வேம்படி மகளிர் கல்லூரி சிட்னி கிளையினர் நடாத்திய "இசை மழை 2024" நிகழ்ச்சி - செ.பாஸ்கரன்

 .


சென்ற சனிக்கிழமை 09 மார்ச் 2024 அன்று வேம்படி மகளிர் கல்லூரி சிட்னி கிளையினர் நடாத்திய நிகழ்ச்சியை பார்க்க சென்றிருந்தேன். தமிழ்நாட்டு பாடகர்கள், இலங்கை பாடகி இவர்கள் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்கின்றார்கள் என்ற அறிவிப்பால் இந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன் நிகழ்ச்சி 6 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சற்று முன்னதாகச் சென்றால் இருக்கைகள் மேடைக்கு அண்மையில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதனால் சற்று முன்னதாகவே செல்வோம் என்று நினைத்துக் கொண்டு அங்கே செல்கின்றபோது 5 மணி 40 நிமிடங்கள் ஆகிவிட்டது. உள்ளே சென்றால் மண்டபம் ஏறக்குறைய நிறைந்தே காணப்பட்டது மண்டபத்தின் பிற்பகுதியில் தான் இடம் காணப்படட காரணத்தினால் அதிலே அமர்ந்து கொண்டோம் ஆவலோடு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று பார்த்துக் கொண்டிருந்தால் மண்டபத்திலே குளிர் ஊட்டியை காணவில்லை. மண்டபம் ஒரே வெக்கையாக காணப்பட்டது. ஒரு சில நிமிட நேரங்களில் எங்களுக்கு அண்மையாக மின்விசிறி வைக்கப்பட்டது. அந்த மின்விசிறி எத்தனை பேருக்குத்தான் காற்றை கொடுக்கும். ஆக அந்த வெக்கையான மண்டபத்துக்குள்ளே இருந்தோம். அறிவிப்பாளரான மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள் அறிவிப்பை சரியான நேரத்துக்கு தொடங்கினார். அவர் அறிவிப்பை தொடங்கும் போதே நகைச்சுவையாகவும் அதேபோல உண்மையை சொல்ல வேண்டும் என்ற காரணத்துக்காகவும் இன்று இந்த நிகழ்ச்சி மிகவும் சூடான நிகழ்ச்சியாக இருக்கப் போகின்றது, ஆகவே இந்த நிகழ்ச்சியை சுடச்சுட பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதை குறிப்பிட்டது மட்டும் அல்லாமல் இன்று குளிரூட்டி இந்த மண்டபத்திலே வேலை செய்யவில்லை என்று அறிய தந்திருக்கின்றார்கள், அதற்காக மனம் வருந்துகின்றார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். என்ன செய்வது இப்படியான நிகழ்வுகள் நடத்துனர்களுடைய கையில் இல்லை தானே சரி பொறுத்துக் கொள்வோம் என்று நம்மையே நாம் சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தோம். 


சப்தஸ்வரா இசை குழுவினருடைய இசையிலே இந்த நிகழ்வு இடம்பெற்றது சப்தஸ்வரா இசைக் குழு திரு பாலா அவர்களின் இசை குழுவாக இருந்தது. நீண்ட காலங்கள் இந்த இசைக் குழுவை சிட்னி மேடைகளிலே நாம் காண முடியாமல் இருந்தது மீண்டும் அந்த இசைக் குழு இந்த நிகழ்விலே ஆரம்பமாகி இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது. பாலாவை மேடையிலே பார்த்தது உண்மையிலேயே மகிழ்ச்சி, சிறப்பான இசை நிகழ்வுகளை தருவார் என்று நம்பலாம்.


அந்த இசைக் குழுவின் ஆரம்ப இசை முடிந்ததன் பின்பு இந்திய பாடகி ரக்க்ஷிதா அழைக்கப்பட்டார். நிகழ்விலே முதல் பாடல் மக்களை கட்டி போட வேண்டும், அப்படி ஒரு பாடகர் மேடையிலே வந்திருக்க வேண்டும் ஆனால் ரக்க்ஷிதாவினுடைய முதல் பாடல் என்னைப் பொருத்தளவில் பெரிதாக கவர்ந்து கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ஒரு பாடலையும் பாடுகிறார். உண்மையிலேயே ரக்க்ஷிதா மேற்கத்திய இசை பாடல்களை பாடுவதில் மிகவும் திறமையானவர், அவருடைய குரல் வளத்திற்கு அந்தப் பாடல்கள் மிக நன்றாக இருக்கும் ஆனால் மேடையிலே அவர் வந்து தந்த பாடல்கள் அவருடைய குரலுக்கு மெருகூட்டக்கூடிய வகையிலே அமையவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அடுத்து பவதாயினி வந்திருக்கிறார் சத்திய பிரகாஷ் இருக்கின்றார் என்று ஆறுதலாகவும் இருந்தது.




அடுத்து ஈழத்து இசை வாரிசு கண்ணன் அவர்களுடைய பேத்தி பவதாயினி மேடை யிலே வந்து தந்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது அந்த பாடல் நாம் எல்லாம் அதிகமாக கேட்டு ரசித்த பாடல் என்ற காரணமும் ஒன்றாக இருக்கலாம் அது அவருடைய குரலுக்கு மிகவும் அமைந்திருந்தது ஆகவே நிகழ்ச்சி சற்று சூடுபிடிக்க தொடங்கியது.


பின்பு புதிய பாடகர் ஒருவர் வருகின்றார் என்று ஒரு அறிவிப்பு கிடைத்தது. உள்ளூர் பாடகர் முதல் முறையாக மேடையிலே பாட வருகின்றார் என்று குறிப்பிட்டார்கள் மேடைக்கு வந்தவர் ஜதுசன் ஜேசுராசா. ஜதுசன் சகோதரர்களே இருக்கின்ற எல்லா மேடைகளிலுமே வாழ்த்திய இசை கருவிகளை மீட்டிக் கொண்டிருப்பவர்கள். ஆனால் இன்று அவர் ஒரு பாடகர், இசை குழுவிலே இசையை மீட்டினாலும் கூட ஒரு பாடகராக வந்தார். அவர் பாடிய முதல் பாடல் மிக அற்புதமாக இருந்தது. 




சத்திய பிரகாஷ் வந்ததும் கேட்கவும் தேவை இல்லை. அவரது பாடலான ராசாளியே ராசாளியே நில்லு என்ற பாடல் பல மேடைகளிலேயே கேட்டிருக்கின்றேன் ஆனால் இந்த மேடையிலே அவர் பாடியது மிகவும் நன்றாக இருந்தது என்று தான் கூற வேண்டும். மிக அற்புதமாக இருந்தது. அதுவும் இசை மிக நேர்த்தியாக அமைந்திருந்தது குறிப்பாக இந்த இசையை பற்றி குறிப்பிடுகின்ற போது வயலின் வாசித்துக் கொண்டிருந்த அகலிகா பாவலன் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும். அருமையான பின்னணி இசை வழங்கிக் கொண்டிருந்தார் அதேபோல் புல்லாங்குழல் இசையை ஜதுஷன் ஜேசுராசா மிக அழகாக தந்து கொண்டிருந்தார். சாருவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இசையை வழங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லோருமே மிக நன்றாக தந்தார்கள் என்று தான் கூற வேண்டும். அவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கரகோசம். இருந்தாலும் சிலபாடல்களுக்கு -சி போடப்பட்ட்து ஏனோ?



சபையினர் பாடல்களை ரசித்தார்கள் இப்படி தொடர்ந்து சென்று கொண்டிருந்தது இடைவேளையின் போது நல்ல இரவு உணவு வழங்கியிருந்தார்கள் பழைய மாணவிகள் மஞ்சள் உடைஅலங்காரத்துடன் அங்குமிங்குமாக ஓடி திரிந்ததும் அழகாகத் தான் இருந்தது. ( இவ்வளவு பேர் இருந்தும் இருக்கைகளுக்கு ஏன் இலக்கமிட முடியாமல் போனது?)


அடுத்து வேம்படி பழைய மாணவியான ஜெயஸ்ரீ ஒரு பாடல் பாடுவார் என்றதும் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் ஜெயஸ்ரீ மல்லிகை என்மன்னன் மயங்கும் என்றபாடலை பாடினார். வாழ்த்துக்கள் .





இந்த வெக்கை என்ற ஒன்று இல்லாதிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வெக்கையின் தாங்க முடியாமல் இடையிலே எழுந்து வந்து விட்டது தவிர்க்க முடியாததாக இருந்தது. வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவிகளுக்கு ஒரு விண்ணப்பம் இப்படியான இசை நிகழ்வுகள் செய்கின்றபோது பாடல் தெரிவுகள், பாடல் ஒழுங்குகளில் கொஞ்சம் கவனமாக இருந்தால் நன்று. அதேபோல் என்னென்ன பாடகர்கள் என்னென்ன பாடலை பாட வேண்டும் என்ற தெரிவும் சரியாக செய்யப்பட வேண்டும் என்பதும் என்னுடைய அபிப்பிராயம். இது என்னுடைய அபிப்பிராயம் மட்டுமே.

(முறைத்துப் பார்த்துக் கொண்டு ஊர்க் குருவி சொன்னது, மண்டபம் ஒப்பந்தம் செய்யும் போதே குளிரூட்டி இல்லை என்று சொல்லப் பட்டதாம். உண்மையா என்று குருவியிடம் கேட்டுவிட்டு வந்தேன்)

அனைவருக்கும் பாராட்டுக்கள்.














No comments: