இலங்கைச் செய்திகள்

 தமிழ் அரசியல் கைதி சதீஸ் பொதுமன்னிப்பில் விடுதலை

மைத்திரியின் மனு மீது ஜூலை 31 இல் விசாரணை

சர்வதேச வர்த்தக அமைப்பின் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

யாழ் - கொழும்பு விமான சேவைகள் விரைவில்

இலங்கைக்கு ஜப்பான் 1.8 மில்.டொலர் உதவி


தமிழ் அரசியல் கைதி சதீஸ் பொதுமன்னிப்பில் விடுதலை

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான 'விவேகாந்தனூர் சதீஸ்'என அழைக்கப்படும் செல்லையா சதீஸ் கடந்த 15 வருடகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கிளிநொச்சி வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதியாக அவர் இருந்த வேளை , கடந்த 2008ஆம் ஆண்டு பணி நிமித்தம் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, வவுனியா தேக்கவத்தை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப்புலிகளுக்கு உதவினாரென குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2011ஆம் ஆண்டு நீதிமன்றம், அவரைக் குற்றவாளியாக கண்டு, ஆயுள் தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து அவர் மேன் முறையீடு செய்திருந்தார்.

மேன் முறையீட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்ததுடன் , கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.அதனையடுத்து, தனது மேன் முறையீட்டு மனுவை மீள கையேற்க கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக மனுவை நீதிமன்றத்தில் அவர் கையளித்தார். அதனையடுத்து, அவரின் மேன்முறையீடு மீளளித்தது.

அவரை விடுதலை செய்வதில் நீதி நிர்வாக செயற்பாடுகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையே அவருக்கு சிறைச்சாலையிலிருந்து விடுதலை கிடைத்தது.

யாழ்.விசேட நிருபர் 

நன்றி தினகரன் 






மைத்திரியின் மனு மீது ஜூலை 31 இல் விசாரணை

ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் விசாரிக்கும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி  ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 9 ஆகிய திகதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறுமென்று, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலுக்கு ஆளான ஒருவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தனிப்பட்ட முறைப்பாடை தாக்கல் செய்திருந்தனர்.

முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், முறைப்பாட்டில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.

கோட்டை நீதவான் விடுத்த அழைப்பாணை சட்டத்துக்கு முரணானதெனவும் தம்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட அழைப்பாணை செல்லுபடியாகாதென உத்தரவு பிறப்பிக்குமாறும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் கோரியிருந்தார்.   நன்றி தினகரன் 

 




சர்வதேச வர்த்தக அமைப்பின் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

- சிரேஷ்ட அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதுக்கு வாழ்நாள் சாதனை விருது

சர்வதேச வர்த்தக  அமைப்பின் (Business World International Organization) விருது வழங்கும் விழா சமீபத்தில் இடம்பெற்றிருந்தது.

சர்வதேச வர்த்தக  அமைப்பின் அழைப்பில், விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கையில் சிறப்பாக செயற்படும் தொழில் அதிபர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரபல சிரேஷ்ட அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீத் ‘வாழ்நாள் சாதனை விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

நன்றி தினகரன் 









யாழ் - கொழும்பு விமான சேவைகள் விரைவில்

யாழ். இந்திய துணைத் தூதர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையமூடாக யாழ். - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில், ஆராய்ந்து வருவதாக யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

யாழ். கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.யாழ்ப்பாணம்,பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நடத்தப்படும் யாழ். - சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பலாலி சர்வதேச விமானம் நிலையத்திலிருந்து தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவைகளை விஸ்தரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.- கொழும்பு விமான சேவை தொடர்பில், விரைவில் நல்ல செய்தி கிடைக்குமென்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

 






இலங்கைக்கு ஜப்பான் 1.8 மில்.டொலர் உதவி

  • நாட்டில் அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு
  • UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கியது

இந்த நன்கொடை ஊடாக சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் நன்மையடைய உள்ளனர்

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறார்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இதனூடாக 06 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்குள், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் இவ்வாறு தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் முதற்கட்டத்திலிருந்து, இதுவரை 3.8 மில்லியன் டொலருக்கும் அதிகமான நன்கொடைகளை ஜப்பான் அரசாங்கம் யுனிசெப் ஊடாக இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





No comments: