.
உலகம் பூராகவும் சினிமாக் கதையைக் கேட்பதும்,
சினிமாவைப்பற்றிப் பேசுவதும், அதனைப் பார்ப்பதும் மக்களிடம் அதிமாகிக் கொண்டே இருக்கின்றது.
சினிமாக்காட்சிகள் மனித மனதில் ஏற்படுத்தும்
காட்சிப்படிமங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அத்தகையதொரு வலிமையான
சாதனமாக நாம் சினிமாவைப் பார்க்கலாம்.
உண்மையில் ஒரு பயங்கரமான செய்தியை பத்திரிகையில்
படிக்கும்போது , அதனை ஒரு செய்தியாகப் படித்துவிட்டுக் கடந்துபோய்விடுவோம். ஆனால்,
அதே செய்தியை , அந்தக் கதையைக் காட்சியாக்கி,
மனித மனதை ஆராய்ந்து கலையாக மாற்றப்பட்டு திரைப்படமாகப்
பார்க்கும்போது வலிமையான ஊடகமாகிவிடுகின்றது. உணர்ச்சிகள் மேலோங்கி அவை ஒரு திகைப்பை
ஏற்படுத்திச் சாதனை படைத்துவிடுகின்றது.
அந்தவகையில் சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் எனத்
தொடர்ந்து இலக்கியப்பணியை வேகமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் முருகபூபதியின் சினிமா:
பார்த்ததும் கேட்டதும் என்ற நூலைப் பார்த்ததும், அவருக்கு சினிமாவைப்பற்றியுமா தெரியும்? ! என்று யோசித்து வாசித்தேன்.
அவருக்கென்றே உரிய அழகான எழுத்து நடையில் மிகுந்த
சுவாரசியமான செய்திகளோடும், நினைவுகளைச் செதுக்கும் புகைப்படங்களோடும் இந்த நூல் காணப்பட்டது.
யாழ். ஜீவநதியின் 274
ஆவது வெளியீடாக 2023
இல் வெளிவந்திருக்கும் இந்நூல், பதினாறு தலைப்புக்களுடன் 128
பக்கங்களைக் கொண்ட அடக்கமான நூலாகச் சிறப்புச் சேர்த்திருந்தது.
வருடத்தில்
குறைந்தது 200 திரைப்படங்களையாவது
பார்க்கிறேன் என்ற முருகபூபதியின் குறிப்பு என்னை அசத்திப்போட்டது.
நடிப்பு
என்பது ஒரு அற்புதமான கலைதான். ஆனால், எனக்கு
இந்த நூல் வாசனையின்போது அறிஞர் ஒருவர் கூறியதுதான் என்நினைவில் வந்தது.
‘தகுதியற்ற பலரின் வெற்றிக்கு இன்றைய உலகில்
இதுவும் ஒரு காரணம், உழைப்பவனை விட நடிப்பவன் வாழ்கிறான் உலகில்’ என்பதுதான் அது.
நிஜ வாழ்க்கையிலும் நடிக்கின்றவர்கள்தான் வெற்றியை
அடைகின்றார்கள். தற்போதைய சினிமாக்கள் சிலவற்றை பார்க்கும்போது எல்லாக் குப்பைகளையும்
வாரி இறைக்கிறதையும் அவதானிக்க முடிகின்றது. சினிமாக்கலை என்பது மனிதர்களுக்குக் கற்றுக்
கொடுக்கவேண்டும். அவர்களின் சிந்தனையில் ஒரு உணர்வைக் கொடுக்கவேண்டும். சினிமா ஊடகம்
உண்மையில் மனிதர்களின் மனதை அசைத்துப் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய சினிமா வரலாற்றில் ஜெயகாந்தனின்
பங்களிப்பை முருகபூபதி அற்புதமாக இந்நூலில் விவரிக்கின்றார். தனது கதைகளில்
மண்ணின் நெடி இருக்காது, மனிதர்களின் நெடிதான் இருக்கும் என்று சொன்னவர் ஜெயகாந்தன்
என்கின்றார் நூலாசிரியர்.
இந்திய
மக்களின் ஆன்மாவை தனது இலக்கிய படைப்புக்களிலும், தனது திரைப்படங்களிலும் பிரதிபலித்த
கலைஞனை, நூற்றாண்டு கண்டுவிட்ட இந்திய சினிமா கண்டுகொள்ளவில்லை என்று கவலை கொள்கின்றார்
முருகபூபதி.
ஆனால், உலக சினிமாவை அவதானித்துப் பார்த்தாலும் திறமையுள்ள
கலைஞர்கள் சிலர் கவனிக்கப்படாமலே இருந்திருக்கிறார்கள். அவர்களின் நோர்காணல்களைப் பார்த்தபோது
இதனை என்னால் உணர முடிந்தது.
கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்களுக்கு நடித்த நடிகர்களின் பட்டியல், என்னை சினிமாவைப் பின்னோக்கிப் பார்க்க வைத்தது.
தற்போதைய சினிமாவில் ஆர்வமுள்ள தலைமுறையினருக்கு இவை முக்கிய பதிவாக எண்ணத் தோன்றுகின்றது.
சக எழுத்தாளர்களையும் தட்டிக்கொடுக்கும் கலைஞர் அவர்களின் வசனத்தில் வெளியான திரைப்படங்களையும்
பட்டியல் போட்டிருப்பது பிரமாதம்.
காலத்திற்கேற்ற கருத்துச் செறிவுள்ள வசனங்களால்
சாதனை படைத்த கலைஞர் அவர்களது அரசியல் பற்றி அக்கப்போர் நடத்தும் கற்றுக்குட்டிகள்
அவரிடம் கற்கவேண்டிய பாடங்கள் அநேகம் என்று அக்கட்டுரையை நிறைவுசெய்கின்றார் ஆசிரியர்.
‘ஓம்பூரி’ என்ற ஹிந்தி நடிகர் நடித்த அர்த்சத்யா – பாதி உண்மை ( In Custody )
என்ற சினிமாவைக் குறிப்பிட்டுக் கூறுகின்றார்.
பொலிஸாரின் அட்டகாசத்தால் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தை இந்தப்படத்தைப்
பார்த்த பின்னர் தான் புரிந்துகொண்டதாகக் கூறும் ஆசிரியர், ‘இந்தச் சமூகத்தில் எது
உண்மை..? எது பொய்மை...? இரண்டுக்கும் நடுவே ஒரு நேர்மையான பொலிஸ் இன்ஸ்பெக்டரின் நிலை
என்ன...? என்பதை ரசிகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடும் ‘அர்த்சத்யா’ என்ற படத்தை ஹிந்தி
தெரியாதே’ என்ற கவலையை விட்டு பாருங்கள் என்கின்றார்.
‘தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும்’ என்ற கட்டுரையில், ஒவ்வொரு மனிதரிடத்திலும் கதைகள் இருக்கின்றன. அவை
சிறுகதைகளிலும் நாவல்களிலும் பரிணமித்து திரைப்படமாகும்போது அதன் வடிவம் மாறித்தான்
போகின்றது. அந்தவகையில் கல்கி கிருஷ்ணமூர்த்தி - அண்ணாத்துரை முதற்கொண்டு இலங்கையில்
செங்கை ஆழியான், காவலூர் ராஜதுரை வரையிலான படைப்பாளர்களை பட்டியல்போட்டுக் காட்டுகின்றார்
முருகபூபதி. உமாச்சந்திரனின் ‘முள்ளும் மலரும்’ என்ற நாவலுக்கு மகேந்திரன் திரைக்கதை
வசனம் எழுதி பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் உருவான இப்படம் தமிழ்திரைப்படங்களில் தரமான
படமாக இன்றுவரை பேசப்படுவதை முருகபூபதி சுட்டுகின்றார்.
‘கவிதையும் திரைப்படப் பாடல்களும்’ என்ற கட்டுரையில், முன்னைய காலத்தில் இலக்கியம் கவிதை,
காவிய வடிவங்களிலேயே தோன்றின. இன்றோ பல்வேறு வடிவங்களாகிக் காணப்படுகின்றன. தமிழ்த்திரைப்
படங்களில் அன்றைய கவிதையின் செல்வாக்கினையும், கவிஞர்களையும் விதந்து கூறுகின்றார்
முருகபூபதி. முகநூல் அறிமுகமானதன் பின்னர், ஏராளமான கவிஞர்கள் தமிழ் உலகில் தோன்றிவிட்டனர்.
இவர்கள் முன்னைய காலத்துப் புலவர்களையும் கவிஞர்களையும் விஞ்சிவிடுவார்களா...? புது
வெள்ளமாக அடிபட்டுப் போய்விடுவார்களா...? கோரோனாவுக்கு காலம் பதில் சொல்லும் என்பது
போன்று இக்கால மீம்ஸ் உலகில் புதுக்கவிஞர்களுக்கும் காலம் பதில் சொல்லலாம் என்கின்ற
கேள்வி பதில்களோடு அவரின் கவிதை பற்றிய கருத்துச் சற்று என்னைச் சிந்திக்க வைத்தது.
உலகப் புகழ்பெற்ற திரைமேதையும், யதார்த்த சினிமாவின் பிதாமகனுமான சத்தியஜித் ரே அவர்களுக்கும், மிகச்சிறந்த ஒளிப்பதிவுக்
கலைஞரான பாலுமகேந்திராவிற்குமான சந்திப்புக்களை அற்புதமாகக் கூறுகின்றார் முருகபூபதி.
முப்பத்தாறு படங்களை இயக்கி ஆஸ்கார் விருதுகளை
பெற்றவரான சத்தியஜித் ரேயின் படங்களைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக பாரிசில் ‘நொவாசியல்’
என்ற இடத்தில் நான் வாழ்ந்த காலத்தில் அங்கு அமைந்திருந்த சினிமாத்திரையரங்கில் காண்பித்திருந்தார்கள்.
அதனை ஒன்றுமே தவறவிடாது என் தந்தை அகஸ்தியர்
பார்த்ததும், சில திரைப்படங்களை முக்கியமாக ‘பதேர் பஞ்சாலியை’ அவருடன் இணைந்து நான்
பார்த்த சந்தர்ப்பமும் இக்கட்டுரையை வாசிக்கையில் தவிர்க்க முடியாமல் நினைவில் ஊர்கிறது.
கெமராவால் கதை சொல்லும் ரேயின் அற்புதக் கலையை
அதில் நான் கண்டேன். சிறந்த ஓவியருமான சத்தியஜித்ரே பாலு மகேந்திராவின் ஆசான். பாலு மகேந்திராவின் கெமராக் கலை வண்ணமும் அற்புதமானவை.
அவரது அழியாத கோலங்கள் போன்று அழியாத்தடம் பதித்துள்ளமையை முருகபூபதி அழகாகவே பதிவு
செய்கிறார். பாலுமகேந்திரா தன் வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்தாலும், சிறந்த திரைப்படக் கலைஞரான இவர் என்றும் போற்றுதற்குரியவர்.
கரிசல்
இலக்கியவாதியான கி. ராஜநாராயணன் குறித்து பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பேசியதைக்
கேட்டிருக்கிறேன். ’சிலையாகும் சரித்திரங்கள்’ என்ற கட்டுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன்
மடிந்த மண் கயத்தாறைக் கடந்து தான் திருநெல்வேலிக்குச்
சென்றதைக் கூறும் முருகபூபதி , ‘1799 ஆம்
ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம்
திகதியன்று பிரித்தானிய மேஜர் பானர்மேனின் உத்தரவுக்கு அமைய தனது கழுத்தில் தானே தூக்குக்
கயிற்றை மாட்டிக்கொண்டு உயிர்துறந்த அந்த வீரனுக்கு அவன் மறைந்த பின்னர், அந்தப் புளியமரமும்
பட்டுப்போனதையடுத்து, ஊர்மக்கள் கற்களைகப்போட்டு குன்று போன்ற பெரிய கற்குவியலையே நினைவுச்
சின்னமாக எழுப்பியிருந்தபோது தமிழ் சினிமாவில் தோன்றிய கட்டப்பொம்மன் வந்து அள்ளிச்
சென்றுவிட்டானே என்பதுதான் கி.ராஜநாராயணனின் தார்மீகக் கோபம்’ என்று துணிச்சலாகப் பதிவு
செய்துள்ளார் முருகபூபதி.
சிங்களத் திரையுலகில் சிறந்த இயக்குனராக விளங்கிய லெஸ்டா ஜேம்ஸ் பீரிஸ் அவர்களை
இந்தியத் திரையுலக மேதை சத்தியஜித் ரேக்கு நிகரானவராக வர்ணிக்கின்றார் முருகபூபதி.
முற்போக்குச் சிந்தனையும் இடதுசாரிக் கொள்கைகளையும் கொண்டிருந்த லெஸ்டர், சமூகப் பார்வைகொண்ட யதார்த்தமான கதைகளையே தனது படங்களுக்கு
தெரிவு செய்து வெற்றி கண்டவர்.
கண்டியில்
அவருடைய திரைப்படங்களை என் தந்தையோடு பார்வையிட்டிருக்கிறேன். முருகபூபதி அவர்கள் பல
படங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தாலும், நான் பார்த்த படங்கள் நினைவில் இப்போது இல்லை. அந்தப்படங்களைப்
பார்க்கும்போது தந்தை பல விளக்கங்களை எனக்கு வழங்குவார்.
முருகபூபதி அவர்கள் போன்று என் தந்தையும் ஒரு
சினிமாப்பிரியர். சிங்கள நாவல்களையே படமாக்கிய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள் ‘எதை
வேண்டுமானாலும் திரைப்படமாக்கலாம். ஒரு டெலிபோன் டிரக்டரியை வைத்துக்கூடப் படமெடுக்கலாம்!
படைப்பாற்றலே முக்கியம்’ என்று அந்த மகா கலைஞர் கூறியதை முருகபூபதி அவர்கள் பதிவு செய்திருப்பது
மிகச்சிறப்பு.
சிங்களச் சினிமாவைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்திய இயக்குநர் கலாநிதி தர்மசேன
பத்திராஜவுடனான நேரடி அனுபவங்களையும் முருகபூபதி
பதிவு செய்தமை அருமை. மெல்பன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில்
பெங்காலி திரைப்படங்கள் தொடர்பான தமது கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொள்ள வந்தவேளை பத்திராஜாவோடு
பல்வேறு சிறந்த கலைஞர்களை சந்தித்து கலந்துரையாடியமையை முருகபூபதி சுவைபடக் கூறிச்
செல்கின்றார்.
பிரான்ஸ் காஃப்கா (
Franz Kafka ) எழுதிய
உருமாற்றம் (
Metamorphosis ) என்னும் நாவலை அடிப்படையாக வைத்து சிங்கள
திரைப்படத்தை இயக்கி மெல்பனில் திரையிட வந்தபோது அவருடன் பழகிய அருமையான அனுபவங்களை
முருகபூபதி ஆவணமாக்கியுள்ளார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான ஈழத்துக் கலைஞர் காவலூர்
ராஜதுரையின் ‘பொன்மணி’ என்ற திரைப்படம் 1976
இல் வெளியாகி உள்ளது. இலங்கை வானொலியில் கடமை புரிந்த அவர், அ.ந. கந்தசாமியின் ‘மதமாற்றம்’ என்னும் நாடகத்தைத்
தயாரித்து மேடையேற்றியவர். அவருக்குத் தமிழ் படம் எடுக்கவேண்டும் என்ற விஷப்பரீட்சை
யோசனை எவ்வாறு வந்தது என்று வியக்கும் முருகபூபதி, அந்தத் திரைபடத்தில் நடித்துப் பங்கேற்றவர்களைப்
பதிவு செய்கின்றார்.
பேராசிரியர் நந்தி, அவரது தம்பி
திருநாவுக்கரசு, கமலா தம்பிராஜா, திருமதி ராஜேஸ்வரி கதிரவேலு, சில்லையூர், கமலினி,
திருமதி காவலூர், பரராஜசிங்கம், பவானி ரீச்சர், குழந்தை சண்முகலிங்கம், மௌனகுரு, சித்திரலேகா,
சர்வமங்களம் கைலாசபதி, சோக்கல்லோ சண்முகம், பாலச்சந்திரன் போன்றவர்களை பதித்துச் செல்கின்றார்.
அவரின் அனுபவ நினைவுகள் வரிகளுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பது மகிழ்வைத் தருகின்றது.
பிரசன்ன விதானகேயின் ‘புரஹந்த களுவர’ (
Death on a Full moon day – பௌர்ணமியில் ஒரு மரணம் )
என்ற
திரைப்படத்தைப்பற்றி ஒரு கட்டுரையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். அதாவது ஈழப்போராட்டத் தாக்குதலில் உடல் சிதறிய சிங்கள இராணுவ ஊழியன் பண்டாரவின் உடல் மூடிய சவப்பெட்டியோடு
அடக்கம் நடக்கிறது.
கண்பார்வை குறைந்த அவனது தந்தை வின்னிஹாமியின்
உணர்வுகளையும், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் திரைக்கதையை உள்வாங்கி, நெஞ்சைத் தொடும்வகையில்
விவரிக்கின்றார் முருகபூபதி. சவப்பெட்டிக்குள்
வாழைக்குற்றிகளும், பருமனான கருங்கற்களுமே காணப்படுகின்றன. இலங்கையில் நீடித்திருந்த
இனப்பிரச்சினையால் மூவின மக்களின் பாதிப்பைப் புலப்படுத்தும் வகையில் நகர்கிறது கட்டுரை.
இத்திரைப்படத்தை லண்டனில் திரையிட்டபோது நான்
பார்த்ததும் , அதன் இயக்குநர் பிரசன்ன விதானகேயோடு சந்தித்துப் பேசியதும் ஞாபகத்தில்
வந்து போகிறது.
சினிமாவும் சாயலும் - தழுவலும் - திருட்டும் - எதிர்வினைகளும்! என்ற கட்டுரையை மிக அவதானமாகக் கையயாண்டு நகர்த்துகிறார்
ஆசிரியர். பல்வேறு சம்பவங்களைத் தழுவித்தான் அந்த திரைப்படம் வந்தது.
அதைத்
திருடிப் பெயரை மாற்றி இது வெளிவந்துவிட்டது என்று எழுத்துலகிலும், கலையுலகிலும் கேட்ட
தொடர்கதைதான்.
திருடிவிட்டார்கள் எனும்போது சிலர் அது பற்றி
அலட்டிக்கொள்ளாமல் நகர்ந்து விடுகின்றதையும் பார்க்க முடிகின்றது. அதுபோன்று எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் 1987
இல் வெளிவந்த ‘தில்லையாற்றங்கரை’ பின்தங்கிய கிராமத்தின் மக்களின் இயல்புகளைச்
சித்தரிக்கும் நாவல் போன்று தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் ஆயிரக்கணக்கான பின்தங்கிய
கிராமங்கள் இன்றும் இருக்கின்றன என்று சுட்டிச் செல்லும் முருகபூபதி அவர்களின் சாணக்கியமான
எழுத்தைப் பாராட்டுகின்றேன்.
முன்னாள் ஜனாதிபதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்த்தனா உகண்டா இடி அமீன் தோற்றங்களிலும்
இருவர் வருகின்றனர் இருவருமே நிறைவேற்று அதிகாரங்களை தம்வசம் வைத்துக் கொண்டிருந்தவர்கள்
என்பதையும் ‘பிறசிடன்ற் சுப்பர் ஸ்ரார்’ என்ற திரைப்படம் பற்றி பதிவு செய்கின்றது
என்கிறார் முருகபூபதி. இத்திரைப்படத்தை விரைவில்
பார்க்கவேண்டுமென்ற ஆவலை இக்கட்டுரை தூண்டுகிறது.
உண்மையில் இந்த நூலை கையில் எடுத்ததும், பக்கங்களும் அளவாக இருந்தமையால் , முழுவதையும் வாசித்து
முடிக்க வேண்டும் என்ற அளவுக்கு சுவை குன்றாமல் இருந்தது. முருகபூபதி அவர்களை வாழ்த்தி நிற்கின்றேன்.
No comments:
Post a Comment