புதிய பறவை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக விளங்கிய எம் ஜி ஆர், சிவாஜி


இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக விளங்கிய போதும் தொழில் ரீதியில் கடும் போட்டிக்கு மத்தியிலேயே செயற்ட்பட்டு வந்தனர். இந்த வகையில் எம் ஜி ஆர் தனது சொந்த பட நிறுவனமான எம் ஜி ஆர் பிக்ஸர்சை 1958 ல் தொடங்கி நாடோடி மன்னன் படத்தை தயாரித்து இயக்கி நடித்து அப் படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆனாலும் சிவாஜி தனது சொந்த பட நிறுவனத்தை உடனயாக ஆரம்பிக்கவில்லை. ஆறாண்டுகள் கழித்தே சிவாஜி

பிலிம்ஸ் என்ற தனது சொந்த பட நிறுவனத்தை தொடங்கினார் அவர். அவ்வாறு தொடங்கி அவர் தயாரித்த முதல் படம்தான் புதிய பறவை. முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் ஹிந்தியிலும் , அதன் பின் வங்காள மொழியிலும் உருவாகி பின்னர் தாதா மிராசியின் திரைக்கதையினால் இப் படம் புதிய பறவை ஆனது.


வித்தியாசமான கதை, நடிப்பு, ஆடை அலங்காரம் என்று ஈஸ்ட்மென் கலரில் படம் தயாரானது. ஒரிஜினல் திட்டப்படி சிவாஜியின் நூறாவது படமாக புதிய பறவையை பறக்க விடுவதே சிவாஜி குழாமின் எதிர்ப் பார்ப்பாக இருந்தது. ஆனாலும் சில பல காரணங்களால் 98 வது படமாக புதிய பறவை திரை வானுக்கு வந்தது.

படத் தயாரிப்பில் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொண்ட சிவாஜி படத்துக்கு வசனங்களை எழுத ஆரூர்தாஸை அமர்த்திக் கொண்டார். அதே போல் தான் நடித்த இரத்தத் திலகம் படத்தை டைரக்ட் செய்த்து அப் படம் வெற்றி பெறாத போதும் அதன் டைரக்டர் தாதாமிராசிக்கு தன்னுடைய சொந்த படத்தை டைரக்ட் செய்யும் சந்தர்ப்பத்தையும் வழங்கினார். ஸ்ரீதர் பட யூனிட்டை சேர்ந்த படத் தொகுப்பாளர் என் எம் சங்கர் இப்படத்தின் எடிட்டராக உள் வாங்கப்பட்டார்.


சரோஜாதேவியின் நடிப்பின் மீது சிவாஜிக்கு ஒரு பிடிப்பு இருந்தே வந்தது. இந்தப் படத்தின் ஹீரோயினாக அவர் தெரிவானார். வில்லி போன்ற பாத்திரத்துக்கு அது வரை சோக பாத்திரங்களில் நடித்து வந்த சௌகார் ஜானகி செலக்ட் ஆனார். இவர்களுடன் எம் ஆர் ராதா, வி கே ராமசாமி, ஏ .கருணாநிதி , நாகேஷ், மனோரமா, ஓ ஏ கே தேவர், எஸ் வி ராமதாஸ் ஆகியோரும் நடித்தனர். இவர்களுடன் சிவாஜியின் தந்தையாக டைரக்டர் தாதாமிராசி தோன்றினார்.

மனைவி தன்னை கேவலப்படுத்தி விட்டாள் என்ற கோபத்தில்

அவளை அறைந்து விடுகிறான் கோபால். சித்திரா ஸ்தலத்திலேயே இறந்து விட அவள் உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டு விபத்து மரணம் என்று சாதித்து விடுகிறான் அவன். கப்பலில் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் அவனுக்கு லதாவின் அறிமுகம் கிட்டி அதுவே காதலாகிறது. இருவரும் திருமணம் செய்ய தயாராகும் போதும் இறந்து விட்டதாக நம்பப் படும் சித்ரா மீண்டும் கோபால் முன் வந்து நிற்கிறாள். கோபால் குழம்ப ,லதா அவனின் காதலையே சந்தேகிக்கிறாள். எங்கே நிம்மதி என்று தவிக்கிறான் கோபால்.

இப்படி அமைத்த படத்துக்கு சிவாஜியின் நடிப்பு சிகரமாக அமைந்தது. உணர்ச்சிகரமான காட்சிகளில் உச்சம் தொட்டார் அவர். அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் சரோஜாதேவி. இவர் நடித்த கலர் படங்கள் குறைவாக இருந்த போதும் இந்தப் படத்தில் அழகாகவும் காட்சியளித்தார் . சௌகார் ஜானகி தன் பாத்திரத்தை சவாலாக ஏற்று ரசித்து செய்திருந்தார். ரசிகர்களும் அதனை ரசித்தார்கள். எம் ஆர் ராதாவின் வேடமும், நடிப்பும் வழக்கத்துக்கு மாறானது. நன்றாகவும் அமைந்தது . பட ஓட்டத்துக்கு நாகேஷ் , மனோரமா காட்சிகள் தடையாகவே தென்பட்டது.


படத்தில் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் கருத்தோடு அமைந்தன. இன்றும் மீம்ஸ் போடுவததற்கு சில வசனங்கள் பயன் படுவது ஆச்சர்யம்தான்!
படத்தில் விஸ்வநாதன் , ராமமூர்த்தி இசை ராஜாங்கத்தை நடத்தியிருந்தார்கள். கண்ணதாசன் எழுதிய வரிகள் வைர வரிகள். எங்கே நிம்மதி , மெல்ல நட மெல்ல நட, சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து, பார்த்த ஞாபகம் இல்லையோ, உன்னை ஒன்று கேட்பேன் பாடல்கள் சுசிலா. டி எம் எஸ் குரலில் அறுபது ஆண்டுகள் கழித்தும் உயிர்ப்புடன் ஒலிக்கின்றன.

படத்தை கே எஸ் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். வெளிப்புற

காட்சிகள் நன்றாக இருந்தன. கலை கங்கா . தனது முதல் தயாரிப்பு சிறப்பாக வர வேண்டும் என்று சிவாஜி விரும்பியது வீண் போகவில்லை. வெற்றிப் படமாக புதியப்பறவை சிறகடித்தது.

No comments: