என் கடமை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

தமிழில் மர்மக் கதைகள், துப்பறியும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்கள் குறைவு எனலாம். ஆனால் 1964ம் ஆண்டு நான்குப் படங்கள் சஸ்பென்ஸை கருவாகக் கொண்டு படமாகி வெளிவந்தன. அன்றைய காலகட்டத்தில் இது ஒரு புதுமைதான். அம்மா எங்கே, புதிய பறவை, பொம்மை , என் கடமை என்று ஒரே ஆண்டில் நான்கு படங்கள் வெளியாகின. 


இதில் நடேஷ் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் உருவான படம் தான் என் கடமை. மன்னாதி மன்னன் என்ற சரித்திர கதையை தயாரித்து இயக்கிய எம்.நடேசன் தனது அடுத்த படமாக இதனை எடுத்தார். இரண்டு படங்களிலும் ஹீரோ எம் ஜி ஆர்தான். அதில் சரித்திர உடையணிந்து கிரீடமும், வாளும் தரித்து வந்தவர் , இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையணிந்து தலையில் தொப்பி, இடுப்பில் துப்பாக்கியுமாக காட்சியளித்தார்.

படத்தின் ஆரம்பமே விறுவிறுப்பாக சண்டைக் காட்சியுடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாதனால் காப்பாற்றப் படும் கணவனை இழந்து குழந்தையுடன் தவிக்கும் கமலா தனது மாமனாரை பார்த்து வாழ்வாதாரம் கேட்டு வருவதாக ஊருக்கு புறப்படுகிறாள். அதன் பின் அவளை பற்றி எவ்வித செய்தியும் கிடைக்காத காரணத்தால் அவளைத் தேடி ஊருக்கு ரயிலில் செல்லும் நாதன் , கூட தன்னுடன் பயணிக்கும் சரசுவின் அறிமுகத்தை பெறுகிறார். அதே வேளை வழியில் ஒரு கொலையையும் பார்த்து விடுகிறார். கொலை செய்யப்பட்டவள் கமாலாவாக இருக்குமோ என்ற சந்தேகம் காரணமாக அவளின் மாமனார் தர்மலிங்கத்தை சந்தேகித்து , சந்திக்க முயற்சி செய்கிறார்.தர்மலிங்கத்தின் மகள் தான் சரசு என்றறிந்த நாதன் ஆங்கில நடன ஆசிரியராக மாறு வேடத்தில் அவர்களை சந்திக்கிறார். அங்கே அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது!

இவ்வாறு அமைந்த படத்தின் கதை வசனத்தை மா ரா எழுதியிருந்தார். படத்தில் ஒரு காட்சியில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிபதற்காக சரோஜாதேவியை தான் காதலிப்பது போல் நடித்ததாக எம் ஜி ஆர் சொல்வார். இதற்கு சில மாதங்கள் கழித்து வெளிவந்த புதிய பறவை படத்தில் சரோஜாதேவி , சிவாஜியிடம் இதே போல் சொல்வார். வட் எ கோ இன்சிடென்ட்! 
  
வசனங்களில் குறை வைக்காத மா ரா நகைச்சுவை வசனங்களிலும் அசத்தியிருந்தார். நகைச்சுவை காட்சிகள் எல்லாம் ரசிக்கும் படி அமைந்தன. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் இசையமைத்தனர். சும்மா சொல்லக் கூடாது பாடல்கள் அனைத்தும் சூப்பர். ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ் எங்கே போறிங்க , யாரது யாரது தங்கமா, நில்லடி நில்லடி சீமாட்டி, மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா , தேனோடும் தண்ணீரின் மீது ஆகிய பாடல்கள் ரசிகர்களின் மனதில் அப்படியே இடம் பிடித்தன.


படத்தை ஒளிப்பதிவு செய்தவர் ஆர் . சம்பத். காட்சிகளை நேர்த்தியாக எடுத்திருந்தார். குறிப்பாக யாரது யாரது தங்கமா பாடல் டான்ஸ் மாஸ்டர் ஹீராலால், கேமராமேன் சம்பத் இருவரின் திறமையையயும் வெளிப்படுத்தின. ஏ முருகேசன் படத்தின் படத்தொகுப்பை நேர்த்தியாக கையாண்டார்.

எம் ஜி ஆர் இன்ஸ்பெக்டராக வந்து மேற்கத்திய நடனம் ஆடுகிறார், கூர்க்கா வேடத்தில் வீட்டு காவலாளியாகிறார் , சரோஜாதேவியை காதலித்து பாடுகிறார், வில்லன்களுடன் சண்டை போட்டு குற்றவாளியை பிடித்து இதுதான் என் கடமை என்கிறார். கிரேட் ! சரோஜாதேவி நடிப்போடு நன்றாக ஆடுகிறார். ஹல்லோ மிஸ் பாடலுக்கு அவரின் முகபாவம் அபாரம். நாகேஷ், மனோரமா , எம் ஆர் ராதா காமெடி எடுபட்டது. இந்த ஒரு படத்தில் தான் பாலாஜி எம் ஜி ஆருடன் நடித்தார். நம்பியார் எம் ஜி ஆருடன் நடித்த பல படங்களில் இதுவும் ஒன்று! எல் . விஜயலஷ்மி , சி கே சரஸ்வதி, திருப்பதிசாமி, ஆகியோரும் படத்தில் உள்ளனர்.


சஸ்பென்ஸ் கதையான படத்தை நடேசன் சிக்கல் இல்லாமல் இயக்கியிருந்தார். அதற்கு இசைவாக ரசிகர்களும் என் கடமை என்று படத்தை பார்த்து அதனை வெற்றி படமாகியிருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை.



1964ம் ஆண்டு படம் வெளியான சமயம் யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டது போல் எம் ஜி ஆர் ஒரு காரியத்தை செய்தார். பெரும் தலைவர் காமராஜருடைய பிறந்த தின விழாவில் கலந்து உரையாற்றிய எம் ஜி ஆர் அண்ணா என்னுடைய வழிகாட்டி, காமராஜர் என்னுடைய தலைவர் என்று பகிரங்கமாக அறிவித்தார். இது திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் , குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக எழுந்த சிக்கலினால் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினர் பதவியையும், தி மு க பொதுக் குழு உறுப்பினர் பதவியையும் எம் ஜி ஆர் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக என் கடமை படத்தை தி மு க தொண்டர்கள், ஆதரவாளர்கள் புறக்கணித்தார்கள். அதன் தாக்கம் நடேசன் மீது விழுந்தது. என் கடமை எதிர் பார்த்த வெற்றியை பெறவில்லை. நடேஷ் ஆர்ட்ஸும் அதன் பின்னர் படம் எதையும் தயாரிக்கவில்லை!

No comments: