

எனினும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வெளியேறுவது ஆகிய தமது முந்தைய நிபந்தனைகளில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இது போர் நிறுத்த முன்மொழிவை நிராகரிப்பதாக உள்ளது என்று இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் குறிப்பிட்டதோடு ஹமாஸ் ஈரானுடனான பதற்றத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதாகவும் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் மத்தியஸ்த முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





காசா போர் நிறுத்தப் பேச்சில் பலவீனம்: மத்தியஸ்த பணியை கட்டார் மீளாய்வு

ரபா மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

April 19, 2024 3:08 pm 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை பலவீனம் அடைந்திருப்பதாக மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் தெரிவித்துள்ளது.

‘இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வுகாண முடியுமானவரை முயற்சித்து வருகிறோம்’ என்று கட்டார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தைகளுக்கு கட்டாருடன் எகிப்து மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கின்றன. பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் தமது மத்தியஸ்த பணி தொடர்பில் மீளாய்வு செய்யவிருப்பதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கட்டார் குறைகூறல்கள் மற்றும் குறைமதிப்புக்கு ஆளாகி வருகிறது என்று அல் தானி தெரிவித்தார்.

‘துரதிருஷ்டவசமாக, இந்த மத்தியஸ்த முயற்சியில் குறைகூறல்களுக்கும் குறுகிய அரசியல் நலனுக்காக குறைமதிப்புக்கும் உட்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம்’ என்று டோஹாவில் கடந்த புதனன்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

‘இதனால் கட்டார் தனது பணி குறித்து விரிவான மீளாய்வு ஒன்றை செய்யவுள்ளது. இந்த நேரத்தில் நாம் மத்தியஸ்த பணியை மீளாய்வு செய்வதோடு இந்த மத்தியஸ்த தரப்புகள் எவ்வாறு ஈடுபடுகின்றன என்பதையும் நாம் மீளாய்வு செய்யவுள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதில் தம்மீது குறைகூறும் தரப்புகள் பற்றி கட்டார் குறிப்பிடாதபோதும் ஹமாஸ் அமைப்புக்கு போதுமான அழுத்தம் கொடுக்க கட்டார் தவறி இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பு 40 பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் அல்லது நோயுற்ற பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றை மத்தியஸ்தர்கள் கடைசியாக பரிந்துரைத்திருந்தபோதும் ஹமாஸ் அமைப்பு அதனை நிராகரித்திருந்தது.

எனினும் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வெளியேறி அங்கு முழுமையான போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் வலியுறுத்தி வருகிறது. மறுபுறம்; இஸ்ரேல் காசாவில் போரைத் தொடரும் வகையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கு முயற்சித்து வருவதால் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் காசாவில் 195 ஆவது நாளாக நேற்றைய தினத்திலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்தன. பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்றும் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1.4 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையிலேயே அந்த நகர் மீதான தாக்குதல்கள் படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரபாவுடனான எல்லை பகுதிக்கு அருகில் இஸ்ரேல் மேலும் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை குவித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரபா மீதான படையெடுப்பு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எச்சரித்து வருகின்றபோதும் ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கு அந்த நகரை தாக்குவது தீர்க்கமானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

காசா நகர் மீது தொடர்ந்தும் சரமாரித் தாக்குதல்கள் இடம்பெற்றதோடு, மத்திய காசாவின் வடக்கு நுசைரத் பகுதியில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற பின் பல சடலங்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு பணியாளர்களை மேற்கொள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா செய்தி வெளியிட்டுள்ளது. இங்கு மீட்கப்படாத நிலையில் பல சடலங்களும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அந்தப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இருந்து 11 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் சிவில் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தினர்கள் எண்ணிக்கை தற்போது 34 ஆயிரத்தை நெருங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த அறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதல்களில்கள் காரணமாக காசாவுக்குள் 85 வீதத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதோடு உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோன்று காசாவின் 60 வீதமான உட்கட்டமைப்புகள் சேதமடைந்து அல்லது அழிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் தனது பிடியை இறுக்கி வருவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளார். காசாவில் மனிதாபிமான உதவிகளை முடக்கி இருப்பதாகவும் அங்கு ஐ.நா. நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் இஸ்ரேல் மீது அவர் குற்றம்சாட்டினார்.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் காசா, மேற்குக் கரை, ஜோர்தான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள மில்லியன் கணக்காக பலஸ்தீனர்களுக்கான கல்வி, சுகாதாரம் மற்றம் உதவிகளை வழங்கி வருகிறது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் உதவிச் செயற்பாடுகளில் இந்த நிறுவனம் முதுகெலும்பாக செயற்படுவதாக ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

‘காசா எங்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் தனது பிடியை இறுக்கி வருகிறது. வடக்கில் சிசுக்கள் மற்றும் இளம் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பினால் மரணிக்க ஆரம்பித்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் உணவு மற்றும் சுத்தமான நீருக்கு காத்துள்ளனர். ஆனால், இந்த உதவிகளை வழங்குவது மற்றும் உயிர்களை காப்பதற்கு பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது’ என்று லசரினி குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 





தொடரும் மழையால் டுபாய் விமானநிலையம் தொடர்ந்தும் ஸ்தம்பிதம்

April 19, 2024 8:18 am 

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அண்டை நாடுகளில் கடும் மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில் டுபாய் விமானநிலையத்தின் செயற்பாடுகளில் தொடர்ந்து இடையூறு நீடித்து வருகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த அடைமழையால், வீதிகள் மற்றும் பரபரப்பான சர்வதேச விமானநிலையத்தின் சில பகுதிகளில் வெள்ள நீர் நிரம்பியது. இந்த திடீர் வெள்ளத்தில் ஓமானில் 20 பேர் உயிரிழந்ததோடு ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஒருவர் பலியாகியுள்ளார். சில உள்வரும் விமானங்கள் நேற்று (18) செயற்பாடுகளை ஆரம்பித்தபோதும், டுபாய் சர்வதேச விமானநிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை.

உலகின் இரண்டாவது பரபரப்பான விமானநிலையமாக இருக்கும் இந்த விமானநிலையத்தின் 1ஆவது முனையத்தின் உள்வரும் விமானங்கள் வியாழக்கிழமை (நேற்று) செயற்பாட்டை ஆரம்பித்தபோதும் வெளிச்செல்லும் விமானங்களில் தொடர்ந்து தாமதம் நீடிப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பதிவுகள் உறுதி செய்யப்பட்டால் மாத்திரம் விமானநிலையத்திற்கு செல்லும்படி அதிகாரிகள் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக கடந்த புதனன்று (17) 300க்கும் அதிகமான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டதோடு நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் தாமதம் அடைந்தன.   நன்றி தினகரன் 

 



மழை, வெள்ளத்தால்: பாக்., ஆப்கானில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

April 17, 2024 12:16 pm 

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மின்னல் தாக்கியும் கடும் மழை காரணமாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் புயல், வெள்ளம் காரணமாக குறைந்தது 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் நேற்று (16) தெரிவித்தனர். அங்கு அவசர சேவைகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் உயிரிழப்பு 50ஐ தாண்டியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அடைமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் வீடுகள் சேதமடைந்து, மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டிருப்பதோடு நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன. இதில் கோதுமை அறுவடையின்போது மின்னல் தாக்கி விவசாயிகள் சிலரும் கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அண்மைய நாட்களாக பெய்து வரும் பருவ மழையால் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டு 36 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 





ஐ.நாவில் பலஸ்தீனத்தை நிராகரித்தது அமெரிக்கா

April 20, 2024 6:42 am 

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் முழு அங்கத்துவம் பெறுவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

பலஸ்தீனத்திற்கு முழு அங்கத்துவத்தை பெறுவதற்கு ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைப்பதற்காகவே பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் (18) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் 12 நாடுகள் ஆதரவு வழங்கியபோதும் பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்து வாக்களிப்பதை தவிர்த்தன.‘இரு நாட்டுத் தீர்வை அமெரிக்கா தொடர்ந்தும் வலுவாக ஆதரிக்கிறது. இந்த வாக்கு பலஸ்தீன நாட்டுக்கு எதிரானது இல்லை என்றபோதும், தரப்புகளுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தை மூலம் மாத்திரமே அது செயற்படுத்தப்பட வேண்டும்’ என்று ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபட் வூட் பாதுகாப்புச் சபையில் தெரிவித்தார்.

அமெரிக்கா வீட்டோவை பயன்படுத்தியதற்கு கண்டனத்தை வெளியிட்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இந்த செயல் ‘நியாயமற்றது, தார்மீகமற்றது மற்றும் நியாயப்படுத்த முடியாதது’ என்று சாடினார்.

ஐ.நாவில் தற்போது கண்காணிப்பு நாடாக இருக்கும் பலஸ்தீனம் அதில் முழு அங்கத்துவம் பெறுவதற்கு பாதுகாப்பு சபையின் பரிந்துரையை பெற்று பின்னர் 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் குறைந்தது மூன்றில் இரண்டு வாக்குகளை பெற வேண்டும்.   நன்றி தினகரன் 






பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு

படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம்

April 20, 2024 7:44 am

காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது.

காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன.

காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது.

எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது.

ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது.

‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது.

‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார்.

ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.    நன்றி தினகரன் 




No comments: