அதிகாரம் 12 – கிணறு வெட்டப் பூதம்
தொழிற்சாலைக்கு
புதியவர்களை காலத்துக்குக் காலம் வேலைக்கு
எடுப்பது வழமை. அப்படி வருபவர்களை
ஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, பின்னர் நன்றாக பணி புரிபவர்களை
நிரந்தரமாக்குவார்கள். சிலரை மேலும் ஆறுமாதங்கள் வைத்திருந்து பார்ப்பார்கள்.
நன்றாகச் செய்தால் அவர்களையும் நிரந்தரமாக்குவார்கள். ஒன்றுக்கும் உதவாதவர்களை
கலைத்து விடுவார்கள்.
அதே நேரத்தில்
தொழிற்சாலையில் பல வருடங்கள் வேலை செய்பவர்களை, அவர்கள் விரும்பினால் ஒரு தொகையைக்
கொடுத்து (package) தொழிற்சாலையில் இருந்து விலகும்படி கேட்பார்கள். குழறுபடி
செய்பவர்கள், சோம்பேறிகள், பிரைச்சனைக்குரியவர்களைத் தேடிப் பிடித்துக்
கலைத்தார்கள்.
ஒருநாள் - தெளிந்த நீரோடைக்குள் பாறாங்கல் விழுந்தது போல தொழிற்சாலையில்
ஒரு சலசலப்பு. அதை பலரும் கூட்டமாக ஒளித்திருந்து விவாதித்தார்கள். ஒருவருக்கும்
சரியான தகவல் தெரியவில்லை. புதிதாக வந்த பெண்கள் பற்றியதாக அந்தப் பேச்சு
இருந்தது.
ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டுமாயின், தன்னுடன் படுத்து எழும்ப வேண்டும் என
மக்காறியோ ஒரு பெண்ணிடம் கேட்டதாகத் தகவல்.
“அந்தப் பெண் கிறஜ்” என்றான் மாய். Grudge என்னும் பேய் படத்தில் வரும்
பெண் போல தோற்றம் கொண்டதால் அந்தப் பெண்ணிற்கு ‘கிறஜ்’ என்று பெயர். கிறஜ் - வயது
பதினெட்டு. ஒல்லி உருவம், கட்டை, ஆளை மூடித்தலைமயிரை விரித்திருப்பாள். சிகரெட்
குடித்து உடம்பு பூரா சிகரெட் பூவாசம். தலையைச் சரித்துத்தான் ஆக்களையே அவள்
பார்ப்பாள். அப்படிப் பார்த்தால் எல்லோரும் தலை தெறிக்க ஓடுவார்கள். அசல் கிறஜ் ஆகிவிடுவாள்.
“இதுஎன்ன புதிதா? முன்பும் நடந்ததுதானே! ஆலினுக்கு வயித்திலை பூச்சியைக்
குடுத்தவன் தானே உந்த மக்காறியோ. ஆலினுக்கும் பூச்சி விரும்பம் எண்டதாலை அப்ப
விஷயம் பெரிசாகேல்லை. இப்ப பூதம் கிழம்பியிருக்கு!” என்றான் மாய். குரங்கின் கையில் பூமாலையும் மக்காறியோவின் கையில்
பெண்களும் ஒன்றுதான்.
வெள்ளிக்கிழமை எழுந்த அந்தச் சலசலப்புக்கு திங்கள் பதில் கிடைத்தது. குறூப்
லீடர் மக்காறியோவுடன் தொழிற்சாலை மனேஜர் எட்றியனுக்கும் பங்கிருந்ததால், இருவரும்
தொழிற்சாலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்கள். தொழிற்சாலை, அதன் கக்கூசு போல
நாறிப் போனது. சிலர் கதி கலங்கி, இன்னும் யார் யார் தலைகள் உருளப் போகின்றனவோ எனப்
பயந்தார்கள்.
கிறஜ் தான் இதற்கெலாம் காரணம் என்று உறுதியாயிற்று. அவளும் வேலைக்கு
வரவில்லை.
“இந்தப் பூனையும்…. சீ….பேயும் பால் குடிக்குமா?”
“போயும் போயும் உவளுடனா?” ரான் சலித்தான்.
அவளை ஒரு ஹோட்டலில் சந்திக்குமாறு மக்காறியோ கேட்டிருந்தான். அந்தப்
பெண்ணும் அவன் சொன்ன ஹோட்டலிற்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டாள். ஆனால் அவள்
தன் காதலனுடன் சேர்ந்து ஒரு நாடகம் போட இருந்தாள். ஏற்கனவே பொலிசிற்கு தகவல்
சொல்லப்பட்டு, பொலிசார் குறூப் லீடரைப் பிடிப்பதற்குப் பதுங்கி இருந்தார்கள்.
ஆனால் அங்கே குறூப் லீடருடன் மனேஜர் எட்றியானும் பிடிபட்டுக் கொண்டார்.
ஏன் இந்த விபரீத ஆசை? ஏன் இந்த வில்லங்கம்? என எல்லாரும் பேசிக்
கொண்டார்கள்.
அவர்கள் இருவரையும் அந்தப் பெண்ணையும் நிர்வாகம் விசாரணை செய்தது. எல்லோரும்
தொழிற்சாலையினின்றும் நீக்கப்பட்டார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தின் போதுதான் புங்கும் விசாரணைக்கு அழைக்கப்பட்டாள். “என்னையும்
ஜோசுவாவையும் சம்பந்தப்படுத்தி ஹுயூமன் றிஷோசருக்கு யாரோ கடிதம் எழுதிவிட்டார்கள்.
அதுதான் என்னை விசாரணைக்குக் கூப்பிட்டார்கள்” என்றாள் புங். இது ஆச்சிமாவின்
வேலையாக இருக்கவேண்டும் என சந்தேகம் கொண்டாள் புங்.
“புங் தான் அந்தக் கடிதத்தை
எழுதியிருக்க வேண்டும்” என்றான் மாய்.
மறுநாளும் புங் விசாரணைக்கு அழைக்கப்பட்டாள். அவளின் விசாரனை முடிய, ஜோசுவாவுக்கு
விசாரணை நடந்தது.
அந்த விசாரணையின் போது,
“அந்தப் பெண் என்ன
சொல்கின்றாளோ அவை அனைத்தும் உண்மை என எடுத்துக் கொண்டு எனக்குரிய தண்டனையை
வழங்குங்கள்” என ஜோசுவா எச் ஆரிடம் (HR) கேட்டான்.
“அதெப்படி அவள் சொல்லும்
எல்லாத்தையும் நீங்கள் உண்மை என ஏற்றுக் கொள்வீர்கள்?. அவள் என்ன சொன்னாள் என்று
உங்களுக்குத் தெரியுமா?” விசாரணை செய்த அந்தப் பெண்மணி கேட்டாள்.
“அதுதானே சொல்லிவிட்டேனே!
அவள் என்ன சொன்னாலும் சரிதான்.”
கேள்வி கேட்ட பெண்
திகைத்தாள்.
“நான் என் கடமையைச் செய்ய
வேண்டும் அல்லவா? நான் கேட்கும் கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் தாருங்கள்”
அவள் கேட்ட அத்தனை
கேள்விகளுடன் அவன் உடன்பட்டது அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. உண்மையில் சில
கேள்விகளுக்கு அவன் மறுப்புத் தெரிவித்திருக்கலாம். மேல் முறையீடு
செய்திருக்கலாம். தண்டனை அவனுக்கு மாத்திரம் உரியதன்று. அந்தப் பெண்ணிற்கும்
வழங்கப்படல் வேண்டும் என்பதை அவள் அறிவாள்.அந்தப் பெண்ணால் ஜோசுவாவைப் புரிந்து
கொள்ள முடியவில்லை.
அவனின் அசட்டையீனத்தால்
தண்டனை முழுவதையும் அவனுக்கே வழங்க வேண்டியதாயிற்று. ஜோசுவா இந்த விடயத்தில்
இவ்வாறு நடந்து கொண்டது அவளின் உள் மனதை விசாரணை செய்தது. உண்மையிலேயே ஜோசுவா புங்
மீது காதல் கொண்டிருந்தானா?
இரண்டு
குடும்பத்தவர்களுக்கிடையே ’கள்ளத் தொடர்பு’ என்ற ஒன்று ஏற்படுகின்றதாயின், அந்த
இரண்டு குடும்பங்களிற்குள்ளும் ஏதோ ஒரு பிரச்சினை உருவாகிவிட்டது என்றுதானே
அர்த்தம். ‘செக்ஸ்’ என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதானே! அது எப்படித்
தண்டனை ஒருவருக்கு மாத்திரம் வழங்கப்படல் வேண்டும்.
மூன்றாம் உலக நாடுகளில்
வேலைத் ஸ்தலங்களில் நடப்பது வேறு. முதலாளி – தொழிலாளி, மேல்நிலை – கடைநிலை
ஊழியர்களுக்கிடையே பிரச்சினை இருப்பது வேறு. அங்கே அச்சுறுத்தல் காரணமாக கீழ் நிலை
ஊழியர்கள் பணிந்துவிடுவார்கள்.
ஆனால் வளர்ந்துவிட்ட
நாடுகளில் அப்படி ஒர் பிரச்சினை இல்லையல்லவா? Human Resourses என்ற ஒரு அமைப்பே
உண்டல்லவா? அங்கே முறையிட்டால் எல்லாம் தீர்ந்துவிடும்.
இறுதி முடிவாக ஜோசுவா
வேலையினின்றும் நீக்கப்பட்டான்.
புங் – ஜோசுவா, அவர்களுடைய
நான்கு வருட இன்பத் திருவிழா ஒரு முடிவுக்கு வந்தது.
இன்பத்தை அனுபவித்ததோ
இரண்டுபேர்கள். ஆனால் தண்டனை வழங்கப்பட்டது என்னவோ ஆணுக்குத்தான்.
’வெளியே நூறு டொலரையோ சில
தாள்களையோ வீசிவிட்டால் கிடைக்காதா இன்பம்? ஏன் உவன் போயும் போயும் உவளுடன்
தொடர்பு வைத்தான்? வொலன்ரறியாக (voluntary) வேலையை விட்டிருந்தால் பணமும்
கிடைத்திருக்கும். இப்போ வேலையும் போய் பணமும் போய்விட்டது’ என பலரும் பேசிக்
கொண்டார்கள்.
“உலகிலே பெண்ணுக்காகத்தானே பல
போர்களே நடந்தன! வெளியே கிடைக்கும் பெண்கள் பொம்மைகள். புங் அவனின் சொர்க்கம்”
என்றான் மாய்.
தொழிற்சாலையில் இப்படிப்பட்ட
செய்திகள் இயந்திரகதியை விட வேகமாகப் பரவும். கிறஜ் பொலிசுக்குப் போனதுதான் பிரச்சினை பெரிதாகக் காரணமாக இருந்தது.
இல்லாவிட்டால் நிர்வாகம் பிரச்சினையை சுலபமாகத் தீர்த்திருக்கும்.
அத்துமீறிய ரோமாண்டிக்
உணர்ச்சிப் பெருக்கினால் இரண்டு குடும்பங்களும் சீர்குலைந்து போயின.
தொடரும்….
No comments:
Post a Comment