வடக்கும் – தெற்கும் இணையும் காலம் வருமா..? அவதானி


இலங்கையில் மக்கள் அன்றாடாம் உண்ணும் அரிசி, பாண் மற்றும்  அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் உட்பட  பயன்படுத்தும்  எரிபொருள் என்பன விலையேறும்போது,  தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்குமே பொதுவாகத்தான் உயர்கிறது.

ஆனால்,  அரச வேலை வாய்ப்பு, பதவியுயர்வு என வரும்போது மாத்திரம்  இனரீதியாக – பெரும்பான்மையினருக்கு மாத்திரம் சலுகைகள் கிடைத்துவருகிறது.

இந்த இனமுரண்பாடு,  தொடர்ந்தமையால்தான் இலங்கையில்


தமிழின விடுதலைப்போராட்டம் 1980 இற்குப்பின்னர் எழுச்சிகொண்டது.

அதற்கான அறிகுறி 1972 இல் உருவான புதிய அரசியல் அமைப்புவிதிகள் காரணமாகியிருந்தன.  அதற்கு முன்னர் 1971 இல்  தென்னிலங்கை சிங்கள இளைஞர்கள், ஆயுதப்போராட்டம் மூலம் எழுச்சிகொண்டனர்.  எனினும் இந்தப்போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன்,  நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் குற்றவியல்  நீதி ஆணைக்குழுவின் முன்னால் நிறுத்தப்பட்டு அரசியல் கைதிகளாக சிறையில் தள்ளப்பட்டனர்.

இக்காலப் பகுதியில்  சிறைகளிலிருந்த சிங்கள – தமிழ் இளைஞர்கள் தங்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர். அவர்களினால் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை.

வேறு வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் விடுதலையாகி வந்தபின்னரும் நேருக்கு நேர்  சந்தித்த பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை.

எனினும்,  வேலுப்பிள்ளை பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் இணைந்திருந்த  ஆரம்பகால இயக்கத்தின் பிரசுரமாக வெளியான ஒரு புத்தகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோண விஜேவீரா குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வழங்கிய சாட்சியத்தின் ஒரு பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

அதனை சிறையிலிருந்து விடுதலையானதன்பின்னர் ரோகண விஜேவீராவும் பார்த்தார்.  அவரும் தமிழ் படிக்க முயன்றார்.  1978 ஆம் ஆண்டு  நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது போட்டியிட்டு மூன்றாம் இடத்திற்கு வந்த விஜேவீரா,  குறிப்பிட்ட தேர்தல்காலத்தில் தொலைக்காட்சியில் தோன்றி தமிழிலும் பேசினார்.

ஆயினும்,  வடக்கில் உதயமான தமிழின விடுதலை இயக்கங்களுடன் அவர் பேச்சு வார்த்தைகளை நடத்தவில்லை.  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும் அவரிடம் சரியான  தெளிவான விளக்கம் இருக்கவில்லை.

அவரது காலத்திலேயே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வந்த விஜயகுமாரணதுங்க,  ( சந்திரிக்காவின் கணவர் ) வடக்கின் தமிழ் விடுதலை இயக்கத்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். தமிழ்நாட்டுக்குச் சென்று, உமா மகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரையும் சந்தித்தார்.

ஆயினும்,   வடக்கும் தெற்கும்  ஒரு பொது நோக்கத்தில்தன்னும் புரிந்துணர்வுடன் ஒன்றிணையவில்லை.

ராஜீவ் காந்தி – ஜே. ஆர். ஜெயவர்தனா உருவாக்கிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போது  சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.  அதனால்,  புளட்  இயக்கத்தலைவர் உமா மகேஸ்வரன் கூட ஜே.ஆர். ஜெயவர்தனாவை நேருக்கு நேர் சந்தித்து பேசக்கூடியதாகவும் இருந்தது.

அதேசமயம்  ஜே.ஆருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்த ரணசிங்க பிரேமதாசவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் முதலானோரை கொழும்புக்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

எனினும் வடக்கிற்கும் தெற்கிற்கும் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படவில்லை.

இந்த வரலாற்றுப் பின்னணிகளுடன்தான் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கும் வடக்கு – தெற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளின் சந்திப்பினையும், அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கியிருக்கும் கருத்துக்களையும் அவதானிக்க முடிகிறது.

இந்தச்  சந்திப்பிற்கான ஊற்றுக்கண் திறக்கபட்டது,  கடந்த ஆண்டில் தெற்கில் காலி முகத்திடலில் எழுந்த கோத்தாவை விரட்டும் எழுச்சிப் போராட்டம். அதனை அரகலய என சிங்கள மக்கள் அழைக்கின்றனர்.  அதே சொல்லை பயன்படுத்தி அரகலய போராட்டம் என்கின்றனர் தமிழ் தரப்பினர்.

இரண்டும் ஒரு அர்த்தம்தான்.

யாழ்ப்பாணத்தில்  ஒரு தனியார் விடுதியில் ஒன்றுகூடியிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியங்களின் தலைவர்கள் பரஸ்பரம்  எவ்வாறு இணைந்து இயங்குவது பற்றியும் கலந்துரையாடியிருக்கின்றனர்.

இந்தச்  சந்திப்பினை தெற்கிலிருக்கும் கடும்போக்காளர்களான சிங்கள அரசியல்வாதிகளும்,  வடக்கு – கிழக்கிலிருந்து தமிழ்த்தேசியம் குறித்தே தொடர்ந்தும் பேசியவாறு பாராளுமன்ற ஆசனங்களை நோக்கிய தமது  கவனத்தை செலுத்திவரும் தமிழ் அரசியல்வாதிகளும் எவ்வாறு பார்க்கின்றனர் என்பது அவரவருக்கே வெளிச்சம்.

அவர்களின் கவனம் முழுவதும், உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் எப்போது  நடக்கும் என்பதிலேயே  தங்கியிருக்கிறது.

இந்தப் பின்னணியில் அடுத்த ஆண்டு புதிய ஜனாதிபதியை தேர்வுசெய்யும் தேர்தலும் வரவிருக்கிறது என்ற செய்தியும் வெளியாகியிருப்பதனால், இனி அதில் யாருக்கு தமது ஆதரவை வழங்கலாம், அல்லது வழங்காது விடலாம்  என்ற பட்டிமன்றத்தை தொடங்கலாம்.

ஆயினும்,  இலங்கையில்,  இளம் தலைமுறையினரான எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகின்ற பல்கலைக்கழக மாணவர் சமுதாயம் சந்தித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி.

கடந்த காலங்களில் பல்கலைக் கழகங்களில்  புதிய மாணவர்கள் பிரவேசிக்கும்போது பகிடி வதைகள் உச்சம் பெற்று அருவெறுக்கத்தக்க சம்பவங்களும்  இடம்பெற்றதை நாம் மறந்துவிடமுடியாது.

அத்துடன், சில பல்கலைக்கழகங்களில்  தமிழ் – சிங்கள மாணவர்கள் மத்தியில் குரோதங்கள் வளர்ந்து தர்க்கங்கள் தாக்குதல்களும் நடந்திருக்கின்றன.

பொருளாதார ரீதியில் அனைத்து ஏழை - மத்தியதர வர்க்கத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டமையால், சுருக்கமாகச் சொன்னால் – வயிற்றில் அடி விழுந்தமையினால்,  நாடெங்கும் மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். தென்னிலங்கையில் காலி முகத்திடலை தமது வசம் பல நாட்கள் வைத்திருந்ததுடன் ஜனாதிபதி மாளிகை, செயலகம் எங்கும் முற்றுகையிட்டனர்.

அதனால், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ நாட்டை விட்டே ஓடினார். அவரது சகோதரர்கள், பிரதமர், நிதியமைச்சர் பதவிகளையும் துறக்க நேர்ந்தது.

பல அரச எம். பி.க்கள்,  அமைச்சர்களின் வாசஸ்தலங்களும் தாக்கப்பட்டன.  இவர்கள் தமது பாதுகாப்பையும் தாங்களே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மரணிக்கவும் நேர்ந்தது.

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் எங்கள் தேசத்தில் ஒரு இராணுவப் புரட்சி நடக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.

பாராளுமன்றில் மக்களின் வரிப்பணத்தில் பதவி சுகம் அனுபவிக்கும்  சிங்கள – தமிழ் அரசியல் தலைவர்கள்  விவாதங்களில் எத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டாலும்,  இறுதியில் ஒன்றாக அமர்ந்து சிரித்துப்பேசி தேநீர் அருந்துவார்கள்.

ஆனால், வடக்கிலும் கிழக்கிலும், தெற்கிலும் வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலிருக்கும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் மாணவர்கள் என்றாவது ஒன்றிணைந்திருக்கிறார்களா..? இப்போது  காலம் கனிந்து நடந்திருக்கிறது.

அதனை அண்மையில் நாம் அவதானிக்க முடிகிறது.

இச்சந்திப்பினால், உடனடியாக ஒரு மாற்றம் வந்துவிடப்போவதில்லை.  ஆயினும்,  வடக்கில் நடந்திருக்கும் இச்சந்திப்புகள் தெற்கிலும் நடக்கவேண்டும்.

வடக்கும் – தெற்கும் இணைவது இளம் மாணவர் சமுதாயத்தில்தான் தங்கியிருக்கிறது.

போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு இனி இல்லை என்று ஒரு செய்தி அதிகார வர்க்கத்திடமிருந்து வெளியாகியிருக்கிறது.

இந்த அதிகார வர்க்கமும் ஒரு காலத்தில் மாணவர் சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள்தான் என்பதையும்  நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

---0---

 

 

 

 

 

 

 

No comments: