சிகிச்சை முடிந்து திரும்பியிருக்கும் ஆசிரிய பெருந்தகை திருமதி வாசுகி தவபாலனை வரவேற்கின்றோம் ( யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவர்கள் )


யாழ் . வைத்தீஸ்வரா கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் தனது மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட  விடுப்பை  முடித்துக் கொண்டு தனது கடமையை மீண்டும் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

 கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.  நன்மை செய்பவர்களையும்


உண்மையாக சேவை செய்பவர்களையும் கடவுள் என்றுமே கருணையோடு அரவணைப்பார்.                             அந்த வகையில் எங்கள் அனைவரையும் காக்கும் வைத்தீஸ்வரப் பெருமான்  எங்கள் அனைவராலும் மதிக்கப்படும்,  விரும்பப்படும் அன்னையை காத்து மீண்டும் கல்விச் சேவை ஆற்றிட அடி வானில் காலைக் கதிரவன் பல வர்ணங்களுடன்  தனது ஒளிக் கதிர்களை பரப்பி உலகிற்கு ஒளியை கொடுப்பது போல் மீண்டும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுக்கு எடுத்துக்காட்டாய் வலம் வரும் அன்னையை வரவேற்பதில்   மகிழ்ச்சியடைகின்றோம்.

 அன்புக்கு தாயாய், கண்டிப்புக்கு தந்தையாய், ஆலோசனைக்கு


உற்ற நண்பராய், மாதா பிதா குரு தெய்வம் என்ற சொல்லுக்கு  அமைவாக செயலாற்றும் அன்னைதான்  திருமதி வாசுகி தவபாலன் அவர்கள்.  

 இவ்வாறு யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவ நண்பர்கள், நலன்விரும்பிகள்,  மற்றும்  யாழ் வண்ணார்பண்ணை சமூகத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  “ 2017 இல் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து எமது கல்லூரிக்கு மனப்பூர்வமான அர்ப்பணிப்புடன் தனது முழு நேர உழைப்பை செலுத்தி வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. எமது பாடசாலையை கல்வியிலும் இணைப்பாட விதானங்களிலும் பெரும் வளர்ச்சி அடைய செய்து வருகிறார். மாணவர்களின் வளர்ச்சிக்காக அதிபர் அவர்கள் எடுத்து வரும்,  எடுக்கவிருக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவையும் அனுசரணையையும் வழங்க தயாராக இருப்பதாக உலகெங்கிலும் வாழ்ந்து வரும் நமது முன்னாள் மாணவர்களும் மற்றும் மாணவர் சங்கங்களும்  தொடர்ச்சியாக தொலைபேசி ஊடாக உறுதி அளித்து வருகின்றனர் என்ற செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

 2016 -  2017   காலப்பகுதியில்  யாழ்.  வைத்தீஸ்வராவின் முதல் பெண் அதிபராக திருமதி வாசுகி தவபாலன் பதவியில் அமர்ந்தார். இவர் பாடசாலையைப் பொறுப்பேற்றபோது பாடசாலையின் மாணவர் தொகை 1968 ஆம் ஆண்டு இருந்ததிலிருந்து  ஏறத்தாழ ஐந்தில் ஒன்றாகக் குறைந்திருந்தது.

 இந்நிலையானது  பாடசாலையின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. ஆனாலும், அதிபரதும், ஆசிரியர்களதும் முயற்சியால் பொதுப் பரீட்சை அடைவுகளில் கடந்த காலங்களைவிட பாரிய முன்னேற்றத்தை  காண முடிந்தது.

  2017 முதல் 2020  காலப்பகுதியில் 18 தொடக்கம் 23 வீதமான மாணவர்கள்,  பல்கலைக்கழகத்தில் பிரவேசிக்கும்   அளவுக்கு  முன்னேற்றத்தை  காண முடிந்தது.   விளையாட்டிலும் ஏனைய பாடங்களிலும் புறப்பாட விதான செயல்பாடுகளிலும் மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில்  வைத்தீஸ்வரா மாணவர்கள் பங்குபற்றி உயர்ந்த இடங்களைப் பெற முடிந்தது .

 குறிப்பாக விளையாட்டுத்துறையில் வலைப்பந்து விளையாட்டு 2018 இல்  புதிதாக ஆரம்பிக்கப்பட்டு,  2018 2019 ஆண்டுகளில்  மாகாண மட்டத்தில்   சாம்பியனை பெற்றுக்கொண்டது.  அதே ஆண்டுகளில் புதிதாக அறிமுகம் செய்யப்படட   பலு   தூக்கல்  போட்டிகளில் மூன்று தங்க பதக்கங்களையும்,  இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் ஒரு  வெள்ளிப் பாதக்கத்தையும் பெற்று தேசியமட்டத்தில்  சாதனையை வைத்தீஸ்வர மாணவர்கள் பெற்றுத் தந்தனர் மேலும் தட்டெறிதல்,  குண்டெறிதல்,  நிலம் பாய்தல் போட்டிகளிலும் மாகாண மட்டத்தில் சாதனையை  எட்டியதுடன் தட்டெறிதல் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  மேலும் 2021 ஆம்  ஆண்டில் தேசிய மட்டத்தில் நடந்த  கடுரைப்போட்டியிலும் எமது மாணவர்கள்  முதலாம் இடத்தை எட்டிக்கொண்டனர்.

 பௌதீக வளங்களைப் பொறுத்த வரையிலும் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. 2018  ஆம்  ஆண்டு காலப்பகுதியில் மாணவர்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

 கிராமிய அபிவிருத்தித்   திட்டம் ஊடாக பாடசாலைக்கான குடிநீர் வசதிகள்,  அடிப்படை சுகாதார வசதிகள்,  நீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.   2019 இல் டெனிஸ் மைதானமும் இதே திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண பிரதேச சபையின்  அனுசரணையுடன் பெற்றுக்கொள்ளப்பட்டது.

  2018 இல்  சிறந்த பாடசாலைத்  திட்டத்தின்  கீழ் எமது கல்லூரி  உள்வாங்கப்பட்டு  ( சி திட்டம் )  இரண்டு  மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடமும் அமைக்கப்பட்டது .  இரண்டு மாடிகளைக் கொண்ட  புதிய நிர்வாகக் கட்டிடமொன்று 2021 ஆம் ஆண்டில் நிறைவடைந்துள்ளது.

 இவை  தவிர ரெனிஸ் மைதானம் ஒன்றும் இக்காலப்பகுதியில் அமைக்கப்பட்டது. 2020  ஆம் ஆண்டு அதிபர், உப அதிபர் அலுவலகங்களுடன் கூடிய விவேகானந்த மண்டபத்தின் முன்பகுதி  பழைய மாணவர்களின் நிதி அனுசரணையுடன் கனடா பழைய மாணவர் சங்கத்தின் முன்னெடுப்பில் புனரமைக்கப்பட்டது.

  அத்துடன் பாடசாலை நுழைவாயில்  பெயர் வளைவு லண்டன்  பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் புதிதாக அமைக்கப்பட்டது .  2021  இல் விபுலாநந்த மண்டபத்தின் கீழ்த்தளத்தின் உள்ள  ஆறு வகுப்பறைகள்,  பழைய மாணவர் களின் நிதி அனுசரணையுடன் கனடா பழைய மாணவர் சங்கத்தினால் முழுமையாக திருத்தம் செய்யப்பட்டது.

  அத்துடன்  சிறுவர்களுக்கான விளையாட்டு  முற்றமும் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினால் அமைக்கப்பட்டு   பல்வேறு மேம்பாடுகளுடன் புதுப் பொலிவு பெற்றுள்ளது.

 பாடசாலையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கான முயற்சியில்,  எமது  அதிபர் பழைய மாணவர்களுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

 பாடசாலையின் மாணவர் தொகையைத் தேவையான மட்டத்தில் பேணுவதற்கு ஆரம்பப் பிரிவை மீண்டும் தொடங்கவேண்டியதன் அவசியம் குறித்து 1980 களின் தொடக்கத்திலிருந்தே பாடசாலைச் சமூகம் உணர்ந்திருந்தது.

 எனினும் கடந்த 40 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையில், 2020 ஆம் ஆண்டில் அதிபர், பழைய மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் விளைவாக, ஆரம்பப் பிரிவைத் தொடங்குவதற்குக் கல்வித் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தது.

  2021 ஆம் ஆண்டிலிருந்து முதலாம் வகுப்புத் தொடங்கியுள்ளது.  இது வைத்தீஸ்வராவின் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும்.

 புதிதாகத் தொடங்கிய ஆரம்பப் பிரிவு வகுப்பறைகளையும், ஏனைய வகுப்பறைகளையும் நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதிலும் பழைய மாணவர்கள் அதிபருடன் இணைந்து செயற்படுகின்றனர்.  இவ்வாறான செயற்பாடுகள் வைத்தீஸ்வரா ஒரு கல்வி நிறுவனமாகத் தனது பாரம்பரியங்களைப் பேணவும், பிரபல பாடசாலைகளுக்கு நிகராக மாணவர்களுக்குக் கல்வியை வழங்கவும் உதவும் என நம்பலாம்.

 மேலும் 2017 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப் பகுதியில் பாடசாலை பாடவிதானம், ,இணைப் பாடவிதான செயற்பாடுகளில் மட்டுமன்றி ஏனைய சகல விடயங்களிலும் கூட உன்னத நிலையை எட்டியுள்ளது என்றே கூறவேண்டும். 2007 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த எமது பாடசாலை எந்தளவுக்கு தரமானது எனும் தேசிய ரீதியான வருடாந்த வெளிவாரி மதிப்பீட்டின் அடிப்படையில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் பாடசாலைக்கான கல்விப் பண்புத்தரச்சுட்டி  S E Q I 68 பெற்று நன்று எனும் பண்பு நிலையையும், 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் S E Q I 72   ஐப் பெற்று பாடசாலையின் பண்புத்தரம்  மிகநன்று எனும் பண்பு நிலையை எட்டியுள்ளது.

 2010 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம்  சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் குருபிரதீபா பிரபா விருதினை 2017ஆம் ஆண்டு முதல் தொடர்சிசியாக ஆசிரியர்கள் பெற்றுவருவது மட்டுமன்றி 2019 இல் முதன்முறையாக எந்தப் பாடசாலையிலும் இல்லாதவாறு  எமது பாடசாலையில் அதிபர் உட்பட 5 ஆசிரியர்கள் மாகாண மட்டவிருதினையும்  முதன்முதலில் அதிபர் உட்பட மூன்று அசிரியர்கள் தேசியமட்ட குருபிரதீபா பிரபா விருதினையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

 1993 இல் ஆரம்பிக்கப்பட்டு இருவருடங்களுக்கு ஒருமுறை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடத்தப்பட்டுவரும் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் எமது பாடசாலை 2018  ஆம் ஆண்டு முதன்முறையாகப் பங்குபற்றி பாடசாலைக்கான தேசியமட்ட உற்பத்தித்திறன் தகைமைச் சான்றிதழ் விருதினையும்  பெற்றுக் கொண்டது.

 ஆந்த வகையில் பாடசாலை வரலாற்றில் 2017-2023 ஆம் ஆண்டுகளின்  காலப்பகுதியானது வறுமைக் கோட்டிற்குட்பட்ட குறைந்த எண்ணிக்கையான மாணவரைக் கொண்டிருந்தாலும்,  பாடசாலை சகல துறைகளிலும் தேசிய மட்ட விருதுகளைப் பெற்று வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது மட்டுமன்றி , நகரின்  பிரபல பாடசாலைகளுக்கு நிகராக மாணவர்களுக்குக் கல்வியை வழங்கும் நிறுவனமாக திகழ்கின்றது எனலாம்.

 

 

 

 

 

 

 

No comments: