தாமரைச்செல்வியின் "சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு" – ஓர் அறிமுகம் - கே.எஸ்.சுதாகர்

 .

தாமரைச்செல்வி அவர்கள் எழுதிய `சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு தொகுப்பில் இடம்பெறும் அனேகமான கதைகள் – போரின் அழிவு, இடப்பெயர்வில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள், காணாமல் போனவர்கள், பிரிவால் வாடும் உறவுகள், அங்கவீனமானவர்களின் வாழ்க்கை – என்பவற்றைச் சொல்கின்றன.

தொகுப்பின் முதல் கதை `யாரொடு நோவோம்’, மனித மனங்களின் இரண்டக நிலையைப் படம் பிடித்துக் காட்டும் கதை. போர் உயிர் இழப்புகளை, அழிவுகளை மாத்திரம் செய்யவில்லை. உறவுகளை உணர்வுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரித்துப்போட்டும் விடுகின்றது. ஒரு பெண் விரும்பி ஒருத்தனோடு ஓடிப் போய்விடுகின்றாள். அவர்களையும் மீறி ஒரு இடப்பெயர்வு அவர்கள் இருவரையும் பிரித்து விடுகின்றது. நான்கு வருடங்களாக அவனைத் தேடி அலைகின்றாள் அவள். அவன் இறந்து போயிருக்கக்கூடும் என்று எண்ணி---ஒரு ஊகம் தான்--இன்னொருவனை மணந்து கொள்கின்றாள். ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் தொலைந்துபோன அவன் திரும்பி வருகின்றான். அவள் மறுமணம் செய்துகொண்ட அதே காலப்பகுதியில், தானும் இன்னொரு திருமணம் செய்துவிட்டதாக அவன் சொல்கின்றான். அவசர உலகம், அவசர முடிவுகள். நவீன உலகில் ஒவ்வொருவரும் தத்தமக்கு எது சரியெனப்படுகின்றதோ அதைச் செய்துகொண்டு அவரவர் வழியில் போய்விடுகின்றார்கள். அவ்வளவுந்தான்.

`அவனும் அவளும்’ நிறைவேறாத விடலைப் பருவத்துக் காதலைச் சொல்கின்றது. `அண்ணா அண்ணா’ என்றழைக்கும் இடம்பெயர்ந்து வந்த பெண் ஒருத்தியின் மீது அவனுக்குக் காதல். அது நிறைவேறாமல் லண்டன் சென்று இன்னொரு பெண்ணை மணந்து கொள்கின்றான். புதியவள் கருணையின் வடிவம். ஊரிலே கஸ்டப்படுகின்றவர்களுக்கு தன்னாலான உதவிகள் செய்பவள். உதவி செய்வதற்காக அவர்கள் ஊருக்கு வந்தபோது, அவன் முன்பு விரும்பிய பெண்ணுக்கும் உதவி செய்யவேண்டி வருகின்றது. சிறுவயதில் தன்னை `அண்ணா அண்ணா’ என்று அழைத்த அந்தப் பெண்ணுக்கு தான் ஒரு அண்ணாவாகவே இருந்திருக்கலாமோ என்று ஏங்குகின்றான் அவன். கதையின் இடைப்பகுதிலேயே முடிவை ஓரளவுக்கு ஊகிக்க முடிகின்றது.


மனிதர்களில் இரக்கம் கொள்ளும் மனசு, மிருகங்களிலும் வந்துவிடுகின்றது சின்னாசிக் கிழவனுக்கு. தனது துலைந்து போன செங்காரிப் பசுவைத் தேடி ஊன் உறக்கமின்றி அலைகின்றான். சின்னாசிக்கிழவனுக்கு வாழ்வு குடுத்த சீவன் அது. விறுவிறுப்பாக, முடிவை ஊகிக்க முடியாமல் நகரும் கதை இது. சின்னாசிக் கிழவனின் இரக்கத்திற்கு ஒரு அளவே இல்லை என்பதுமாப்போல் முடிவு அமைந்து விடுகின்றது. நல்லவேளை செங்காரிப்பசு சின்னாசிக்கிழவனைப் பார்க்கவில்லை. கதையின் நகர்வும், காட்சிப் படிமங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன.

`கசிந்துருகி கண்ணீர் மல்கிஎன்ற சிறுகதையைப் படித்துக் கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்தி அது எப்போது எழுதப்பட்டிருக்கின்றது எனப் பார்த்தேன். தினக்குரல் 15.03.2009. நான் நினைத்தது சரிதான். உச்சக்கட்ட இறுதியுத்தம். இதை வார்த்தைகளில் சொல்ல முடியாது, வாசித்துப் பாருங்கள்.

இவை தொகுப்பில் எனக்குப் பிடித்த சில கதைகள்.

தொகுப்பில் அவுஸ்திரேலியாவைப் பின்புலமாக கொண்ட கதைகளும் உண்டு. எதிர்பார்ப்பு, வெயிலோடும் மழையோடும், மழை வரும் காலம், பறவைகளின் நண்பன், தேவதைகளின் உலகம் போன்றவை அத்தகையவை.

தாமரைச்செல்வியின் படைப்புகள் நிஜ வாழ்வை வடிவமாக்கும் முயற்சிகள். `அந்தவாழ்வை வாழ்ந்தவர்களின் வலியை அடுத்தவர்களுக்கும் புரிய வைப்பவை. புதியவர்களுக்கு `இப்படியும் நடந்ததா?என்று ஏங்க வைப்பவை. வாழ்வின் இரண்டு பக்கங்களையும் அலசிப் பார்த்து, முடிவை சமூக அக்கறையுடன் முன் வைப்பவை. கதைகளில் ஒரு சிக்கலை வைத்து, பின்னர் வாசகர்களை அதனோடு பயணிக்கச் செய்து, அந்தச் சிக்கலை மெது மெதுவாக அவிழ்த்து வியக்க வைக்கின்றார் ஆசிரியர்.

ஐம்பது வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் இவர், ஆரம்பத்தில் எப்படி எழுதினாரோ அதே மூச்சுடன் இன்றும் விறுவிறுப்பாக இயங்குவது வியப்பைத் தருகின்றது.

ஒட்டுமொத்தமான கதைகளையும் படிக்கும்போது, இவரது ஊர் எங்களுக்கும் பரிச்சயமாகிவிடுகின்றது. அங்கே வாழும் மனிதர்களும் நமக்கும் பழகிப் போகின்றார்கள்.

`எதிர்வெளியீடாக மார்கழி, 2023 வந்திருக்கும் இத்தொகுப்பின் அட்டைப்படத்தை லார்க் பாஸ்கரன் வரைந்திருக்கின்றார். ` தலைக்குள் ஆயிரம் பிரச்சினைகள்என்று சொல்வோமே! அதே போல எத்தனை மனிதர்கள், எத்தனை நிறங்கள், எல்லாருமே வெளிக்கிழம்பி நடனமாடுகின்றார்கள்.


No comments: