எழுத்தாளர் முனைவர் பெருமாள் முருகனுடன் சிறப்பு விருந்தினர் சந்திப்பு - த .நந்திவர்மன்

 .

பல்லாயிரம் எழுத்தாளர்களைக் கண்ட பெருமையை உடையது தமிழ் எழுத்துலகம்.  குறிப்பாகச் சமூக வலைத் தளங்களின் வருகையின் பின்னர் எழுதுபவர்களின் தொகை அதிகரித்துவிட்டது.  தமிழ் மொழிக்கு இது பெருஞ்சிறப்புத்தான்.

ஆனாலும் வாசகர்களின் மனதை ஒரு சில எழுத்தாளர்களே கவர்ந்து கொள்கின்றார்கள்.  அந்த வரிசையில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்து வருபவர் முனைவர் பெருமாள் முருகன் அவர்கள்.

அவுத்திரேலிய அரசின் அழைப்பில் அடிலேய்டில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவரை அன்பர்கள் அப்படியே சிட்னிக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பல தமிழ் இலக்கியப் பணிகளைச் சளைக்காமல் சிட்னியில் செய்து வரும் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒரு சிறப்பு விருந்தினர் சந்திப்பினைச் சிட்னியில் சென்ற சனிக்கிழமை 9 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.

முனைவர் பெருமாள் முருகனுடைய நாவல்கள் பல பல்வேறு மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  இந்திய மொழிகளைத் தாண்டி ஆங்கிலம், பிரெஞ்சு, யேர்மன் மொழிகளும் இதனில் அடக்கம்.  அவருடைய எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கவில்லை.  இருந்தாலும் எத்தனையோ மொழிகளிலே இவருடைய நாவல்கள் வெளிவந்திருப்பதால் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வு என்னை உந்திற்று.

அந்த உந்துதலால் இந்தச் சந்திப்ப்புக்குச் சென்றிருந்தேன்.  அது வீண்போகவில்லை.  மிகவும் பயனுள்ள ஒரு மாலைப் பொழுதாக அது அமைந்தது.


சிட்னியில் வாழ்கின்ற எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் ஒன்று கூடி மண்டபத்தை நிறைத்துவிட்டார்கள்.  அவர்களை நீண்ட இடவெளியின் பின் சந்தித்ததே ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவமாக அமைந்தது.

இந்த மகிழ்ச்சிக் கடலிலே நீந்திக் கொண்டிருந்த போது முனைவர் பெருமாள் முருகனுடைய நாவல்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டிருந்தன!  இரண்டு நூல்கள் தான் மீதமாக இருந்தன. அவற்றை உடனே வாங்கிப் பார்த்தேன்.  ஒன்று “கரித்தாள் தெரியவில்லையா தம்பீ...” என்ற கட்டுரைத் தொகுப்பு.  மற்றையது சேத்துமான் கதைகள் என்னும் இரு சிறுகதைகளின் தொகுப்பு.  இவ்விரு கதைகளுமே சேத்துமான் என்னும் திரைப்படமாக வந்து மக்களைக் கவர்ந்து விட்டன!

கழகத்தின் தூணான செயலாளர் திரு அனகன் பாபு அவர்கள் நிகழ்ச்சியை மிகக் கச்சிதமாகத் தொகுத்து வழங்கினார்கள்.  நிகழ்ச்சிக்கு வந்தவர்களைக் கழகத்தின் தலைவர் திரு கர்ணன் சிதம்பரபாரதி அவர்கள் அன்போடு வரவேற்றுப் பேசினார்கள்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய எங்கள் அன்புக்கினிய எழுத்தாளர் ஆசி கந்தராஜா அவர்கள் எழுத்தாளரைச் சிறப்பாக எமக்கு அறிமுகஞ் செய்து வைத்தார்.  இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள்.  எனவே முருகன் ஐயாவின் வாழ்வில் எழுத்தால் ஏற்பட்ட சோதனைகளை எல்லாம் அவர் விவரமாகச் சொன்னார். 

மாதொரு பாகன் என்னும் அவரது நாவலால் ஏற்பட்ட சர்ச்சையால் அவரை நிர்ப்பந்தித்து “இனி எழுதமாட்டேன்” என்று எழுதி வாங்கி அவர் எழுதுவதைத் தடுத்துவிட்டார்கள்.

ஓர் எழுத்தாளனுக்கு இத்தகைய ஒரு நிலை வந்தால் அவன் மனம் என்ன பாடுபடும்! நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கிற்று!!

இந்த நிலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அப்படி எழுதி வாங்கி அவரைத் தடுத்தது தவறு என்று வழக்குத் தொடர்ந்தது.  அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அது தவறெனத் தீர்ப்பு வழங்கி முருகன் ஐயா தொடர்ந்து எழுதலாம் எனப் பணித்தார்.  அதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டிருந்தன!

இவற்றை எல்லாம் கடந்து இன்று உலகம் போற்றும் ஓர் எழுத்தாளராக அவர் இருக்கின்றார் என்பதே அவரது எழுத்தின் சிறப்புக்குச் சான்று.

கூட்டம் ஆரம்பிக்கும் முதலே அவரது நூலில் இருந்து ஒரு கட்டுரையை வாசித்து விட்டேன்.  அதிலே அவரது முதல் வேலை அனுபவத்தைச் சுவாரசியமாகப் பதிவு செய்திருந்தார். 

அவரது எழுத்திலே ஆங்கிலக் கலப்பில்லாமல் இருந்தமையே என்னை முதலில் கவர்ந்தது.  அண்மையில் சென்னை சென்ற போது அங்கு இப்போது தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்தில் எழுதுகின்ற அவல நிலைக்கு அவர்கள் “முன்னேறி” வந்திருப்பதைப் பார்த்து ஆற்றொணாத் துயருற்றிருந்தேன்.  எனவே முருகன் ஐயா அவர்கள் ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுகின்றார், அதனை வாசகர்கள் வரவேற்றுப் படிக்கின்றார்கள் என்பதெல்லாம் நொந்து போன இதயத்துக்கு ஒத்தடமாக இருந்தது.

தற்போது தமிழிலே எழுதுபவர்கள் பெரும்பாலும் சொற்புணர்ச்சி விதிகளைப் பொருட்படுத்துவதே இல்லை. தமிழ் மொழிக்கு அழகு சேர்ப்பதே இந்தப் புணர்ச்சி விதிகள் தான் என்பதை அவர்கள் உணரவில்லைப் போலும்.  இந்த விடயத்தில் முருகன் ஐயா மிகவும் எச்சரிக்கையோடு எழுதுகின்றார்.  அதனால் வாசிக்கும் போது தடையில்லாமல் வாசித்துக் கொண்டு போக முடிகின்றது.  அதுவே ஓர் இன்ப சுகந்தான்.

இவற்றைத் தாண்டி முருகன் ஐயா உள்ளதை உள்ளபடி எழுதுகின்றார்.  கொங்கு நாட்டு மண் வாசனை கமழ அந்த வட்டார வழக்குகளைக் கலந்து எழுதுகின்றார்.  அவரது வாழ்விலே நடந்த பல அவலங்களை நெஞ்சிருத்தி எழுதுகின்றார்.  அவரது எழுத்திலே வருகின்ற பாத்திரங்கள் உடனே வாசகர் மனதில் பதிந்து அந்தப் பாத்திரங்களுடன் வாசகர்களைப் பயணிக்க வைத்து எழுதுகின்றார்.  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.  இவையெல்லாந் தான் இவரது படைப்புகள் மொழி, இனம், நாடு என்பவற்றைக் கடந்து மக்களை ஈர்க்கச் செய்திருக்கின்றன.

முனைவர் முருகன் அவர்கள் பேராசிரியராகப் பணியாற்றியவர்.  அதன் சிறப்பை அவரது பேச்சில் கண்டோம்.  புனைவும் அபுனைவும் என்ற தலைப்பில் அவர் அன்று பேசினார்.  தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுகின்றது அல்லவா!

புனைவு என்றால் கற்பனை கலந்து எழுதுவது.  அபுனைவு என்றால் கற்பனை இல்லாமல் எழுதுவது.

இதனை விவரமாக விளக்கிப் பின் அபுனைவுப் படைப்புகளைப் பற்றிப் பல கருத்துகள் சொன்னார்.  இவற்றிலே முக்கியமானவற்றைத் தமிழ்முரசு வாசகர்கள் இலகுவாக உள்வாங்கக் கீழே தொகுத்துத் தந்திருக்கின்றேன்.

·       *தமிழர்கள் தமிழ்மொழி பழமையானது, அதிலிருந்து தான் மற்றைய மொழிகள் பிறந்தன என்று தமக்குள்ளே பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மட்டும் பயனில்லை.  தமிழ் எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் பிற மொழியிலே மொழிபெயர்ப்புச் செய்து அவற்றை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும்.  அப்போதுதான் அவர்களின் படைப்புகளுக்கும் உலக அங்கீகாரம் கிடைக்கும் என்று தனது வெற்றியின் சூக்குமத்தைச் சொன்னார்.  மொழிபெயர்க்கும் போது மொழிபெயர்ப்பாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.  அவர்களின் கருத்துகளால் மூல நூலும் செழுமையடையும் என்ற தன் அனுபவத்தையும் பகிர்ந்தார்.

·      * ஒரு மொழியிலே பிறமொழிச் சொற்கள் கலக்கும் போது பெயர் சொற்களே கலக்கின்றன.  வினைச் சொற்கள் கலப்பதில்லை.  ஒரு சொல்லுக்கு “அ” என்று சேர்க்கும்போது அது இயல்பாக இருந்து, எதிர்ப்பொருள் வருமாயின் அச்சொல் தமிழ் அல்ல. வடமொழிச்சொல்.  உதாரணம் சுத்தம் – அசுத்தம்.  அந்த வகையில் அபுனைவு என்பது இயல்பாக இல்லை.  எனவே புனைவு என்பது தூய தமிழ்ச் சொல்.  கற்பனை இல்லாத படைப்புகளைக் குறிப்பிட இச்சொல்லை உருவாக்கினர்.  அல்புனைவு என்றும் சிலர் பயன்படுத்துகின்றார்கள்.

·       *தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்றது.  அவருடைய நாவல் மலையாளத்திலே மொழிபெயர்க்கப்பட்ட போது மக்கள் தொகையில் தமிழர்களைவிட அவர்கள் குறைவாக இருந்தாலுந் தமிழை விட அதிகப் பிரதிகள் விற்பனையாயின.  நாம் தமிழரிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.

·       *சங்ககாலப் பாடல்களையும் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற மற்றைய இலக்கியங்களையும் படிக்க விரும்புபவர்கள் நேரே அவற்றைப் படிக்கக் கூடாது.  அப்படிச் செய்தால் அவற்றை விளங்கிக் கொள்வது இலகுவாக இருக்காது.  இத்தகைய நூல்களை ஆய்வு செய்து பல நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  அவற்றிலே சிலவற்றைத் தெரிவு செய்து முதலில் படிக்க வேண்டும்.  அதன் பின் மூல நூலைப் படிக்கும் போது அதனை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும்.  அதனை நயக்கும் அனுபவமும் சிறப்பாக இருக்கும்.

·       *பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் தான் தமிழிலே அபுனைவு நூல்கள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன.  அதற்கு முன்னாலே எல்லாமே புனைவு நூல்கள் தான்.  ஏன் திருக்குறளுமே புனைவு நூல் தான்.  இப்படிச் சொல்வதற்குக் காரணம் அவை செய்யுள் வடிவில் இருப்பதும், அவற்றிலே உதாரணங்களைப் புனைவு செய்து கலந்திருப்பதும் தான் என்று அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

·       *முதலில் எழுதும் பொழுது சொந்த அனுபவங்களின் தாக்கம் எழுத்திலே இருக்கும்.  தொடர்ந்து எழுதும் பொழுது மற்றவர்களின் அனுபவங்களையும் கலந்து எழுதும் வாய்ப்புக் கிட்டும்.

மிகச்சிறப்பான பேச்சின் பின் கேள்வி பதில் பகுதி இடம்பெற்றது.  அவரது வாசகர்கள் பலர் ஆர்வத்த்தோடு பல கேள்விகளக் கேட்டார்கள்.

நிறைவாக இரத்தினச் சுருக்கமாகக் கழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. கார்த்திகேயன் இராமனாதன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

இத்தகைய தரம் வாய்ந்த நிகழ்ச்சியை வழங்கிய தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்துக்கு நன்றி பாராட்டி இத்தகைய நிகழ்ச்சிகளை அது தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.


No comments: