பரிசு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 

ஜெமினி கணேசன்,சரோஜாதேவி இருவருடைய நடிப்பிலும் ஸ்ரீதருடைய இயக்கத்திலும் கல்யாணப் பரிசு படம் வெளியாகி பெரும் வெற்றியை கண்டது. இதற்கு நான்காண்டுகள் கழித்து ஒரு படம் எம் ஜி ஆர்,சாவித்ரி நடிப்பில் வெளிவந்து வெற்றி படமானது. அந்தப் படத்தின் பேர் பரிசு. ஆரம்பத்தில் காதல் பரிசு என்று பேர் வைக்கப் பட்டு என்ன காரணத்தாலோ காதல் தவிர்க்கப் பட்டு பரிசானது. படத்தின் பெயரில் காதல் தவிர்க்கப் பட்டாலும் படம் என்னவோ காதல் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான்.



போலீஸ் துப்பறியும் அதிகாரியான வேணு குற்றவாளிகளை கண்டு பிடிக்க பயங்கர காடு சூழ்ந்த பகுதிக்கு தனியாக வருகிறான். அங்கே கௌரி என்ற படகோட்டும் பெண்ணின் அறிமுகம் உண்டாகிறது. அறிமுகம் காதலாகிறது. துப்பறியும் வேலையுடன் காதல் வேலையும் தொடர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் வேணுவை கொலை செய்ய வரும் கொலையாளி ஆள்மாறாட்டத்தில் வேணுவின் நண்பன் ரகுவை குத்தி கொன்று விடுகிறான். இதனால் ரகுவின் தங்கை மாலா நிர்கதியாகிறாள். அவளுக்கும் ஒரு காதலன்

இருப்பதை அறியும் வேணு அவனிடம் மாலாவை மணக்கும் படி கேட்கிறான். அவனோ தனக்கொரு தங்கை இருப்பதாகவும் அவளை வேணு மணந்தால் தான் மாலாவை மணப்பதாக நிபந்தனை விதிக்கிறான். தனக்காக உயிரை விட்ட ரகுவுக்கு நன்றிக்கடன் பட்ட வேணு தன்னுடைய காதலைத் துறந்து விஸ்வத்தின் தங்கையை மணக்க விஸ்வம் மாலாவை மணக்கிறான். ஆனால் முதல் இரவன்றே தனக்கு வாய்த்த மனைவி ஒரு மன நோயாளி என்று வேணுவுக்கு தெரிய வருகிறது!

இப்படி அமைந்த படத்தின் கதையை பிரபல கதாசிரியராக கே பி கொட்டாரக்காரா எழுதியிருந்தார். படத்துக்கான வசனங்களை ஆரூர்தாஸ் எழுதினார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வெற்றி படமான பாசமலரில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் வேணுவாக எம் ஜி ஆர் நடித்தார். போலீஸ் அதிகாரியாக வீரத்தை காட்டுபவர்,காதல் காட்சிகளில் மகிழ்ச்சியை காட்டுபவர் காதலியை பிரியும் போதும், மன நோயாளியை மணக்கும் போதும் உருக்கமான நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்கிறார். அவருக்கு இணையாக சாவித்திரியும் ஆடிப் பாடி, பின்னர் சோகத்தை வெளிப்படுத்தி தன் நடிப்பாற்றலை எம் ஜி ஆர் படத்தில் காட்டியிருந்தார். இருவரும் நடிப்பில் சோடை போகவில்லை.

படத்தில் இரண்டு வில்லன்கள் . அதட்டுவததற்கு எம் ஆர் ராதா என்றால் அடிதடிக்கு நம்பியார். ராதா பேசும் வசனங்கள் சூப்பர். நான் வச்ச குறி தப்பாது என்று ராதா சொல்வதும் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கா என்று எம் ஜிஆர் ராதாவிடம் கேட்பது பிற்காலத்தில் நடந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது!


நம்பியார் மென்மையாக நடித்திருந்தார்.நாகேஷ் பண்ணும் ரகளை சிரிப்பூட்டுகிறது. ராஜசுலோசனா தன் கணவனுக்காகவும், ராகினி தன்னுடைய கணவனுக்காகவும் வாதாடுவது சுவையாக அமைந்தது. இவர்களுடன் எம் கே முஸ்தபா, திருப்பதிசாமி,ஆகியோரும் நடித்திருந்தனர் .

பரிசு படத்துக்கு இசையமைத்தவர் திரை இசை திலகம் கே வி மகாதேவன். 63ம் வருடம் வெளிவந்த 45 படங்களில் 22 படங்களுக்கு இசையமைத்து அசத்தியிருந்தார் அவர். அவருடைய 105வது பிறந்த தினம் 14ம் தேதி மார்ச் மாதம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத , டி எம் எஸ் ,சுசிலா

பாடினார்கள். கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு என்று கவிஞர் எழுதிய பாடல் பிரபலமானது. எண்ண எண்ண இனிக்கிது , பட்டு வண்ண சிட்டு , பொன் உலகம் நோக்கி போகிறோம் ஆகிய பாடல்களும் வரவேற்கப்பட்டன.

படத்தின் ஒளிப்பதிவை பி ராமசாமி தனது அனுபவத்தின் மூலம் தரமாக கையாண்டார். படத்தொகுப்பை ஜி டி ஜோஷி மேற்கொண்டார். சண்டைக்கு காட்சிகளை ஆர் என் நம்பியார் அமைத்திருந்தார்.


ஏற்கனவே பல வெற்றி படங்களை டைரக்ட் செய்த டி யோகானந்த் இந்தப் படத்தை தயாரித்து இயக்கியும் இருந்தார். தொய்வில்லாமல் படம் நகர அவரின் இயக்கம் உதவியது. படமும் அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது . அந்தாண்டு தீபாவளிக்கு எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசு , பரிசு படம்!

No comments: