சீனா தொடர்பில் அவதானம் தேவை

 December 9, 2023


ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் – பிராந்திய சக்தியான இந்தியாவின் கரிசனைகள் தொடர்பில் ஆட்சியாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு – கிழக்கு பகுதிகளில் இந்திய – சீன போட்டி நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயல்படக்கூடாது – அவ்வாறானதொரு சூழலில் தமிழ்
மக்களே பாதிக்கப்படுவார்கள் என்றும் சித்தார்த்தன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் இலங்கையை மையப்படுத்தி இடம்பெறும் புவிசார் அரசியல் விடயங்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை.
விடயங்களை மேலோட்டமாகவே நோக்குவது உண்டு.
ஆனால், தமிழ் மக்களின் அரசியல் சர்வதேச மயப்பட்ட ஒன்று.
இதனை மூன்று கட்டங்களாக நோக்கலாம்.
ஒன்று, தமிழ்த் தேசிய அரசியல் மிதவாத தமிழ் தலைமைகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஆயுதப் போராட்ட இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற காலம்.
இரண்டாவது, விடுதலைப் புலிகள் ஒரேயோர் ஆயுத அமைப்பாக தமிழர் அரசியலில் செல்வாக்குச் செலுத்திய காலம்.
மூன்றாவது போருக்கு பின்னரான காலம்.
தமிழ் மக்களுக்கான சர்வதேச அரசியல் என்பது அடிப்படையில் பிராந்திய அரசியல்தான்.
பிராந்திய சக்தியான இந்தியாவே, ஈழத் தமிழ் மக்களுக்கான சர்வதேச அரசியலின் திறவுகோலாகும்.
இந்தியாவை தவிர்த்து தமிழர்களுக்கு சர்வதேச அரசியல் இல்லை.
இந்த விடயத்தை எப்போதெல்லாம் தமிழர் தரப்பு மறந்து செயல்படுகின்றதோ அப்போதெல்லாம் வெறும் கற்பனைகளில் காலத்தை விரயம் செய்யவே நேரிடும்.
அமெரிக்காவின் நகர்வுகள் உலகளாவியது.
அது பிராந்திய அடிப்படையைக் கொண்டதல்ல.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை வெற்றிகொள்ளும் நகர்வில் இந்தியா ஒரு பிரதான பங்காளியாகும்.
இந்தப் பின்புலத்தில் இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியாவின் கரிசனைகளுடன் பின்னிப்பிணைந்ததாகும்.
இந்திய – அமெரிக்க நகர்வுகள் இலங்கையில் சந்திக்கும் பிரதான புள்ளி – சீனாவின் மேலாதிக்க நகர்வுகளாகும்.
சீனா ஒரு மேலாதிக்க நிகழ்ச்சி நிரலுடன் நகர்கின்றது.
அதன் இலக்கு தெளிவானது.
அதாவது, ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக தன்னை நிறுவுவது.
சீனா ஒருவேளை ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக தன்னை நிறுவுவதில் வெற்றிபெறுமாயின் அதன் பின்னர் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கம் வீழ்ச்சியடைந்துவிடும்.
இன்றைய சீன – அமெரிக்க போட்டியின் அடிப்படை இதுதான்.
இந்தப் பின்புலத்தில்தான் வடக்கு – கிழக்குக்குள் காலூன்ற முற்படும் சீனா தொடர்பில் தமிழ்த் தலைமைகள் மிகுந்த அவதானத்துடன் செயலாற்ற வேண்டும்.
அந்த வகையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த விடயங்கள் தொடர்பில் பேசியிருப்பது வரவேற்க வேண்டிய விடயமாகும்.
அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் முக்கியமானது.
தாய்வானுக்குள் அமெரிக்கா செல்வாக்குச் செலுத்துவதை சீனா கடுமையாக ஆட்சேபிக்கின்றது.
தனது இராணுவ பலத்தைக் கொண்டு தாய்வானை மிரட்டுகின்றது.
ஆனால், தான் இந்தியாவின் அயல் நாடுகளுக்குள் ஊடுருவுவதை இந்தியா எதிர்க்கக்கூடாதென்று வாதிடுகின்றது.
இந்தியாவின் உடனடி அயல் நாடொன்றுக்குள் வலுவாகக் காலூன்ற முற்படுவதை இலங்கையின் உள்விவகாரமாகக் காண்பிக்க முற்படுகின்றது.
உண்மையில் இது உள்விவகாரமல்ல.
சித்தார்த்தன் சுட்டிக் காட்டியிருப்பது போன்று, இது இந்தியாவுக்கு எதிரான ஒரு நகர்வு.
இந்தியாவுக்கு எதிரான நகர்வுகளின்போது தமிழ் தலைமைகள் என்போர் அமைதியாக இருக்க முடியுமா?   நன்றி ஈழநாடு 


No comments: