ஆயுர்வேத மருத்துவர் வி.ரி இளங்கோவன், ஆக்க இலக்கியவாதியான கதை ! - முருகபூபதி

 .

ஆயுர்வேத மருத்துவர் வி.ரி இளங்கோவன், ஆக்க இலக்கியவாதியான கதை ! இலங்கை - இங்கிலாந்து தமிழ் இலக்கிய நிறுவகங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் ! ! 









பிரான்ஸில்  புகலிடம்பெற்றுள்ள  எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனை,   யாழ்ப்பாணத்தில்  அரை நூற்றாண்டுக்கு முன்னர் நான்  முதல் முதலில்  சந்தித்தபோது,  அவர்   சீனச்சார்பு  கம்யூனிஸ்ட்டுகளின்  முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த   தோழர்  சண்முகதாசன்,   யாழ்ப்பாணத்திலிருந்த  மூத்த   எழுத்தாளர்  கே. டானியல்  மற்றும்  கட்சித்தோழர்  இக்பால் ஆகியோருடன்  மிக  நெருக்கமான  தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார்.

இத்தனைக்கும்  இவர்  ஆயுர்வேதம்  படித்தவர்.   அத்துடன் பிலிப்பைன்ஸில்   நடந்த  ஆயுர்வேத  வைத்தியர்களின்  மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.   இயற்கை   வைத்தியத்துறையில்  பல நூல்களையும்   எழுதியிருந்தவர்.   மூலிகைகள்  பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர்.

அத்துடன்  சிறுகதை,  கவிதை,  கட்டுரை,  பத்தி  எழுத்துக்கள், விமர்சனங்கள்   எழுதியவர்.  கட்சியின்  தொண்டனாகவே தோழர்களுடன்  ஊர்சுற்றியவர்.  தனக்கென  ஒரு கிளினிக்கை   யாழ்ப்பாணத்தில்   தொடங்கியிருந்தாலும்,  நோயாளருடன்  நேரத்தை செலவிடவில்லை.   அவரது  வாழ்க்கை   கட்சித்தோழர்களுடனும்    இலக்கியவாதிகளுடனுமே   நகர்ந்தது.

  கலை,  இலக்கியக் குடும்பத்திலிருப்பவர். அவருடைய  அண்ணன்  மூத்த  எழுத்தாளர்  நாவேந்தன்.   துரைசிங்கம்   மற்றும்  ஒரு  எழுத்தாளர்.  சட்டத்தரணி   தமிழ்மாறன் அரசியல்  ஆய்வாளர்.    இளங்கோவனின்  மனைவி  பத்மா  சிறுவர் இலக்கியம்  படைப்பவர்.  இளங்கோவனின்   புதல்வி  ஓவியா  திரைப்படத்துறையில்  தொகுப்பாளர்.

1983  ஆம்  ஆண்டு  தொடக்கத்தில்  எமது  முற்போக்கு  எழுத்தாளர் சங்கம்   நாடாளாவிய  ரீதியில்  பாரதி  நூற்றாண்டு  விழாவையும் பாரதி   நூல்களின்   கண்காட்சியையும்  ஈழத்து  எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது.  இக்கண்காட்சிக்குழுவில்   நான்   இருந்தேன்.  முதல்  விழா  கொழும்பில்  தொடங்கியது.

முற்போக்கு   இலக்கிய  முகாம்  இரண்டாகப் பிளவுபட்டிருந்த  காலம். டானியல்,    அவரது  மச்சான்  ரகுநாதன்,   இளங்கோவன்,  சில்லையூர் செல்வராசன்,   புதுவை   ரத்தினதுரை,  தேவி  பரமலிங்கம்,  பொன். பொன்ராசா,   நல்லை   அமிழ்தன்,   நந்தினி  சேவியர்,  டானியல் அன்ரனி,   இராஜா   தர்மராஜா  ஆகியோர்  இணைந்து திருகோணமலையில்  ஒரு  மாநாட்டை  நடத்தியிருந்த  காலம்.

யாழ்ப்பாணத்தில்   மல்லிகை ஜீவா,   இவர்கள்  மத்தியில்  மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின் யாழ். மாவட்ட   செயலாளராக  அவர்  இருந்தார்.   அந்தப்பிளவை   ஜீவா வரவேற்கவில்லை.   இலக்கியவாதிகளிடம்  கருத்துமுரண்பாடுகள் வந்தால், அவரவர்   குடும்ப  நிகழ்வுகளுக்கும்  அழைப்பு அனுப்பத்தவறும்    கடும்போக்கும்  அப்பொழுது  நிலவியது.  வருத்தத்திற்குரியது.

முற்போக்கு   இலக்கிய  முகாம்  இவ்வாறு  பிளவுபட்டிருந்தாலும் அனைவருடனும்    நான்   சகஜமான உறவைப் பேணிக்கொண்டிருந்தேன்.  யாழ்ப்பாணத்திலிருக்கும்   எழுத்தாளர்களின்  ஒளிப்படங்களும்     வாழ்க்கைக் குறிப்புகளும்  எமது கண்காட்சிக்குத் தேவைப்பட்டது.  ஆனால்,  எமது  சங்கத்துடன் முரண்பட்டுள்ளவர்களிடமிருந்து    எவ்வாறு  அவற்றை   வாங்குவது ? மல்லிகை ஜீவா  தம்வசம்  இருக்கும்  படங்களைத் தந்தார்.   எனது தூண்டிலில்  முதலில்  சிக்கியவர்  நண்பர்  இளங்கோவன்.   வடபகுதி எழுத்தாளர்களின்   இந்த  புடலங்காய்  இசங்கள்  பற்றிய  கவலை எனக்கு    இருக்கவில்லை.

( இளைஞர்   இயக்கங்கள்  ஆயுதம்  ஏந்தியதும்  இசங்களும்  அங்கு மௌனித்தது  என்பது  வேறுகதை )

இளங்கோவனிடமே  சென்றேன்.   அவர்  என்னை   தமது மனைவியின்    கொழும்புத்துறை   இல்லத்திற்கு  அழைத்துச்சென்று உபசரித்தார்.

பாரதி  நூற்றாண்டு  விழாவுக்கு  தமிழ்நாட்டிலிருந்து வரவிருக்கும்   எழுத்தாளர்கள்  பற்றிச் சொன்னேன்.   கண்காட்சியின் தேவையை    உணர்த்தினேன்.   இளங்கோவன்  ஊடாக  அவரது இலக்கிய      தோழர்களை   அரவணைக்க  விரும்பினேன்.   டானியல்    மாத்திரம்  படம்  தருவதற்கு  ஒப்புக்கொண்டார். விழாவுக்கு    வரவிருந்த  மாக்ஸீய  அறிஞர்  பேராசிரியர் இராமகிருஷ்ணன்,   முற்போக்கு  எழுத்தாளர்  சிதம்பர  ரகுநாதன், விவசாய   தொழிலாள  பாட்டாளி  மக்களின்  வாழ்வை   தொடர்ந்தும் இலக்கியமாக்கிய    ராஜம்  கிருஷ்ணன்  ஆகியோர்  பற்றி  நன்கு அறிந்தவர்   டானியல்.

வரும்    விருந்தினர்களிடம்  உள்ளுர்  பிரச்சினைகளை  காண்பித்து அவர்கள்   முகம்  கோணலாகிவிடக்கூடாது  என்ற  

இளங்கோவனுக்கும்   அவ்வியல்பு  இருந்தது.   அதனால்   அவர் எமக்கு   ஆதரவும்  ஒத்துழைப்பும்  வழங்கினார்.   இலங்கையில் நானும்   அவரும்  இருந்த  காலத்தில்  மட்டுமல்ல,  பிரான்ஸுக்கு அவர்   புலம்பெயர்ந்து  சென்ற  பின்னரும்  எனது  நெருக்கமான நண்பராகவே   விளங்கினார்.

   2011  இல்  பல்வேறு  வெற்று வேட்டுச்  சவால்களுக்கு    மத்தியில்  நாம் கொழும்பில்  நடத்திய  முதலாவது சர்வதேச   தமிழ்  எழுத்தாளர்  மாநாட்டிலும்  கலந்துகொண்டார்.  

டானியலுடன்  இவருக்கிருந்த தோழமையை   பார்த்தால் -  இவர்  அவரது  அந்தரங்கச்செயலாளர் என்றே   நாம்   மதிப்பிடமுடியும்.     டானியல்  தமிழகத்திற்கு சிகிச்சைக்கு    சென்றபொழுது  உடன்  சென்றவர்  இளங்கோவன். அத்துடன்    டானியலின்   இறுதி நிகழ்வையும்  முன்னின்று நடத்தியவர்.

தஞ்சாவூரில்   பல   மாக்ஸீயத்தோழர்கள்  அடக்கமான மயானத்திலேயே    டானியலுக்கும்  கல்லறை   அமைத்தவர்.  தமிழகம் செல்லும்போதெல்லாம்    அந்தக்கல்லறையை   தரிசிக்கத் தவறாதவர்.

பாரதி  கண்ணனை   தனது  சேவகனாகப்பார்த்தது போன்று,   டானியலுக்கு   எங்கிருந்தோ  வந்த  தோழன்  -   சேவகன் -  அவரது இறுதிப்பயணம்  வரையில்   வந்தவன்  இந்த  இளங்கோவன்.

  இளங்கோவனும்  மாக்ஸீயப்பாசறையில்தான்  வளர்ந்தார்.  ஆயுர்வேத  வைத்தியராகவும்  விளங்கினார்.     எஞ்சியது  இலக்கியவாதி  என்ற  அடையாளம்  மாத்திரமே.    இதனைத் தக்கவைத்து  சாதித்தவர் !

இளங்கோவனின் நூல்கள் இந்தியிலும்    வெளியாகியிருக்கிறது.  இலக்கியம், மருத்துவம்  சார்ந்த  நூல்களை  வரவாக்கியவர். இதழ்களும் நடத்தி   நட்டப்பட்டாலும்,  அதனை   ஈடுசெய்யாமல், புதிய   பெயர்களில்  இதழ்களை   நடத்தியவர்.

அவர்  வெளியிட்ட இதழ்களைப்பாருங்கள்.

தமிழன்  ( 1969 - 70 )  வாகை  (1981 )  மூலிகை   (1985 -86)  நம்நாடு  (1989)  இதுதவிர   தமது  அண்ணன்  மூத்த  எழுத்தாளர்  நாவேந்தன்  நடத்திய   நாவேந்தன்  ( 1970 - 73 )   சங்கப்பலகை   (1998)  இவற்றில் நிருவாக  ஆசிரியர் .

புலம்பெயர்ந்து பிரான்ஸுக்குச் சென்ற பின்னரும்,  இதழ்கள் தொடங்கினார்.  சங்கப்பலகை ,   கவிதை   மஞ்சரி,  பரிசு  (சிறுவர் மஞ்சரி )  நடத்தி  ஓய்ந்தாலும்,  நூல்களை   பதிப்பிக்கும்  முயற்சியில்  இன்றுவரையில்  அவர் ஓய்ந்துவிடவில்லை.

தமிழர்  மருத்துவம்  அழிந்துவிடுமா...? என்ற  கேள்வியுடன்  அவர்  எழுதியிருக்கும்  கட்டுரைத்தொகுப்பு  நூல்   தமிழ்மக்கள்  அவசியம்  படிக்கவேண்டியது.     

இளங்கோவன்   பிலிப்பைன்ஸ்  நாட்டில்  ஐ.நா.  தொண்டராக  சமூக அபிவிருத்தி - மூலிகை  மருத்துவப் பணியாற்றிவிட்டு  1984 இல்      வடபகுதிக்குத்  திரும்பியபொழுது  அவரும் அவருடைய   தோழர்களும்  எதிர்பார்த்தவாறு  பல  தமிழ் இளைஞர்களிடம்  மாக்ஸீய  நூல்கள்  இருக்கவில்லை.  பதிலாக அவர்களிடம்   ஆயுதங்கள்தான்  இருந்தன.

கடைசிவரையில்   சித்தாந்தமும்  ஆயுதமும்  அங்கு இணையவேயில்லை.   

இளங்கோவன்   புங்குடுதீவைச் சேர்ந்தவர்.   தமிழ்  மக்களிடத்தில் முதலில்   கிராம  சுயராச்சியம் -  பொருளாதார  வளர்ச்சி -  சிரமதானம் குறித்து   சிந்தித்து  செயற்பட்ட  வட  இலங்கை  சர்வோதயத் தொண்டர்   திருநாவுக்கரசு  என்பவருக்கு  பக்கத்துணையாக இயங்கியிருப்பவர்.   வடபகுதியிலிருந்த     பெரிய  இயக்கத்தின்  பிரமுகருடன் உரையாடி  தமிழ்  மக்களிடம்  தமிழர்  மருத்துவம்  பற்றிய விழிப்புணர்வை    ஏற்படுத்துவதற்கு  ஏதும்  உருப்படியான  நடவடிக்கை   மேற்கொள்ளுமாறு  கேட்டார்.

தமிழர்   மருத்துவத்தை   ஏளனமாக  பார்த்த  அன்றைய  பல்கலைக்கழக  சமூகம்  இளங்கோவனை   ஒரு  கற்கால மனிதனாகத்தான்   அன்று  பார்த்திருக்கும்.  இன்று  காலம் மாறிக்கிடக்கிறது.   மீண்டும்  வந்த  வழிக்குத்திரும்பும்  வகையில் சித்த  மருத்துவ  பீடமும்  அங்கு  உருவாகியிருக்கிறது.

இலங்கை - இங்கிலாந்து தமிழ் இலக்கிய நிறுவகங்கள் இணந்து இளங்கோவனுக்கு விரைவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கவிருக்கிறது.

எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன்,  இலக்கிய மற்றும் சமுகப்பணிகளுக்காக  பெற்றிருக்கும் இதர விருதுகள் :

 இலங்கைப் பல்கலைக்கழகக் கொழும்பு வளாகத் தமிழ்ச் சங்கம் அகில இலங்கை ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்பிடம் – 1978.


இலங்கைக் கலையகம் - பிரான்ஸ் வழங்கிய கலை இலக்கிய - சமூகப் பணிகளுக்கான விருது - தங்கப்பதக்கம் –
1992.


*இலங்கை இலக்கியப் பேரவை - இலக்கிய வட்டம் - 'இளங்கோவன் கதைகள்" சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருது -
2006
பிரான்ஸ் 'ஆர். ரி. எம். பிறதர்ஸ்" - 22  ஆவது கலைத்தென்றல் விழா - கலை இலக்கியப் பணிக்கான விருது - தங்கப் பதக்கம்
– 2014. தமிழ்நாடு-  சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருது - 'இப்படியுமா" சிறுகதைத் தொகுதிக்கானது – 2014.

இலங்கை அரசின் கலாபூஷணம் விருது – 2014.

இளங்கோவனின் மேலும் சில நூல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.

---0---

Inbox

No comments: