ஈழத் தமிழர் விவகாரம் காணாமல் போகும் ஆபத்து!

 April 20, 2024


உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தின்மீதான கவனம் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தை தொடர்ந்து புதியதொரு நிலைக்கு சென்றது. உலகின் பிரதான கவனம் மத்திய கிழக்கை நோக்கி நகர்ந்தது. தற்போது நிலைமைகள் மேலும் சிக்கலடைந்திருக்கின்றன.
மத்திய கிழக்கின் யுத்த மேகம் உலக அரசியல் நிகழ்ச்சி நிரலையே மாற்றப் போகின் றது. ஈரானின் தாக்குதலை தொடர்ந்து நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன. இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றது.
இந்த யுத்தமானது மத்திய கிழக்கு இதுவரை காணாத யுத்த மாகவும் மாறலாமென்று சர்வதேச அரசியல் அவதானிகள் எச்ச ரிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் ஈழத் தமிழர்கள் மீதான சர்வதேச கரிசனை என்று ஒன்றிருக்கப் போவதில்லை.
கடந்த பதினான்கு ஆண்டுகால அரசியல் நகர்வுகள் படுதோல்வியிலேயே முடிந்தி ருக்கின்றது. சர்வதேச அழுத்தங்கள் தொடர்பான கதைகள் அனைத் தும் புஷ்வாணமாகிவிட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல் தொடர்பில் நம்பிக்கை களை எவரேனும் விதைக்க முற்பட்டால் – சந்தேகமில்லை – அவர் கள் மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களது நோக்கும் தமிழ் மக்க ளுக்கு நல்லதோர் எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதல்ல மாறாக தங்களின் கதிரைகளை பாதுகாத்துக் கொள்வது மட்டும்தான்.
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தின்போதான மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலளித்திருந்தது – அதேவேளை, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா எவ்வாறு பதில ளித்திருந்தது என்பதெல்லாம் நமக்கு எதை கற்றுத்தருகின்றது? எதை யாவது நாம் கற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோமா? நமது அரசியல் சூழலை அவதானித்தால் எதையும் கற்றுக்கொள்வதற்கான முதிர்ச் சியை காணமுடியவில்லை. தொடர்ந்தும் கதிரைகளை பாதுகாப்பதற்கு ஏற்றவாறு அரசியல் கருத்துகளை முன்வைப்பதையே காண முடிகின்றது.
அண்மையில், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பாராளு மன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துகள் இதற்கு சிறந்த சான்றாகும். தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தென்னிலங்கையில் இனவாதம் மீண்டும் எழுமாம் – அவ்வாறாயின் இப்போது இனவாதம் இல்லையா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் – மைத்திரி அரசாங்கத்துடன் தேனிலவில் இருந்த காலத்தில் – ஆகக் குறைந்தது, கல்முனை பிரதேச செயலக பிரச்னையைக்கூடத் தீர்க்க முடியவில்லை. இந்த நிலையில் – இது மாற்றத்துக்கான தேர்தல் – எனவே, தென் னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கே வாக்களியுங்கள் என்று எந்த அடிப்படையில் இவர்களால் கூற முடிகின்றது? மக்கள் ஒருபோதுமே சிந்திக்கவே மாட்டார்கள் என்றா இவர்கள் யோசிக்கின்றனர்?
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை காணமால் போய்விடும் ஆபத்திலிருந்து அதனை காப்பாற்ற வேண்டுமாயின், தமிழ் மக்கள் ஜனநாயக வழிமுறையின் மூலமாக தங்களின் கோரிக்கையை மீண்டும் உரத்துக் கூற வேண்டியிருக்கின்றது. அவ்வாறு கூற வேண்டுமாயின், இந்த ஜனாதிபதித் தேர்தலை விடவும் வேறு என்ன சிறந்த வழியுண்டு? தமிழ் பொது வேட்பாளர் எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் இதுவரையில் தர்க்கரீதியில் மாற்று யோசனையை முன்வைக்கவில்லை. பிரச்னை – அவர்களால் முடியவில்லை என்பதுதான்.   நன்றி ஈழநாடு 



No comments: