அரங்கில் சாதனை புரிந்த சண்முகலிங்கம் மாஸ்டர் (கன்பரா யோகன்)


கடந்த தை மாதத்தில் குழந்தை மாஸ்டர் என்று பலராலும் அழைக்கப்படும் திரு ம. சண்முகலிங்கம் மாஸ்டர் அவர்களை அவரது திருநெல்வேலி வீட்டில் சந்திக்கப்  போனோம்.

அன்றைக்கு மாஸ்டரின் வீட்டைக் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமாகவிருந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு சென்றதால் தெருக்கள், வீடுகளில் மாற்றம் இருந்தது என்பது ஒரு காரணம். இன்னொன்று நாம் வழமையாக செல்லும் திருநெல்வேலிச் சந்தி வழியாக வராமல் இம்முறை எதிர்த்திசையிலிருந்து கல்வியங்காட்டுச் சந்தி ஊடாக வந்ததும் ஒரு காரணமாயிருந்திருக்க வேண்டும். இரண்டு முறை ஆட்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டோம்.

 

இப்போது சண்முகலிங்கம் மாஸ்டருக்கு 92 வயது.  நினைவுகள் மங்கிக் கொண்டு வரும் வயதாகையால் எம்மை அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டார்

 

இன்று தமிழ் நாடக உலகில் நன்கு அறியப்பட் நாடக ஆசிரியரா அவர் இளமைக்காலத்தில் திறமையான நாடக நடிகராக குறிப்பாக கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த 'தேரோட்டி மகன்'  போன்ற  நாடகங்களிலும், சரித்திர நாடகங்கள் , ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் என்று பலவற்றிலும் நடித்திருந்தார். ஈழத்தில் எழுபதுகளில் வெளிவந்த  ‘பொன்மணி’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

 

இந்த அனுபவங்கள்தான் அவரை நாடக ஆசிரியராக,  இயக்குநராக, அரங்க ஆய்வாளராக, கட்டுரையாளராக, விமரிசகராக என்று பல பரிமாணங்களில் பயணிக்க வைத்தது

 

சென்னையில்  பி.எ பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு

இலங்கை திரும்பியவர் கல்வியங்காடு செங்குந்தா பாடசாலை ஆசிரியராக வும் பணியாற்றினார்.  இதனாலேயே அவர் சிறுவர்க்கான நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

கொழும்பில் நாடக டிப்ளோமா கற்கை நெறியைப் பயின்ற பின்னர் சில அரங்கியலாளருடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் நவீன நாடகத்துக்கான 

நாடக அரங்க கல்லூரி ஒன்றை நிறுவி நவீன அரங்கில் ஆர்வம் கொண்டோருக்கான பயிற்சிக் களமாக அதனை இயக்கி வந்தார்.

 

மாஸ்டர் எப்போதுமே தன்னை முன் நிறுத்தாது பணிவுடன் அமைதியாக இயங்குபவர். மேடைகளில் பேசுவது குறைவு என்றாலும் அவரது எழுத்துக்கள், கருத்துக்கள் பல நூறு அரங்கங்களில் பேசி நடிக்கப்பட்டன.

 

யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் இருந்த மாஸ்டர்

நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதி (சில மொழி பெயர்ப்பு உட்பட) தமிழுக்கு தந்திருக்குகிறார். இதைவிட  ஏராளமான சிறுவர் நாடகங்கள், பாடசாலை மாணவர், இளைஞர்களுக்கு உரியவை என்று ஏராளமாக எழுதியிருக்கிறார்..

அவை எல்லாமே ஒரு வகையில் சமூக நோக்குடைய அந்தந்த காலத்துக்கேற்ற சீர்திருத்தக் கருத்தை சொல்பவைதான். வெறும் பொழுது போக்கு நாடகம் என்று அவர் எதையும் எழுதியதில்லை.

நவீன மோடிப்படுத்தப்பட்ட நாடகங்களையே அவர் எழுதினார். நடிகரின் ஆக்கத்திறனுக்கு முதன்மை கொடுக்கும் இந் நாடங்களில் உரைஞர் இருப்பார்கள். நடிகர்-பார்வையாளர் இடைவெளியைக் குறைக்கும் உத்திகள் இருந்தன. மேடையில் பொருட்களின் பாவனை குறைந்திருந்ததால் சைகைகள்,அபிநயங்கள் மூலம் செயல்கள் காட்டப்பட்டன. பாரம்பரிய இசையும், நடனமும், கூத்தும் தேவைக்கேற்றபடி சேர்க்கப்பட்டிருந்தன.

 

தான் எழுதிய  பல நாடகங்களை அவரே நெறியாண்டும், தயாரித்துமிருக்கிறார். பல நாடகங்கள் நூலுருவிலும் வெளிவந்தன. ‘சத்திய சோதனை’ , ‘புழுவாய் மரமாகி’ போன்ற நாடகங்களை பாடசாலை மாணவர்க்கேற்ற கருப்பொருட்களை கொண்டு எழுதினார். 'மாதொரு பாகம்'  நாடகத்தை சுண்டுக்குளி மகளிர்  கல்லூரி மாணவிகள் நடிப்பதற்காக எழுதினார். இவற்றை நெறியாள்கை செய்வதில் திரு க. சிதம்பரநாதன் அவர்களின் பெரும் பங்கும் இருந்தது.

 

யுத்த காலத்தில் தயாரித்த 'எந்தையும் தாயும்'  நாடகத்தை பரிசோதனை முயற்சியாக ஒரு நாற்சார் வீட்டுக்குளேயே நிகழ்த்திக் காட்டினார்.  இவர் எழுதிய ‘அன்னை இட்ட தீ’ என்ற நாடகம் போருக்குள் அகப்பட்ட மக்களின் உளவியல் தாக்கத்தை சொல்லியது.

ஈழத்தில் மட்டுமன்றி புலம் பெயர் நாடுகளிலும் இவரது நாடகங்கள் குறிப்பாக 'எந்தையும் தாயும்', சிறுவர் நாடகமான கூடி 'விளையாடு பாப்பா' என்பன அரங்கேறி வரவேற்பைப் பெற்றன.

கிழக்குப் பல்கலைக் கழகம் மாஸ்டருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது.

இந்த அறிமுகங்களுக்கு அப்பால் 1985 இன் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக்கழக கலாச்சாரக்  குழுவினரின் நாடக அரங்கேற்றுகைக்காக அவரை அணுகிய காலங்களில்தான் நான் அவரை முதலில் சந்திக்க நேர்ந்தது. சண்முகலிங்கம் மாஸ்டர் கைப்பட எழுதிய ‘மண் சுமந்த மேனியர்’ நாடகப் பிரதி இயக்குனர் க. சிதம்பரநாதன் மூலம்

எமக்கு கிடைத்தது. அதில் செறிந்திருந்த சுருக்கமான, ஆனால் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட உரையாடல்கள் , பல இடங்களில் சிலேடையும், நகைச்சுவையும் கொண்ட வசனங்கள், கதையோட்டத்துக்கு பொருத்தமான திருவாசகப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், நவீன கவிதை வரிகள் என்று அவரின் நாட பிரதி தனித்துவமாக இருந்தது.

 

நாடகப் பயிற்சிகளுக்கு வரும் நடிகர்களுக்கு 'ரோசம் கெட்டவன் ராசாவிலும் பெரியவன்' என்ற பழமொழியை அவர் அடிக்கடி சொல்லி நினைவு படுத்திக் கொள்வது வழக்கம். நடிகர் ஒருவர் மேடையில் ஏறிவிட்டால் வெட்கமோ, ரோசமோ இல்லாது நடிக்கப் பழக வேண்டுமென்பதற்காகவே இதை அவர் சொல்வது வழக்கம்.

 

‘மண் சுமந்த மேனியர்’ நாடகம் பாகம் 1, பாகம் 2  என்று வெளியாகி குடா நாடெங்கும் அரங்கேறிய காலங்களில், மாலை நேரங்களில், திருநெல்வேலி-ஆடிய பாதம் வீதியிலுள்ள அவரது வீட்டுத்திண்ணையில் அமர்ந்து உரையாடிச் சென்று வந்த நினைவுகள் மனதில் எழுந்தன.  இன்றைக்கு அந்த நாடகக் கருப்பொளுக்கான சூழல் முற்றாக மாறிவிட்ட நிலையில் அவரது வீட்டுத் திண்ணை அந்த நாடகக் காலத்தின் சாட்சியாக இன்றும் இருப்பதைக் கண்டோம்.

அவரோடு நாடக அரங்க கல்லூரியில் பயணித்த பலர் இன்றைக்கு

அங்கு இல்லை என்றாலும் அவர் நீண்ட காலம் அந்த மண்ணிலேயே நின்று தமிழ் நாடகத்துக்கென்று அர்ப்பணிப்போடு பயணித்திருக்கிறார்.

 

அன்று சந்திப்பை முடித்துக் கொண்டு  அவரிடம் விடைபெறமுன் அப்போது கனடாவிலிருந்து வந்திருந்த அவரது மகனிடம் உரையாடினோம். தந்தையின் நாடக பிரதிகள், கட்டுரைகள், புகைப்பட, வீடியோக்கள் என்று அனைத்தையும் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சொன்னார். அந்தப் பணி வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டோம்.

 

 

நன்றி : சங்கச் சங்கதிகள்

No comments: