யாழ். மணிக்கூட்டு கோபுரம் முதல் பண்ணைவரை தூய சுற்றுலா வலயம்
வவுனியாவில் 376 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கல்
SSW வீசா திட்டத்தின் கீழ் ஜப்பான் கனவை நனவாக்குங்கள்
கைதான வீதியோர கடைக்காரர் பிணையில் விடுதலை
திருச்சி முகாமிலுள்ள இலங்கை பெண்ணுக்கு இந்திய வாக்குரிமை
யாழ். மணிக்கூட்டு கோபுரம் முதல் பண்ணைவரை தூய சுற்றுலா வலயம்
யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் தொடக்கம் பண்ணைவரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலயமாக்கும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அண்மையில் நடைபெற்றது.
யாழ். மாநகரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஏற்கெனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவற்றை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
யாழ். மாநகர சபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர், கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன், தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நன்றி தினகரன்
வவுனியாவில் 376 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கல்
வவுனியா, கற்பகபுரம் பிரதேசத்தில் 376 குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை இலவசமாக பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மேற்படி குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் நேற்று செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொடுத்தார். வவுனியாவின் கற்பகபுரம் பிரதேசத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்ததுடன், இது தொடர்பாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு மக்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து 376 குடும்பங்கள் பயனடையும் வகையில் இராஜாங்க அமைச்சரால் இந்த நன்மை கிடைத்துள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வடமாகாண தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் சிரேஷ்ட சமூகவியலாளர் கோபிநாத், கற்பகபுரம் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வவுனியா விசேட நிருபர் - நன்றி தினகரன்
SSW வீசா திட்டத்தின் கீழ் ஜப்பான் கனவை நனவாக்குங்கள்
- இவ்வார இறுதியில் மன்னாருக்கு வருமாறு அழைப்பு
சகுரா மலர் பூக்கும் ஜப்பான் பெரும்பாலான இலங்கையர்களின் கனவு நாடாக மாற்றமடைந்துள்ளது. எனவே, ஜப்பானில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பை வழங்கும் SSW (Specified Skilled Worker) வீசா திட்டத்தின் மூலம் உங்கள் ஜப்பானிய கனவுகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த வாய்ப்பு காணப்படுவதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், மனுஷ நாணயக்காரவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உங்கள் ஜப்பான் கனவை நனவாக்க, ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மன்னார் நகரசபை விளையாட்டரங்கில் நடைபெறும் ஜயகமு ஶ்ரீ லங்கா நிகழ்ச்சிக்கு வருமாறு குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நீங்கள் ஜப்பானில் தொழிலுக்கு விண்ணப்பிக்க, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நடத்தப்படும் கூட்டுப் பரீட்சை திறன் மற்றும் ஜப்பானிய மொழிப் புலமையை உறுதிப்படுத்த வேண்டும்.
பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு ஜப்பானில் 5 ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு உள்ளது. SSW திட்டத்தின் கீழ், ஜப்பான் 14 வேலைவாய்ப்பு பிரிவுகளை அறிவித்துள்ளது, அதில் 6 பகுதிகளுக்கு இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- செவிலியர் பராமரிப்பு (Nursing Caregiving)
- உணவு சேவை தொழில்துறை (Food Service industry)
- விவசாயம் (Agriculture)
- கட்டுமான பிரிவு (Construction)
- கட்டட சுத்தம் செய்தல் (Building Cleaning)
- விமானத் துறை (Aviation Field)
இவற்றில் தாதியர், உணவு சேவை தொழில், விவசாயம் மற்றும் விமானப் போக்குவரத்துக்கான திறன் சோதனைகள் தற்போது இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த துறைகளுக்கு அரச துறை மூலம் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பப்படுகிறது.
ஜப்பானில் வேலைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படைத் தகுதிகள்:
- 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட இலங்கைப் பிரஜையாக இருத்தல்.
- JFT அல்லது JLPTN 4 தேர்ச்சி பெற்றிருத்தல்.
- அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்துறை தொடர்பாக நடத்தப்படும் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தாதியர்கள், தாதியர் தொழில்நுட்ப அறிவுக்கான திறன், ஆங்கிலம் அல்லது ஜப்பான் மொழியில் தேர்ச்சி ஆகிய இரண்டு தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
இவற்றுக்கு மேலதிகமாக
- சிறந்த தேக ஆரோக்கியம்
- உடலில் பச்சை குத்தி இருக்காதிருத்தல்
மேற்படி தகைமைகளை நீங்கள் கொண்டிருந்தால் ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவே அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கி வருகிறது.
SSW திட்டத்தின் மூலம் ஜப்பானில் தொழில் வாய்ப்பைப் பெற்று உங்கள் ஜப்பானிய கனவை நனவாக்க நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) மன்னார் நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஜயகமு ஸ்ரீ லங்கா நடமாடும் மக்கள் சேவையில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். நன்றி தினகரன்
கைதான வீதியோர கடைக்காரர் பிணையில் விடுதலை
- ரூ. 50,000 ரொக்கம், ரூ. 10 இலட்சம் சரீரப் பிணை
உணவின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை விரட்டிய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (17) வாழைத்தோட்டம் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
இதன்போது, சந்தேகநபரை ரூ. 50,000 ரொக்கம் மற்றும் ரூ. 10 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, புதுக்கடை பிரதேசத்தில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவர் சாப்பாட்டின் விலையை கேட்ட பின் அது அதிகம் எனும் தோரணையில் செயற்பட்டதைத் தொடர்ந்து, உணவை வாங்கவில்லையாயின் அங்கிருந்து வெளியேறுமாறு, கடையின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் குறித்த ஒருவர், குறித்த வெளிநாட்டவரை பயமுறுத்தும் வகையில் மிரட்டியதாக தெரிவித்தமை தொடர்பில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் மீனுடன் கொத்து ரொட்டி ஒன்றின் விலையை கேட்டபோது, அதற்கு ரூ. 1,900 என தெரிவித்ததைத் தொடர்ந்து, அதனை குறித்த வெளிநாட்டவர் வாங்க மறுத்த நிலையில், உணவை வாங்கவில்லையாயின் அங்கிருந்து வெளியேறுமாறு கடை உரிமையாளர் அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு 12 பகுதியை வசிப்பிடமாக கொண்ட 51 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். நன்றி தினகரன்
திருச்சி முகாமிலுள்ள இலங்கை பெண்ணுக்கு இந்திய வாக்குரிமை
தமிழகத்தின் திருச்சி முகாமிலுள்ள இலங்கை அகதி பெண் ஒருவருக்கு இந்திய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. அகதியாகத் தஞ்சமடைந்த இலங்கையர் ஒருவருக்கு இந்திய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.
இலங்கையிலிருந்து அகதிகளாக தஞ்சம் புகுந்த இலங்கையருக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள நளினி கிருபாகரன் என்ற 38 வயது இலங்கை பெண்ணுக்கு, நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது.
இவர் கடந்த 1986 இல், இராமேஸ்வரத்தில் மண்டபம் முகாமில் பிறந்தார். பின்னர் திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்.
இந்த வாக்குரிமைக்கான அவரது பயணம் 2021 இல் தொடங்கியது. முதலில் இந்திய கடவுச் சீட்டுக்காக அவர் விண்ணப்பித்த போது பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அவர் நாடினார்.
2022 ஆகஸ்ட் 12இல், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், நளினியின் மண்டபத்திலிருந்து பிறந்த சான்றிதழைக் காட்டி, அவருக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
1950 ஜனவரி 26 மற்றும் ஜூலை 1, 1987 க்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒருவர் குடியுரிமைச் சட்டம், 1995 இன் பிரிவு 03 சட்டத்தின் படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது - நன்றி தினகரன்
No comments:
Post a Comment